முன்னோக்கு

பாரிய நோய்தொற்று, மரணம், சிக்கன நடவடிக்கைகளின் மற்றொரு கல்வியாண்டு வேண்டாம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொதுக் கல்வியில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மாணவர்களும் கல்வித்துறைப் பணியாளர்களும் வகுப்பறைகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

உலகெங்கிலும் கல்வித்துறைப் பணியாளர்களின், பெற்றோர்கள், மாணவர்களின் மற்றும் ஒவ்வொரு தொழில்துறையிலும் தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள இந்தக் கோவிட்-19 பெருந்தொற்று, ஓர் அலை மாற்றி ஓர் அலையாகத் தொடர்ந்து சமூகத்தை நாசமாக்கி வருகிறது. இப்போது இதனுடன் ஓர் உயிராபத்தான நோயான குறிப்பாகக் குழந்தைகளை அச்சுறுத்தும் குரங்கம்மை நோயும் சேர்ந்துள்ளது.

ஜனவரி 12, 2022 அன்று கலிஃபோர்னியாவின் லின்வுட்டில் உள்ள வாஷிங்டன் தொடக்கப் பள்ளியில் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் மழலையர் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர் சொல்வதை கேட்கும் போது முகமூடிகளை அணிந்துள்ளனர். [AP Photo/Marcio Jose Sanchez] [AP Photo/Marcio Jose Sanchez]

ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வோல் ஸ்ட்ரீட் இலாபமாகக் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், சமூகங்களை பாரியளவில் நோய்வாய்ப்படுத்தும் ஒரு சம்பவத்திற்குள் தள்ளுவதை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் போலவே, அவர்கள் தங்களின் குழந்தைகளைத் தியாகம் செய்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு அங்கே எந்தப் பகுத்தறிவான காரணமும் இல்லை.

இந்தப் பெருந்தொற்றின் இரண்டரை ஆண்டு காலத்தில், நவீன காற்றோட்ட அமைப்புகளுடன் கட்டிடங்களைப் பாதுகாப்பாக ஆக்கவோ அல்லது இளைஞர்களின் சமூக, கற்றல் மற்றும் மனநல ஆரோக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்ய நல்ல சம்பளத்துடன் அவசியமான பணியாளர்களை அமர்த்துவதற்கோ இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. இந்த வைரஸ் பரவலுக்கான மையங்களாக நிரூபணமாகி உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படவில்லை, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் வரை மக்களுக்கு நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. உயர் தரமான தொலைதூரக் கல்வி முறை மற்றும் சமூக உதவிகள் வழங்கவும் எதுவும் செய்யப்படவில்லை.

தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி, பெருநிறுவன இலாபங்களை ஏறுமுகமாக வைத்திருப்பதற்காக, பள்ளிக் கட்டிடங்கள் திறந்திருக்க வேண்டும் என்று பைடென் நிர்வாகம் கோருகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அதன் பங்கிற்கு, ஒரு சமயம் பெற்றிருந்த நற்பெயரையும் வெட்கக்கேடாக இழந்து, கட்டாய முகக்கவச நடைமுறையைப் பாரிய நோய்தொற்று நடைமுறைகளைக் கொண்டு பிரதியீடு செய்து, குறைந்தபட்சத் தணிப்பு நடவடிக்கைகளையும் கூட கைவிட்டு விட்டது. இதே போல எல்லாத் தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிடுவது என்பது ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது.

கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் வெறுமனே மருத்துவம் சார்ந்தது இல்லை, பிரதானமாக அரசியல் ரீதியானது, அதற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டம் தேவைப்படுகிறது என்ற அவசியமான முடிவுகளைத் தொழிலாளர்கள் எடுக்கத் தொடங்கி உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்குள் அடைக்கப்படுவதை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஆயிரக் கணக்கான கல்வித்துறைப் பணியாளர்கள் தனியாக இல்லை.

ஓஹியோவின் கொலம்பஸில் 4,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் திங்கட்கிழமை ஒரு வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர், அதேவேளைப் பிரிட்டனில் ஒரு பொது வேலைநிறுத்தம் உருவெடுத்து வருகிறது. கடந்த மாதம் இலங்கையில் தொழிலாளர்களின் ஒரு பாரிய இயக்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவைப் பதவியில் இருந்து கீழிறக்கியது. அமெரிக்காவில், பில்லியன் டாலர் மதிப்பிலான தொழிற்சங்க எந்திரம் UAW ஐ கலைத்து முழு அதிகாரத்தையும் சாமானியத் தொழிலாளர்களுக்கு மீட்டுக் கொடுப்பதற்காக, ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வரும் சோசலிசவாதியான வாகனத்துறைத் தொழிலாளர் வில் லெஹ்மனின் பலமான பிரச்சாரத்திற்கு அமெரிக்கா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

பள்ளிகளின் நிலைமை என்ன?

பள்ளிகள் உட்பட பெரும்பாலான இடங்களில் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு பரிசோதனை மற்றும் நோயின் தடமறிதல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைக் கைவிட்டுள்ள CDC இன் சமீபத்திய வழிகாட்டுதல்களை அறிவிக்கையில், CDC அதிகாரி கிரேட்டா மாசெட்டி (Greta Massetti), “கோவிட்-19 இங்கே இருக்கும்,” என்றார். பொது சுகாதார அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, பைடென் நிர்வாகத்தின் 'என்றென்றும் கோவிட்' கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. ட்ரம்பின் கீழ் நடந்ததை விட அதிகமாக, பைடென் பதவியேற்றதில் இருந்து, 600,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், இதில் ஆயிரக்கணக்கான கல்வித்துறைப் பணியாளர்களும் உள்ளடங்குவார்கள்.

குறைந்தபட்சம் 1,750 குழந்தைகள் இப்போது கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலானவர்கள் டெல்டா மற்றும் ஓமிக்ரோன் அதிகரிப்புகளின் போது பலவந்தமாகப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட கடந்த பள்ளிக் கல்வி ஆண்டின் போது இறந்தார்கள். கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு நுரையீரலில் இரத்தக் கட்டிகள், இதய வீக்கம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படும் கணிசமான அபாயம் உள்ளன. கோவிட்-19 ஆல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 8 சதவீதத்தினருக்கு வலிப்பு மற்றும் மூளைப் பாதிப்பு உட்பட நரம்பு மண்டலச் சிக்கல்கள் ஏற்பட்டிருந்ததாகவும் Pediatrics இன் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது.

இருப்பினும் ஒரு பெருந்தொற்றின் போது நேரடி வகுப்புகள் நடத்தும் அபாயங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து பொய் கூறுகிறார்கள். CDC வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட அந்நாள், வெள்ளை மாளிகையின் கோவிட்-19 விடையிறுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷிஷ் ஜா செனட்டர் பேர்ணி சாண்டர்ஸால் நேர்காணல் செய்யப்பட்டார். குழந்தைகள் 'கோவிட்-19 ஆல் இறப்பதில்லை' என்று சாண்டர்ஸ் குறிப்பிட்ட போது, ஜா அவரின் தவறைச் சுட்டிக் காட்டவில்லை. அதற்குப் பதிலாக அவர் குழந்தைகள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வதாகப் பெருமைபீற்றியதுடன், அதேவேளையில் அவர்களின் உயரடுக்கு மாவட்டம் சிறந்த காற்றோட்ட வசதி மற்றும் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய காற்று சுத்திகரிப்பு கருவிகளை வழங்குவதாகவும் கூறினார்.

பழமையான HVAC அமைப்புகள், நெரிசலான வகுப்பறைகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை என இவை தான் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் யதார்த்தமாக உள்ளது, இவை நூற்றுக் கணக்கான குழந்தைகளைப் பெரிய அரங்கில் அடைத்து வைக்கும் பொதுவான நடைமுறைக்கு வழி வகுத்துள்ளன. “படிப்புக் கெட்டு விடும்' என்று அதிகாரிகள் முதலைக் கண்ணீர் வடிப்பது கேலிக் கூத்தாகும். ஜனவரி 2021 இல் பைடென் ஆலோசகர் பிரைன் டீஸ் குறிப்பிட்டதைப் போல, “பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம் … அப்போது தான் பெற்றோர்கள் வேலைக்குத் திரும்ப முடியும்.”

இப்போது, கோவிட்-19 க்கு கூடுதலாக, குரங்கம்மை நோயும் கட்டுப்பாடின்றிப் பரவி வருகிறது. பருவ வயதடைந்தவர்கள் மத்தியில் ஒரு கொடூரமான நோயான இது வரலாற்று ரீதியில் குழந்தைகளுக்கு இன்னும் அதிகக் கடுமையான நோயாக உள்ளது. மே 18இல் முதன்முதலில் அமெரிக்காவில் இது பதிவு செய்யப்பட்டதில் இருந்து, இந்த நோய் 14,115 ஆக அதிகரித்துள்ளது, பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் நிஜமான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். ஏற்கனவே அமெரிக்காவில் 10 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு நோய்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, தினச் சிகிச்சை மையங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களும் பணியாளர்களும் நோய் தொடர்புக்குச் சென்றிருக்கலாம் அல்லது நோய்தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆசிரியர் சங்கங்கள் வகிக்கும் பாத்திரம்

ஆசிரியர் சங்கங்கள், இந்தப் பெருந்தொற்று நெடுகிலும், கல்வித்துறைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பைத் தணித்து, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்த போது அல்லது நீண்டகால கோவிட் நோய்க்கு ஆளான போது மவுனமாக இருந்து, வோல் ஸ்ட்ரீட்டின் படைப் பிரிவுகளாகச் செயல்பட்டு உள்ளன. வெளிநடப்புகள், மருத்துவ விடுப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களை அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு (AFT) மற்றும் தேசிய கல்வித்துறை பேரவை (NEA) திட்டமிட்டு முடித்து விட்டன, மினெயாபொலிஸ், நியூ யோர்க் நகரம், சாக்ரமெண்டோ, ஓக்லாண்ட், ஸ்க்ரான்டன், சிகாகோ, பிலடெல்பியா மற்றும் இன்னும் பல இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை இவைக் காட்டிக்கொடுத்து உள்ளன.

AFT தலைவர் Randi Weingarten (இவரின் ஆண்டு சம்பளம் சுமார் 500,000 டாலர்) ஆசிரியர்களை அந்தப் பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு மீண்டும் திரும்பச் செய்ய நிர்பந்தித்ததில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார், அவர் தனது 'பள்ளி மறுதிறப்பு' பயணத்தை விளம்பரப்படுத்த ஆசிரியர்களின் சந்தா பணத்தில் இருந்து 5 மில்லியன் டாலரும் நாளொன்றுக்கு 15 மணி நேரமும் செலவிட்டதாகத் தற்பெருமை பீற்றினார். ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்த ஒவ்வொரு இடங்களிலும், வேலை நிலைமைகளை, கூலிகள் அல்லது பாதுகாப்பை மேம்படுத்தாத அழுகிய உடன்படிக்கைகளை முன்நகர்த்த அவர் அந்தந்த நகரங்களுக்குச் சென்று வந்திருந்தார்.

பைடென் நிர்வாகத்தின் பெருந்தொற்றுக் கொள்கைகளில் குற்றகரமாக ஓர் இணை-சதிகாரராக இருந்ததற்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு நிகராக, வைன்கார்டன் CDC இன் சமீபத்திய வழிகாட்டி நெறிமுறைகளைப் பாராட்டினார், “புதிய விதிமுறைகளுக்கு இப்போது இது நேரமில்லை,” என்றவர் குறிப்பிட்டார். சர்வாதிகாரியாக ஆக இருந்த டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் குடியரசுக் கட்சி பகிரங்கமாக ஒரு பாசிசவாத கட்சியாக மாறி வருகின்ற நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சியினரோ தொழிலாள வர்க்கத்தை நசுக்கவும் வேலைநிறுத்தங்களை முடக்கவும் தொழிற்சங்கங்களை சார்ந்துள்ளனர்.

பொதுக் கல்வியின் உயிர் பிழைப்புக்கான நெருக்கடி

இந்தப் பெருந்தொற்று பொதுக் கல்வியின் மீது பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட இருகட்சிகளினது ஏகமனதான தாக்குதலை பரந்தளவில் வேகப்படுத்தி உள்ளது, இதன் விளைவாக பள்ளிக்கல்வி அமைப்பு முறை முழுமையான முறிந்து விட்டதாகப் பல ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். பாரிய இராஜினாமாக்கள் மற்றும் முன்கூட்டியே ஓய்வு பெறுவது எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அலை ஏற்பட்டுள்ளது, அத்துடன் NEA மதிப்பீட்டின்படி தற்போது அமெரிக்கா முழுவதும் 300,000 ஆசிரியர் மற்றும் பணியாளர் காலியிடங்கள் உள்ளன.

ஆசிரியர் பயிற்சிகளைக் குறைப்பதும் மற்றும் சான்றிதழ் தேவைகளைக் குறைப்பதே இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பதிலாக இருந்துள்ளது. ஒருவர் தகுதியுள்ளவரா இல்லையா என்பது முக்கியமாக இல்லை; அவர்களுக்கு வகுப்பறைகளில் மனம் உவந்த உடல்கள் இருந்தால் போதுமானதாக உள்ளது. ஓர் உதாரணத்திற்கு, புளோரிடாவின் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐந்தாண்டு கால தற்காலிக ஆசிரிய பயிற்சி சான்றிதழ் பெறுவதற்குக் கல்லூரி பட்டங்கள் இல்லாத முன்னாள் இராணுவத்தினருக்கான ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள்.

நியூ யோர்க் நகரம், சாக்ரமெண்டோ, சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட அமெரிக்கா எங்கிலும் வரவுசெலவுத் திட்டக்கணக்கில் பில்லியன் கணக்கான டாலர் வெட்டுக்கள், வேலைநீக்கங்கள் மற்றும் பள்ளி மூடல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இது கண்கூடான சமூக எதிர்புரட்சியின் உச்சத்தில் நடக்கிறது, 2008-2018 க்கு இடையே பொதுப் பள்ளிகளில் இருந்து கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் உருவி எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, வோல் ஸ்ட்ரீட்டில் இலாபம் ஈட்டுபவர்கள், மோசமான செயல்திறன் கொண்ட அவமதிக்கத்தக்க மெய்நிகர் சார்ட்டர் பள்ளிகளுக்குள் பெற்றோரை ஈர்ப்பதற்காக, பாதுகாப்பான தொலைதூரக் கல்விக்கான கோரிக்கையைப் பயன்படுத்திக் கொண்டனர், அதேவேளையில் மற்றவர்களோ தனியார் மற்றும் மதவாத பள்ளிகளுக்குள் பொதுப் பணத்தைப் பாய்ச்சுவதற்காகக் கணக்குவழக்குத் திட்டங்களை (voucher programs) விரிவாக்க முயல்கின்றனர், இந்தப் போக்கு உச்ச நீதிமன்றத்தின் கார்சன்-மார்க்கின் தீர்ப்பால் பலப்படுத்தப்பட்டது.

இந்தப் பெருந்தொற்று முழுவதும் உண்மையில் மாணவர்களின் வாழ்க்கையும் கல்வியும் படுமோசமாக புரட்டிப் போடப்பட்டுள்ளன, ஆனால் அதற்குத் தொலைதூரக் கல்வி காரணம் அல்ல, மாறாகப் பொதுக் கல்வியை இந்த முதலாளித்துவ இலாபகர அமைப்பு முறைக்கு ஒட்டுமொத்தமாக அடிபணியச் செய்ததன் விளைவாகும். இந்தப் பெருந்தொற்றுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, “கற்றல் வறுமைக்கு' (learning poverty) எதிராக உலகளாவிய முன்னேற்றம், அதாவது 10 வயதுக்குள் புரிந்து வாசிக்க இயலாத குழந்தைகளின் அளவீடு, தேக்கமடைந்து இருந்தது. பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரிய இதே அரசியல்வாதிகள் வரவு-செலவுத் திட்டக் கணக்கை வெட்டியதுடன், அனைவருக்குமான இலவச உணவுத் திட்டம் காலாவதியாக அனுமதித்தனர், இது 10 மில்லியன் கணக்கான குழந்தைகள் பள்ளியில் பட்டினி கிடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் அவசியம்

ஆசிரியர்கள் அவர்களின் கூட்டுப் பலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பெருந்தொற்றுக்களை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் பொதுக் கல்வியில் பெரும் முதலீடுகளைக் கோருவதற்காகவும் கல்வித்துறைப் பணியாளர்கள் தேசியளவிலான ஒரு வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்ய, நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைய வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு பள்ளியிலும், அண்டைப் பகுதியிலும், உள்ளூர் குழுக்களைக் கட்டமைத்து, சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) உடன் ஐக்கியம் கொண்ட, கல்வித்துறைப் பணியாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவை விரிவாக்குவதே முதல் படியாகும்.

இத்தகைய குழுக்களை அமைக்கப் போராடுமாறு கல்வித்துறைப் பணியாளர்களுக்குச் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது:

கோவிட்-19 மற்றும் குரங்கம்மை நோயை முழுமையாக அகற்றுதல்!

விஞ்ஞான நிலைப்பாட்டில், இந்த இரண்டு நோய்களையும் அகற்றுவது சாத்தியமானதும் அவசியமானதும் ஆகும். முதலாளித்துவமும் மற்றும் பொது சுகாதாரத்தை தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதும் மட்டுமே இந்த வழியின் குறுக்கில் நிற்கின்றன. பாரிய பரிசோதனைகள், நோயின் தடமறிதல், அனைவருக்கும் கட்டாய முகக்கவசம் மற்றும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அவசியமான எல்லாப் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் உட்பட, இந்த நோய்தொற்றுக்களைத் தடுப்பதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் பாகமாக, எல்லாப் பள்ளிகளும் தற்காலிகமாக முழுமையாகத் தொலைதூரக் கற்றலுக்கு மாற்றப்பட வேண்டும். இந்தப் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கையில் பள்ளிகளைப் “பாதுகாப்பாக” மீண்டும் திறப்பது சாத்தியமற்றது என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகள் நிரூபித்துள்ளன. கோவிட்-19 பரவலைத் தடுக்க அரைகுறைத் தணிப்பு நடவடிக்கைகள் போதுமானதில்லை என்பதோடு, இது பொதுச் சுகாதாரச் சுமையைத் தேவை இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் ஆசிரியர்கள் மீது சுமத்துகிறது.

பில்லியனர்கள் மற்றும் பெருந்தொற்றில் இருந்து இலாபமீட்டுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்!

CARES சட்டத்தின் மூலம் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்களை, இந்தப் பெருந்தொற்றுக்கள் கட்டுப்படுத்தப்படும் வரையில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பெற்றோர்களும் வீட்டில் இருப்பதற்காக மறுபங்கீடு செய்யப்பட வேண்டும், அனைவருக்கும் அதிவேக இணைய இணைப்பு, தொலைதூரக் கல்வி உள்கட்டமைப்பு, மருத்துவக் கவனிப்பு, மனநலச் சிகிச்சை மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்புக் கல்விக்கான உதவி ஆகியவற்றுக்காகவும் செலவிடப்பட வேண்டும். இந்த ஆதார வளங்கள் அனைத்துப் பொதுப் பள்ளிக்கூடக் கட்டிடங்களிலும் HVAC வசதி, தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகள் உள்ளடங்கலாக அவற்றை நவீனமயமாக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த பெருந்தொற்று காலத்தில் வெறும் 39 சதவீத பள்ளி மாவட்டங்கள் மட்டுமே HVAC வசதிகளைச் சில கட்டிடங்களில் மேம்படுத்தி உள்ளன.

கல்வித்துறைப் பணியாளர்களைத் தக்க வைக்கவும் மற்றும் புதியவர்களை நியமிக்கவும் பாரியளவில் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்!

ஆசிரியர்களின் வகுப்பறைகள் நெரிசல் மிகுந்திருந்தாலோ அல்லது ஒரே நேரத்தில் பல வகுப்புகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டாலோ அவர்களால் சரி வரக் கற்பிக்க முடியாது. பல ஆண்டுகளாக நிஜமான கூலிகள் மற்றும் சலுகைகள் வெட்டப்பட்டு உள்ளன அல்லது உறைந்து போயுள்ளன. பணவீக்கத்திற்கு ஏற்ப தானாக உயரும் வாழ்க்கைச் செலவு வழிவகைகள் உட்பட பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கூலிகளை ஈடு செய்ய கணிசமான சம்பள உயர்வுகள் அவசியமாகின்றன, அத்துடன் மருத்துவக் காப்பீட்டை முழுமையாக தொழில் வழங்குனர்களே ஏற்றிருக்க வேண்டும்.

இத்தகைய ஒரு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு, அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும், கல்வித்துறைப் பணியாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுடன் ஐக்கியமாகி, சுயாதீனமாக அணித்திரள வேண்டியது அவசியமாகும்.

அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவத்திற்குள் பொதுக் கல்வி உயிர் பிழைக்க முடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது விருத்தி அடையவும் கூட முடியாது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகள் நிரூபித்துள்ளன. மற்ற ஒவ்வொன்றையும் போலவே இந்தப் பெருந்தொற்றுக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கை, இலாபம் என்ற ஒரேயொரு அடிப்படைப் பரிசீலனையால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமும் பொதுக் கல்வியின் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கமும், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பொருளாதார வாழ்வைச் சமூகத் தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பதற்காக, அதாவது, சோசலிசத்தைக் கொண்டு முதலாளித்துவத்தை பிரதியீடு செய்வதற்காக ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தையும் அணித்திரட்டுவதுடன் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது.

Loading