இலங்கையில் பெட்ரோலியத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்,

திங்களன்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (இ.பெ.கூ.) சுமார் 1,500 ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மத்திய கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணியாக எரிசக்தி அமைச்சுக்கு சென்றனர்.

22 ஆகஸ்ட் 2022 அன்று கொழும்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்களின் நடத்திய எதிர்ப்பு பேரணி [Photo: WSWS]

ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவர்கள் அமைச்சின் முன் கோஷங்களை எழுப்பினர், “இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை விற்பதை நிறுத்து,” “இ.பெ.கூ. மூடப்பட்டால், எண்ணெய் விலை உயரும்,” மற்றும் “தேசியமயமாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தைப் பாதுகாத்திடு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

பெற்றோலிய பொதுத் தொழிலாளர் சங்கம் (PGWU), முற்போக்கு தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் (SLNSS) மற்றும் தேசிய ஊழியர் சங்கம் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் குழுவான பெற்றோலிய தொழிற்சங்க கூட்டணி (PTUC), இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த தொழிற்சங்கங்கள் முறையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) ஆகியவற்றைச் சார்ந்தவையாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பிரதான கட்சியாகும்.

தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போராடத் தொழிலாளர்கள் உறுதியாக உள்ள நிலையில், பெற்றோலிய தொழிற்சங்க கூட்டணியானது, தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்க ஒரு வழியாக போராட்டத்துக்கு அழைத்தது.

தனியார் மயமாக்கலை நிறுத்தக் கோரி தொழிற்சங்கத் தலைவர்கள் அமைச்சிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனர். இந்த பயனற்ற வேண்டுகோள் ஏற்கனவே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, தொழிற்சங்கங்களுடன் பேசிய விஜேசேகர அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

22 ஆகஸ்ட் 2022 அன்று கொழும்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் [Photo: WSWS]

இ.பெ.கூ. இன் 1,200 நிரப்பு நிலையங்களில் 800 நிரப்பு நிலையங்களை லங்கா இந்தியன் ஓயில் கம்பெனி (LIOC), சீனாவின் சினோபெக், பெட்ரோலியம் டெவலப்மென்ட் ஓமன் மற்றும் ஷெல் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் முதலில் முன்மொழிகிறது. இறுதியில், சேமிப்பு, சுத்திகரிப்பு மற்றும் பிற வசதிகள் உட்பட நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் கலைக்க எதிர்பார்க்கின்றது.

விக்கிரமசிங்க அரசாங்கம் இரக்கமின்றி அமுல்படுத்த தீர்மானித்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கட்டளையிடப்பட்ட ஒரு பரந்த சிக்கன வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இ.பெ.கூ. இன் தனியார்மயமாக்கல் ஆகும். தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் உக்கிரமடைந்த முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் சுமக்க வைக்கப்படுகின்றனர்.

இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கள் வறண்டுவிட்டன, சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது, புலம் பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியும் செங்குத்தாக வீழ்ச்சியடைந்துள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை, இதனால் வாகனங்கள் மற்றும் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. நீண்ட நேர மின்வெட்டு தொடர்கிறது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறும் சமூகப் பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோரி, ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கி, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் எதிர்ப்புக்கள் ஒரு வெகுஜன எழுச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தன. ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்றும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தங்களை நடத்தினர், இதில் இ.பெ.கூ. ஊழியர்களும் பங்கேற்றனர். இந்த சக்தி வாய்ந்த இயக்கம் இராஜபக்ஷவை நாட்டை விட்டு ஓடச் செய்தது.

22 ஆகஸ்ட் 2022 அன்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளுடன் போலீசார் குவிக்கப்பட்டனர்

எவ்வாறாயினும், விக்கிரமசிங்க அரசாங்கம் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இ.பெ.கூ.க்கு மேலதிகமாக, இலங்கை மின்சார சபையை (CEB) தனியார் மயமாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்து மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல்களைத் திட்டமிடுவதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் உரையாற்றிய இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிஷாந்த ரணவீர, “அரசாங்கத்தால் கூட்டுத்தாபனத்தை நிர்வகிக்க முடியாவிட்டால், தொழிலாளர்கள் அதைச் செய்ய முடியும்” என்று வாய்ச்சவடால் விடுத்தார் 'அமைச்சர் தொழிலாளர்களுக்கு செவிமடுக்கத் தயாராக இல்லை என்றால், பாராளுமன்றத்தை விரட்டியடிக்க பொது மக்களை அணிதிரட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று பெற்றோலிய பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல கூறினார்:

இத்தகைய கருத்துக்கள் தொழிலாளர்களை ஏமாற்றும் முயற்சியாகும். இந்த தொழிற்சங்கங்களும் அவை இணைந்திருக்கும் அரசியல் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளன.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த பொது வேலைநிறுத்தங்களின் போது, இந்த தொழிற்சங்கங்கள் அனைத்து முதலாளித்துவ கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான கோரிக்கையின் பின்னால் வெகுஜன இயக்கத்தை திசை திருப்ப முயன்றன.

இந்த முதலாளித்துவ சார்பு அமைப்புகளுக்குள் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடவோ தங்களின் வேலைகள் மற்றும் ஊதியங்களை பாதுகாக்கவோ முடியாது. சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, தொழிலாளர்கள் முடிவுகளை எடுக்கும் நடவடிக்கையை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். இதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான மற்றும் தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களை, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் இலாப முறைமையை ஒழிப்பதற்குமான ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும். சோசலிச வழிகளில் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதன் பேரில், உற்பத்தி மற்றும் விநியோகமும் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைப்பதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாட்டை ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் பெருந்தோட்டங்களிலும் அமைக்கப்படும் நடவடிக்கைக் குழுக்கள் ஊடாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய தொழிலாளர்களுடன் இந்த வேலைத் திட்டத்தை பற்றி கலந்துரையாடினர்.

இ.பெ.கூ. இன் விநியோகப் பிரிவின் ஒரு தொழிலாளியான கமல் ரத்நாயக்க கூறியதாவது: 'தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் நான் இந்தப் போராட்டத்திற்கு வந்தேன், ஆனால் இந்த தொழிற்சங்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.'

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நினைவு கூர்ந்த அவர், “நாங்கள் அந்த போராட்டங்களில் இணைந்தோம். ஆனால் என்ன நடந்தது? கோட்டாபய சென்றார் ஆனால் அவருக்குப் பதிலாக வேறொரு கொடிய மனிதர் வந்துள்ளார்,” என்றார். “தொழிலாளர்கள் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை இன்னொரு முதலாளித்துவ அரசாங்கத்தால் பதிலீடு செய்வதன் மூலம் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது. தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகளுக்காகப் போராட மாற்று அரசியல் இயக்கம் தேவை,” என்பதில் அவர் உடன்பாட்டை தெரிவித்தார்.

22 ஆகஸ்ட் 2022 அன்று WSWS செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர் அனுராதா ஸ்ரீ நாலக (இடது) [Photo: WSWS]

அனுராத ஸ்ரீ நாலக என்ற எழுதுவினைஞர், இ.பெ.கூ. தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தினதும் ஊடகங்களினதும் பிரச்சாரத்தையும் கண்டித்தார். “நாங்கள் பாரிய சம்பளம் பெறுகிறோம் என்று சொல்கிறார்கள். இது உண்மையல்ல. மேலதிக நேர வேலை மற்றும் இதர கொடுப்பனவுகளும் எங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளன” என அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு நிர்வகிப்பது கடினம். கழிக்கப்பட்ட பிறகு நான் சுமார் 42,000 ரூபாய் [$US115] பெறுகிறேன்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான விக்கிரமசிங்கவின் முன்மொழிவு பற்றி அவர் கலந்துரையாடினார்: “எல்லா அரசாங்கங்களும் எங்களை முட்டாளாக்கி ஆட்சிக்கு வந்தன. இராஜபக்ஷ அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் என்ன நடந்தது? மக்கள் தாச்சியில் இருந்து நெருப்பில் விழுந்துள்ளனர். மக்கள் சுமையை சுமக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க எதிர்பார்கிறார்.”

கொழும்பின் புறநகரில் உள்ள முத்துராஜவெல களஞ்சியசாலையின் தொழிலாளி ஒருவர் கூறியதாவது: “திருகோணமலை எண்ணெய்க் கிடங்குகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வகையில், எல்ஐஓசிக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களை வழங்குவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தின. ஆனால் அவற்றின் வரையறுக்கப்பட்ட, அடையாள வேலைநிறுத்தங்கள் எதையும் தடுக்கத் தவறிவிட்டன.”

புதிய மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்துக்கான ஜே.வி.பி.யின் பிரச்சாரம் குறித்தும் அவர் பேசினார். “ஜே.வி.பி.யில் எனக்கு நம்பிக்கை இல்லை. 1989-1990ல் அவர்கள் செய்ததை நான் அனுபவித்தேன். அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளைத் தாக்கினர். அவர்கள் [முன்னாள் ஜனாதிபதி] சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் இணைந்திருந்தனர்.”

ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை தான் படிப்பதாக அந்தத் தொழிலாளி கூறினார். 'முதலாளித்துவ அரசாங்கங்களின் கீழ் உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தொழிலாளர்களின் சுதந்திரமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நான் உடன்படுகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

Loading