முன்னோக்கு

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு அமெரிக்காவில் வர்க்கப் பதட்டங்களை முறிவுப் புள்ளிக்குத் தள்ளுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளின் முன்னால் கூலிகள் அவற்றின் மதிப்பை இழந்து வரும் நிலையில், செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய பணவீக்கப் புள்ளிவிபரங்கள், தொழிலாள வர்க்கம் பல மாதங்களாக பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. முதலாளித்துவ நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்வதற்கான ஆளும் வர்க்கத்தின் முயற்சி, அமெரிக்கா உட்பட, உலகம் முழுவதும் தொழிலாளர்களைப் போராட்டத்திற்குள் தள்ளி வருகிறது, அமெரிக்காவில் ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் பலமான வேலைநிறுத்தங்களைத் தொடங்கி வருகிறார்கள்.

நடைமுறையளவில் அனைத்து நுகர்வு பொருட்கள் மீதான விலை உயர்வு, 12 மாத பணவீக்க விகிதம் 8.3 சதவீதமாக உயர வழி வகுத்திருப்பதாக அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் ஆணையம் செவ்வாய்கிழமை அறிவித்தது. வாடகைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கவனிப்புச் செலவுகள் ஆகஸ்ட் மாதம் நுகர்வு விலைக் குறியீட்டின் (CPI) உயர்வுக்கு வழி வகுத்தன. குடும்ப உபகரணங்கள், புதிய வாகனங்கள், மோட்டார் வாகனக் காப்பீடு மற்றும் கல்விச் செலவுகளும் அதிகரித்துள்ளன.

தொழிலாள வர்க்கத்திற்கு, வாழ்க்கை நாளுக்கு நாள் தாங்கொணா செலவு கொண்டதாக மாறி வருகிறது.

வீட்டு வாடகை செலவுகள் ஆகஸ்டில் கூடுதலாக 0.7 சதவீதம் உயர்ந்து, 12 மாத அதிகரிப்பை 1986 க்குப் பிந்தைய அதிகபட்ச அளவாக 6.2 சதவீதத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆகஸ்டில் பயன்பாடு கட்டணங்கள் 2.1 சதவீதம் உயர்ந்து, அதிர்ச்சியூட்டும் அளவுக்குக் கடந்த ஆண்டை விட 19.8 சதவீதத்திற்கு வந்துள்ளது. உணவின் விலை கடந்த மாதம் 0.8 சதவீதம் அதிகரித்தது, கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் உயர்ந்துள்ளது, இது 1979 க்குப் பிந்தைய கடுமையான உயர்வாகும்.

போலியான 'பணவீக்கக் குறைப்புச் சட்டம்' நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடுவதற்கான செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகை நிகழ்வின் போது, ஜனாதிபதி பைடென் இந்தப் புதிய புள்ளிவிவரங்களைக் குறிப்பிடவில்லை, 'நாங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது' என்று மட்டுமே பளிச்சென்று கூறினார். எரிவாயு விலைகள் மூன்று மாதம் குறைந்திருப்பதாக தம்பட்டம் அடித்த ஜனாதிபதி, கடந்த ஆண்டைக் காட்டிலும் அது இப்போதும் 26 சதவீதம் அதிகமாக இருப்பதைக் குறிப்பிடவில்லை.

பைடென், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இந்த ஆண்டு உக்ரேனை ஆயுதமயப்படுத்த குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளனர், ஆனால் தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மீது அதிகரித்து வரும் செலவுகளின் தாக்கத்தைக் குறைக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை.

செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட வேறொரு அறிக்கையில், தொழிலாளர் புள்ளியியல் ஆணையம் மணிக்கு சராசரி நிஜமான வருவாய் ஜூலை இல் இருந்து ஆகஸ்ட் வரை மேலும் 0.2 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறியது. கடந்த ஆண்டில், ஓர் அமெரிக்க தொழிலாளரின் மணிக்கு சராசரி நிஜமான சம்பளம் 2.8 சதவீதம் குறைந்தது.

டெட்ராய்ட் கிறைஸ்லர் (ஸ்டெல்லாண்டிஸ்) தொழிலாளரான ஜேம்ஸ், உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், 'எங்கள் சம்பளங்களைத் தவிர மற்ற அனைத்தும் அதிகரித்து வருகின்றன,” என்றார். “நான் இரண்டு வேலைகளைச் செய்கிறேன், அதற்காக வாரத்தில் குறைந்தது 80 மணி நேரம் வேலை செய்கிறேன். இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. எனக்குத் தூங்கக் கூட நேரமில்லை,' என்றார்.

ஒரு சாதாரண குடும்பத்தின் மாதாந்திரச் செலவில் 341 டாலர் கூடுதலாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க மோதலை அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டும், மின்னிசொடாவில் 15,000 செவிலியர்கள் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய தனியார் துறை மருத்துவக் கவனிப்பு வேலைநிறுத்தம் ஒன்றில் பங்கேற்றனர்; 6,000 சியாட்டில் ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்; 100,000 க்கும் மேற்பட்ட இரயில்வே தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை EST நேரம் 12:01 இல் இருந்து வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

அமெரிக்க ஆளும் வர்க்கம், மற்றும் குறிப்பாக பைடென் நிர்வாகம், பணவீக்க விகிதத்தை விட குறைந்த கூலி உயர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தொழிற்சங்க எந்திரத்தை நம்பியுள்ளன. உண்மையில், தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் பெயரளவுக்கே கூலி உயர்வுகளைக் கண்டுள்ளனர், இது தொழிற்சங்கங்களில் இல்லாத தொழிலாளர்களுக்கு இருந்த உயர்வை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.

பைடென் நிர்வாகம் வெளிநாடுகளில் போர் நடத்தி வரும் அதேவேளையில், உள்நாட்டில் தொழிலாளர் 'அமைதியை' அமல்படுத்தும் முயற்சியில், அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஒரு முத்தரப்பு பெருநிறுவன உறவுக்குள் தொழிற்சங்க எந்திரத்தை கூடுதலாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது—ஆயிரக் கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகளோ ஆறு இலக்க சம்பளங்களைப் பெற்று வருகிறார்கள்.

பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பயங்கரமான நிலைமைகள் மற்றும் பெருந்தொற்று பரவலுக்கு எதிராக கல்வியாளர்களின் போராட்டத்தை ஒடுக்க, ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் அவற்றால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்து வருகின்றன. மின்னிசொடா செவிலியர்களின் சக்தி வாய்ந்த போராட்டத்தை மருத்துவக் கவனிப்பு தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்தி வருகின்ற அதேவேளையில், அவர்களின் வேலைநிறுத்தத்தை வெறும் மூன்று நாட்களுடன் மட்டுப்படுத்துகின்றன. AFL-CIO எந்திரம், மேற்பரப்பில் கொதித்து வரும் கோபத்தை அணைக்க பெரும் பிரயத்தனத்தோடு முயன்று வருகிறது.

இரயில்வே தொழில்துறையை விட வேறு எங்கும் இது அந்தளவுக்குத் தெளிவாக இல்லை, அங்கே தொழிலாளர்களுக்குப் பல ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை, மருத்துவ விடுப்புகளும் இல்லை. பலர் வாரத்திற்கு 24 மணி நேரமும் அழைக்கப்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்களுக்குக் குடும்பங்களுடன் இருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ நேரம் இருப்பதில்லை.

பைடென் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரஸில் உள்ள மில்லியனர்களும் தொழிலாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் சட்டத்தைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தி வரும் அதேவேளையில், தொழிற்சங்கங்களோ ஒரு விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையைத் திணிக்கும் நோக்கில் பிளவுபடுத்தி ஜெயித்து மூலோபாயத்தில் ஈடுபட்டுள்ளன. 'ஜனாதிபதி அவசர வாரியம்' தொழிலாளர்களுக்குச் சாதகமான ஓர் ஒப்பந்தத்தை முன்மொழியும் என்ற மாயை அவர்கள் ஊக்குவித்தனர்—இந்த முன்மொழிவு பெருவாரியான எதிர்ப்பை மீறி காங்கிரஸ் நிறைவேற்ற முயற்சித்து வரும் அதே முன்மொழிவாகும்.

ஆளும் வர்க்கம் வர்க்கப் போர் கொள்கையில் ஈடுபட்டுள்ளது. பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், பைடென் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன், அதிக வட்டி விகித உயர்வுகளைக் கொண்டு பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ள விரும்புகிறார் என்பதை அவரே தெளிவுபடுத்தி உள்ளார். இத்தகைய வட்டி விகித உயர்வுகள் 'வலியை உண்டாக்கவும்' மற்றும் பணவீக்க விகிதத்திற்கு ஏற்றவாறு கூலிகளை உயர்த்துவதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் திருப்பித் தாக்க பாரிய வேலைவாய்ப்பின்மையைப் பயன்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு ஏற்றவாறு கூலிகளை அதிகரிப்பதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகள் பணவீக்கத்தால் ஏற்பட்டதில்லை மாறாக அமெரிக்க அரசாங்கமும் மத்திய வங்கிகளும் வோல் ஸ்ட்ரீட்டைப் பிணை எடுப்பதற்கும் பங்குச் சந்தைக் குமிழிக்கு முட்டுக் கொடுப்பதற்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியதன் விளைவாகும். ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக போர் தொடுப்பதற்காக வரம்பின்றி ஆதாரவளங்களைப் பென்டகனிடம் ஒப்படைத்ததால் அது பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது.

வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாக்கத் தொழிலாள வர்க்கத்தின் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலையிடத்திலும் மற்றும் அண்டைப் பகுதிகளிலும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சுயாதீன அமைப்புகளாக சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களுக்க அழைப்பு விடுக்கிறது.

சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் பாகமாக, சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பு பின்வரும் அவசரக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வேலைநிறுத்தங்கள், பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற வர்க்க நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்:

• கடந்த ஐந்து ஆண்டுகளாக சரிந்து வரும் நிஜமான வருமானத்தை ஈடுகட்ட, அடிப்படை மணிநேரக் கூலியை 40 சதவீதம் உயர்த்த வேண்டும். அமெரிக்கத் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மாதாந்தரச் சம்பளத்தை நம்பியே வாழ்கின்றனர்.

• உடனடியாக அனைத்து கூலிகளையும் தற்போதைய பணவீக்க மட்டத்திற்கு ஏற்ப அமைக்க வேண்டும், அதிகரித்து வரும் செலவினங்களுக்குப் பொருந்திய வகையில், தானியங்கி மாதாந்திர வாழ்க்கைச் செலவு சீரமைப்பு (COLA) கணக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

• பணவீக்கத்திற்கு ஏற்ப முதலாளிகள் செலுத்தும் மருத்துவ மற்றும் ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் அதிகரிக்க வேண்டும்.

• ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களைப் பாதுகாக்க, அரசு நிதியுதவி பெறும் மருத்துவக் கவனிப்புத் திட்டம், மருத்துவ உதவித் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களை கூர்மையாக அதிகரிக்க வேண்டும்.

• நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு கடன், மாணவர் கடன், கார் மற்றும் வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

• எரிசக்தித் துறையின் ஏகபோக நிறுவனங்களால் விலை ஏய்ப்புகள் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் நவம்பர் 2020 இல் ஒரு கேலன் 2.00 டாலராக இருந்த அதே நிலைக்கு விலைகள் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும். சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இலாபங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும், எரிசக்தித் துறையானது பொதுவுடைமையின் கீழ் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

இரயில்வே தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வாகனத் துறைத் தொழிலாளர்கள் உட்பட முக்கிய தொழில்துறைகளில் ஏற்கனவே சாமானியத் தொழிலாளர் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் போட்டியில் வில் லெஹ்மனின் பிரச்சாரம், தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக சாமானியத் தொழிலாளர் கிளர்ச்சிக்காகவும், மற்றும் ஆலைகளில் ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்திற்குத் தலைமை கொடுத்து வருகிறது. அது நாடெங்கிலும் வாகனத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் மற்ற தொழிலாளர்களிடம் இருந்து பலமான விடையிறுப்பைப் பெற்று வருகிறது.

தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்ட தொழிலாள வர்க்கத்தின் எதிர்-தாக்குதல் மட்டுமே, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு மற்றும் அதன் இரண்டு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் சர்வாதிகாரத்தை உடைக்க ஒரே வழியாகும். இந்தப் பாதையில் மட்டுமே தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் எந்தவொரு பெரும் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது, அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும். வறுமை, சுரண்டல், போர் மற்றும் சர்வாதிகாரத்தைத் தவிர முதலாளித்துவம் வேறு எதையும் வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமானால், அது ஆளும் உயரடுக்குகளின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்து பொருளாதார வாழ்வின் மீது உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும், இலாபத்திற்காக இல்லை சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்குமான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே உண்டாகும். அதாவது, அது சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே உண்டாகும்.

Loading