இலங்கை: "மக்கள் போராட்டத்தின் செயல் திட்டம்" பற்றிய கலந்துரையாடல்: தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ அரசோடு கட்டிவைக்கும் வஞ்சகப் பொறி

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உலக சோசலிச வலைத் தளத்தில் ஜூலை 19 அன்று சிங்கள மொழியில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் சமகால அரசியல் முக்கியத்துவம் கருதி வெளியிடப்படுகிறது.

'காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள்' ஜூலை 12 அன்று, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 'போராட்டத்தின் எதிர்காலத்திற்கான செயல்திட்டம்' என்ற தலைப்பில் தங்கள் செயல் திட்டத்தைப் பற்றி கலந்துரையாட கூட்டமொன்றை நடத்தினர். அந்தக் கலந்துரையாடலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சி முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அழைக்கப்பட்டிருந்தன.

அடக்குமுறை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் விரட்டுவதற்கு கடந்த மூன்று மாதங்களாக காலிமுகத் திடலில் பிரச்சாரம் செய்து வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிராமப்புற ஏழை விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள் உட்பட இலட்சக்கணக்கான மக்களின் போராட்டமானது இலங்கையின் முழு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் எதிராக நடத்தப்பட்ட போராட்டமாகும். இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களால் நிராகரிக்கப்பட்டனர்.

ஆனால், அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் குட்டி முதலாளித்துவத் தலைமையானது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அரசியல் ரீதியாக திசைதிருப்பி, முதலாளித்துவ அரசின் பிற்போக்கான அரசியலமைப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் அவர்களை சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 'நாளையப் போராட்டத்திற்கான செயல் திட்டம்' என்பது முதலாளித்துவ அரசை செம்மைப்படுத்தி, அதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் ஜனநாயக பிரச்சனைகளை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கீழ் தீர்க்க முடியும் என்ற பிற்போக்கு மாயைக்கு அடிபணிய வைக்கும் தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டமாகும்.

ஜீவந்த பீரிஸ் நடுவில் அமர்ந்திருக்கிறார் (Facebook)

காலிமுகத் திடல் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு 'அழுத்தக் குழு' என அதன் தலைவர்களில் ஒருவரான கத்தோலிக்கப் பாதிரியார் ஜீவந்த பீரிஸ் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார். அதற்காக, காலி முகத்திடல் மற்றும் நாடு பூராகவும் உள்ள அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய மக்கள் பேரவையாக தாம் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் எங்கும் நாடாளுமன்றத்தில் இணைய மாட்டோம். தேர்தல் வரும்போது சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. போராட்டக்காரர்களாகிய நாங்கள் ஒரு சிறப்பு அமைப்பாக ஒன்றுபட்டுள்ளோம். மக்கள் சபையில் உள்ள அனைவரினதும் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பாக, நாம் அதன் உள்ளார்ந்த வியூகத்துக்கு (முதலாளித்துவ பாராளுமன்றத்துக்கு) ஒரு அழுத்தக் குழுவாக இருந்து அழுத்தம் கொடுப்போம்' என்று பீரிஸ் கூறினார்.

போராட்டக்காரர்களின் மக்கள் பேரவையின் பிரதான கோரிக்கைகள் இவையாகும்:

* நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய இராஜபக்ஷ விலகி, கோட்டா-ரணில் அரசாங்கம் வெளியேறியதன் பின்னர், மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு இணங்க, அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு உட்பட்ட இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல், மற்றும் அதன் கீழ் உணவு, எரிவாயு, எரிபொருள், கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் மற்றும் எரிசக்தி போன்ற வசதிகளை வழங்குவதற்கான திட்டத்தைத் தயாரித்தல்.

* தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைதியான செயற்பாட்டாளர்கள் உட்பட சகல அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கும், அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி வழங்குவதற்கும், கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கக்கூடிய வழிமுறை ஒன்றைத் தயாரித்தல்.

*(இராஜபக்ஷ) ஆட்சியால் திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை விசாரணையுடன் கூடிய கணக்கெடுப்பு மூலம் அவற்றை அரசுக்கு திருப்பி பெறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.

* கோட்டாபய இராஜபக்ஷ பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மக்கள் அதிகாரம் உறுதிப்படுத்தப்படுகின்ற புதிய அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றும் வரை, நிறைவேற்று அதிகாரத்தைக் குறைத்தல், சட்டத்தால் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வைத்தல், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக, அரசியலமைப்பினுள் செய்யக்கூடிய ஜனநாயக சீர்திருத்தங்களை விரைவாக செய்தல், மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பை பொது வாக்கெடுப்பு மூலம் உடனடியாக நிறைவேற்றுதல், மற்றும் அதன் கீழ் மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல்.

இந்த முன்மொழிவுகளை இடைக்கால அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமாம். இடைக்கால அரசாங்கம் என்பது, இன்னொரு முதலாளித்துவ அரசாங்கம் ஆகும். முதலாளித்துவ வர்க்க ஆட்சி எதிர்கொள்ளும் கடுமையான அரசியல் ஸ்திரமின்மையை தணிப்பதற்கு, அனைத்து முதலாளித்துவக் எதிர்க் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் இதுவே ஆகும். பல கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். காலி முகத் திடல் போராட்டத்தின் தலைவர்களைப் போலவே, முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்திருப்பது, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் இதே முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் பிற்போக்கு கொள்கையுடனேயே ஆகும்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முதலாளித்துவ அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், போலி-இடதுகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், போராட்டத்தின் செயல் திட்டத்தை முன்னிலைப்படுத்தி முதலாளித்துவ அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும், தொற்றுநோய் பேரழிவு மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளையும் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏற்றிவிடுவதில் இராஜபக்ஷ அரசுக்கு ஆதரவளித்தன. அவர்கள் அனைவரும், பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், பொதுச் செலவைக் குறைத்தல் மற்றும் வரிகளை அதிகரிப்பது உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்த ஒப்புக்கொள்கிறார்கள்.

தமிழ் கூட்டமைப்பின் எம்.ஏ. சுமந்திரன் இந்த செயற்திட்டம் குறித்து தனது பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், 'ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் தமது கூட்டணி உடன்படுவதாக' தெரிவித்தார்.

“எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 'நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். அதை உலகுக்கு பரப்ப வேண்டும். அனைத்துக் கட்சி அரசும், மக்கள் பேரவையும் இணைந்து நமது திட்டத்தை உலகுக்கு முன்வைத்து, முதலீடுகள் மூலம் தேவையான பணத்தைப் பெற்று, பிச்சை எடுக்கும் நிலையில் இருந்து மேலே வந்து, இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு வேலைத் திட்டத்தைக் உருவாக்கிக்கொள்ள வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

முதலீடுகளை ஈர்க்கும் வேலைத்திட்டம் பற்றி சில்வா விரிவாகக் கூறவில்லை. ஆனால் முதலீட்டை ஈர்க்கும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் செயல்திட்டம் வரிச்சலுகைகளை வழங்குவதும், தொழிலாள வர்க்கத்தின் உழைப்பை எலும்பு வரை சுரண்டுவதற்கு தேவையான நிலைமைகளை உருவாக்குவதும், அதிகபட்ச இலாபத்தை ஈட்டுவதும் ஆகும். சில்வா, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தில் ஒரு பங்காளியாக இருந்தார் மற்றும் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இராஜபக்ஷ அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தார்.

'பரந்த மற்றும் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை,' என்று அவர் கூறினார். சில்வா முன்வைக்கும் பரந்த சீர்திருத்தங்களில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதாகும்.

'அமைப்பு முறைமையை மாற்றுவதற்காக' யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் பேரவை 'கைகோர்க்க வேண்டும்' என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். 'இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக நாங்களும் நீங்களும் எதிர்பார்க்கும் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். (அரச அதிகாரத்திற்கு) யார் நியமிக்கப்பட்டாலும் மக்கள் பேரவையை அவருடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, ஒவ்வொரு துறையிலும் அந்த அமைப்பு முறைமை மாற்றம் செய்யப்பட வேண்டும்,'' என அவர் குறிப்பிட்டார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் கூறியதாவது: “மக்கள் போராட்டத்துடன் சமரசம் செய்து கொள்ளும் கூட்டணியால் மட்டுமே நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முடியும். புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தை இரண்டாவதாக வைக்க வேண்டாம். இந்த மக்கள் உடன்பாட்டை புதிய அரசியலமைப்பாக மாற்றுவது இந்த நாட்டின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் பொறுப்பாகும். இந்த மக்கள்-சார்பு இயக்கத்தை கட்சி நிறங்களாக பிரிக்காமல், மக்கள்-சார்பு அரசியலமைப்பை உறுதிப்படுத்தி, தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.”

குணரட்னமும் முன்னிலை சோசலிசக் கட்சியும், முதலாளித்துவ அரசாங்கத்தை 'மக்கள் போராட்டத்துடன்' சமரசம் செய்ய வைப்பதற்காக அன்றி, முதலாளித்துவ அரசாங்கத்துடன் மக்களை சமரசம் செய்ய வைப்பதற்காகவே முயற்சிக்கின்றனர்.

ஜே.வி.பி. சார்பு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியதாவது: கோட்டாகோஹோமையும் இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்குப் போகச் சொல்வதே எங்களின் இலக்காக இருந்தது. அந்த இரண்டு குறிப்பிட்ட விடயங்களை நாம் அடைந்த பிறகு, நாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய சீர்திருத்தங்கள் உள்ளன. அனைத்து குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விரிவான செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்குவோம். குறுகிய காலத்தித்துக்குள் பாராளுமன்ற தேர்தலுக்கு சென்றால்தால் இதில் பல விடயங்களை சாதிக்க முடியும்'.

ஜே.வி.பி.யும் அதன் தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுத்து, தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் அவற்றின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளன. இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிரான மக்களின் ஆழமான வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடும் மற்றொரு முதலாளித்துவக் கட்சியே ஜே.வி.பி. ஆகும்.

தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்கள், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது அதனுடன் சமரசம் செய்துகொள்வதன் மூலம், தாம் எதிர்கொள்ளும் எந்தவொரு எரியும் பிரச்சனைக்கும் தீர்வு காணவோ உரிமைகளை வெல்லவோ முடியாது.

இலங்கையின் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது, கோவிட் தொற்று நோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ முன்னெடுக்கும் போரினாலும் ஆழமடைந்த, உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும்.

தந்திரோபாய வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவதில் உடன்பாடு கொண்டுள்ளன.

முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தலைதூக்கியுள்ள பரந்த பொது எதிர்ப்பை கொடூரமாக நசுக்குவதற்கான அரசியல் திட்டமிடலில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் விக்கிரமசிங்க, பொதுமக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளமை இந்த பிற்போக்குத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ சார்பு அமைப்புகளில் இருந்து பிரிந்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்திற்காக தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாற்று வேலைத் திட்டத்தை முன்வைப்பது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. 'ஒழுங்கை மீட்டெடுக்கத் தேவையானதைச் செய்யுங்கள்' என்று இலங்கையின் பதில் ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிடுகிறார், என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் அது பின்வருமாறு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தங்களது போராட்டங்களை காட்டிக் கொடுத்து வரும் தொழிற்சங்கங்களில் இருந்துப் சுயாதீனமாக, தொழிற்சாலைகள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் பெருந்தோட்டங்கள் முழுவதிலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, தொழிலாள வர்க்கம் பிரச்சினைகளை தனது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கான ஆதரவை முற்றாக நிராகரிப்பதுடன், அதனால் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்த அவசர பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என அறிவிப்பதுடன் தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க நலன்களுக்காக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராட தலையிடாவிட்டால், அது சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கே வழி வகுக்கும் என எச்சரிக்கின்றது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல், வங்கிகள் மற்றும் பிரமாண்டமான கூட்டுத்தாபனங்களை தேசியமயமாக்குதல் மற்றும் பில்லியனர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுதல் உட்பட, அத்தகைய அரசியல் போராட்டத்திற்கான அடிப்படையாக, ஒரு தொடர் கொள்கைகளை கட்சி முன்வைத்துள்ளது.

முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் தற்போதைய வேதனையான நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வு கிடையாது என்று அது வலியுறுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

Loading