இலங்கையின் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மூன்று முன்னணி மாணவ ஆர்வலர்களை சிறையில் அடைப்பதற்கான 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே (Image: WSWS Media)

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வாவ சிறிதம்மா மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர் ஹஷான் குணதிலக்க ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். அவர்கள் அனைவரும் போலி இடது முன்னிலை சோசலிசட் கட்சியின் (மு.சோ.க.) ஆதரவாளர்களாவர்.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், மு.சோ.க. உடனான நமது அடிப்படை மற்றும் நன்கு பிரசித்தமான அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், விக்கிரமசிங்கவின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து, மூவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கக் கோருகின்றன. மாணவர் ஆர்வலர்கள். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும், இந்த தடுப்புக்காவல்களை எதிர்க்கவும், அவர்களின் உடனடி விடுதலையை கோருவதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு தடுப்புக்காவல் உத்தரவுகளை தயாரித்து அனுப்பியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் மக்கள் சீற்றம் வெடித்துள்ளது. விக்கிரமசிங்கவின் தடுப்புக்காவல் அனுமதி, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அவரது ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விரோதமான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் அனைவரது எதிர்ப்புக்களையும் நசுக்குவதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

1979 இல் இயற்றப்பட்ட பேர்போன பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், யாரையும் 'பயங்கரவாத நடவடிக்கைகள் மீதான சந்தேகத்தின் பேரில்' 90 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரால் முடியும். தடுப்புக்காவலை 180 நாட்கள் வரை நீட்டிக்கவும் அவரால் முடியும்.

குற்றச் சாட்டு ஏதுமின்றி யாரையும் எதேச்சதிகாரமாக கைது செய்து தடுத்து வைக்க பொலிசுக்கு பரந்த அதிகாரங்களை பயங்கரவாத தடைச் சட்டம் வழங்குகிறது. சித்திரவதைகளைப் பயன்படுத்தி வாக்குமூலங்களைப் பெறுவதில் பேர் போன இலங்கைப் பொலிசுக்கு, நீதிமன்றத்தில் இந்த “ஒப்புதல் வாக்குமூலங்களை” ஆதாரமாகப் பயன்படுத்த அனுமதி உண்டு. பயங்கரவாத தடைச் சட்டம், அரசாங்கம் 'பயங்கரவாதி' என்று கருதும் எந்தவொரு அமைப்பையும் தடை செய்யவும் அதன் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அனுமதிக்கிறது.

1983ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு அதன் இனவாதப் போரைத் தொடங்கியதில் இருந்து, பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழர்களை, குறிப்பாக இளைஞர்களை தடுத்து வைக்க பயங்கரவாத தடைச் சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. டசின் கணக்கான இத்தகைய தமிழ் இளைஞர்களும் நாடு முழுவதிலும் ஏனைய இளைஞர்களும் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். பலருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

முதலிகே, சிறிதம்மா, குணதிலக்க ஆகியோர், ஆகஸ்ட் 18 அன்று அ.ப.மா.ஒ. ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் நடத்திய வன்முறைத் தாக்குதலின் போது கைது செய்யப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பின்னரே, அவர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 2,000 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் குழு பதவி விலக வேண்டும். அடக்குமுறையை நிறுத்து,” “கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளர்களை விடுதலை செய்,” மற்றும் “மக்கள் சபைகளை கட்டியெழுப்பு,” போன்ற பிரதான கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

18 ஆகஸ்ட் 2022, கொழும்பு கோட்டையை நோக்கிய மாணவர் பேரணியைத் தடுப்பதற்காக, பொலிசார் தண்ணீர் பீரங்கிகளுடன் மத்திய கொழும்பின் கொம்பனி வீதியில் ஏற்படுத்தியுள்ள தடுப்பு அரண். (Image: WSWS Media)

கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போராட்டத்தை போலீசார் கொடூரமாக கலைத்தனர். பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கி, பல கிலோமீட்டர்கள் அவர்களைத் துரத்திச் சென்றதுடன், அவர்களின் நடவடிக்கைகள் 'சட்டவிரோதமானது' மற்றும் 'பொலிஸுக்கு இடையூறாக இருந்தன' என்ற போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் 19 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பதினாறு பேர், கடுமையான 500,000 ரூபாய் ($1,370) ரொக்கப் பிணை நிபந்தனைகளில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். அவர்களின் வழக்குகள் செப்டம்பர் 12 அன்று விசாரிக்கப்படும். மற்ற மூவரும் 90 நாள் பயங்கரவாத தடைச் சட்ட தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவ தலைவர்கள், 'தேச விரோதச் சதிகளில்' ஈடுபட்டார்களா மற்றும் 'பயங்கரவாதச் செயலுடன்' தொடர்பு கொண்டிருந்தார்களா என்பது உட்பட, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்படுவர் என்று பொலிஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் 9 அன்று தொடங்கிய போராட்டங்களில் மாணவர்களின் ஈடுபாடு குறித்தும் விசாரிக்கப்படும் என்று பொலிஸ் முன்பு கூறியது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரிய தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் இந்த பாரிய ஆர்ப்பாட்டங்கள், அத்தியாவசிய பொருட்களின் பேரழிவுகரமான பற்றாக்குறை மற்றும் பரவலான பணவீக்கத்தால் தூண்டப்பட்டன.

மத்திய கொழும்பின் காலி முகத்திடலை ஆக்கிரமித்திருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் சேர்ந்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களில் கலந்து கொண்டனர். இறுதியில், இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்த அதேவேளை, இராஜபக்ஷ ஆட்சி மற்றும் இலாப முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை முழு அளவில் அணிதிரட்டுவதை எதிர்த்த அவர்கள், ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கான அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதன் பக்கம் தொழிலாளர்களை திசை திருப்பினார்கள். இந்த காட்டிக்கொடுப்பை பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளும் ஆதரித்தன.

ஜூலை 14 அன்று இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அமெரிக்க சார்பு மற்றும் பரவலாக வெறுக்கப்பட்ட விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்திருந்தார். பின்னர் ஜூலை 20 அன்று மதிப்பிழந்த பாராளுமன்றத்தால் இந்த பதவிக்கு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

ஜூலை 17 அன்று, விக்கிரமசிங்க ஒரு 'அவசரகால நிலையை' அறிவித்ததோடு, ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களை வெளியேற்ற ஒரு கொடூரமான இராணுவ-பொலிஸ் நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டார். அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் மீது பொலிசார் வன்முறையான முறையில் ஒன்பது பேரைக் கைது செய்ததுடன் பலரை காயப்படுத்தினர். அப்போதிருந்து, பொலிசார் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஒரு வேட்டையாடலை முன்னெடுத்து, இதுவரை டசின் கணக்கானவர்களை கைது செய்துள்ளனர். உண்மையில் அவரது அரசாங்கம் மக்களை பயமுறுத்துவதற்கு பொலிஸ் அரச நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது வெளிப்படையான நிலையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை 'பாசிஸ்டுகள்' மற்றும் 'பயங்கரவாதிகள்' என்று விக்கிரமசிங்க பகிரங்கமாக அவதூறு செய்தார்.

18 ஆகஸ்ட் 2022 அன்று, மத்திய கொழும்பில் உள்ள கொம்பனி வீதியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் செல்கிறார்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துவதில் நீண்டகாலமாக பேர்போன விக்கிரமசிங்க, அதன் சிக்கன நடவடிக்கைகளை வெகுஜனங்கள் மீது சுமத்துவதற்கு நகர்கிறார். அவரது முன்னோடியைப் போலவே, அவரது நோக்கமும் இலங்கையின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்குமாறு மக்களை நெருக்குவதாகும். சர்வதேச நாணய நிதியமானது, பல்லாயிரக்கணக்கான அரச வேலைகளை அழித்தல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், அதிக வரிகளை திணித்தல், பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவுகளை கடுமையாக வெட்டுதல் மற்றும் ஏனைய கடுமையான சமூகத் தாக்குதல்களை அமுல்படுத்தக் கோருகிறது.

விக்கிரமசிங்க தனது கரத்தை வலுப்படுத்தவும், இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வெகுஜன எதிர்ப்பை நசுக்கவும் அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை நிறுவ முயற்சிக்கிறார்.

தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை ஆதரிக்கின்றன.

மாணவ செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் மாணவர் அணிதிரள்வின் மத்தியில் உரையாற்றிய மு.சோ.க. பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ, 'நீங்கள் அறிந்தபடி, பயங்கரவாத தடைச் சட்ட பிரச்சினை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, இதனால் இதை [மாணவர்களைக் காவலில் வைப்பதை] எச்சரிக்கையுடன் செய்யுங்கள்,” என்று விக்கிரமசிங்கவை எச்சரித்தார்.

அ.ப.மா.ஒ. தலைமையை கட்டுப்படுத்துகின்ற, முதலாளித்துவ கட்டமைப்புடன் பிணைந்துள்ள மு.சோ.க., விக்கிரமசிங்க ஜனநாயக உரிமைகளை தொடர்ந்து மீறினால், இலங்கை முதலாளித்துவம் ஜி.எஸ்.பி. பிளஸின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகைகளையும் இலாபங்களையும் இழக்க நேரிடும் என்று அவரை எச்சரிக்கிறது.

விக்கிரமசிங்கவுக்கும் ஆளும் உயரடுக்கிற்கும் விடுக்கும் இந்த வேண்டுகோள்கள், அவர்களது நடவடிக்கை போக்கை மாற்ற நிர்ப்பந்திக்கப் போவதில்லை. இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை எந்த ஒரு பெரிய உலக சக்தியும் பாதுகாக்கப் போவதில்லை.

முதலிகே, குணதிலக்க மற்றும் சிறிதாம்மா ஆகியோரின் உடனடி மற்றும் நிபந்தனையற்ற விடுதலை மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட அனைத்து மாணவர்கள் மீதான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள வைப்பதற்கான போராட்டமானது, விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒழுங்கமைத்து, அவர்களுக்குப் பின்னால் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே முன்னோக்கி கொண்டு செல்லப்பட முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டம், அனைத்து அவசரகாலச் சட்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டங்களையும் அகற்றுதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் மற்றும் ஏனைய அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டுவது உட்பட, ஜனநாயக உரிமைகளுக்கான இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, இலங்கை மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க, தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும், வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிரதான பொருளாதார மையங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு, சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இந்த அமைப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக கட்டமைக்கப்பட வேண்டும். அந்தந்த பல்கலைக்கழகங்களில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளை உருவாக்குமாறு மாணவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும், சோசலிச கொள்கைகளை கட்டியெழுப்புவதற்குமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, 'தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக சோசலிச மாநாட்டிற்காக' சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் போராட்டம், இந்த நடவடிக்கைக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Loading