இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
செப்டம்பர் 22 அன்று, வடக்கு மீனவர் நடவடிக்கை குழு (வ.மீ.ந.கு), சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவுடன் வெற்றிகரமான கூட்டமொன்றை ஊர்காவற்றுறையில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், பெண்கள் உட்பட மீனவர்கள் மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்களுமாக, சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். வடக்கு மீனவர் நடவடிக்கை குழு மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்கள் இந்தக் கூட்டத்தை கட்டியெழுப்புவதற்காக ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பல நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாண மாநகரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறை தீவானது, 5 கிலோமீட்டர் நீளமான கடல்வழிப் பாலத்தினால் யாழ்ப்பாண நிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்துப் பகுதிகளைப் போலவே, ஊர்காவற்துறையும் 2009 மே மாதம் கொடூரமான இரத்தக்களரி மூலம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 26 ஆண்டுகால இனவாதப் போரினால் பாதிக்கப்பட்டது.
பருத்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, தம்பாட்டி ஆகிய கிராமங்கள் அங்குள்ள மீனவ கிராமங்களாகும். இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. உள்நாட்டுப் போரின் போது, தற்போதைய இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) உதவியுடன், இலங்கை கடற்படையின் அடக்குமுறையை இந்த மக்கள் எதிர்கொண்டனர். அப்போது இந்த கட்சி, துணை இராணுவமாக செயல்பட்டது. இப்போதும் கூட, இலங்கை கடற்படையினர் ஊர்காவற்துறையில் வாழும் மீனவர்கள் மற்றும் பிற மக்களையும் கண்காணித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த ஊர்காவற்துறையில், போரின் போது ஏற்பட்ட ஏனைய அழிவுகளைத் தவிர பலர் இறந்தும் காணாமலும் போயினர். அவர்களில், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி, புங்குடுதீவில் இருந்து வீடு திரும்பும் போது வேலணையில் காணாமல்போயினர். இருவரும் மீனவர்களே.
மீனவர் கூட்டத்திற்கு, வடமாகாண மீனவர் நடவடிக்கை குழுவின் தலைவர் இராசேந்திரம் சுதர்சன் தலைமை தாங்கினார். நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர் கூறியதாவது: “மீனவர்களாகிய நாங்களும், பொருளாதார நெருக்கடியால் நாட்டில் உள்ள மற்ற உழைக்கும் மக்களைப் போலவே பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் பட்டினியை எதிர்கொள்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடமாகாண மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலை நிறுத்தியுள்ளனர்.
அரசாங்கம், மண்ணெண்ணெய் உட்பட எரிபொருட்களை போதியளவு எமக்கு வழங்கவில்லை, இவ்வாறான நிலையில், நாம், எமது மீன்பிடி நடவடிக்கைகளை எவ்வாறு நிர்வகிப்பது ? என அவர் கேட்டார். அவர் மேலும் கூறியதாவது: “இலாப நோக்கத்தினை அடிப்டையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையினாலேயே இந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ முறையை ஒழித்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர நாம் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாடு முழுவதும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். ஊர்காவற்துறையில் நடவடிக்கைக் குழுவை அமைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு மீனவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி, இந்த போராட்டத்துக்காக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழிகாட்டுகிறது.”
வட மாகாண மீனவர் நடவடிக்கை குழுவின் செயலாளர் இராஜரத்தினம் திருஞானவேல் கூறியதாவது: “மீனவர்களின் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு சத்தான உணவை கொடுக்க எம்மால் முடியாதுள்ளது. அதிக விலை காரணமாக பிஸ்கட், பழங்கள் மற்றும் பால் மாவைக் கூட வாங்க முடியவில்லை.
அவர் மேலும் கூறியதாவது: “இனவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 வருடங்களுக்குப் பின்னரும், வடக்கில் உள்ள மீனவர்கள் மீதான கடற்படையின் அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த தாக்குதல்கள் பற்றி, சகல தமிழ்க்கட்சிகள் மற்றும் மீனவ சங்கங்களும் அமைதி காக்கின்றன. நாங்கள், நாட்டில் உள்ள சகல மீனவர்களுடனும் மற்றும் தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட வேண்டும்.” என்றார்
இந்த உரைகளைத் தொடர்ந்து, கூட்டத்தில் வடமாகாண மீனவர் நடவடிக்கை குழுவினால் வெளியிடப்பட்ட “வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மீனவர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பு” என்ற தலைப்பிலான அறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது சம்பந்தமான நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதால் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியது. அரசாங்கம் புதிய சுற்று கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதோடு வெகுஜனப் போராட்டங்களை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற ஒடுக்குமுறை சட்டங்களையும் பயன்படுத்துகின்றது.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட இளம் மீனவர் அ. சாந்தராஜ், “இந்த அறிக்கை, எங்கள் பிரச்சனைகளை சரியாக விளங்கப்படுத்தியுள்ளது. அதில், பொய்யான வாக்குறுதிகள் எதுவும் இல்லை” என்றார்
அரசு எந்த வகையான மீன்பிடி முறையை தடை செய்துள்ளது என்பது பற்றி மீனவர்களுக்கு தெரியாது, என கூட்டத்தில் பேசிய இ. ராஜன் தெரிவித்தார். “எங்கள் மீனவர்கள், கடைகளில் கிடைக்கும் உபகரணங்களை வாங்கி மீன்பிடி வலைகளை தயார் செய்கின்றனர். எவ்வாறாயினும், சில சமயங்களில் மீன்பிடிக்கும்போது, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி மீனவர்களை கடற்படையினர் கைது செய்து, தாக்குவதும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும் நடக்கிறது. 340 ரூபாய் விற்கப்படும் மண்ணெண்ணெயின் உயர்ந்த விலை காரணமாக எம்மால் தொழில்செய்ய முடியவில்லை. இந்த நிலமைக்கு மத்தியில், எங்களின் மீன்பிடித் தொழிலை தொடர முடியாது” என்றார்.
மற்றொரு மீனவர் கூறுகையில், “இந்த அறிக்கை இந்திய மீனவர்கள் குறித்த எங்களின் எண்ணத்தை மாற்றியுள்ளது. இந்திய மீனவர்கள் எங்கள் சகோதரர்கள் என்று விளக்குகிறீர்கள். நாங்கள் இரண்டு பகுதி மீனவர்களும் இலாப நோக்கத்துடன் கூடிய பெரு நிறுவன மீன்பிடி முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால், தமிழகத்திலிருந்து வரும் அப்பாவி ஏழை மீன்பிடி தொழிலாளர்களையே கடற்படை கைது செய்கிறது,” என்றார்
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் ப. திருஞானசம்பந்தர் கூட்டத்தில் பேசுகையில், இலங்கையின் பொருளாதாரக் கொந்தளிப்பு, உலகப் பொருளாதார நெருக்கடியின் ஒரு பாகமாகும், என்றார். “உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் என்பனவே இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன. பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு எதிராக நாம் போராட வேண்டும். அதற்காக உழைக்கும் வர்க்கத்தினரை தயார்படுத்தி அவர்களுக்கு அரசியல் ரீதியிலான கல்வியறிவை ஊட்ட வேண்டும். உலகப் போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாகி, வேலைத்தளங்கள் மற்றும் கிராமங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று, தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என அவர் மேலும் கூறினார்
இறுதியாக மீனவர்கள், ஊர்காவற்துறை மீனவர் நடவடிக்கை குழுவை அமைத்தனர். அவர்கள் நடவடிக்கை குழுவின் நிர்வாகிகளை தேர்வு செய்தனர். நடவடிக்கைக் குழுவின் தலைவராக நாகராஜா கோடீஸ்வரனும், நிர்வாகக் குழுவாக ஒரு பெண் உட்பட 6 மீனவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். சோ.ச.க.யின் ஊக்கமான ஆதரவுடன், நாடு பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் மீனவர்களுடனும், ஏனைய தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டும், என இந்தக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
பிரச்சாரத்தின் போது பேசிய பருத்தியடைப்பினைச் சேர்ந்த உதயசேகரன் விஜயகுமாரி (60). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அவர்களில் ஒரு மகன் மன்னார் மூணாம்பிட்டி என்னும் இடத்தில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார். அவர் அனுப்பும் சிறிய தொகை பணத்திலேயே கணவனும் மனைவியும் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர் கூறியதாவது: “நோயாளியான எனது கணவர் 6 வருடங்களாக வேலையில்லாமல் இருக்கிறார். முன்னதாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். எனது மகன் சொந்தமாக மீன்பிடி தொழிலை நடத்தினார், ஆனால் மீன்பிடி உபகரணங்கள் பழுதடைந்துவிட்டன. புதிய உபகரணங்கள் கட்டாயம் தயார் செய்ய வேண்டும், அதற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் தான், பங்கு மீன் பிடிக்கும் தொழிலில் வேறு ஒருவருடன் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கும் குழந்தைகள் உள்ளனர். அவர் சம்பாதித்து வரும் சொற்ப வருமானத்திலேயே, மகன் எமக்கும் சாப்பாடு கொடுத்து வருகிறார்.'
அன்று, ஒரு கிலோ அரிசி வாங்கி இரண்டு நாட்களுக்கு சமைப்பதற்கு அந்தப் பெண் திட்டமிட்டிருந்தார். அவர்கள் போதியளவு உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 'நாங்கள் மீனவர் குடும்பமாக இருந்தாலும் எங்களிடம் மீன் கறி இல்லை. வயோதிப காலத்தில், நாம் நோய்களால் பாதிக்கப்படுகிறோம். எங்களைப் போன்ற மக்களுக்கு உதவுவதற்கு, இங்கு யாரும் இல்லை. தமிழ் கட்சிகளோ அல்லது அரசாங்கமோ எமக்கு எந்த வகையிலும் உதவ முன்வரவில்லை” என்று விஜயகுமாரி மேலும் கூறினார்.
அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த கோணேஸ்வரன் என்ற மீனவரின் மனைவி கூறியதாவது: “எனது கணவரும் ஒரு மீனவர், ஒரு நாளைக்கு அவர் மீன்பிடிக்கச் செல்வதற்காக 50 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. அரசாங்கம் எமக்கு 7 அல்லது 8 லிட்டர் மட்டுமே கொடுக்கிறார்கள். இது போதுமானது அல்ல, மிகுதி லிட்டர்களை எங்கிருந்து நாம் வாங்கலாம்? மண்ணெண்ணெயின் விலை உயர்வினை எங்களால் தாங்க முடியவில்லை. 50 லிட்டர் வாங்க வேண்டுமெனில் நாங்கள் 17,000 ரூபாய் செலவழிக்க வேண்டும்.
“போதிய வருமானம் கிடைக்காததால், என் கணவர் மீன்பிடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது, சிறு சிறு வேலைகளை செய்து வருகிறார். ஐந்து பேர் கொண்ட எமது குடும்பத்தினைப் பராமரிப்தற்கு போதிய வருமான இல்லாமல் நாங்கள் தவித்து வருகின்றோம். எமது பிள்ளைகளுக்கு பால்மா கொடுப்பதை நிறுத்தியுள்ளோம். இனி வரும் நாட்களில் உணவு இல்லாமல் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் நாங்கள் வாழ்கிறோம்.”
நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ். பரலோகநாதன், மீன்பிடித் தொழில் செய்கிறார். மண்ணெண்ணெய் பிரச்சினையால் மீன்பிடிப்பதையும் நிறுத்திவிட்டார். பொருளாதார நெருக்கடி குறித்து அவர் பேசுகையில், “போர் காலத்தை விட, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். உள்நாட்டுப் போரின் போது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மீது, இலங்கை அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இப்போது, முழு நாடும் நெருக்கடியை எதிர்கொள்வதால், நாட்டின் பிற பகுதியிலிருந்து எங்களால் உதவி பெற முடியாதுள்ளது,” என்றார்.
நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கான எமது அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், 'எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு எங்களுக்கு ஒரு அமைப்பு தேவை. இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. தமிழ் முதலாளித்துவ கட்சிகளால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் தங்கள் சொந்த சலுகைகளுக்காக வேலை செய்கிறார்கள்,” என்றார்.
