மூலோபாய உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்தார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவர் (USAID) அமைப்பின் தலைவர் சமந்தா பவர் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார், இந்த விஜயம் நாட்டின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பிறருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவரது விஜயத்தின் உண்மையான நோக்கம், இலங்கையில் வாஷிங்டனின் மூலோபாய செல்வாக்கை வலுப்படுத்துவதாகும்.

USAID நிர்வாகி சமந்தா பவர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அருகில இருக்க, 11 செப்டம்பர் 2022 ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் கொழும்பில் ஒரு ஊடக மாநாட்டின் போது உரையாற்றுகிறார். [AP Photo/Eranga Jayawardena]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனுக்காக மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை அடுத்தே பவர் விஜயம் செய்துள்ளார். அவரது முன்னோடியான கோட்டாபய இராஜபக்ஷவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த, தாங்க முடியாத சமூக நிலைமைகள் மீதான பல மாத கால மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை விக்கிரமசிங்க எதிர்கொள்ளும் சூழ்நிலையிலேய இவர் விஜயம் செய்துள்ளார்.

“இலங்கையர்கள் எதிர்கொள்ளும் அவசர மற்றும் இடைநிலைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஸ்திரத்தன்மைக்குத் திரும்புவதற்கு ஆதரவளிப்பதற்கும், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஊக்குவிப்பதையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான USAID இன் ஆதரவை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது,' என பவரின் வருகை குறித்து USAID இணையப் பக்கம் அறிவித்திருந்தது:

இலங்கையர்கள் எதிர்நோக்கும் 'கடுமையான சவால்கள்' குறித்து முதலைக் கண்ணீர் வடித்த பவர், சிறு விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள், பெண் குடும்பத் தலைவர்கள் மற்றும் அவர்களது ஏழைக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். 'நீங்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பொருளாதார சூழ்நிலைகள் பற்றி இலங்கையர்களாகிய உங்களிடமிருந்து நேரடியாகக் கேட்பதற்காக' வந்ததாக அவர் அறிவித்தார்.

பெரும்பாலான இலங்கையர்களை துன்புறுத்தும் வறுமையைப் போக்க கொழும்புக்கு பறக்கும் உயிருள்ள தேவதையாக பவர் இருப்பதாக எவரும் நம்புவது மிகவும் தவறாகும். பவர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நனவான பிரதிநிதியாகும், அமெரிக்கா COVID-19 தொற்று நோயால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் சாவதற்கு வேண்டுமென்றே அனுமதித்துள்ளதுடன் உக்ரேனில் ரஷ்யாவுடன் பொறுப்பற்ற முறையில் போரை தீவிரப்படுத்தி வருவதுடன், இது மனிதகுலத்தின் அணுவாயுத அழிவுக்கு வழிவகுக்கும்.

'ஜனநாயகத்தை' பாதுகாத்தல் மற்றும் 'மனித உரிமைகளை' நிலைநிறுத்துதல் என்ற போலியான கூற்றுகளின் கீழ், கடந்த மூன்று தசாப்தங்களாக மத்திய கிழக்கு மற்றும் பிற இடங்களில் அதன் முடிவில்லா இராணுவத் தலையீடுகள் மற்றும் போர்கள் மூலம் எண்ணற்ற குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை அமெரிக்கா நாசமாக்கியுள்ளது. அது எங்கு தலையிட்டாலும், 'வறுமை,' 'மனித உரிமைகள்,' 'ஜனநாயகம்' மற்றும் 'நல்லாட்சி' ஆகியவற்றின் மீது வாஷிங்டனின் அக்கறை காட்டுவதாக காட்டிக்கொள்வது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற கொள்ளையடிக்கும் புவிசார் அரசியல் நலன்களை மூடிமறைப்பதற்கை ஆகும்.

கொழும்பில், பவர் ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு உரம் வழங்க 40 மில்லியன் டொலர், அதாவது ஒரு விவசாயிக்கு 40 டொலரும், மற்றும் மேலதிகமாக 5.7 மில்லியன் மக்களுக்கு 20 மில்லியன் டொலர்களும் உதவியாக அறிவித்தது. ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக உக்ரேன் அரசாங்கத்திற்கு பைடென் நிர்வாகம் வழங்கிய 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகக் குறைவான தொகையாகும்.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ போரில் கொழும்பை முழுமையாக ஒருங்கிணைக்கும் பைடென் நிர்வாகத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பவர், இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை குற்றம் சாட்டியது. உண்மையில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்த உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பானது ஆத்திரமூட்டல் மற்றும் ஆக்கிரமிப்பு சுற்றிவளைப்பிற்கான ரஷ்யாவின் பதிலிறுப்பாக இருந்தது.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை பெரிதும் நம்பியிருந்த முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கம், பெப்ரவரி மாத இறுதியில் உக்ரேனில் போர் நடந்துகொண்டிருக்கும் போது, 'பக்கசார்பு எடுக்க' பகிரங்கமாக மறுத்தது. இந்த நிலைப்பாட்டை விக்கிரமசிங்க ஆட்சி இன்னும் கடைப்பிடிக்கிறது.

சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய தாக்குதலுடன் இலங்கையை நெருக்கமாக இணைக்கும் வாஷிங்டனின் முயற்சிகளுக்கு இணங்க, பவர் தனது விஜயத்தைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பெய்ஜிங்கை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். இலங்கையின் கடனை மறுசீரமைக்க அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக பவர் கொழும்பு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். ஆனால் அவர் மேலும் கூறுகையில் 'இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும், குறிப்பாக சீன மக்கள் குடியரசு இந்தச் செயன்முறையில் வெளிப்படையாகவும், ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்க வகையில் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமாகும்,' என்றார்.

பவரின் மறைமுகமான கருத்தை, கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் சீனாவைப் பற்றி அவர் தெரிவித்த போர்வெறி மிக்க கருத்துக்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். புதுடில்லியில் பேசிய அவர், 'மற்ற கடன் வழங்குபவர்களை விட அதிக வட்டி விகிதத்தில் மூடி மறைக்கப்பட்ட கடன் ஒப்பந்தங்களை அடிக்கடி செய்துகொண்டு, இலங்கையர்களுக்கு அடிக்கடி சந்தேகத்திற்குரிய நடைமுறைப் பயன்பாட்டுடன் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கின்றது' என்று சீனாவை நேரடியாக விமர்சித்தார்.

தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் போது, பவர் ஜனாதிபதி விக்கிரமசிங்க, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

விக்கிரமசிங்கவைச் சந்தித்த பவர், 'அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் பொறுப்புக்கூறல்களும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார பொறுப்புக்கூறலுடன் கைகோர்த்து செல்ல வேண்டும்,' எனத் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் பிற வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கடன் வழங்குநர்களின் கோரிக்கைகள், சமூக நலன், அரச தொழில்கள், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் அதிக வரிகளைத் திணித்தல் மூலம் வெட்டுக்கள் ஈவிரக்கமின்றி சுமத்தப்பட வேண்டும்.

இது பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களை உருவாக்குவதாக இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவும் முன்வைத்த அனைத்து முந்தைய வழிகாட்டுதல்களையும் செயல்படுத்துவதில் அசைக்க முடியாத சாதனையைக் கொண்ட விக்கிரமசிங்க, பவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்.

எதிர்க்கட்சி பாராளுமன்றக் கட்சிகளுடனான தனது கலந்துரையாடல்களில், பவர், 'இலங்கையின் துடிப்பான சிவில் சமூகத்திற்கு' 'வாய்ப்புகள்' வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் 'குரல் எழுப்பவும், அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும்' வலியுறுத்தினார். எளிமையான மொழியில், எதிர்க்கட்சித் தலைவர்கள் இலங்கை முதலாளித்துவ ஆட்சிக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வேண்டும் மற்றும் வெகுஜன எதிர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச) தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமேந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆகியோர் பவர் சந்தித்தவர்களில் அடங்குவர்.

இந்த எதிர்க் கட்சிகளான ஐ.ம.ச., தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கும் அதே வேளை, மிகவும் மதிப்பிழந்த விக்கிரமசிங்க ஆட்சிக்கு நேரயாக ஆதரவு வழங்குவது தங்களின் ஆதரவுத் தளங்களை அரித்துவிடும் என்று அஞ்சுகின்றனர்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளில் இருந்து எந்த மாற்றமும் இருக்க முடியாது என்றும், விக்கிரமசிங்க மீதான வாய்வீச்சு விமர்சனங்கள் கைவிடப்பட வேண்டும் என்றும் பவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு 'ஒற்றுமை இல்லாமை, முரண்பாடுகள் மற்றும் பிளவுகளும் தேவையான முதலீட்டை ஈர்ப்பதை இன்னும் கடினமாக்கும்' மற்றும் 'ஸ்திரமின்மையின் தோற்றத்தை நிலைநிறுத்தும்' என்றும் அவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பிற்கு எதிராக அவர்கள் அனைவரும் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு மிகவும் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வேண்டும் என்பதாகும்.

சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய தாக்குதலில் கொழும்பை முழுமையாக ஒருங்கிணைக்கும் அமெரிக்க முயற்சிகள் அதிகரித்து வருவது, ஒரு பேரழிவு உலகப் போருக்கு வழிவகுக்கும் உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களின் சுழலில் முழு பிராந்தியமும் சிக்கியுள்ளது என்ற யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. .

இந்த அபிவிருத்திகள், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, தெற்காசியாவிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளுடன் இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் ஒன்றிணைய வேண்டியதன் அவசரத்தை சக்திவாய்ந்த முறையில் முன்வைக்கின்றன.

Loading