சளைக்காத ட்ரொட்ஸ்கிச போராளி ஜெராணி ரட்நாயக்க 73 வயதில் காலமானார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வாழ்நாள் உறுப்பினரான தோழர் ஜெராணி ரட்நாயக்கவின் அகால மரணத்தை மிகுந்த இழப்பு உணர்வோடு அறிவிக்கின்றோம்.

தோழர் ஜெராணி ரட்நாயக்க

பல நாட்கள் கோவிட்-19 தொற்றுநோயால் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜூலை 8 வெள்ளிக்கிழமை அதிகாலை மாரடைப்பு காரணமாக அவர் இறந்தார்.

ஜெராணி இலங்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) தேசிய ஆசிரியரான கமிலசிறி ரட்நாயக்கவின் மனைவியும் வாழ்நாள் துணைவியும் ஆவார். அவரது மகன் ஜயன் ரட்நாயக்க, மகள் வனேஜா ரட்நாயக்க, மருமகன் மருமகள் மற்றும் நான்கு பேரப் பிள்ளைகளும் அவரை இழந்துவிட்டனர்.

ஜெராணி ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஒரு உறுதியான போராளி ஆவார். அவர் 1949 பெப்ரவரி 7 இல் தீவின் வடக்கே தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் பிறந்தார். பின்னர், அவரது தந்தை கொழும்பு மாநகர சபையில் பணிபுரிந்த காரணத்தால் குடும்பம் கொழும்புக்கு இடம்பெயர்ந்தது. அவர்கள் கொழும்பின் தெற்கு புறநகரில் வசித்து வந்ததுடன், ஜெராணி கல்கிசையில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை பெற்றார்.

1948இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்ததில் இருந்து, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், ஒவ்வொரு தீவிர அரசியல் நெருக்கடிக்கும் இனவாத வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலமே பதிலளித்தன. 1958இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அரசாங்கத்தின் கீழ் முதலாவது பெரிய தமிழர் விரோதக் கலவரம் இடம்பெற்றது. 1956 இல் சிங்களம் மட்டும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றும் இனவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அது ஆட்சிக்கு வந்தது. இது தீவின் தமிழ் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகத் தள்ளியது.

1958 இல் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை தொடர்ந்து, ஜெராணியின் தந்தை யாழ்ப்பாணத்திற்குத் திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஜெராணியின் குடும்பத்தினர் உட்பட கொழும்பு பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். தமிழ் சிறப்புப் பட்டப்படிப்புக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முன்பு, அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி மகளிர் உயர்நிலைக் கல்லூரிக்குச் சென்றார். அவர் பட்டம் பெற்ற பின்னர் 1973 இல் மத்திய வங்கியில் பொருளாதார ஆய்வுத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

ஜெராணி சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) தோழர்களை, மத்திய வங்கியில் சந்தித்த பின்னர் கட்சியில் சேர்ந்தார். அப்போதிருந்து, அவர் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கிற்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன் மத்திய வங்கி ஊழியர் சங்கத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பிரிவில் அவர் ஒரு முக்கிய பங்கு வகிப்பவராக இருந்தார்.

முதலாளித்துவத்தின் பாதுகாவலர்கள் மற்றும் அவர்களின் 'இடது' கைக்கூலிகளின் எதிர்ப்பையும் மீறி, அதன் உறுதியான அரசியல் போராட்டத்தின் மூலம், மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைமைத்துவத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வென்றது. ஜெராணி மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் பலமுறை பணியாற்றியதோடு உதவி பொருளாளர் பதவியையும் வகித்தார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைவதற்கான ஜெராணியின் முடிவு பல வழிகளில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அரசியலில் தீவிரமாகப் பங்கேற்பதற்காக, அவர் இலங்கை போன்ற பின்தங்கிய நாட்டில் இருக்கும் சமூகத் தடைகளைத் தாண்டியதுடன் கட்சியின் புரட்சிகர அரசியலிலும், இனம், மொழி, பாலினம் ஆகியவற்றை கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான அதன் போராட்டத்திலும் ஈர்க்கப்பட்டார். இந்த முன்னோக்கிற்கான அவரது சமரசமற்ற போராட்டம் வங்கி ஊழியர்களிடையே மரியாதையை பெற்றது. மத்திய வங்கி ஊழியர் சங்க கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள் அவரது முன்னாள் சக ஊழியர்களால் இன்றும் நினைவுகூரப்படுகின்றன.

1970 களில் கொழும்பில் நடந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்ததன் மூலம், சிறிமா பண்டாரநாயக்க மற்றும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) 1964 இல் செய்த காட்டிக் கொடுப்பின் விளைவாக, 1970களில் தோன்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குட்டி முதலாளித்துவ தமிழ் தேசியவாத இயக்கங்களின் முன்னோக்கை அவர் நிராகரித்தார்.

ட்ரொட்ஸ்கிச கட்சி என்று கூறிக்கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி, சோசலிச சர்வதேசியவாதத்தை கைவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்கள ஜனரஞ்சகவாதத்திற்கு அடிபணிந்தது. 1970 களில், லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் அமைக்கப்பட்ட இரண்டாவது பண்டாரநாயக்க கூட்டணி அரசாங்கம், 1972 இல் ஒரு புதிய இனவாத அரசியலமைப்பை கொண்டுவந்து தமிழர்களுக்கு எதிரான விரிவான பாரபட்சமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இது தமிழ் இளைஞர்களிடையே எதிர்ப்பு அலையைத் தூண்டியது.

ஜெராணி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தமிழ் பத்திரிகையான தொழிலாளர் பாதையில் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக தனது பெரும் நேரத்தை அர்ப்பணித்தார். அவர் 2002 இல் காலமான பத்திரிகை ஆசிரியர் சபாரத்தினம் இராசேந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றியதுடன் தமிழ் தேசியவாதத்திற்கு எதிரான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டத்தில் முன்னணியில் இருந்தார். கூட்டங்களில் ஆற்றப்படும் உரைகளை பார்வையாளர்கள் மத்தியில் உள்ள தமிழ் பேசுபவர்களுக்காக மொழிபெயர்ப்பதற்கு, கட்சி அவரது தமிழ் மொழி நிபுணத்துவத்தை நம்பியிருந்தது. இவற்றில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவின் உரைகளும் அடங்கும்.

மத்திய வங்கியில் பணியாற்றிய கே. ரட்நாயக்க, 1974 இல் இரண்டாவது பண்டாரநாயக்க கூட்டணி அரசாங்கத்தின் போது மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், கூட்டணி அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற அரசு அடக்குமுறையை எதிர்த்துப் போராடியதுடன், இதன் போது லங்கா சம சமாஜக் கட்சி போன்ற 'இடது' கட்சிகளை முதலாளித்துவத்தின் கைக்கூலிகள் என்று அம்பலப்படுத்தியது. தொழிலாள வர்க்கத்திற்காகப் பேசுவதாக பொய்யாகக் கூறிக்கொண்ட லங்கா சம சமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியையும் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து பிரிந்து, சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும் என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கோரி, மத்திய வங்கி ஊழியர் சங்கத்தை, கட்சி அரசியல் ரீதியாக வழிநடத்தியது.

மத்திய வங்கி ஊழியர் சங்கத்துக்குள் இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகக் குழு, குறிப்பாக, துல்சிறி அந்திராதி தலைமையிலான 'இடது' மத்தியவாத குழுவின் கேடுகெட்ட அரசியல் பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்களில் சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது போல்:

“லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிகாரத்தை கைப்பற்றக் கோருவதன் மூலம், சீர்திருத்தவாத கட்சிகளைப் பற்றி மாயைகளை உருவாக்குவதாக துல்சிறி அந்திராதி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை விமர்சித்தார். எவ்வாறாயினும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கோரிக்கையானது, இந்தக் கட்சிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, தலைமைத்துவத்துக்காக லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை இன்னும் தயக்கத்துடன் எதிர்பார்த்திருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச எண்ணம் கொண்ட பிரிவுகளின் மீதான அவர்களின் பிடியை உடைப்பதை நோக்கமாகக் கொண்டது. அந்திராதியின் இடதுசாரி கண்டனம், உண்மையில் லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை அம்பலப்படுத்தும் இன்றியமையாத அரசியல் பணியை அலட்சியம் செய்வதாகும். இதன் மூலம் தொழிலாளர்கள் இந்தக் கட்சிகளின் கைகளில் விட்டுவைக்கப்பட்டனர்.

'லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி (LSSP-R) இந்த வெகுஜன இயக்கத்தை காட்டிக்கொடுத்தமை, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மீண்டும் ஆட்சிக்கு வர வழி வகுத்தது. 1977 ஜூலை தேர்தலில், கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைந்தன: 168 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களை வென்றது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை தக்கவைத்துக் கொண்டதுடன் லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து ஆசனங்களையும் இழந்தன.

இந்த கொள்கை ரீதியான அரசியல் போராட்டத்தில் இளம் ஜெராணி ஒரு முன்னணி போராளியாக இருந்தார். 1974 இல், அவர் கே. ரட்நாயக்கவை மணந்து, அவரது வாழ்நாள் துணைவியாகவும் அவரது பணிகளில் நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் இருந்தார். அவர்களது பிள்ளைகள் 1976 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் பிறந்தனர். அவர்கள் கொழும்பின் புறநகரில் உள்ள தொழிற்துறைப் பகுதியான இரத்மலானையில் வசித்து வந்தனர். அங்கு அவர்களது வீடு கட்சித் தோழர்களின் இரண்டாவது வீடாக மாறியது.

ஜெராணியும் கமலசிறி ரட்நாயக்கவும்

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பும் அது சிங்கள மேலாதிக்கத்தை தழுவிக்கொண்டதும் 1976ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் விற்றுத் தள்ளப்பட்டதற்கும், சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளுக்கு நாட்டைத் திறந்துவிடும் சந்தை சார்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திய, உலகின் முதல் அரசாங்கங்களில் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தமைக்கும் முக்கிய காரணிகளாகும்.

அதிக ஊதியத்திற்கான கோரிக்கையை மையமாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் இரண்டாவது பரந்த அடிப்படையிலான பொது வேலைநிறுத்த இயக்கம், ஜயவர்த்தன அரசாங்கத்திற்கு எதிராக 1980 ஜூலையில் வெடித்தது. பொது வேலைநிறுத்தத்தை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக மாற்ற புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது. அந்த போராட்டம் லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவற்றின் மத்தியவாத வக்காலத்துவாங்கும் போலி இடதுகளை எதிர்த்தது. அந்தக் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்தை வெறும் சம்பளப் பிரச்சனையாக அறிவித்தனர்.

வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவித்த ஜயவர்த்தனாவின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், தோழர் ஜெராணி ஏனைய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களுடன் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டார். வேலைநிறுத்தத்தை வேண்டுமென்றே மட்டுப்படுத்திய 'இடது' கட்சிகளின் துரோகம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்வதற்கான கதவை அரசாங்கத்திற்கு திறந்து விட்டது.

பெருமளவிலான வேலைநீக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் அடியாக இருந்தது. ரட்னாயக்க குடும்பத்தின் இரு உறுப்பினர்களும், ஏனைய பல புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களைப் போலவே, தங்கள் வேலைகளை இழந்ததுடன், அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத மிகவும் கடினமான வாழ்க்கையை எதிர்கொண்டனர்.

பொது வேலைநிறுத்தத்திற்கு பிரதிபலிக்கும் வகையில், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டுவதன் பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படையாக திரும்பியது. அதன் தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்கள் 1983 ஜூலையில் கொடூரமான தமிழர்-விரோத படுகொலைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தன, இது அடுத்த 26 ஆண்டுகளுக்கு தீவை மூழ்கடித்த, புலிகளுக்கு எதிரான இரத்தக்களரி இனவாத யுத்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர் விரோத படுகொலைகளின் போது, அரசாங்க சார்பு குண்டர்கள் ரட்நாயக்கவின் வீட்டை எரித்து தரைமட்டமாக்கியதால், குடும்பத்தினர் கட்சி உறுப்பினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுவற்குத் தள்ளப்பட்டனர். ஜெராணியும் அவர்களது மகன் ஜயனும் தோழர் விஜே டயஸின் வீட்டில் சில காலம் வாழ்ந்தனர். பல மாதங்களாக வீடு வீடாக மாறிச் சென்ற பின்னர், 1983 இறுதியில் மத்திய வங்கியில் புதிதாகச் சேர்ந்தவராக ஜெராணி வேலையில் அமர்த்தப்பட்ட பின்னர், இவர்களால் எரிந்துபோன தங்கள் வீட்டை மீண்டும் கட்ட முடிந்தது.

தொடர்ந்து கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முழுவதும், ஜெராணி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்கிற்காக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் தைரியமாக பிரச்சாரம் செய்தார். அவர் கட்சியின் பத்திரிகைகளான கம்கறு மாவத மற்றும் தொழிலாளர் பாதை ஆகியவற்றை தொழிலாள வர்க்க வாழ்விடங்களில் வீடு வீடாக மேற்கொண்ட பிரச்சாரங்களில் விற்றார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) 1985-86 பிளவின் போது, பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத நிலைப்பாடுகளுக்கு எதிரான தீர்க்கமான அரசியல் போராட்டத்தில், அனைத்துலகக் குழுவின் உறுதியான ஆதரவாளராக ஜெராணி இருந்தார். நான்காம் அகிலத்திற்குள், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தோல்வியானது ட்ரொட்ஸ்கிஸ்டுகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கட்டுப்பாட்டைக் வெற்றிகொள்ள உதவியதுடன், இலங்கையின் கடினமான அரசியல் போராட்டங்களில் தீர்க்கமானதாக இருந்த உண்மையான மார்க்சிசத்தின் மலர்ச்சிக்கு வழிவகுத்தது.

1987 ஜூலையில் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் தெற்கில் உள்ள சிங்கள கிராமப்புற இளைஞர்களிடையே ஏற்பட்ட சமூக அமைதியின்மைக்கு எதிராக அரச அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை ஒடுக்கவும், நிராயுதபாணியாக்கவும் இந்திய அரசாங்கம் வட இலங்கைக்கு துருப்புக்களை அனுப்பியது.

இரண்டு அரசாங்கங்களுக்கும் எதிராக தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராடுவதன் அடிப்படையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உடன்படிக்கையை எதிர்த்தது. ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 16 அன்று, நல்லூரில் (யாழ்ப்பாணத்திற்கு அருகில்) உள்ள நாவலர் மண்டபத்தில் கட்சி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட கூட்டு அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு அது அழைப்பு விடுத்தது. தோழர் கே. ரட்நாயக்கவின் முக்கிய உரையை தமிழில் மொழிபெயர்த்ததில் ஜெராணிக்கு முக்கிய பங்குண்டு. இது இனவாத அடக்குமுறைக்கு எதிரான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாவதோடு, யாழ்ப்பாணம் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள ஊடகங்களில் முக்கியமான விடயமாக அறிவிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) சிங்கள இனவாதத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை எதிர்த்தது. மக்கள் விடுதலை முன்னணி, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை அன்றி, தேசத்தின் ஒற்றுமையை பாதுகாப்பதாக அறிவித்தது. அதன் பிற்போக்கு பிரச்சாரத்தை எதிர்த்த தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளை அதன் ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றனர். 1988 நவம்பரில், அரசு அடக்குமுறை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தாக்குதல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க, தொழிலாள வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அனைத்தினதும் ஐக்கிய முன்னணிக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழைப்பு விடுத்தது. தொழிலாளர் பாதுகாப்புப் படைகள், நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் கூட்டு மறியல் போராட்டங்களுக்கு கட்சி அழைப்பு விடுத்தது. 1988-89ல் மக்கள் விடுதலை முன்னணியின் பாசிச வெறியாட்டத்தின் போது மூன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தோழர்கள் மக்கள் விடுதலை முன்னணி குண்டர்களால் கொல்லப்பட்டனர்.

1988ல், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் முன்னோக்கிற்காகப் போராடி மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைமையை மீண்டும் வென்றது. மத்திய வங்கியில் உள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக குழு, ஐக்கிய முன்னணிக்கான பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஜெராணி மிகவும் சுறுசுறுப்பாக துண்டு பிரசுரம் விநியோகித்து, பிரச்சாரம் செய்து ஆபத்தில் உள்ள சிக்கலான அரசியல் பிரச்சினைகளை சக ஊழியர்களுக்கு விளக்கினார்.

1996ஆம் ஆண்டு உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மத்திய வங்கி மீது விடுதலைப் புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக அன்று வேலைக்குச் செல்ல முடியாததால் ஜெராணி சற்றே உயிர் தப்பினார். குண்டுவீச்சில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பல தோழர்களை இழந்தது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் போராளி உறுப்பினர்கள் ஆவர். ஜெராணி இந்த கொடூரமான குற்றத்தால் மிகவும் வருத்தமடைந்து, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சளைக்காமல் ஒருவர் பின் ஒருவராக சென்று பார்வையிட்டார்.

2016 இல், அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (பிரான்ஸ்) ஸ்தாபக மாநாட்டில் கலந்துகொண்ட தோழர் கே. ரட்நாயக்கவுடன் தோழர் ஜெராணியும் பாரிஸுக்கு விஜயம் செய்தார். அவர் பிரான்சில் உள்ள அவரது தோழர்களால் நினைவுகூரப்பட்டார், அவர்களில் பலர் கட்சிக்கு வென்றெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆவர். 'இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்திற்காக போராடுவதற்கு அவர் அர்ப்பணித்த சக்தி, பிரான்சில் ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதில் மையப் பங்கு வகித்தது' என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெராணி ஒரு உணர்திறன் கொண்ட பண்பட்ட பெண்ணாவர். இலக்கியமும் இசையும் அவளுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன. அவர் அழகியல் விரும்பியாக இருந்து பல வகையான பாரம்பரிய இசையைக் கேட்டு மகிழ்ந்தார். அவர் தனது தாய்மொழி தமிழுக்கும் மேலாக ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தலைசிறந்த நாவல்களை படிப்பார். அவரது ஓய்வு நேரம் வாசிப்பில் கழிந்தது. சுயசரிதை நாவல்கள் மற்றும் திரைப்பட விமர்சனங்களில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக அவர் வரலாற்று மற்றும் கருப்பொருள் சார்ந்த திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

கட்சித் தோழர்கள் மத்தியில், ஜெராணி தனது தாராளமான விருந்தோம்பல் மற்றும் சமையல் திறமைக்காக அன்புடன் அறியப்பட்டவர். அவரது வீடு, குறிப்பாக அரசின் அடக்குமுறை தீவிரமாக இருந்த கடினமான காலங்களில், தோழர்களுக்கு ஒரு சந்திப்பு இடமாக இருந்தது. எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் தோழர்களுக்கு எதையும் வழங்குவதில் அவர் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை, அத்துடன் அவரது வீடு கட்சி நடவடிக்கைகளுக்காக திறந்தே வைக்கப்பட்டிருந்தது, ஒரு காலத்தில் கட்சி அலுவலகமாகக் கூட இருந்தது.

2020 ஆம் ஆண்டு வரை அவரது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்தன, அவருடைய நோய்கள் அவருடைய வழக்கமான ஆற்றல் மற்றும் வளத்துடன் ஈடுபாடு காட்டுவதைத் தடுத்தன. அவர் கோவிட்-19 நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பின்பற்றும் 'அனைவருக்கும் பரவட்டும்' என்ற குற்றவியல் கொள்கைகளுக்கு பலியானவர்களில் இன்னுமொருவர் ஆகிவிட்டார் என்பது துன்பகரமானது.

தோழர் ஜெராணி ரட்நாயக்கவின் நினைவுக்கு சோசலிச சமத்துவக் கட்சி மரியாதை செலுத்துகிறது.

Loading