ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி நியூயோர்க் உரையில் போர் முரசு கொட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் வெளியுறவு மந்திரியும் பசுமைக் கட்சி அரசியல்வாதியுமான அன்னலெனா பெயபொக் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நியூயோர்க் நகரத்தில் உள்ள The New School இல் அளித்த வெளியுறவுக் கொள்கை பற்றிய முக்கிய உரை பிரதிபலிப்பை கோருகிறது. மிகவும் மூர்க்கத்தனமான பொய்களை கொண்ட இந்த உரை சவால் செய்யாமல் விடப்பட்டால், அவை ஒரு சொந்த பேரழிவுகரமான உந்துதலை உருவாக்கிவிடும்.

நாஜிகளிடமிருந்து ஒரு யூதராக ஜேர்மனியை விட்டு வெளியேறி 1967 முதல் 1975 வரை The New School இல் பயிற்றுவித்த ஹன்னா ஆரெண்டின் (Hannah Arendt) இன் கடந்த கால நினைவுகளுடன், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சொற்றொடர்கள் உள்பொதிந்த அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆதிக்கம் செலுத்தும் ஒரு உலகம் தொடர்பான பார்வையை பெயபொக் வரைந்தார். அவர் ரஷ்யா மீது மட்டுமல்ல, சீனா மீதும் போர் பிரகடனம் செய்தார். மேலும் இந்த ஏகாதிபத்திய பெரும் சக்தி கற்பனையை மூச்சடைக்கக்கூடிய பொய்மைப்படுத்தல்கள், புறக்கணிப்புகள் மற்றும் திரிபுகளுடன் நியாயப்படுத்தினார்.

கியேவில் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயபொக் (Photo: kmu.gov.ua/CC BY-SA 4.0)

1989 இல், ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரபலமாக ஜேர்மனிக்கு 'தலைமை பங்காளித்துவம்' வழங்குவதாக கூறினார். ஆனால் அந்த நேரத்தில், ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைவதில் மிகவும் தீவிரமாக இருந்ததுடன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டது. இன்று, விஷயங்கள் அடிப்படையில் மாறிவிட்டன என்று அவர் கூறினார். 'இப்போது நாம் தலைமைத்துவத்தில் ஒரு இணைந்த கூட்டை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்றார்.

அத்தகைய தலைமைத்துவ கூட்டு 'நல்ல முன்னைய அட்லாண்டிக் காலத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு விரும்பம்மிக்க திட்டம் அல்ல' என்று பெயபொக் தொடர்ந்தார். அவர் நல்ல பழைய விரும்பம்மிக்க காலங்கள் என குறிப்பிடுவது பனிப்போர் காலத்தையாகும். அதன் போது உலகம் மீண்டும் மீண்டும் அணுசக்தி அழிவின் விளிம்பில் நின்றது. அந்த நேரத்தில், பசுமைவாதிகள் இன்னும் அணு ஆயுதங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது, ஸ்டான்லி குப்ரிக்கின் புகழ்பெற்ற திரைப்படத்தில் வரும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சலோவ் (Dr. Strangelove) போன்ற பெயபொக், வெடிகுண்டை நேசிக்கக் கற்றுக்கொண்டதுடன், மேலும் அதை தானே பயன்படுத்த நினைக்கிறார்.

அவரது பேச்சின் ஒரு வினோதமான பத்தியில், குழந்தைகள் காலை உணவின் போது, “அம்மா, அணு ஆயுதங்கள் என்றால் என்ன?” என்று எப்படிக் கேட்கிறார்கள் என்பதை விவரிக்கிறார். 'நான் உண்மையில் நேட்டோவை விரும்புகிறேன்' என்று மட்டுமே அவர்களுக்கு உறுதியளிக்க முடியும். இந்தக் குழந்தைகளின் தாத்தா பாட்டி, 80களின் மத்தியில் மறுஆயுதமயமாக்கலை எதிர்த்துப் போராட தெருக்களில் இறங்கினர் என்று அவர் கூறுகிறார். 'இப்போது இந்த தாத்தா, பாட்டி, தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் சமையலறை மேஜையில் அமர்ந்து மறுஆயுதமயமாக்கலைப் பற்றி விவாதிக்கிறார்கள்.'

பெயபொக் இங்கே தன்னைப் பற்றியும் பசுமைக் கட்சியினரின் பணக்கார ஆதரவாளர்களைப் பற்றியும் பேசுகிறாரை தவிர ஜேர்மன் பெரும் சக்தி திட்டங்களுக்காக தாம் அணு ஆயுதங்களால் எரிக்கப்படுவதை சிறிதளவும் விரும்பாத பெரும்பான்மையான மக்களைப் பற்றி அல்ல.

அவரது உரை முழுவதும், விரும்பப்படும் 'தலைமைப் பங்காளித்துவம்' முதன்மையாக இராணுவ அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற உண்மைக்கு பெயபொக் திரும்பி வந்தார். 'ஜேர்மனியில், 'வர்த்தகத்தின் மூலம் மாற்றம்' என்ற நீண்டகால ஜேர்மன் நம்பிக்கையை நாங்கள் கைவிட்டுள்ளோம்,' என்று அவர் கூறுகிறார். இராணுவ சக்தி மூலமான மாற்றம் வெளிப்படையாக அதன் இடத்தை எடுத்துள்ளது.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர், ஜேர்மன் அரசாங்கம் 'பாதுகாப்புக் கொள்கையில் சில நீண்டகால நிலைப்பாடுகளை பரிசோதனைக்கு உட்படுத்தியது' என்று அவர் கூறுகிறார். ஜேர்மனி 100 பில்லியன் யூரோக்களின் சிறப்பு நிதியை அமைத்துள்ளது. இதன் மூலம் நாங்கள் எங்கள் ஆயுதப் படைகளை வலுப்படுத்த விரும்புகிறோம். பல தசாப்தங்களாக இருந்த எமது ஆயுத ஏற்றுமதி கொள்கைகளை நாங்கள் திருத்தியுள்ளோம். இதனால் ஜேர்மனி இப்போது உக்ரைனின் வலுவான இராணுவ மற்றும் நிதி ஆதரவாளர்களில் ஒன்றாகியுள்ளது. மேலும் நேட்டோவிற்கு எங்களது பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளோம்”.

ஆனால் இது ஆரம்பம் மட்டுமே என்று அவர் கூறினார்: 'எங்கள் இலக்கு நேட்டோவின் ஐரோப்பிய தூணை மேலும் வலுப்படுத்துவதாகும் ... மேலும் நீண்ட காலத்திற்கு அவ்வாறு செய்ய வேண்டும்.' ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் மூலோபாயமிக்கதாக மாற வேண்டும், ”ஒரு தலைமை கூட்டுறவில் அமெரிக்காவுடன் சமமான நிலையில் கையாளும் திறன் கொண்ட ஒரு ஒன்றியமாக வேண்டும். ”மேலும் அது 'ஒரு வலுவான பாதுகாப்பை செயற்படுத்துபவராக' இருக்க வேண்டும். மேலும் அதன் பாதுகாப்புத் தொழிற்துறைகளை இன்னும் நெருக்கமாக இணைக்க வேண்டும். மேலும் 'அதன் அண்டை நாடுகளில் உள்ள பிராந்தியங்களை ஸ்திரப்படுத்த இராணுவ நடவடிக்கைகளை நடத்தும் திறன் கொண்டதாக' இருக்க வேண்டும்”.

வெட்கக்கேடான பொய்கள்

இரண்டு உலகப் போர்களில் மிருகத்தனமான குற்றங்களுக்குப் பின்னர், ஜேர்மன் இராணுவவாதம் பல தசாப்தங்களாக தன்னை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இப்போது, பெயபொக் அதன் மறுமலர்ச்சியை நியாயப்படுத்த ஒரு வெட்கக்கேடான பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கின்றார்.

பெப்ரவரி 24 இல் உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலின் நாள் 'நமது உலகத்தை மாற்றியது' என்ற கூற்றுடன் இது தொடங்குகிறது. ஜனாதிபதி புட்டின் 'வலிமையானவர்களின் சட்டம் பொருந்தக்கூடிய ஒரு உலகத்தை விரும்புகிறார். அவர் சட்டத்தின் வலிமையை அல்ல, பெரிய சக்திகள் விருப்பப்படி சிறிய நாடுகளை இணைக்கக்கூடிய ஒரு உலகத்தை விரும்புகின்றார்.

'எனக்கு 40 வயது. நான் மேற்கு ஜேர்மனியில் பிறந்தேன், அதிர்ஷ்டவசமாக போரையோ சர்வாதிகாரத்தையோ அனுபவித்ததில்லை' என பெயபொக் தொடர்ந்தார். ஆனால் இப்போது, ஜனாதிபதி புட்டின் 'அமைதியான ஐரோப்பிய ஒழுங்கை கோட்பாட்டளவில் தாக்கவில்லை, சர்வதேச ஒழுங்கமைப்பை தாக்குகின்றார் - அவரது தாக்குதல் கொடூரமான யதார்த்தமாகும்'.

பெயபொக் ஒப்பீட்டளவில் இளமையானவராக இருக்கலாம் (அவருக்கு உண்மையில் 41 வயது). ஆனால் அவர் 'போரையோ சர்வாதிகாரத்தையோ அனுபவித்ததில்லை' என்ற கூற்று வெறுமனே அபத்தமானது. அவருக்கு 10 வயதாக இருந்ததிலிருந்து, இப்போது அவர் ஒரு 'தலைமைப் பங்காளித்துவத்தை' நாடும் அமெரிக்கா, நடைமுறையில் இடைவிடாது போரை நடத்தி வருகிறது.

வாஷிங்டன் 'வலிமையானவர்களின் சட்டத்தை' பயன்படுத்துவதோடு சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிகளையும் புறக்கணிப்பது மட்டுமல்லாமல், அது ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் உள்ள முழு சமூகங்களையும் அழித்து, நூறாயிரக்கணக்கான மக்களைக் கொன்று மற்றும் மில்லியன் கணக்கானவர்களை நாட்டைவிட்டு தப்பி ஓடச் செய்துள்ளது. இதற்கிடையில், பொருளாதார போட்டியாளரான சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வெளிப்படையாக போருக்கு தயாராகி வருகிறது.

சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான யூகோஸ்லாவியாவிற்கு எதிரான நேட்டோ போரில் ஜேர்மன் இராணுவம் பங்கேற்பதற்கு அப்போதைய பசுமைக் கட்சி வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷர் பச்சைக்கொடி காட்டியபோது பெயபொக்கிற்கு 18 வயது.

மற்றும் 33 வயதில், அவர் ஒரு மத்திய நாடாளுமன்ற அங்கத்தவராகவும், பசுமைக் கட்சித் தலைமையின் உறுப்பினராக இருந்தார். அது இன்றைய போருக்கு அடித்தளம் அமைத்த கியேவின் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பில் ஒரு பங்கு வகித்தது. இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பாசிச ஆயுதக்குழுக்களின் உதவியுடன் தூக்கியெறியப்பட்டு, மேற்கத்திய சார்பு கைப்பாவையால் மாற்றப்பட்டார்.

அப்போதும் கூட, ஜேர்மன் அரசாங்கம் மீண்டும் ஒரு பெரிய அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக மாற விரும்புவதாக அறிவித்தது. கியேவில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னதாக, நாட்டினதும் அரசாங்கத்தினதும் மூன்று உயர்மட்டப் பிரதிநிதிகளான ஜனாதிபதி ஜோகாயிம் கவுக், வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெயர் லெயென் (Christian Democratic Party, CDU) ஆகியோர் மியூனிக் நகரின் பாதுகாப்பு மாநாட்டில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உரைகளில் இதை அறிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் பிரதிபலிப்பாக இராணுவம் பாரிய ஆயுதங்கள் மறுஆயுதமயமாக்கப்பட்டது என்ற பெயபொக்கின் கூற்று ஒரு வெளிப்படையான பொய்யாகும். மாறாக, மக்கள் மத்தியில் பலத்த நிராகரிப்பைச் சந்திக்கும் நீண்டகால மறுஆயுதமயமாக்கல் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான விருப்பமான போலிக்காரணங்களை போர் வழங்கியுள்ளது.

2014 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் நேட்டோ உக்ரேனை திட்டமிட்டு மறுஆயுதமயமாக்கி, அது நேட்டோவில் இணைவதற்கான வாய்ப்பை முன்நிறுத்தி, சமாதானமான தீர்வைக் காண்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாசமாக்கியது. ஒரு வலதுசாரி தேசியவாதியிடமும் மற்றும் ரஷ்ய தன்னலக்குழுக்களுக்கு பரப்புரை செய்பவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது போல் ஜனாதிபதி புட்டின் பதிலளித்தார். மேலும் நேட்டோ எதிர்பார்த்தது போல், அவர் இராணுவ ரீதியாக தாக்கினார்.

அப்போதிருந்து, நேட்டோ இந்த பிற்போக்குத்தனமான தாக்குதலை இரக்கமின்றி தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இது உக்ரேனிய மக்களின் முதுகில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை நடத்தி வருவதுடன், மேலும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான உயிர்களை இழந்தாலும் கூட ரஷ்ய இராணுவம் தோற்கடிக்கப்படும் வரை அதைத் தொடர அனைத்தையும் செய்கிறது. புவிசார் அரசியல் போட்டியாளராக இருப்பதிலிருந்து ரஷ்யாவை அகற்றுவதும், அதன் பரந்த மூலப்பொருட்களுக்கான தடையின்றி அணுகலைப் பெறுவதும், அதன் பாரிய நிலப்பரப்பை பிரிப்பதும் அதன் குறிக்கோள் ஆகும். ரஷ்யாவிற்கு எதிரான போர் மற்றும் சீனாவிற்கு எதிரான தாக்குதல் ஆகியவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் உள்நாட்டில் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களில் இருந்து திசைதிருப்பும் நோக்கத்தை கொண்டவை.

இந்தப் பின்னணியில், 'அட்லாண்டிக்கிற்கு இடையிலான மதிப்புகள்' மற்றும் 'பின்னோக்கி செல்லமுடியாத அட்லாண்டிக் கூட்டாண்மை' பற்றிய பெயபொக்கின் அழைப்பு (அவர் தனது பேச்சின் போது 'அட்லாண்டிக்கிற்கு இடையிலான' என்ற வார்த்தையை 30 முறைக்குக் குறையாமல் பயன்படுத்தினார்) குமட்டலை மட்டுமே ஏற்படுத்தும். இது கொள்ளையடிப்பவர்களுக்கு இடையிலான கூட்டாகும்.

பெயபொக் 'அட்லாண்டிக்கிற்கு இடையிலான தலைமைத்துவ பங்காளித்துவத்தை' வெளிப்படையாக சீனாவுடனான மோதலுக்கு நீட்டிக்க விரும்புகின்றார். 'சீனா தனது பிராந்தியத்தில் அதிகப்படியான பொருளாதாரரீதியாக தங்கியிருக்கும் தன்மையை உருவாக்குவது எங்கள் நலனுக்காக இருக்க முடியாது,' என்று அவர் அறிவித்தார். தனது அமைச்சகத்திலிருந்து ஒரு புதிய 'சீனா மூலோபாயத்தை' அறிவித்தார். 'அது அடுத்த ஆண்டு வெளியிடப்படுவதுடன், அமெரிக்காவில் மூலோபாய பரிசீலனைகளை முழு கருத்தில் எடுத்துக் கொள்ளும்'.

'சமாதானம், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு' மற்றும் 'மனிதர்களின் மீற முடியாத கண்ணியம்' ஆகியவற்றிற்கான தினசரிப் போராட்டம் பற்றி அவர் வாயடிக்கையில், உண்மையில் அவர் ஜேர்மன் இராணுவவாததின் புதிய வெடிப்பிற்கு தயாரிப்பு செய்கின்றார்.

அதே நேரத்தில், மனித கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் என்று வரும்போது அவர் குறிப்பாக நிகழ்வுகளை தேர்ந்தெடுக்கின்றார். சீனாவில் உள்ள வீகர்களைப் போலவே, புவிசார் அரசியல் போட்டியாளரை பாதிக்கும்போதெல்லாம், உண்மையான மற்றும் போலியான மீறல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவ்வாறான மீறல்கள் அவர்களின் ஒரு கூட்டாளியால் செய்யப்படும்போது அவை புறக்கணிக்கப்பட்டு குறைத்துக்காட்டப்படுகின்றன.

உதாரணமாக, மூன்று வாரங்களுக்கு முன்புதான், எகிப்திய சர்வாதிகாரியும், கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருமான அப்தெல்பத்தா அல்-சிசியை, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளியாக ஜேர்மனிக்கு பெயபொக் வரவேற்றார். அல்-சிசியின் காவல்துறை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொன்றதுடன், பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை அவர்களின் சிறைகளில் சித்திரவதை செய்ததுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு பேரை கொன்றது.

ஜேர்மன் இராணுவவாதத்தின் முன்னணி கட்சி

பசுமைவாதிகள் ஜேர்மன் இராணுவவாதத்தின் முன்னணிக் கட்சியாக மாறிவிட்டனர். அதற்காக்க அவர்கள் தங்கள் முக்கிய அரசியல் விடயமான சுற்றுச்சூழல் பற்றிய கொள்கையை தியாகம் செய்கிறார்கள். உக்ரேனில் போரைத் தொடர, அவர்கள் இப்போது அணு மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீண்ட ஆயுட்காலம் தேவை, விவசாயத்திற்கு புதிய நிலங்களுக்கு பெற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பல தசாப்தங்களாக பிரச்சாரம் செய்து வந்த பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.

Der Spiegel பத்திரிகையாளர் Dirk Kurbjuweit சமீபத்தில் பசுமைக் கட்சியினர் 'ஜேர்மன் அரசு கட்சி' என்ற பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) இடத்தை எடுத்துள்ளனர் என்று சான்றளித்தார். 'அவர்கள் அமைதிவாத வேர்களைக் கொண்டிருந்தாலும் ஆயுத விநியோகத்திற்கு ஆதரவாக உள்ளனர். காலநிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும் அவர்கள் தற்காலிகமாக நிலக்கரியை நம்பியிருக்கிறார்கள். அவை அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து வெளிவந்தபோதிலும் அவர்கள் அணுசக்தி தொடர்பான விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்' என்றார். அவர்கள் இதையெல்லாம் தங்கள் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யவில்லை, ஆனால் “ஜேர்மனியும் ஐரோப்பாவும் இந்த நெருக்கடியைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்பதாலாகும். எனவே, முன்பு ஒரு எதிர்ப்புக் கட்சியாக இருந்த பசுமைக் கட்சி, முன்னர் CDU ஆல் தமக்கானது என உரிமை கோரப்பட்ட ஜேர்மன் அரச கட்சியாக அது மாறிவிட்டது”.

சிடுமூஞ்சித்தனமாக, நியூயோர்க்கில் பசுமைவாதிகள் ஒரு அமைதிவாதிகளிலிருந்து இராணுவவாதக் கட்சியாக மாறியதை நியாயப்படுத்த ஹன்னா ஆரெண்டைப் பயன்படுத்தினார். எந்த கல்விக்கூடத்தையும் அல்லது குறிப்பிட்ட கோட்பாட்டையும் பின்பற்றாத மற்றும் எந்த அறிவார்ந்த கட்டுப்பாடுகளுக்கும் தலைவணங்காத, 'கட்டுப்பாடற்று சிந்திப்பது' என்ற ஆரேண்டின் கொள்கையை அவர் மேற்கோள் காட்டினார். 'அவ்வாறு செய்வதன் மூலம், தப்பெண்ணங்கள் மற்றும் முன்கூட்டிய சிந்தனைகளை நிராகரித்து, புதிய சிந்தனைகளுக்கு நம்மைத் திறக்கும் அளவுக்கு தைரியமாக இருக்கும் ஒரு அணுகுமுறையை அவர் விவரித்தார்' என அவர் முடித்தார்.

ஹன்னா ஆரெண்டின் அரசியல் மற்றும் தத்துவார்த்த கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. அவருடைய இருத்தலியல் தத்துவம் (existential philosophy) ஆழமான வரலாற்று அவநம்பிக்கைக்கு வழிவகுத்ததுடன, முற்றுமுழுதான ஆதிக்கத்தின் கோட்பாடு பாசிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மங்கலாக்குகிறது. ஆனால் ஜேர்மன் இராணுவவாதத்தை நியாயப்படுத்துவதற்காக அவரை தவறாகப் பயன்படுத்த பெயபொக் எடுக்கும் முயற்சிகள் அடாவடித்தனத்தின் உச்சமாகும். 1940 இல் பிரான்சில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் இருந்து தப்பிக்க முடிந்ததால், யூதப்படுகொலையில் இருந்து நூலிழையில் தப்பிய ஆரென்ட், தனது வாழ்நாள் முழுவதும் ஜேர்மன் இராணுவவாதத்தை சமரசம் செய்ய முடியாத எதிர்ப்பாளராக இருந்தார். நாஜி ஆட்சியின் அனுபவங்கள் தொடர்பாக அவர் தனது எழுத்துக்களின் பெரும் பகுதியை அர்ப்பணித்தார்.

அரசியல் படிப்பினைகள்

பசுமைக் கட்சியினர் ஜேர்மனியின் முன்னணி போர்க் கட்சியாக மாறுவது அடிப்படை அரசியல் படிப்பினைகளைக் உள்ளடக்கியுள்ளது. சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் மற்ற அனைத்து தீமைகளுக்கு எதிரான போராட்டம் போன்ற போருக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு வர்க்கப் பிரச்சினையே தவிர, வர்க்க-நடுநிலையான 'மனிதாபிமான' கேள்வி அல்ல என்பதை இது உறுதிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தை தூக்கி எறிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டினால் மட்டுமே மூன்றாவது அணுஉலகப் போரால் மனித நாகரீகம் அழிவதைத் தடுக்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei -SGP), சோசலிச மற்றும் அதன் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter) ஆகியவை பசுமைக் கட்சி 1980 இல் நிறுவப்பட்டதில் இருந்து அது ஒரு இடதுசாரிக் கட்சி என்ற மாயையை எதிர்த்துப் போராடி வருகின்றன. 1968 மாணவர் இயக்கத்தில் இருந்து வெளிவந்த பசுமைக் கட்சியினரின் வேலைத்திட்டம், 'வர்க்கப் போராட்டத்தை நிராகரித்தல், வாழ்க்கை முறை பற்றிய கேள்விகளில் கவனம் செலுத்துதல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த சந்தேகம் போன்ற தாராளமாக பிராங்பேர்ட் பள்ளியிலிருந்து பெறப்பட்டது' என சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று அடித்தளங்கள் என்ற பிரசுரம் பசுமைவாதிகளை பற்றி விளக்கியது. 'ஜேர்மன் சோசலிச மாணவர் இயக்கத்தின் (SDS) முதலாளித்துவ-எதிர்ப்பு வார்த்தையாடல்கள் மறைந்து, அமைதிவாதம், சுற்றுச்சூழல் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு இடமளித்தது.

'அவர்களின் இதயத்தில், பசுமைவாதிகள் பிற்போக்குத்தனமாகவும் பழமைவாதிகளாகவும் இருந்தனர். அவர்களது சமூக அமைப்பில், பசுமைக் கட்சியினர் கல்வித்துறையில் படித்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு கட்சியாக இருந்தனர். அதே சமயம் பசுமைக் கட்சி உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிகளிலும் மிக உயர்ந்த சராசரி வருமானம் மற்றும் கல்வி அறிவின் அளவைக் கொண்டுள்ளனர்' என வரலாற்று அடித்தளங்களில் தொடர்ந்து எழுதப்பட்டது.

இந்த வசதி படைத்த அடுக்குகளின் சமூக நலன்கள் தான் பசுமைவாதிகளை மேலும் மேலும் வலதுசாரிப் பக்கம் கொண்டு செல்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் தேக்கமடைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அளவுகோலின் கீழ் மட்டத்தில், ஒரு பரந்த அடுக்கு உருவாகியுள்ளது. அதனிடம் எந்த சொத்தும் இல்லாததுடன் வாழ்வாதாரத்திற்கு தேவையானதைவிட கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்கிறது அல்லது அதையும் கூட பெறவில்லை.

அளவுகோலின் மேல் முனையில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்கள் பாரியளவிலான சொத்துக்களை குவித்துள்ளனர். அவர்களுக்குக் கீழே, அதிக வருவாய் ஈட்டும் மேலாளர்கள், உயர்மட்ட அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் பரந்த அடுக்கு உள்ளது. பலர் பரம்பரை செல்வத்தின் மூலம் பணக்காரர்களாகவும் ஆகிவிட்டனர்.

வருமானம் மற்றும் செல்வ அளவுகோலின் இந்த 90 முதல் 99 சதவீதம் பசுமைவாதிகளின் சமூக அடித்தளத்தை உருவாக்குகிறது. அவர்கள் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களையும், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டத் தன்மையையும் தங்களின் சலுகைகளுக்கு அச்சுறுத்தலாக உணர்ந்து, அரசு மற்றும் இராணுவவாதத்திற்குப் பின்னால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர்.

நிச்சயமாக, இந்த அடுக்கின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இது பொருந்தாதுதான். வேறுவிதமான நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றின் பாதை தனிமனித முடிவுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக வர்க்கப் போராட்டத்தின் விதிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

போர் மற்றும் இராணுவவாதத்திற்கான ஜேர்மன் குட்டி முதலாளித்துவத்தின் இந்த உற்சாகம் புதிதல்ல. 1908 ஆம் ஆண்டில், பிரிட்டனுக்கு எதிராக ஜேர்மன் கடற்படையின் விரிவாக்கத்திற்காக பிரச்சாரம் செய்த ஜேர்மன் கடற்படை சங்கம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே ஹிட்லர் தனது 'உயிர்வாழும் இடத்திற்கான' ('Lebensraum') திட்டங்களுக்கு உற்சாகமான ஆதரவாளர்களைக் கண்டார். இப்போது, பசுமைவாதிகளும் இந்த பிற்போக்கு மரபின் பின்னால் முழுமையாக அணிதிரளுகின்றனர்.

Loading