நெத்தனியாஹூ, இனவாதிகள் மற்றும் பாசிசவாதிகளின் இஸ்ரேலிய அரசாங்கம் அமைக்க உள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டிஷ் ஆணையின் கீழ் நிர்வகிக்கப்படும் பாலஸ்தீன நிலத்தின் ஒரு பகுதியில் யூதர்களுக்கான தாயகத்தை நிறுவ ஐ.நா. சபை வாக்களித்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பெஞ்சமின் நெத்தனியாஹூ, 120 இடங்கள் கொண்ட இஸ்ரேலிய சட்டமன்றம் நெசட்டில் இப்போது மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உள்ள பாசிசவாத மற்றும் இனவாத கட்சியான மத சியோனிசக் கட்சி (Religious Zionism) உட்பட அந்நாட்டின் மிகவும் பிற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய ஓர் அரசாங்கத்தை அமைக்க உள்ளார்.

முன்னாள் இஸ்ரேலிய பிரதம மந்திரியும் லிகுட் கட்சியின் தலைவருமான பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்குப் பிறகு, ஜெருசலேமில் உள்ள அவரது கட்சியின் தலைமையகத்தில், நவம்பர் 2, 2022 புதன்கிழமை [AP Photo/Tsafrir Abayov]

இது சியோனிச அரசின் நெருக்கடி மற்றும் வலதுசாரிப் பாதையில் ஒரு வரலாற்று மைல்கல் ஆகும்.

நெத்தனியாஹூவின் அரசாங்கம் யூத மேலாதிக்கத்திற்குச் சூளுரைத்துள்ள மத மற்றும் அதிதீவிர தேசியவாத கட்சிகளின் இனவெறியர்களால் அமைக்கப்படும் என்பதோடு, அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நிறவெறிக்கு ஒத்ததாக இருக்கும். பாலஸ்தீனர்கள் மீதான அவர்களின் கொடூரமான தாக்குதல்கள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலின் எல்லைகளில் இருந்தும், ஜூன் 1967 அரபு-இஸ்ரேல் போருக்குப் பின்னர், சர்வதேச சட்டம் மற்றும் எண்ணற்ற ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானங்களை மீறி, அது சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலத்தில் இருந்தும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உயர் பதவிக்கான வரிசையில் உள்ள ஒரு வேட்பாளர், மத சியோனிச கட்சிக்குள் உள்ள யூத சக்தி (Jewish Power) அணியின் தலைவரான இடாமர் பென்-க்விர் ஆவார். பாலஸ்தீனர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையைத் தூண்டி விடுபவரும், 'அரேபியர்களுக்கு மரணம்' என்று கோஷமிடும் ஒரு தீவிர அரபு-விரோதியான பென்-க்விர், வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்காக டஜன் கணக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

1994 இல் ஹெப்ரோனில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 29 பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்து 125 பேரைக் காயப்படுத்திய இஸ்ரேலிய-அமெரிக்க பயங்கரவாதி பருச் கோல்ட்ஸ்டைனின் உருவப்படத்தை அவரின் முகப்பு அறையில் வைத்திருந்தார், அது தேசபக்தர்களின் படுகொலைக் குகை (Cave of the Patriarchs massacre) என்று அறியப்பட்டது. ஒரு சிறு பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக அவர் பிரதம மந்திரி யிட்சாக் இராபினை ஒருபோதும் மன்னிக்கவில்லை, 1995 இல் இராபின் கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், இராபினின் சொகுசுக் காரில் இருந்து ஓர் அலங்காரப் பொருளை அவர் திருடிய பின்னர், 'நாங்கள் அவர் கார் வரை வந்துவிட்டோம், அவரையும் வந்தடைவோம்,' என்று கூறினார்.

பென்-க்விர் அமெரிக்காவில் பிறந்த பாசிசவாதி மீர் கஹானேவின் சீடராகத் தன்னை அறிவித்துக் கொள்கிறார், மீர் கஹானேயின் இயக்கம் இஸ்ரேலில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட இயக்கமாகும்.

மேற்குப் படுகையில் இஸ்ரேலிய ஆட்சி அமைப்பது, இஸ்ரேலின் 'விசுவாசமற்ற' பாலஸ்தீன பிரஜைகள் என்று அது குறிப்பிடுபவர்களை வெளியேற்றுவது, இவர்கள் அந்நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவீதம் உள்ளனர், யூத ஆலயம் அமைப்பதற்கு வழி செய்யும் விதத்தில் அல்-அக்சா மசூதியை இடிப்பது, நீதித்துறையை அழிப்பது ஆகியவை மத சியோனிசக் கட்சியின் திட்டநிரலில் உள்ளடங்கி உள்ளன.

கடந்த மாதம், ஜெருசலேம் போஸ்டின் தலைமை ஆசிரியர் யாகோவ் காட்ஸ், பென்-க்விரை 'ஓர் அமெரிக்க வெள்ளையின மேலாதிக்கவாதி மற்றும் ஓர் ஐரோப்பிய பாசிசவாதியின் நவீன இஸ்ரேலிய பதிப்பு' என்று அழைத்தார். அவரை உள்ளடக்கிய ஓர் அரசாங்கம், 'ஒரு பாசிச அரசின் வரையறைகளை எடுக்கும்' என்று காட்ஸ் எச்சரித்தார்.

பைடென் நிர்வாகத்திற்கு நெத்தனியாஹூ உடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் ஜெயித்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. வியாழனன்று, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் டாம் நைட்ஸ் நெத்தனியாஹூவை அழைத்து பேசியதுடன், “பெஞ்சமினுடன் இப்போது நல்ல தொலைபேசி உரையாடல் இருந்தது. அவர் ஜெயித்ததற்காக நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு,” இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள 'உடைக்க முடியாத பிணைப்பைத் தக்க வைக்க இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவரிடம் கூறினேன்,” என்று பின்னர் உடனே பின்வருமாறு ட்வீட் செய்தார்.

ஐரோப்பாவின் தீவிர-வலது தலைவர்கள், அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததை உடனடியாக வரவேற்றனர்.

உக்ரேனிய ஜனாதிபதி வோலொடிமிர் செலென்ஸ்கி, வரவிருக்கும் அரசாங்கம் 'ஒத்துழைப்பில் ஒரு புதிய பக்கத்தை' திறக்குமென நம்புவதாக ட்வீட் செய்து, நெத்தனியாஹூவை வாழ்த்தினார், இது முந்தைய அரசாங்கம் ரஷ்யாவுடனான உறவுகளைப் பேணும் முயற்சியில் இஸ்ரேலின் Iron Dome தொழில்நுட்பம் மற்றும் பிற அதிநவீன தளவாட அமைப்புகளை அனுப்ப மறுத்ததைக் குறித்த ஒரு குறிப்பாகும்.

வலதுசாரி பிற்போக்குத்தனத்தின் மற்ற அரண்களான, ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஓர்பன், இத்தாலிய பிரதம மந்திரி ஜார்ஜியா மெலன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இதே போல நெத்தனியாஹூவை வாழ்த்துவதில் நேரத்தைத் தவற விடவில்லை.

யூத மேலாதிக்கம் மற்றும் பாசிச பயங்கரவாத அரசியலுக்கு இஸ்ரேல் பகிரங்கமாக திரும்புவது, இஸ்ரேலிய அரசுக்கு எதிரான எதிர்ப்பை யூத-எதிர்ப்புவாதத்தைக் கொண்டு சமன்படுத்தும் முயற்சிகளை முற்றிலுமாக அம்பலப்படுத்துகிறது. உண்மையில், இன, மத மற்றும் மொழி மேலாதிக்க தனித்துவக் கருத்துருக்களின் அடிப்படையில், இனச் சுத்திகரிப்புத் திட்டத்தைத் தழுவுவதன் மூலமாகவும், இந்தத் திட்டத்தை யூத மக்களுடன் அடையாளப்படுத்துவதன் மூலமாகவும், இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் சர்வதேச அளவில் யூத-எதிர்ப்பு ஆலையில் அதே அரைத்த மாவையே அரைக்க வாய்ப்பு வழங்குகிறது.

இந்த வாரம், பிட்ஸ்பர்க்கில் 240 க்கும் அதிகமான யூத-அமெரிக்க வாக்காளர்கள், 2020 தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக மாற்ற வாக்களித்த 100 க்கும் அதிகமான குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு இருப்பதற்காக, நெத்தனியாஹூ மற்றும் டொனால்ட் ட்ரம்ப் உடன் நெருக்கமாக அணி சேர்ந்துள்ள அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழுவைக் (AIPAC) கண்டிக்கும் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர், பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள 'ட்ரீ ஆஃப் லைஃப் இல் உள்ள மூன்று ஜெப ஆலயங்களில் பதினொரு உறுப்பினர்களைக் கொலை செய்ய தூண்டிய யூத-விரோத 'மாபெரும் மீளமைப்பு' (Great Replacement) சதியை ஊக்குவித்துள்ள சட்ட வல்லுனர்களும்' அந்த வேட்பாளர்ளில் உள்ளடங்கி உள்ளனர்.

6 மில்லியன் யூதர்களை அழிக்க ஜேர்மன் பாசிசத்தால் பயன்படுத்தப்பட்ட அதே வகையான 'இனமும் இரத்தமும்' தேசியவாதம் இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படுகிறது என்பது வரலாற்றின் ஒரு சோகமான எதிர்முரணாகும், அதேவேளையில் யூத மக்களையே இலக்கு வைக்க 'வெளியில் இருந்து வந்தவர்கள்' என்றும் 'பன்நோக்குத்தன்மை கொண்டவர்கள்' என்றும் மீண்டும் ஒருமுறை வெறுப்பைத் தூண்ட முயல்பவர்கள் இதைச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

நெத்தனியாஹூ இஸ்ரேலிய செல்வந்த சீமான்கள் சார்பாக அரசியல் அதிருப்தியை ஒடுக்கும் அதேவேளையில், பாலஸ்தீனர்கள் மீது முடுக்கி விடப்பட்டுள்ள தாக்குதல்கள், இஸ்ரேலுக்கு உள்ளே, யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் என அனைத்து தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெருகிய தாக்குதலுடன் சேர்ந்தே நடத்தப்படும்.

இதை எப்படி விளக்குவது? நிச்சயமாக, பெயரளவிலான எதிர்ப்பு திவாலாகி உள்ளது, இது ஒரு சர்வதேச நிகழ்வுபோக்காக உள்ளது. முன்னேறிய நாடுகளின் OECD குழுவில் அதிகபட்சமாக உள்ள சமூக சமத்துவமின்மையைப் போக்க பென்னட்-லாபிட் தலைமையிலான “முற்போக்கு” சக்திகளின் 'மாற்றத்திற்கான அரசாங்கத்தால்' எந்த மாற்றீட்டையும் வழங்க முடியவில்லை என்பதை நெத்தனியாஹூ மூலதனமாக்கிக் கொள்ள முடிந்தது. அவ்வாறு முடியாமல் போனது வர்க்க நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது, அது யூத மற்றும் பாலஸ்தீன தொழிலாள வர்க்கத்தை விட இஸ்ரேலிய செல்வந்தத் தட்டுக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

இன்னும் அடிப்படையில், இவ்வாறு பகிரங்கமாக இனவாதக் கொள்கைகளுக்குத் திரும்புவது சியோனிச அரசின் கடுமையான நெருக்கடி மற்றும் சியோனிச தர்க்கம் ஆகிய இரண்டு முக்கிய காரணிகளில் வேரூன்றி உள்ளது.

1947 இல் நான்காம் அகிலம் விளக்கியதைப் போல, ஏற்கனவே அங்கே வாழும் பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்வதன் அடிப்படையிலும் மற்றும் முதலாளித்துவ அரசு அமைப்பதன் அடிப்படையிலும் யூதர்களுக்கு ஒரு தாயகம் ஏற்படுத்துவது எப்போதுமே ஒரு பிற்போக்குத்தனமான கற்பனைவாதமாகும்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்ததால், அத்தகைய ஒரு திட்டத்தை மேற்கொள்ள தேவையான பொருளாதார கொள்கைகள் சிறிதளவு கூட இல்லாததால், அந்த அரசு வலதுசாரி குடியேற்றவாசிகள் மற்றும் தீவிர தேசியவாத வெறியர்களை அதிகமாக சார்ந்து நின்றது, அவர்கள் இஸ்ரேலுக்குள் பாசிசவாத போக்குகள் உருவாவதற்கு அடித்தளத்தை வழங்கினார்கள். வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக சமத்துவமின்மை மீது அதிகரித்து வரும் கோபத்தைப் பிற்போக்கு வழியில் திசைதிருப்ப தீவிர தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டது.

முற்போக்கு இயக்கங்களுடன் நீண்டகாலமாக தொடர்பு கொண்டிருப்பவர்களும், வரலாற்றின் மிகவும் மோசமான குற்றங்களுக்கும் ஆளான யூத மக்களில் ஒரு பகுதியினர் பாசிசவாத கட்சிகள் என்று மட்டுமே கூறக்கூடிய அரசியல் கட்சிகளை ஆதரித்து வருகின்றனர். இது நீண்ட காலத்திற்கு முன்னர் மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான நுழைவுத்தளமாக இருந்த இஸ்ரேலில் நிலவும் நச்சார்ந்த அரசியல் சூழலின் விளைவாகும்.

எவ்வாறாயினும், இந்த பிற்போக்குத்தனமான கண்ணோட்டம் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் இந்த பயங்கரமான மோதலில் இருந்து வெளியேறவும் பாலஸ்தீனர்கள் உடன் ஒரு சமாதானப் பாதைக்குத் திரும்பவும் மீண்டும் மீண்டும் ஒரு வழி காண விழைந்தது. ஆனால் அவ்வாறு செய்வது என்பது முந்தைய சகாப்தத்தில் யூத தொழிலாளர்களும் புத்திஜீவிகளும் வகித்த மத்திய பாத்திரம் போல சர்வதேசியவாத சோசலிச கலாச்சாரத்தைப் புதுப்பிப்பதாக இருக்க வேண்டும்.

டிசம்பர் 1938 லேயே, லியோன் ட்ரொட்ஸ்கி ஆழமாக முன்கணித்து பின்வருமாறு எழுதினார்:

எதிர்கால உலகப் போர் வெடிப்பில் யூதர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை சிரமமின்றி கற்பனை செய்ய முடியும். ஆனால் போர் இல்லாவிட்டாலும் கூட, அடுத்தக்கட்ட உலகப் பிற்போக்குத்தனத்தின் அபிவிருத்தி யூதர்களை உடல்ரீதியாக அழிப்பதை உறுதியாகக் குறிக்கிறது... இப்போதும் முன்னெப்போதையும் விட, யூத மக்களின் கதி — அவர்களின் அரசியல் கதி மட்டுமல்ல, அவர்களின் உடல்ரீதியான கதியும் கூட — பிரிக்க முடியாத வகையில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்துள்ளது. பிற்போக்குத்தனத்திற்கு எதிராக தொழிலாளர்களைத் துணிச்சலாக அணிதிரட்டுவது, தொழிலாளர் போர்ப் படைகளை உருவாக்குவது, பாசிச கும்பல்களை உடல்ரீதியில் நேரடியாக எதிர்ப்பது, ஒடுக்கப்பட்ட அனைவரின் தரப்பில் இருந்தும் தன்னம்பிக்கையை, செயல்பாடு மற்றும் துணிச்சலை அதிகரிப்பது ஆகியவை மட்டுமே சக்திகளின் உறவில் ஒரு மாற்றத்தைத் தூண்டி, உலகளாவிய பாசிச அலையை நிறுத்தி, மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்க முடியும். [மூலநகலில் வலியுறுத்தல் உள்ளது]

ஒன்றுபோல யூத மற்றும் அரபு தொழிலாளர்களின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்ட வடிவில் சியோனிச அரசு மற்றும் பிற்போக்கு அரபு முதலாளித்துவ ஆட்சிகளைத் தூக்கி எறிந்து, ஐக்கிய சோசலிச மத்தியக் கிழக்கு அரசுகளை உருவாக்குவதற்கான முன்னோக்கிய பாதையைக் காட்டும் வகையில், உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய எழுச்சி ஆரம்பித்து வருகிறது. இந்த முன்னோக்கிற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) போராடுகிறது. இதற்கு, முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்கான இந்தப் போராட்டத்தை நடத்த தேவைப்படும் அரசியல் தலைமையை வழங்க இஸ்ரேல் மற்றும் மத்தியக் கிழக்கில் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகும்.

Loading