இரண்டாம் உலகப் போரின் சோவியத் நினைவுச்சின்னங்களை அகற்றுவதை துரிதப்படுத்த பால்டிக் அரசாங்கங்கள் உக்ரேனில் போரைப் பயன்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், பால்டிக் நாடான லாத்வியா, நாஜி ஜேர்மனியின் தோல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட 79 மீட்டர் உயரமான இரண்டாம் உலகப் போர் நினைவுச்சின்னத்தை அகற்றி முடித்தது. ஜேர்மன் பாசிச படையெடுப்பாளர்களிடமிருந்து சோவியத் லாத்வியா மற்றும் ரிகாவின் விடுதலையாளர்களுக்கான நினைவுச்சின்னத்தை இடிப்பது, பால்டிக் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நடந்து வரும் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இது பாசிசத்தின் தோல்வியையும், அதன் மீதான மகத்தான வெற்றியையும் சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க வரலாற்று நினைவிலிருந்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் பாசிச படையெடுப்பாளர்களிடமிருந்து சோவியத் லாத்வியா மற்றும் ரிகா விடுதலையாளர்களுக்கான நினைவுச்சின்னம் ரிகா, லாத்வியாவில் உள்ளது. பிப்ரவரி 23, 2022 இல் (AP Photo/Roman Koksarov, File)

1941 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த குறைந்தது 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர். கிழக்கு போர்முனையில் நடந்த போர் உலக வரலாற்றில் ஒரே இரத்தக்களரியான இராணுவ மோதலாக இருந்தது. சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பு நாஜி தலைமையிலான ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகவும் இருந்தது. ஜூன் 22, 1941 இல் படையெடுப்பு தொடங்கிய சில மாதங்களுக்குள், தற்போதைய உக்ரேன் மற்றும் பால்டிக் நாடுகளில் வாழ்ந்த யூத மக்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.

சோவியத் காலத்தின் இரண்டாம் உலகப் போர் நினைவுச்சின்னம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கட்டப்பட்டது. அதுவே அக்டோபர் புரட்சி மற்றும் போரின் வரலாறு தொடர்பாக திட்டமிட்ட பொய்மைப்படுத்தல்களில் ஈடுபட்டது. ஆயினும்கூட, பல தசாப்தங்களாக, இந்த நினைவுச்சின்னங்கள் பல முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தில் பெரும் மதிப்பை கொண்டிருந்தன. குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் வரலாற்றுக் குழப்பங்கள் இருந்தபோதிலும், ஸ்ராலினிசத்தின் பாரிய குற்றங்கள் இருந்தபோதிலும், அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாக்க எழுந்த சோவியத் வெகுஜனங்களின் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் மகத்தான முக்கியத்துவம் மற்றும் தியாகங்கள் பற்றிய ஆழ்ந்த நனவு உள்ளது.

ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள எஸ்தோனிய நகரமான நர்வாவில், பாசிசத்திற்கு எதிரான சோவியத் வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் T-34 டாங்கி நினைவுச்சின்னத்தை அதிகாரிகள் அகற்றினர். இந்த டாங்கி தலைநகர் தலீனுக்கு வடக்கே உள்ள எஸ்தோனிய போர் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படும். பெரும்பாலும் ரஷ்ய மொழி பேசும் நர்வாவில் பாசிச ஜேர்மனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொதுவான கல்லறையானது இப்போது அதன் சோவியத் கல்வெட்டுக்கள் 'நடுநிலையான' கல்லறை கல்வெட்டுக்களால் மாற்றப்படும்.

எஸ்தோனிய அரசாங்கம் முதன்முதலில் ஆகஸ்ட் 4 அன்று துரிதப்படுத்தப்பட்ட அகற்றலை அறிவித்தது. உக்ரேனில் நடந்த போரையும், நாட்டிற்குள் 'விரோதத்தை' உருவாக்கும் ரஷ்ய முயற்சிகள் இருப்பதாக காட்டி அதனை நியாயப்படுத்தியது. எஸ்தோனிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ரஷ்ய மொழி பேசுபவர்களாவர். முக்கியமாக ரஷ்ய மொழி பேசும் நகரத்தில் உள்ள செம்படை வீரர்களுக்கான நினைவுச்சின்னத்தை அகற்றுவது, எஸ்தோனியர்களுக்கும் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கும் இடையே இனப் பதட்டங்களை விதைப்பதற்கும் தீவிர வலதுசாரி சக்திகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் ஒரு வெளிப்படையான ஆத்திரமூட்டலாகும்.

விமர்சனத்திற்கு எதிராக நர்வாவில் நினைவுச்சின்னத்தை அகற்றுவதைப் பாதுகாத்து, எஸ்தோனிய ஜனாதிபதி அலர் கரிஸ் வேண்டுமென்றே இனப்படுகொலை நாஜி ஜேர்மனியை சோவியத் ஒன்றியத்துடன் ஒப்பிட்டார். பாசிசத்தின் குற்றங்களை குறைத்து காட்டுவதற்கும், நவபாசிச சக்திகளை நியாயப்படுத்துவதற்கும் மற்றும் சோசலிசத்தை இழிவுபடுத்துவதற்கும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களை இழிந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த கட்டுக்கதையை வழக்கமாக பயன்படுத்துகின்றன.

'வரலாற்று பன்முகத்தன்மை இத்துடன் மறைந்துவிடாது. ஆனால் பலரை காயப்படுத்தாத அல்லது மோதலுக்கு வித்திடாத இடத்தில் கண்ணியமான முறையில் வைக்கப்படும். இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களை அனைவரும் ஒரே மயானத்தில் அமைதியாக நினைவில் கொள்ளலாம். மேலும் ஒரு முக்கியமான நினைவூட்டல்: எஸ்தோனியா இந்த போரில் ஒரு நாடாக பங்கேற்கவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் நாஜி ஆட்சிகளின் பலியாக இருந்தது' எனக் காரிஸ் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில் மாஸ்கோ-எதிர்ப்பு உக்ரேனிய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஆயுத வினியோகஸ்தர்களில் ஒன்றான லித்துவேனியாவும் அதேபோன்று ஒரு பாரிய 'சோவியத்மயம்-அகற்றலை' பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், உக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து பல சோவியத் கால நினைவுச்சின்னங்களை அகற்றியுள்ளது.

ஜூன் மாதம், லித்துவேனிய பாராளுமன்றம் 'சோவியத்மயம்-அகற்றல்' என்றழைக்கப்படும் மசோதாவை உருவாக்கியது. இது சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை அகற்றுவதை விரைவுபடுத்துவதுடன், சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புடைய தெரு மற்றும் சதுக்கங்களின் பெயர்களை நீக்குகிறது. சட்டத்தின் கீழ், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லித்துவேனிய இனப்படுகொலை மற்றும் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தால் இவற்றை அகற்றப்படுவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எஸ்தோனியாவைப் போலவே, உள்ளூர் எதிர்ப்பை முறியடிக்கவும், வலதுசாரி மற்றும் இனக்குரோதங்களை வலுப்படுத்தவும் அரசாங்கம் சட்டத்தைப் பயன்படுத்தும் என்பது தெளிவாகிறது.

ஆகஸ்ட் 1939 இன் ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கையின் விளைவாக மூன்று பால்கன் நாடுகளும் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன. இது நாஜி ஜேர்மனியின் படையெடுப்பை முன்கூட்டியே தடுக்க ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் திவாலானதும் மற்றும் அரசியல் குற்றம்மிக்கதுமான முயற்சியாகும். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 1939 இல் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திற்கு வழி வகுத்தது. ஜூன் 1941 இல் சோவியத் ஒன்றியத்தின் நாஜி படையெடுப்பு தொடர்ந்தது. மேலும் ஜேர்மன் இராணுவம் அப்போது உக்ரேன் மற்றும் பால்டிக் பகுதியின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது. கூட்டுழைப்புவாத நிர்வாகங்கள் மற்றும் உள்நாட்டில் வளர்ந்த பாசிசக் கூறுகளுடன் இணைந்து, நாஜிக்கள் உள்ளூர் யூத மக்களைக் கொன்றனர். எஸ்தோனியா ஐரோப்பாவில் 'யூதர்கள் அற்றதாக' ('judenfrei') என்று அறிவிக்கப்பட்ட முதல் நாடாக மாறியது.

லித்துவேனியாவில், நாட்டின் யூதர்களில் 95 சதவீதம் பேர் கொல்லப்பட்டனர். இது ஐரோப்பா முழுவதிலும் மிக உயர்ந்த விகிதமாகும். உக்ரேனில் உள்ள உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு போன்ற லித்துவேனியன் நடவடிக்கை முன்னணி (Lithuanian Activist Front - LAF) யூதர்களை நாஜிகள் தலைமையிலான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் முழுமையாகப் பங்கேற்றதுடன், ஜேர்மன் இராணுவத்தின் வருகைக்கு முன்னரே யூதர்களைக் கொலை செய்யத் தொடங்கியது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்ட பின்னர், போருக்கு இடையேயான காலத்தில் பால்டிக்கில் முதலாளித்துவ ஆட்சிகளின் வலதுசாரி மரபு புத்துயிர் பெற்றது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ், உக்ரேன் உட்பட கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளை விட பெரும்பாலும் முன்கூட்டியேயும், மிகவும் ஆக்ரோஷமாகவும் இரண்டாம் உலகப் போரின் சகாப்தத்தில் இருந்த பால்டிக் நாஜி ஒத்துழைப்பாளர்கள் திட்டமிட்டமுறையில் மறுவாழ்வு பெற்றனர்.

லித்துவேனியாவில், சோவியத்துக்குப் பிந்தைய லித்துவேனிய நாடாளுமன்றத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, யூதர்களை நாடு கடத்தும் உத்தரவுகளில் கையெழுத்திட்ட நாஜி ஒத்துழைப்பாளரான ஜோனாஸ் நோரெல்காவை (Jonas Norelka) 'தேசிய தலைவர்' என்று அறிவித்ததாகும்.

2006 ஆம் ஆண்டு முதல், லித்துவேனியன் அரசாங்கம் ஏற்கனவே நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. போரின் போது லித்துவேனியன் நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு எதிராக போராடிய எஞ்சியிருக்கும் சில யூத சோவியத் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க, வலதுசாரி பிரச்சாரத்தில் ஈடுபட்டது. லித்துவேனிய அரசாங்கத்தின் இலக்குகளில் குறிப்பிடத்தக்கவர் சோவியத் கிளர்ச்சியாளர்களுடன் போராடிய யூதப்படுகொலையில் தப்பிப்பிழைத்த வரலாற்றாசிரியர் யிட்சாக் ஆராட் (Yitzhak Arad) ஆவார். இவர் இப்போது 'போர் குற்றவாளி' என்று குற்றம் சாட்டப்படுகின்றார்.

1991 க்கு பின்னர், எஸ்தோனிய அரசாங்கம் 1940 க்கு முன்னர் நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமையை வழங்கியது. லாத்வியாவும் இதேபோன்ற பிற்போக்கு தேசிய சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதன் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு குடியுரிமை மறுத்தது. 2019 ஆம் ஆண்டில், லாத்வியா மற்றும் எஸ்தோனியாவில் இன்னும் 200,000 'குடியுரிமையற்றவர்கள்' வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ரஷ்ய இனத்தவர்கள் என்று Institute of Statelessness and Inclusion மதிப்பிட்டுள்ளது. லாத்வியா மற்றும் எஸ்தோனியாவில் முறையே மொத்தமாக 1.9, 1.3 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இந்த பிற்போக்குத்தனமான ரஷ்ய-விரோத சட்டங்கள் சோவியத் நினைவுச்சின்னங்களை அழிப்பதோடு கைகோர்த்துள்ளன. 2007 இல், எஸ்தோனிய அதிகாரிகள் ஆத்திரமூட்டும் வகையில் இரண்டாம் உலகப் போரில் சோவியத் வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தலீனில் உள்ள வெண்கல சிப்பாய் என்று அழைக்கப்படும் இரண்டு மீட்டர் உயர சிலையை இடித்தனர். இந்த நடவடிக்கை நாட்டின் இனக்குழுக்களால் எதிர்க்கப்பட்டதுடன், 1,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட ஒரு கலவரத்தில் மற்றும் ஒரு ரஷ்ய ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டார்.

பாசிசக் கூறுகளின் ஊக்குவிப்பு மற்றும் இனவெறி, ரஷ்ய-எதிர்ப்பு வெறி ஆகியவை சோவியத்துக்குப் பிந்தைய பால்டிக் நாடுகளை நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் வேகமாக நண்பர்களாக ஆக்கியுள்ளன. லித்துவேனியா, எஸ்தோனியா மற்றும் லாத்வியா ஆகிய நாடுகள் அனைத்தும் ஈராக் மீது அமெரிக்கா பல தசாப்தங்களான ஆக்கிரமிப்பைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பின்னர், 2004 இல் இராணுவக் கூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2002ல் லித்துவேனியாவின் தலைநகரான வில்னியஸில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், “பயம், நிச்சயமற்ற தன்மை மற்றும் தனிமையின் நீண்ட இரவு முடிந்துவிட்டது. நீங்கள் நேட்டோவின் வலுவான மற்றும் வளர்ந்து வரும் குடும்பத்தில் இணைகிறீர்கள். எங்கள் கூட்டணி பாதுகாப்பிற்கான உறுதிமொழியை அளித்துள்ளது. மேலும் லித்துவேனியாவை எதிரியாகத் தேர்ந்தெடுக்கும் எவரும் அமெரிக்காவை தமது எதிரியாக்கியுள்ளனர். ஆக்கிரமிப்பை எதிர்நோக்கையில் லித்துவேனியா, லாத்வியா மற்றும் எஸ்தோனியாவின் துணிச்சலான மக்கள் இனி ஒருபோதும் தனித்து நிற்க மாட்டார்கள்”.

தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் தூக்கி எறியப்பட்டு, ரஷ்ய-எதிர்ப்பு மற்றும் நேட்டோ-சார்பு அரசாங்கத்தை கொண்டு வந்தபோது, 2014 இல் கியேவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து நடத்திய ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னர், நேட்டோ ரஷ்யாவிற்கு எதிரான அதன் போர் திட்டங்களை செயல்படுத்துவதற்கான போலிக்காரணமாக பால்டிக் நாடுகளே பயன்படுத்தப்படும், உக்ரேன் அல்ல என்று பரவலாக நம்பப்பட்டது. இப்போது போர் தொடங்கியுள்ள நிலையில், பால்டிக் நாடுகளின் சோவியத்-எதிர்ப்பு பிரச்சாரம் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போர் ஆகிய இரண்டினதும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

Loading