மோசடியான ஜனநாயக-விரோத நடவடிக்கையில் பரந்த எதேச்சதிகார அதிகாரங்களுடன் இலங்கையின் பாராளுமன்றம் புதன்கிழமை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பல மாத பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களால் அதிகாரத்தில் இருந்து துரத்தப்பட்ட எதேச்சதிகாரி கோட்டாபய இராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் எஞ்சியிருக்கும் ஏறக்குறைய இரண்டு வருடங்களை நிறைவு செய்ய, இலங்கையின் பாராளுமன்றம் புதன்கிழமை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும். இவை ஜூலை 9 அன்று, அரசாங்கத்தின் அவசரகால உத்தரவுகள் மற்றும் பாரிய அடக்குமுறை அச்சுறுத்தல்களை மீறி தலைநகர் கொழும்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதிக்கு இறங்கிய நிலையில், வெகுஜன கோபத்தின் வெடிப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.

திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இன்றைய வாக்கெடுப்பு 'தொழிலாளர் வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான ஒரு மோசடி மற்றும் சதி' என்று கண்டனம் செய்தது. எதிர்ப்பாளர்களில் பலர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இராஜினாமா செய்யுமாறு கோரியிருப்பதைக் சுட்டிக் காட்டிய சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை, 'பாராளுமன்றமானது உழைக்கும் மக்களின், அதாவது சமூகத்தின் முழுமையான பெரும்பான்மையினரின் அரசியல் உணர்வுகள் மற்றும் நலன்களை எந்த வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை,' என வலியுறுத்தியது.

ஜூலை 9 முதல் பல நாட்கள், எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்தனர்.

செவ்வாயன்று பாராளுமன்ற அமர்வில் இராஜபக்ஷவை அடுத்து பரிந்துரைக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களும் - ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்க - அவசரக் கடனைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த தயாராக உள்ளனர். தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு எதிராக, பெருவணிக மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை நிலைநிறுத்துவதற்கு அர்ப்பணித்துக்கொண்ட, முதலாளித்துவ அரசியல்வாதிகள், என்ற நீண்ட சரித்திரத்தை அவர்கள் அனைவரும் கொண்டுள்ளனர்.

வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவரான விக்கிரமசிங்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இரக்கமற்ற முறையில் செயல்படுத்துபவர் எனப் பேர்போன ஒரு ஊழல் நிறைந்த அரசியல்வாதி ஆவார். அவர் அவரது கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். எனினும், தனது சகோதரரான மஹிந்த இராஜபக்ஷ இராஜினாமா செய்ததை அடுத்து, ஆட்டங்கண்டு போன கோடாபய இராஜபக்ஷ, விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அரசாங்க எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை, குண்டர்கள் மற்றும் அரச வன்முறை கொண்டு ஒடுக்குவதற்கு மேற்கொண்ட தோல்வியுற்ற முயற்சியை அடுத்து மஹிந்த இராஜபக்ஷ இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். 1993 மே 12 அன்று முதல் விக்கிரமசிங்க ஆறாவது முறையாக பிரதமராக அமர்த்தப்பட்டுள்ளார்.

கோட்டாபய இராஜபக்ஷ கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக தன்னை நியமிப்பதற்கு விக்கிரமசிங்க சூழ்ச்சி செய்ததுடன் அப்போதிருந்தே வெகுஜன எழுச்சியை இரத்தக்களரியில் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) சிரேஷ்ட தலைவரான தினேஷ் குணவர்தனவினால் நேற்று ஜனாதிபதி பதவிக்கு விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டார். விக்கிரமசிங்க, வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பெரும்பகுதியினரின் ஆதரவை வெளிப்படையாக அனுபவித்து வருகிறார். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பிளவுகளால் பலவீனமடைந்தாலும், இன்னும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டுள்ளது.

டலஸ் அழகப்பெருமவும் ஒரு ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். எவ்வாறாயினும், பாராளுமன்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் அவருக்கான ஆதரவின் பெரும்பகுதி வெளிப்படையாக எதிர்க் கட்சியிடம் இருந்து கிடைக்கவுள்ளது. அவரும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆதரவாளர்களின் பிரிந்து சென்ற குழுவும் பிரதான எதர்க் கட்சியுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.

தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில், அழகப்பெரும 'இடதுசாரியாக' காட்டிக் கொள்ள முயன்றார். 1994 இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அவர் பணியாற்றியதோடு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் போன்ற பல பதிவிகளை வகித்தார். பின்னர் அவர் இராஜபக்ஷவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக மாறினார். மஹிந்த இராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 10 வருட காலப்பகுதியில் (2005-15) பல்வேறு பதவிகளை வகித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மின்சார அமைச்சராகவும் பின்னர் ஊடகத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

இப்போது அவர் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அதே வேளையில், தனிப்பட்ட பெருமையையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் வெளிப்படையான நோக்கத்துடன் இராஜபக்ஷக்களிடம் இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்.

1960களின் நடுப்பகுதியில் மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள தேசபக்தியின் நச்சு அரசியல் கலவையின் அடிப்படையில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆவார். அதன் தலைவர்கள் சௌகரியமான அரசியல் உடைகளுக்காக இராணுவ உடைகளை மாற்றிக்கொண்டனர். அதே வேளை, ஜே.வி.பி., கொழும்பை சீனாவுக்கு எதிராக அதன் போர் உந்துதலில் நெருக்கமாக ஒருங்கிணைக்கும் வகையில் அமெரிக்கா அனுசரணை வழங்கிய ஆட்சி மாற்ற நடவடிக்கையின் விளைவாக 2015ல் ஆட்சிக்கு வந்த யூஎன்பி தலைமையிலான நிர்வாகத்தையும் ஆதரித்தது. 1990களின் முற்பகுதியில் இருந்து ஆட்சிக்கு வந்த அனைத்து இலங்கை முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தலைவர்களை ஜே.வி.பி. தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளது.

1994 இல், அது மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரத்தை ஆதரித்ததுடன், 2004 இல் அவரது அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு, திசாநாயக்க விவசாய அமைச்சரானார். 1983 முதல் 2009 வரை பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் கொடூரமான இனவாதப் போரின் தீவிர ஆதரவாளராக ஜே.வி.பி. இருந்தது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிக்கிறது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனாதிபதி வேட்புமனுவை ஆதரிப்பதற்காக 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) தலைவருமான சஜித் பிரேமதாச, தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்த போதிலும், பின்னர் தனது கட்சியின் ஆதரவை வாபஸ் பெற்று, அழகப்பெருமவுக்குப் பின்னால் திருப்பினார்.

அழகப்பெரும அதற்கு கைம்மாறாக பிரேமதாசாவை பிரதமராக நியமிக்க ஒப்புக்கொண்டார். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணித்த, மற்றும் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலில் இலங்கையை ஒருங்கிணைக்க உழைத்த, முந்தைய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில், பிரேமதாசா வீடமைப்பு அமைச்சராக இருந்தார். பிரேமதாசா தனது தந்தையின் அரசியல் பாரம்பரியத்தை பற்றி பெருமை பேசுகின்றார். அவரது தந்தை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார். அவர் பேர் போன தமிழ்-விரோத பேரினவாதி மட்டுமன்றி, அவரது அரசாங்கம், கிராமப்புற அதிருப்தியை நசுக்குவதற்காக 1988 மற்றும் 1990க்கு இடைப்பட்ட காலத்தில் 60,000 கிராமப்புற இளைஞர்களை கொன்றது.

புதன்கிழமை நடைபெறும் பாராளுமன்ற வாக்கெடுப்பில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. விக்கிரமசிங்க தன்னை 'ஒழுங்கு' வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளார், சர்வாதிகார சக்திகளின் முழு வரம்பையும் பயன்படுத்தி வெகுஜன இயக்கத்தை இரத்தக்களரியில் நசுக்க முயற்சிக்க தயாராக உள்ளார். ஆனால், பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி கோட்டாபய இராஜபக்ஷவின் வெளியேற்றத்தால் பலப்படுத்தப்பட்டதாக உணரும் சூழ்நிலையில், ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவினர், மாற்றத்தின் முகம் ஒன்றை காட்டி, காலத்தை சமாளிக்கும் அதே வேளை, சர்வதேச நாணய நிதியத்தின் சமூக பேரழிவு கட்டளைகளை அமுல்படுத்த தேவையான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்குத் தயாரவதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்று கணக்கிடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் மூலம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிராக தயாரிக்கப்படும் சதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, போலி இடது கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கொழும்பில் காலி முகத்திடலை மையமாகக் கொண்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் தலைவர்கள் அனைவரும், அதற்கு ஆதரவை வழங்குகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக, அவர்கள் பாராளுமன்ற மூலம் புதிய நிறைவேற்று ஜனாதிபதியை நியமிப்பது உட்பட 'அரசியலமைப்பு ஆட்சியை' நிலைநிறுத்துவதற்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர். அதன் மூலம், அதனுடன் இணைந்தவாறு, முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் ஆளும் வர்க்கத்தின் எதிர்த் தாக்குதலைத் தொடங்குவதற்கும் இடைக்கால 'அனைத்துக்கட்சி அரசாங்கத்தை' ஒன்றிணைப்பதற்கும் ஒத்துழைக்கின்றனர்.

இந்த சக்திகள் அனைத்தும், பின்பற்ற வேண்டிய புனிதமான ஆவணமாக அரசியலமைப்பை சித்தரிக்கின்றன. காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர்கள் எதிர்க்கட்சிகளான ஐ.ம.ச. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று அவர்களுடன் அரசியல் சாசனத்தை 'பாதுகாப்பதன்' அவசியம் குறித்து சுமுகமாக கலந்துரையாடி வருகின்ற அதே வேளை, பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எதிர்கால சர்வதேச நாணய நிதிய சார்பு, முதலாளித்துவ 'அனைத்து கட்சி இடைக்கால' அரசாங்கத்தின் மீது தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மையில், தற்போதைய அரசியலமைப்பு அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிரானது. 1978ல் ஜே. ஆர். ஜெயவர்தனவின் சர்வாதிகார ஐ.தே.க. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட இது, பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொண்டு பரந்த முதலாளித்துவ மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தவும், தமிழர்-விரோத உள்நாட்டுப் போரைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்ட பரந்த எதேச்சதிகார அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கியது. புதிய அரசியலமைப்பின் கீழ், அரசாங்கம் 1979 இல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது, அதன் மூலம் குற்றச் சாட்டு அல்லது விசாரணையின்றி கைது செய்வது உட்பட பொலிஸாருக்கு பரந்த எதேச்சதிகார அதிகாரங்களை வழங்கியது. சர்வாதிகார ஜனாதிபதி அதிகாரங்களை பலப்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கும் அரசியலமைப்புடன் பொது பாதுகாப்பு கட்டளை மற்றும் அத்தியாவசிய சேவைகள் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஜூன் மாதம் வெரைட் ரிசர்ச் நடத்திய ஆய்வின்படி, நாட்டின் 70 சதவீதத்தினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க விரும்புகின்றனர். இது ஆளும் வர்க்கத்தின் இந்த பிற்போக்கு இயந்திரத்தின் மீது பரவலான வெகுஜன விரோதத்தை வெளிப்படுத்துகிறது.

விக்ரமசிங்கே பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே, இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகிறார். ஜனாதிபதித் தேர்தலே, அவசரகால நிறைவேற்று உத்தரவின் மூலம், இராணுவக் காவலின் கீழ் நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டையாக மாற்றப்பட்ட ஒரு பாராளுமன்றத்தில் நடத்தப்படுகிறது.

நேற்று தீவு முழுவதும் பல இடங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. மத்திய கொழும்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அவசரகாலச் சட்டங்களுடன் திணிக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை மீறி, ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), விக்கிரமசிங்கவின் இராஜினாமாவைக் கோரி ஜூலை 19ஐ எதிர்ப்பு நாளாக அறிவித்தது. பிரதான தொழிற்சங்கங்களும் நேற்றைய தினம் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களும் மு.சோ.க.யின் மாணவர் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தொழிலாளர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டவில்லை என்பது தெளிவாகிறது. முன்னதாக, ஜூலை 14 அன்று, இரண்டு பிரதான தொழிற்சங்க முன்னணிகளான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) மற்றும் தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி (TUMOA), விக்கிரமசிங்கவின் இராஜினாமாவைக் கோரி ஜூலை 18 முதல் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தன. ஆனால் அவர்கள் இதை அமைதியாக கைவிட்டனர். அதற்கு பதிலாக அவர்கள் ஜூலை 17 அன்று அரசியலமைப்பு சீர்திருத்த திட்டம் மற்றும் அரசாங்க கொள்கையில் மாற்றங்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டி, திங்கள் மற்றும் செவ்வாய் அன்று வரையறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

செவ்வாயன்று நடந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதி

நான்கு மாதங்களுக்கு முன்பு அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்ததில் இருந்து மீண்டும் மீண்டும் நடந்ததைப் போல, பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் வெடிக்கும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. ஏப்ரல் 28 மற்றும் மே 6 இல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களில் கலந்து கொண்டனர், மேலும் மே 9 அன்று காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினர்.

அப்போதிருந்து, தொழிற்சங்கங்கள் எந்தவொரு வெகுஜனத் தொழிலாளர் அணிதிரட்டலையும் திட்டமிட்டு தடுத்துவிட்டன, கைவிடுவதற்காகவே அடிக்கடி வேலைநிறுத்தங்களை அறிவித்து வந்தன அல்லது வேலை நடவடிக்கையை ஏதாவது ஒரு குழு தொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்துகின்றன.

நாட்டின் மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்று தம்பட்டம் அடிக்கும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டம், முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் செயல்திட்டத்திலிருந்து வேறுபட்டதல்ல. அவர்களைப் போலவே, அதன் மையக் கோரிக்கையானது, நீண்டகால எரிபொருள், உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை மற்றும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் பங்கேற்புடன் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும், என்பதாகும்.

அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களுக்கு தலைமை தாங்குபவர்களின் முகங்களை மாற்றுவது உலக முதலாளித்துவமும் அதன் இலங்கையின் அடியாட்களும் உருவாக்கும் சமூகப் பேரழிவை தடுத்து நிறுத்திவிடும் என்பது போல் அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

மாறாக, நெருக்கடியானது, அதன் சுமையை அடுத்தடுத்த அரசாங்கங்களால் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்தப்படுன்றன. இந்த பொருளாதார நெருக்கடி கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இப்போது ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரினால் தீவிரமடைந்துள்ளது. இது முதலாளித்துவத்தின் தோல்வியையும், வெகுஜனங்களின் தேவைகளுக்கும் இலாப அமைப்புக்கும் இடையிலான சமரசமற்ற முரண்பாட்டையும் அம்பலப்படுத்துகிறது.

இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு தங்கள் சொந்த தீர்வை அபிவிருத்தி செய்ய வேண்டும், இது தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் தேவைகளுடன் தொடங்கப்பட வேண்டும். எனவே அவர்களை பிற்போக்கு, ஊழல் நிறைந்த உத்தியோகபூர்வ அரசியல் கட்டமைப்பிற்குள் கட்டிப்போட்டு வைக்க முனையும் அல்லது இலங்கை முதலாளித்துவத்தின் கீழ் எதற்கு “செலவிட” முடியுமோ அதற்கு அவர்களை மட்டுப்படுத்தி வைக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.”.

அனைத்து தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் கிராமப்புற விவசாயப் பகுதிகளில், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் இருந்து சுயாதீனமாக, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரளவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும் சோசலிச சமத்துவக் கட்சியானது நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பப் போராடுகிறது.

திங்களன்று 'ஜனநாயக விரோத இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒழிக!' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியதாவது: விளக்கினார்: 'சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை நேரடியாக அணுகும், ஜனநாயக மற்றும் சோசலிச கோரிக்கைகளை பரிந்துரை செய்கின்றது. நடவடிக்கைக் குழுக்கள் அந்த கோரிக்கைகளைச் சூழ போராட முடியும். பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளின் தேசியமயமாக்கல், பில்லியனர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுதல், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல், ஏழை விவசாயிகளின் கடன்களை இரத்து செய்தல், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது ஏகபோகத்தை நிறுவுதல் மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை பண வீக்கத்துக்கு ஏற்ப அட்டவணைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.”

மேலும் படிக்க

Loading