முன்னோக்கு

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான "என்றென்றும் போருக்கு" இன்னும் கூடுதலாக பில்லியன்களை வழங்க பைடென் உறுதியளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உக்ரேனுக்கு இன்னும் கூடுதலாக 3 பில்லியன் டாலர் ஆயுதங்கள் வழங்க உறுதியளித்தார், இது ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்தப் போர் தொடங்கியதில் இருந்து ஒரே தவணையில் வழங்கப்படும் மிகப் பெரிய நிதியாகும். இன்று வரை, நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள், உயர்தரக் கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற விமானங்கள் உள்ளடங்கலாக உக்ரேனுக்கு 50 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஆயுதங்கள் மற்றும் பிற நிதியுதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பின்னர், பின்வரும் இந்தச் செய்தி தெளிவாக உள்ளது: அதாவது, மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அமெரிக்கா, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அதன் புதிய 'என்றென்றும் போரை' நீடிக்கவும் விரிவுபடுத்தவும் அனைத்தையும் செய்து வருகிறது.

கிரெம்ளினே இந்த மோதலை விரிவுபடுத்துமாறு செய்ய வடிவமைக்கப்பட்ட, பல வாரகால அசாதாரண ஆத்திரமூட்டல்களுக்குப் பின்னர் புதன்கிழமை இந்த அறிவிப்பு வந்தது. கிரிமியாவில் உள்ள பல ரஷ்ய இராணுவத் தளங்கள் உக்ரேனால் பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தன. சனிக்கிழமை, அதிவலது தேசியவாத சித்தாந்தவாதி அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா மத்திய மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 'வாஷிங்டனில் தயாரிக்கப்பட்டவை' என்ற முத்திரையைக் கொண்டுள்ளன.

இத்தகைய ஆத்திரமூட்டல்களைக் கொண்டு, ரஷ்ய அரசு எந்திரம் மற்றும் அதன் தன்னலக் குழுவுக்குள் உள்ள பதிலடி கொடுக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுத்து வரும் சக்திகளை அமெரிக்கா பலப்படுத்த முயல்கிறது. போரை மேற்கொண்டு விரிவாக்குவதற்கு அவசியமான நியாயப்பாடுகளை உருவாக்கும் வகையில் ஓர் இராணுவ விடையிறுப்புக்குக் கிரெம்ளினை நிர்பந்திப்பதே இதன் நோக்கமாகும்.

செவ்வாய்கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி கூறுகையில், 'இந்தப் போர் கிரிமியாவுடன் தொடங்கியது, அது கிரிமியாவில் முடிவடையும்' என்று அறிவித்து, கிரிமியன் தீபகற்பத்தை மீட்டெடுப்பதே போரில் அவர் நாடு ஈடுபட்டிருப்பதன் குறிக்கோள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

செலென்ஸ்கியின் அறிக்கை என்ன உத்தேசத்தில் இருந்ததோ அதை விட அதிகமாகவே எடுத்துரைத்தது. உண்மையில், ரஷ்யா உடனான இந்தப் போர் பெப்ரவரி 2022 இல் அல்ல, மாறாகப் பெப்ரவரி 2014 இல் தொடங்கியது. எவ்வாறிருப்பினும், அது மார்ச் மாதம் கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதில் இருந்து தொடங்க வில்லை, மாறாக ஏகாதிபத்திய சக்திகள் நிதி வழங்கி முடுக்கி விட்ட பெப்ரவரி 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதியுடன் தொடங்கியது. அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி அந்தக் கருங்கடல் தீபகற்பத்தை ரஷ்யா இணைத்துக் கொள்வதை மட்டுமல்ல, மாறாக எட்டு ஆண்டு காலம் நீடித்த உள்நாட்டுப் போரையும் தூண்டியது, அதில் ஏகாதிபத்தியங்களால் ஆயுதமேந்த செய்யப்பட்டிருந்த உக்ரேனிய இராணுவத்திற்கு எதிராக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சண்டையிட்டு வந்ததுடன், கிழக்கு உக்ரேனின் கணிசமான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அனைத்திற்கும் மேலாக, அந்த 2014 ஆட்சிக் கவிழ்ப்புச் சதி, உக்ரேனை வெளிப்படையாகவே ரஷ்யாவுக்கு எதிரான ஓர் ஏகாதிபத்தியப் போருக்கு ஏவுதளமாக மாற்றுவதற்கு அடித்தளம் அமைத்தது. பெப்ரவரி 2014 மற்றும் பெப்ரவரி 2022 க்கு இடையே இந்த எட்டு ஆண்டுகளில், ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனிய ஆயுதப் படைகளுக்குப் பயிற்சி அளித்து, ஆயுதமேந்தச் செய்து, விரிவாக்கி, மறுசீரமைப்பு செய்ய பத்து பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டன. உக்ரேனிய அரசு எந்திரம் மற்றும் இராணுவத்தில் உள்ள நவ-நாஜி சக்திகள், ரஷ்ய மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள தொழிலாள வர்க்கம் இரண்டுக்கும் எதிரான போருக்கு ஏகாதிபத்தியத்தின் பிரதான அதிரடி துருப்புக்களாக கட்டமைக்கப்பட்டு ஆயுதம் ஏந்தச் செய்யப்பட்டன.

ஜனவரி 6 இல் வாஷிங்டன் டி.சி. இல் நடந்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சிக்குப் பின்னர், அதிகரித்து வந்த பெருந்தொற்றால் ஏற்பட்டிருந்த பாரிய மரணங்களுக்கு மத்தியில், ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போரை முறையாகத் தூண்டுவதென ஒரு முடிவு எடுக்கப்பட்டது. மார்ச் 2021 இல், உக்ரேனிய அரசாங்கம் கிரிமியா மற்றும் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரேனியப் பகுதிகளை 'மீட்பதற்கு' ஓர் இராணுவ மூலோபாயத்தை ஏற்றது. எட்டு மாதங்களுக்குப் பின்னர், நவம்பர் 2021 இல், அமெரிக்காவும் உக்ரேனும் ஒரு 'மூலோபாய பங்காண்மை' ஆவணத்தில் கையெழுத்திட்டன, அது அவ்விரு நாடுகளும் நடைமுறையளவில் ரஷ்யாவை இலக்கில் கொண்ட ஓர் இராணுவத் தாக்குதல் கூட்டணியில் இருப்பதைத் தெளிவுபடுத்தியது.

2021 முழுவதும், கிரெம்ளின், முன்பினும் அதிக வெளிப்படையாகவே கோபத்துடனும் விரக்தியுடனும், உக்ரேன் மற்றும் கருங்கடலில் அதன் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கான 'எச்சரிக்கை நிலைப்பாடுகளை' (red lines) வலியுறுத்தியது, ஆனால் அந்த 'எச்சரிக்கைக் கோடுகள்' ஆணவத்துடனும் அவமரியாதைகரமாகவும் வாஷிங்டனால் நிராகரிக்கப்பட்டன. ஒரு போரைத் தவிர்ப்பது அல்ல தூண்டுவதே அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உக்ரேனிய தன்னலக் குழுவில் உள்ள அதன் அடிவருடிகளின் நோக்கமாக இருந்தது.

கடுமையான சிக்கலில் சிக்கி இருந்த புட்டின் ஆட்சி, பெப்ரவரி 24 இல் உக்ரேன் மீது படையெடுத்ததன் மூலம், ஏகாதிபத்திய சக்திகள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்த அந்தப் போரை அவற்றுக்கு வழங்கியது. புட்டினின் அந்தப் படையெடுப்பும் மற்றும் பெரும் ரஷ்யப் பேரினவாதத்தை அவர் ஊக்குவிப்பதும் ஏகாதிபத்திய சக்திகளின் போர் பிரச்சாரத்திற்கே ஆதாயமாகி, உக்ரேனுக்கு உள்ளேயே கூட மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் தேசியவாத சக்திகளைப் பலப்படுத்தி உள்ளன.

எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததில் இருந்து உதித்தெழுந்த ரஷ்யத் தன்னலக்குழுவின் அனைத்துக் கணக்கீடுகளும் அழிவுகரமாகத் தவறானவை என்று நிரூபணமாகி உள்ளன. போர் திட்டங்களைச் செயல்படுத்த நீண்ட காலமாக ஒரு சாக்குபோக்குக்காகக் காத்திருந்த ஏகாதிபத்திய சக்திகளோ, 'பேச்சுவார்த்தைகளில்' ஈடுபடாமல், அந்தப் படையெடுப்பைச் சாதகமாக பற்றிக் கொண்டன.

அவற்றின் இறுதி இலக்கு பெரியளவில் கியேவின் எந்த ஒரு 'வெற்றியும்' அல்ல, மாறாக என்ன வந்தாலும் பரவாயில்லை, ரஷ்யாவைச் சீர்குலைத்து, உடைத்து, இறுதியில் காலனித்துவப்படுத்துவதே அவற்றின் இறுதி இலக்காக உள்ளது.

ஏகாதிபத்திய போர் வெறியர்கள் மத்தியில் மேலோங்கி உள்ள நோக்குநிலை பிறழ்வு மற்றும் தடுமாற்றத்தின் அளவை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. புதன்கிழமை பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரூஸ் கூறுகையில், “உலகின் நிர்மூலமாக்கல்' என்று அர்த்தப்படுத்தினாலும் கூட, அடுத்த மாதம் அவர் பிரதம மந்திரியானால் அணு ஆயுதத்தின் விசையை அழுத்த அவர் 'தயாராக' இருப்பதாகக் குறிப்பிட்டார். British Independent இன் தகவல்படி, “அவரை 'நிர்மூலமாக்கல்' எப்படி உணர வைக்கும் என்று கேட்ட போது, [ட்ரூஸ்] உணர்ச்சி அற்றவராக இருந்தார்.” இதற்கிடையே, பொறுப்பற்ற வெறித்தனத்துடன், வாஷிங்டன், தைவான் சம்பந்தமாகச் சீனாவுடன் இன்னும் பெரிய மற்றொரு போரைத் தூண்ட முயன்று வருகிறது.

வெளிநாட்டுப் போர், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு போருடன் சேர்ந்துள்ளது. 'தேசிய பாதுகாப்பு' மற்றும் 'புட்டினுக்கு எதிரான சண்டை' என்ற பெயரில், பட்டினி கிடக்கத் தயாராக இருக்குமாறு ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களுக்குக் கூறப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும், ஆளும் வர்க்கம் பாரியளவில் மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டங்களுக்கும் மற்றும் வர்க்க உறவுகளை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதற்கும் இந்தப் போரை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி உள்ளது.

உக்ரேனில் படுகொலைச் செய்வதற்காகப் பல பில்லியன் டாலர்கள் கிடைக்கும் அதேவேளையில், தடுப்பூசிகளுக்கும், கோவிட்-19 பரிசோதனைகளுக்கும் மற்றும் சிகிச்சைகளுக்கும் பணம் இல்லை என்று கூறப்படுகிறது, அதேவேளையில் பத்து மில்லியன் கணக்கான ஆசிரியர்களும் குழந்தைகளும் பாதுகாப்பற்ற வகுப்பறைகளுக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். இந்தப் போர், உலகெங்கிலும், பணவீக்கத்திற்கு எரியூட்டி உள்ளது. அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள், பில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு இல்லை என்றாலும், ஏற்கனவே படுமோசமாக உள்ள பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை இன்னும் கடுமையாகப் பாதித்துள்ளன.

1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் அழித்ததால் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவப் பேரழிவுக்கும் மற்றும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கு, “ரஷ்யாவிலும் மற்றும் உலகெங்கிலும், சோவியத் ஒன்றியத்தை ஒரு தொழிலாளர் அரசாக உருவாக்குவதற்கு இட்டுச் சென்ற1917 அக்டோபர் புரட்சியால் உத்வேகம் பெற்ற சோசலிச சர்வதேசியவாதத்தின் மறுமலர்ச்சி' தேவைப்படுகிறது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தப் போர் வெடித்த போது அதன் பெப்ரவரி 24 அறிக்கையில் வலியுறுத்தியது.

இந்த வரிகள் எழுதப்பட்டு ஆறு மாதங்களில், இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, துருக்கி, பிரேசில், அமெரிக்கா மற்றும் கனடா உள்ளடங்கலாகச் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து வரும் உலகளாவிய இயக்கம், ஒரு சக்தி வாய்ந்த, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கைக் கைவரப் பெறுவதற்கும் அடிப்படையாக அமையும்.

Loading