சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பூர்வாங்க பிணை எடுப்பு கடன் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) கடந்த வியாழன் அன்று இலங்கை அரசாங்கத்துடன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை நான்கு வருட தவணையில் வழங்குவதற்கான ஏற்பாட்டில் அதிகாரிகள் மட்ட ஆரம்ப உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தது. இது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை அங்கீகாரத்தை பெறவேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூயர், 2022 செப்டம்பர் 1, அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது. இலங்கைக்கான தூதுக்குழு தலைவரான மசாஹிரோ நோசாகி அருகில் உள்ளார். [AP Photo/Eranga Jayawardena]

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை 'ஒரு புதிய பொருளாதார சகாப்தத்தின் ஆரம்பம்' என்று பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'ஆரம்பம் கடினமாக இருக்கும், ஆனால் நாம் செல்லும்போது இன்னும் முன்னேற்றங்களை அடைய முடியும் என்பதை நாங்கள் அறிவோம்' என்று அறிவித்தார்.

'கடினமான ஆரம்பம்' கொண்ட 'புதிய பொருளாதார சகாப்தம்' என்று அழைக்கப்படுவது, நாட்டின் முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை விலை கொடுக்க வைப்பதற்கான கொடூரமான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு புதிய சுற்றைத் தவிர வேறு அல்ல.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முக்கிய அங்கங்களில் பின்வரும் பரதூரமான, கடுமையான நடவடிக்கைகளும் அடங்கும்:

* 'நிதி ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைக்க நிதி வருவாயை உயர்த்துதல்.' இதற்காக பிரதான வரி சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. கூட்டுத்தாபனங்களுக்கான வருமான வரி தளத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், சர்வதேச நாணய நிதியம் தனிநபர் வருமான வரியை 'இன்னும் முன்னேற்றமானதாக' ஆக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களை உள்ளடக்கியவாறு வரி வலையை விரிவுபடுத்துவதே இதன் அர்த்தமாகும். சமூகத்தின் ஏழ்மையான அடுக்குகளை தவிர்க்க முடியாமல் பாதிக்கும் பெறுமதி சேர் வரியை (VAT) மேலும் அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத நிதி உபரியை உறுதி செய்வதற்காக, இந்த ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட நடப்புப் பற்றாக்குறையான 9.8 சதவீதத்தில் இருந்து, மிகப்பெரிய புதிய வருவாயை அதிகரிப்பதே இலக்கு ஆகும்.

இரண்டு ஆண்டுகளில் பற்றாக்குறையிலிருந்து உபரிக்கு திரும்புதல் என்பதை, சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கான அரசாங்க செலவினங்களில் ஆழமான வெட்டுக்களை அமுல்படுத்தல் மற்றும் வரிகளை பெருமளவில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.

* 'அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலிருந்து எழும் நிதி அபாயங்களைக் குறைக்க, எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவு-மீட்பு அடிப்படையிலான விலையை அறிமுகப்படுத்துதல்.'

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் விலை உயர்வுகளை சர்வதேச நாணய நிதிய குழு 'வரவேற்றுள்ளது'. இவற்றில் அண்மைய மாதங்களில் எரிபொருள் பாரியளவு விலையேற்றப்பட்டதுடன், மின்சாரக் கட்டணங்கள் 75 வீதத்தினாலும் நீர்க் கட்டணங்கள் 127 வீதத்தினாலும் அதிகரித்துள்ளன. உலக சந்தைக்கு ஏற்ப விலை மேலும் உயரும். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் 'மறுசீரமைப்பு' திட்ட நிரலின் ஒரு பகுதியாகும்.

* சமூக செலவினங்களை உயர்த்துவதன் மூலம் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தற்போதைய நெருக்கடியின் தாக்கத்தைத் தணித்தல் மற்றும் சமூக பாதுகாப்பு வலைத் திட்டங்களின் பரப்பை மற்றும் இலக்குகளை மேம்படுத்துதல்.

இந்த தணிப்பு என்று அழைக்கப்படுவது உழைக்கும் மக்களின் இழப்பில் செய்யப்பட வேண்டியதாகும். நலிவுற்றவர்களுக்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு நிதியளிப்பதற்காக 2.3 சதவீத புதிய வரியை அறிமுகப்படுத்துவதற்கான சமூகப் பாதுகாப்பு மசோதாவை நேற்று அரசாங்கம் முன்வைத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ஒரு தீர்வற்ற சமூக நெருக்கடிக்கு மத்தியில், மிகவும் வறியவர்களுக்கு ஒரு அற்ப தொகையை வழங்குவதன் பேரில், புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 'இலக்கு' என்பது எந்த உதவியையும் பெறுபவர்களை மேலும் கட்டுப்படுத்துவதாகும்.

* தரவு சார்ந்த பணவியல் கொள்கை நடவடிக்கை, நிதி ஒருங்கிணைப்பு மூலம் விலை நிலைத்தன்மையை மீட்டமைத்தல். இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மத்திய வங்கிக்கு தனி அதிகாரம் இருக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மற்றும் பணவியல் கொள்கைகளை சரிசெய்து, அரசாங்க கொள்கைகளை இரக்கமின்றி கண்காணிப்பதில் சர்வதேச நாணய நிதியத்தின் காவலராக மத்திய வங்கி செயல்பட வேண்டும் என்பதாகும்.

* சந்தை சார்ந்த நாணய மாற்று விகிதக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும்.

இந்த வருடத்தில் இதுவரை 80 வீதத்தினால் ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதியை இது மேலும் கீழிறக்கும்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்துக்கள், இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை விரைவாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் மட்ட உடன்பாட்டிற்கு வந்ததைக் காட்டுகின்றன. ஜூலை 14 அன்று விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. சமூகத் தாக்குதல்களை ஆழப்படுத்தும் வகையில் கடந்த வாரம் அவர் ஆண்டின் எஞ்சிய காலத்துக்கு ஒரு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட் தூதுக் குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் கொழும்பில் வியாழனன்று ஊடகங்களுக்குத் பேசும் போது, 'பூர்வாங்க உடன்படிக்கையானது, விரிவான சீர்திருத்தங்களுக்கு இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பை சமிக்ஞை செய்வதாகும்' மற்றும் 'கடன் வழங்குபவர்களுக்கு பணம் மீள செலுத்தும் திறன் மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளிப்பதாகும்...' என்று தெரிவித்தார்.

இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நவம்பரில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்.

ஏப்ரல் 12 அன்று சர்வதேச கடனாளிகளுக்கு 51 பில்லியன் டொலர் கடனை 'தற்காலிகமாக திருப்பிச் செலுத்தாத' இலங்கை, இந்த ஆண்டு கடன் சேவையாக 7 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன என்று திருப்தி அடைந்தால் மட்டுமே சர்வதேச நாணய நிதிய அதன் முதல் கடன் தவணைக்கு ஒப்புதல் அளிக்கும். சர்வதேச நாணய நிதிய அதிகாரி மசகிரோ நஸோக் 'ஒவ்வொரு தொகை செலுத்தப்படுவதற்கும் முன்னதாக ஒரு மதிப்பாய்வு மேற்கொள்ளப்படும்' என எச்சரித்தார்.

பிரதானமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய பாரிஸ் கிளப் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன. இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனாவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஜப்பானிய நிதியமைச்சர் ஷுனிசி சுசூகி, வெள்ளிக்கிழமையன்று, இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளை நாட்டின் கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்தார்.

கடனளிப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் திகதிகளை ஒத்திவைக்கலாம் அல்லது வட்டி விகிதங்களில் சிறிய குறைப்பு செய்யலாம், ஆனால் அது கடன்கள் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய மட்டுமே. இந்த சர்வதேச நிதித் திமிங்கிலங்களுக்கு திருப்பிச் செலுத்த, கொழும்பு அரசாங்கம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை மீண்டும் மீண்டும் பிழிந்தெடுக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை பற்றிய அறிக்கையில், பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்ததாவது: “பல தசாப்தங்களாக, நாங்கள் எங்களின் சேமிப்பை விட அதிகமாக பயன்படுத்தியுள்ளோம். எனவே, எங்களின் கடன்கள் பாரிய விகிதத்தில் அதிகரித்துள்ளன... எதிர்காலத்தில், இந்தத் நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதற்கு நாம் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.'

நாட்டின் பாரிய கடன்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பொறுப்பாளிகள் அல்ல. முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அடுத்தடுத்து அதிகாரத்தில் இருந்த ஆட்சிகளே தங்கள் இலாபத்தை பெருக்கவும் மோசமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தை ஈடுகட்டவும் இந்த கடன்களை பெற்றுள்ளன. கடன் வாங்கியதில் பாதியானது, ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக நீடித்த, தீவின் பொருளாதாரம் மற்றும் முழுப் பிரதேசங்களையும் சீரழித்த இரத்தக் களரி தமிழர்-விரோதப் போரை நடத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய பெருவணிக குழாமான இலங்கை வர்த்தக சம்மேளனம், சரவதேச நாணய நிதிய திட்ட நிரலுக்கு தனது ஆதரவை உறுதி செய்யும் அறிக்கையை வெளியிட்டது. கூட்டுத்தாபன உயரடுக்கு, உடனடி நெருக்கடியைத் தணிப்பதற்கும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது உட்பட, இலாபங்களைப் பெறுவதற்கான புதிய வழிகளைத் திறப்பதற்குமான ஒரு வழிமுறையாக இதைக் கருதுகிறது.

கடந்த வெள்ளியன்று இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் மீதான அவற்றின் விமர்சனங்களின் அப்பட்டமான பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 120 வாக்குகளுடனும் ஐந்து எதிர் வாக்குகளுடனும் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பேச்சாளர் துசார இந்துனில் அமரசேன, 'ஒரு கட்சி என்ற வகையில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை, அதற்கு பதிலாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளோம்,' என்று அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு ஐ.ம.ச. விரும்பவில்லை என்பதாலேயே அந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கினார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சர்வதேச நாணய நிதித்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசவில்லை. வரவு செலவுத் திட்ட விவாதத்தில், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, 'புதிய மக்கள் ஆணையுடன்' ஒரு 'புதிய அரசாங்கத்திற்கு' வெறுமனே அழைப்பு விடுத்தார் - வேறுவிதமாகக் கூறினால், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை சிறப்பாகச் சுமத்தக்கூடிய ஒரு அரசாங்கமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முரண்படவில்லை. மாறாக, 'வரவு செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்துக்கும் பேரினப் பொருளாதார கட்டமைப்பிற்கும் இசைவாக இருக்க வேண்டும்,' என்று அரசாங்கத்திடம் கூறினார்.

இலங்கையின் வெடிக்கும் சமூக நிலைமை குறித்து சர்வதேச நிதி வட்டாரங்களில் உள்ள அச்சங்களை வெளிப்படுத்தும் வகையில் ஃபிச் தரப்படுத்தல் நிறுவனம் எச்சரித்தது. 'அரசியல் ஸ்திரமின்மை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் ஆபத்துக்களை ஏற்படுத்தும்... குறிப்பாக அரசாங்கத்துக்கான பொதுமக்கள் ஆதரவு பலவீனமாக காணப்படுவதை எடுத்துக்கொண்டால், மேலதிக சமூகச் செலவுகள், பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுக்க போதுமானதாக இருக்காது,...' என அது கூறியது.

கடந்த ஏப்ரலில் இருந்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கிய எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் இலங்கை மூழ்கியுள்ளது. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியதுடன், பெருந்தொகையான பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நீண்ட மணிநேர மின்வெட்டு ஆகியவற்றை நிறுத்துமாறு கோரியுள்ளனர். பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்.

எவ்வாறாயினும், அந்த வெகுஜன இயக்கம் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவுடன், தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது. அவை, இந்த இயக்கத்தின் நோக்கத்தை மட்டுப்படுத்தவும், இடைக்கால அனைத்துக் கட்சி முதலாளித்துவ அரசாங்கத்திற்கான கோரிக்கையுடன் அதைக் கட்டிப்போடவும் அனைத்தையும் செய்தன. இதன் விளைவுதான் விக்கிரமசிங்க அரசாங்கம், அனைத்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், உழைக்கும் மக்கள் மீது இன்னும் கடுமையான சுமைகளைத் திணித்து வருகிறது.

இலங்கையில் உள்ள ஆளும் வர்க்கமும் நிதி மூலதனத்தின் சர்வதேசப் பிரதிநிதிகளும் பரந்த மக்கள் மத்தியில் மீண்டும் கோபம் தலைதூக்குவதை நன்கு அறிவார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விக்கிரமசிங்க, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவ அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளார். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸாரின் கொடூரமான தாக்குதல்களுக்குப் பின்னர், விக்கிரமசிங்க, கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று மாணவர் தலைவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பினார்.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த வர்க்க வழிமுறைகளைப் பயன்படுத்தியும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டும் இந்த சிக்கன நடவடிக்கைக்கு எதிராக அதனது சொந்த எதிர்த்தாக்குதலைத் தயாரிக்க வேண்டும். தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, வேலை செய்யும் இடங்களிலும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்த நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை நடத்துவதற்கு பிரச்சாரம் செய்கிறது. இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவது, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான அரசியல் போராட்டத்திற்கு வழி வகுக்கும்.

Loading