முன்னோக்கு

பெருந்தொற்று, விலைவாசி உயர்வு மற்றும் மந்தநிலையால் மில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய வறுமை அதிகரிப்பு குறித்து இவ்வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கை, உலகின் வறிய நாடுகளில் நூறு மில்லியன் கணக்கானவர்கள் மீது கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி வரும் பேரழிவுகரமான பாதிப்புகளை ஒரு சித்திரம் போல எடுத்துக் காட்டுகிறது, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்குள் திரும்புவதால் இப்போது இது இன்னும் மோசமடைந்து வருகிறது.

அந்த அறிக்கையின்படி, இந்தப் பெருந்தொற்று பல தசாப்தங்களில் இல்லாத விதத்தில் வறுமை குறைப்புக்கு ஒரு மிகப் பெரிய அடியைக் கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 1.90 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்களாக வரையறுக்கப்படும் 'அதீத வறுமை'க்குள் தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து, மொத்தமாக 700 மில்லியன், அல்லது 2020 உலக மக்கள்தொகையில் 9.3 சதவீதத்தை எட்டியுள்ளது.

செப்டம்பர் 21, 2022 புதன்கிழமையன்று, சோமாலியாவின் டோலோவின் புறநகர்ப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சோமாலியாவில் யாரும் நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு மோசமான வறட்சியின் மத்தியில் உள்ளது. வாரங்களுக்குள் ஒரு அரிய பஞ்ச அறிவிப்பு செய்யப்படலாம். காலநிலை மாற்றம் மற்றும் உக்ரேனில் போரின் வீழ்ச்சி ஆகியவை ஒரு பகுதியாகும். (AP Photo/Jerome Delay)

அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வால், வளரும் சந்தைகளது நாணயங்களின் கீழ்நோக்கிய வீழ்ச்சியாலும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ போராலும் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ், இது சரியாகும் என்பதற்கு சூழ்நிலை எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

இந்தாண்டு இறுதிக்குள், ஏறக்குறைய 685 மில்லியன் பேர் அதீத வறுமையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், இது இரண்டு தசாப்தங்களில் 2020ஐ அடுத்து 2022 ஐ வறுமைக் குறைப்புக்கான இரண்டாவது மோசமான ஆண்டாக ஆக்கியுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையின் பல பகுதிகளைப் போலவே, இந்தப் பெருந்தொற்றும் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப்போக்கை தூண்டிவிடுவதில் ஓர் உந்துசக்தியாக இருந்தது.

அந்த அறிக்கை குறிப்பிட்டது போல, அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், வறுமைக் குறைப்பு குறைந்திருந்தது மற்றும் 2020 வாக்கில் 'அதீத வறுமையை 2030 க்குள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய இலக்கில் இருந்து உலகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு விலகி இருந்தது.' இப்போதைய நிலைமையின்படி பார்த்தால் இந்த தசாப்த முடிவில் உலக மக்கள்தொகையில் 7 சதவீதம் பேர் — அதாவது, 574 மில்லியன் பேர் — அதீத வறுமையில் இருப்பார்கள் என்று அந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

இந்தப் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரே கூட, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் (47 சதவீதம் பேர்) வறுமையில் வாழ்ந்து வந்தார்கள், அவர்கள் நாளொன்றுக்கு 6.85 டாலருக்கும் குறைவாகச் சம்பாதித்ததாக வரையறுக்கப்பட்டது.

இந்தப் பெருந்தொற்றால் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் கணக்கானவர்களுடனும், தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் மில்லியன் கணக்கானவர்களுடனும், மேலும் நெடுங் கோவிட் நோயின் பலவீனப்படுத்தும் விளைவுகளை அனுபவிக்கும் மில்லியன் கணக்கானவர்களுடனும் சேர்ந்து, வறுமையின் அதிகரிப்பு என்பது, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் செய்த சமூகக் குற்றத்தின் அளவின் கூடுதல் வெளிப்பாடாகும், அவை மனிதர்களிடம் இருந்து வைரஸை அகற்ற தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்து வருகின்றன.

இதைச் செய்வது சாத்தியமில்லை என்பதால் அல்ல —இது மிகவும் சாத்தியமே என்பதைச் சீனாவின் அனுபவம் காட்டுகிறது— மாறாக பெடரலும் மத்திய வங்கிகளும் வழங்கிய ட்ரில்லியன் கணக்கான டாலர்களால் அசாதாரண மட்டங்களுக்கு ஊதிப் பெரிதாகி உள்ள பங்குச் சந்தைகள் மீது பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அந்த நடவடிக்கைகள் செய்யப்படுவதில்லை.

இப்போது நிதி மூலதனத்தின் முகமைகள் புதிய குற்றங்களைச் செய்து வருகின்றன. அவை நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கத்தை நசுக்கும் முயற்சியில், மத்திய வங்கிகள் ஒரு மந்தநிலையைத் தூண்டி விட வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

இதன் பாதிப்பை ஏற்கனவே உலகின் வறிய மக்கள் உணர்ந்து வருகிறார்கள். வளர்ச்சி குறைந்த நாடுகளின் நாணயங்கள் வியத்தகு அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன, இது உள்நாட்டு செலாவணியில் உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது.

கானாவின் அனுபவம் இந்த நிகழ்ச்சிப்போக்குக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். கடந்த ஓராண்டில் கச்சா எண்ணெய்யின் டாலர் மதிப்பு 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் அதன் நாணயமான சேடியின் (cedi) மதிப்பு அமெரிக்க அமெரிக்க டாலருக்கு எதிராக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, ஓராண்டுக்கு முன்னர் 475 சேடியாக இருந்த ஒரு பேரல் எண்ணெய் விலை இப்போது 900 சேடிக்கு மேல், அண்மித்து இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டது.

உணவு, எரிபொருள்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் பிற முக்கிய இறக்குமதிகளில் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் இந்த அனுபவமே மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், பல நாடுகள் அரசு துறைகளுக்கும் சர்வதேச நிதிய மூலதனத்திற்கும் கொடுக்க வேண்டிய கடன்கள் விஷயத்தில் திவாலாகும் விளிம்பில் உள்ளன. குறைந்தபட்சம் 10 நாடுகளின் கடன், ஏற்கனவே அதீத அழுத்தத்தில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன், இன்னும் பல நாடுகளும் இதையே பின்தொடரக் கூடும்.

ஏற்கனவே திவாலாகி உள்ள இலங்கை சர்வதேச நிதி மூலதன கழுகுகளுக்குப் பணம் செலுத்துவதற்காக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு முழு அளவிலான தாக்குதலுக்கு களம் அமைத்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிடும் 'மறுசீரமைப்பு' திட்டங்கள் என்பவை, இலங்கையின் அனுபவம் உலகெங்கிலும் விரிவாக்கப்படுவதையே அர்த்தப்படுத்துகின்றன.

ஏழைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கு உலக வங்கி அழைப்பு விடுக்கிறது, ஆனால் அரசாங்கங்களுக்கு அப்படி எதுவும் செய்ய விருப்பமில்லை என்பது அதற்கு நன்கு தெரியும்.

உண்மையில், அமெரிக்க பெடரல் உயர்த்தி வரும் வட்டி விகித உயர்வுகள் உலகையே மந்தநிலைக்குள் தள்ளி வருகின்றன, இதை, உலக வங்கி ஏற்கனவே, உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏராளமான பொருளாதார நிபுணர்களுடன் சேர்ந்து ஒப்புக் கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த வாரம் வாஷிங்டனில் நடத்தப்பட உள்ள அதன் அரையாண்டுக் கூட்டத்தில், நான்காவது முறையாக மீண்டும் உலகளாவிய வளர்ச்சி மீதான அதன் முன்கணிப்பை மாற்ற உள்ளது, இதை அந்த அமைப்பின் மேலாண்மை இயக்குனர் Kristalina Georgieva நேற்றைய ஓர் உரையில் சுட்டிக் காட்டினார்.

உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் நாடுகள், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் சரிவை அனுபவிக்கும் என்பதோடு, வளர்ச்சி இருக்கும் இடங்களிலும் கூட, “நிஜமான வருமானங்கள் சுருங்குவதாலும் விலைவாசி உயர்வுகளாலும், இது மந்தநிலையைப் போல உணரச் செய்யும்' என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது.

இப்போதிருந்து 2026 வரையில் உலகளாவிய உற்பத்தியில் மொத்த இழப்பு சுமார் 4 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இது ஜேர்மன் பொருளாதாரத்தின் அளவாகும் — உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப் பெரிய பின்னடைவாகும்,' என்று கூறிய அவர், 'இது இன்னும் மோசமடையலாம்,' என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சர்வதேச நாணய நிதியத் தலைவர் அவரது கருத்துக்களைக் கூற விரும்பவில்லை என்றாலும், அவரது கருத்துக்கள் உலக முதலாளித்துவ பொருளாதார ஸ்திரத்தன்மையின் பாதுகாவலர்களாக கூறிக் கொள்பவர்கள் பின்பற்றும் இந்தக் கொள்கைகள் மீது, எல்லாவற்றுக்கும் மேலாக கோவிட் சம்பந்தமாகப் பின்பற்றப்படும் கொள்கை மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும்.

2021 இல் 6.1 சதவீத வளர்ச்சிக்குப் பின்னர், 'சர்வதேச நாணய நிதியம் உட்பட, பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், மீட்சி தொடரும், பணவீக்கம் விரைவில் குறையும் என்று நினைத்தோம் — பெரும்பாலும் ஏனென்றால் தடுப்பூசிகள் விநியோக தரப்பில் உள்ள இடையூறுகளைக் கட்டுப்படுத்தி உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க அனுமதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இது நடக்கவில்லை,” என்றவர் தெரிவித்தார்.

உக்ரேன் போர் உட்பட, பல அதிர்ச்சிகள், 'பொருளாதார சித்திரத்தை முழுவதுமாக மாற்றிவிட்டன' என்பதோடு, 'பணவீக்கம் குறைவதற்குப் பதிலாக, இன்னும் பலமாக அதிகரித்துள்ளது.”

ஆனால் கோவிட் தொடர்பான கொள்கைகள் ஒரு பேரழிவை உருவாக்கி உள்ள நிலையில், புதிய பேரழிவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வட்டி விகித உயர்வுகளை ஆமோதித்து, Georgieva கூறுகையில், 'போதுமான அளவு இறுக்கிப் பிடிக்காவிட்டால்' அது பணவீக்கத்தை 'நங்கூரத்தில் இருந்து கழற்றி விட்டு, இன்னும் அதிகரிக்க' செய்யும் என்றார், அதாவது தொழிலாள வர்க்கம் அதன் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்கள் மூலமாக வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க போராடி வரும் நிலைமையைக் குறித்து இது ஆளும் வட்டாரங்களுக்கும் அவற்றின் பொருளாதார அமைப்புகளுக்கும் வழங்கப்படும் குறியீட்டுச் சொற்களாகும்.

அவரே ஒப்புக் கொண்டதைப் போல, இந்த இயக்கத்தை ஒடுக்குவது 'பல பொருளாதாரங்களை நீண்ட மந்தநிலைக்குள் தள்ளும்' என்றாலும் கூட, இந்த இயக்கத்தை ஒடுக்குவது தான் நிதிய உயரடுக்கின் முதல் முன்னுரிமையாக உள்ளது.

உலக வங்கி அறிக்கையும் இப்போது கட்டவிழ்ந்து வரும் கூடுதலான சீரழிவுகளும், தொழிலாள வர்க்கம் உடனடியாக எதிர்கொள்ளும் நிலைமையைக் குறித்தும் மற்றும் ஏற்கனவே அபிவிருத்தி அடைந்து வரும் போராட்டங்களின் இயல்பைக் குறித்தும் தெளிவாக மதிப்பாய்வு செய்து முடிவெடுப்பதற்கும் உரிய சந்தர்ப்பமாக இருக்க வேண்டும்.

உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவின் அபிவிருத்திகள், குறிப்பாக முக்கியமானவை. பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னர், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களுக்குப் பின்னால் உள்ள இன்னும் மில்லியன் கணக்கானவர்களுடன், போராட்டத்தில் இறங்கி வருகிறார்கள், அவர்கள் அதிகரித்தளவில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இரண்டு எதிரெதிர் வேலைத்திட்டங்கள் மோதும் போக்கில் உள்ளன. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரமோ, மனித வாழ்க்கை மற்றும் பொருளாதார சீரழிவுகளில் என்ன விலை கொடுத்தாலும், இலாபத்திற்கான முனைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரமோ, அதன் உழைப்பால் உருவாக்கி உள்ள பரந்த பொருளாதார வளங்களை மனித நல்வாழ்வை முன்னெடுப்பதற்காக பயன்படுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளது. இங்கே நடுநிலையான களமோ அல்லது சீர்திருத்த பாதையோ இல்லை. முதலாளித்துவ சமூகத்தின் இரண்டு பிரதான வர்க்கங்களின் சடரீதியான நலன்கள் சமரசத்திற்கு இடமின்றி எதிர் எதிராக உள்ளன.

உலகப் பொருளாதாரத்தின் சோசலிச மாற்றத்திற்காக அதிகாரத்தை கைப்பற்ற, அனைத்து முதலாளித்துவ அமைப்புகளுக்கு எதிராக, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக, ஓர் ஐக்கியப்பட்ட சர்வதேச அரசியல் போராட்டத்தை நடத்துவதன் மூலமாக மட்டுமே, உலக மக்கள்தொகையில் பாரிய பெருந்திரளான தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நலன்களைக் கைவரப் பெற முடியும்.

உலக முதலாளித்துவம் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பேரழிவில் மூழ்குகின்ற வேளையில், இதை அடைவதற்கான முன்நிபந்தனை என்னவென்றால், இப்போது எழுந்து வரும் போராட்டங்களுக்கு அவசியமான தலைமை வழங்க, சோசலிச புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டி எழுப்புவதாகும்.

Loading