தொழிலாள வர்க்கத்தின் ஆபத்தான நிலையும் ரஷ்யாவில் வெகுஜனங்களின் தீவிரமயமாக்கலுக்கான வாய்ப்புகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கான பல பொருளாதார முன்னறிவிப்புகள், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் எஞ்சிய மாதங்களில் ஏற்கனவே ஆபத்தான நிலையின் இருக்கும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த முன்னறிவிப்புகள், நாட்டின் கொந்தளிப்பான பொருளாதார நிலைமையை வலியுறுத்துகின்றன, இது புட்டின் ஆட்சி மீது அழுத்தத்தை அதிகரிப்பதுடன், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் பரவலான அணிதிரட்டலுக்கு களத்தை அமைக்கின்றது.

புதன்கிழமை, நவம்பர் 2, MBFinance எனப்படும் இணையவழி சந்தை பகுப்பாய்வு, முன்கணிப்பு வெளிவிடும் தளம், ரஷ்ய பொருளாதாரத்திற்கான குறுகிய, எட்டு நிமிட முன்னறிவிப்பை வெளியிட்டது. கட்டுரையின் ஆரம்பமே '2022-2023 இன் எஞ்சிய காலத்திற்கான பொருளாதார வல்லுநர்களினதும், ஆய்வாளர்களினதும் ஏமாற்றமளிக்கும் முன்னறிவிப்புகள்' பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.

'பல வல்லுனர்கள், எதிர்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான விரிவான, புதிய வரைவை ரஷ்யா மிக விரைவில் கொண்டு வராவிட்டால் ... நாடு உடனடி சிக்கலை எதிர்கொள்ளும் என்று வாதிடுகின்றனர். மிகப் பெரிய அவநம்பிக்கையாளர்கள், 90 களின் மோசமான நிலைமையான பரவலான வேலையின்மை மற்றும் வறுமையைப் போன்ற ஒரு சூழ்நிலையை காணக்கூடிய எதிர்காலத்தில் கணிக்கிறார்கள்' என்று கட்டுரையின் ஆசிரியர் இகோர் குஸ்நெட்சோவ் எழுதுகிறார்.

மக்கள் தொகையில் 3 சதவீதத்தினருக்கு மட்டுமே நிதி, பொருளாதாய பிரச்சினைகள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை கட்டுரை குறிப்பிடுகிறது. மீதமுள்ள 97 சதவீதம் அல்லது 140 மில்லியன் மக்கள் அப்பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கடுமையான நிதி சிக்கல்களை அனுபவிக்கின்றனர். இது முதலாளித்துவத்தின் முழு சாராம்சத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

ரஷ்யர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே குடியிருப்புக்கள் அல்லது வீடு தவிர்ந்த பெரும்பாலான பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும். முப்பத்தைந்து சதவீதத்தினரால் மின்சாதனங்களை வாங்க முடியவில்லை. மக்கள் தொகையில் இருபத்தி மூன்று சதவீதம் பேர் பட்டினியால் வாடுவதைத் தவிர்க்க மளிகைப் பொருட்களை வாங்க கூடியதாக உள்ளது. ஆனால் புதிய ஆடைகள் மற்றும் காலணிகளை அவர்களால் வாங்க முடியவில்லை.

ரஷ்யர்களில் எட்டு சதவிகிதத்தினர் உணவைக் கூட வாங்க முடியாமல் உள்ளனர். இது அவர்களை பசியால் இறக்கும் அல்லது கடனாளியாகும் உண்மையான ஆபத்தில் இருத்துகின்றது. அவர்களைப் பொறுத்தவரை, ஒரே தேர்வான மெதுவான மற்றும் வேதனையான கடன் வாழ்க்கை அல்லது பட்டினியால் வலிமிகுந்த மரணத்தை இது முன்வைக்கின்றது. இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்குள் ஏழை ரஷ்யர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் 60 சதவீத மக்கள் அல்லது சுமார் 87 மில்லியன் மக்கள் வறுமையின் விளிம்பில் உள்ளனர்.

கட்டுரை பொருளாதார நிபுணர் கொன்ஸ்டான்டின் செலியானினை மேற்கோளிடுகின்றது. அவரது கருத்துப்படி, மிகவும் அவநம்பிக்கையான முன்னறிவிப்பு மிக விரைவில் எதிர்காலத்தில் ரஷ்யாவின் பொருளாதாரத்தின் சரிவைக் காட்டிலும் குறைவானது எதுவுமில்லை எனத் தெரிவிக்கின்றது. செலியானின் கூற்றுப்படி, 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னர் ரஷ்யாவின் முழு வரலாற்றிலும் மிகப்பெரிய பொருளாதார சரிவை நாம் ஏற்கனவே காண்கின்றோம்.

இது ஒரு உண்மையாகும். இறுக்கமான மத்திய வங்கிக் கொள்கைகளால் உலகம் மந்தநிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரேன் மீதான புட்டின் படையெடுப்பிற்கான ஏகாதிபத்திய சக்திகளின் எதிர்வினையால் ரஷ்யா ஏற்கனவே அதன் சொந்த மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது. ரஷ்யா ஏற்கனவே இந்த மந்தநிலையை 'தப்பித்துவிட்டது' என்று நம்புவது ஆதீத நம்பிக்கையாகவே இருக்கும்.

அனைத்து பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், உலக சந்தைக்கு இன்னும் ரஷ்யா ஒரு முக்கியமான மூலப்பொருள் வினியோகத்தராக உள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி பொருளாதார உறவுகள் உண்மையில் மிகக் குறைந்த அளவிற்கு குறைந்துள்ளன, ஆனால் உலக அரங்கில் பல இடைத்தரகர்கள் உள்ளனர். உலக அளவில் ஒரு பெரிய கட்டுப்பாடற்ற வர்த்தக சந்தையும் உள்ளது. இது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றை விட குறைவான பங்கை வகிக்காதுள்ளதுடன், இதில் ரஷ்யா கணிசமான பங்கையும் கொண்டுள்ளது.

குஸ்நெட்சோவின் கட்டுரை, நுண் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் குறுகிய கால முன்கணிப்பு மையத்தின் (CMASTF) தலைவரான டிமிட்ரி பெலோசோவின் அறிக்கையைக் முன்கொண்டுவருகிறது. அந்த அறிக்கை ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மூன்று 'சாத்தியமான' பாதைகளை முன்வைக்கின்றது:

குஸ்நெட்சோவ் எழுதுகிறார்: 'முதல் பாதை சுயதன்னிறைவு. இந்த தேர்வில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் தொழில்துறையின் செயல்பாட்டிற்குத் தேவையானவை உட்பட உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை குறைப்பதாக இருந்தாலும், ரஷ்யா அதன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக உற்பத்தி செய்ய வேண்டும். இது நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். இது இந்த பாதையால் கணிசமாகக் குறைக்கப்படலாம். எதிரி நாடுகளுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதன் விளைவாக ரஷ்யா ஒரு 'போர் பொருளாதாரத்திற்கு' மாறினால் இந்த பாதை மட்டுமே சாத்தியமாகும்.

எனவே, ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான உக்ரேனில் மோதல் விரிவாக்கத்தின் போது இந்த தேர்வு சாத்தியமாக கருதப்படுகிறது. முதலாளித்துவப் போர்கள் எப்போதுமே உலக சந்தையில் இருந்து நாடுகளின் விலத்துதல், தொழில்துறை உற்பத்தியில் சரிவு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான சரிவு ஆகியவற்றுடன் சேர்ந்து இருப்பதால், இது நிஜமாகவே நிகழ வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நிலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் நிலையையும் தீவிரமாக அச்சுறுத்துகிறது.

சுயதன்னிறைவு விஷயத்தில், நாடு பல தசாப்தங்களாக பின்தள்ளப்படும். இத்தகைய தீவிரமான சரிவு, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் இதேபோன்ற தீவிரமான வெடிப்புக்கு மட்டுமே வழிவகுக்கும். இந்த வெடிப்பு நடக்குமா என்பது முக்கிய கேள்வியாக இருக்காது. ஆனால் தொழிலாள வர்க்கம் எந்த அளவிலான நனவுடன் இருக்கும் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சி எந்த அளவிற்கு அதன் மீது வெற்றிகரமாக ஆதிக்கத்தை செலுத்தும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

இரண்டாவது பாதை 'நிறுவனரீதியான மந்தநிலை'. கட்டுரையின் படி, இது பொருளாதார வளர்ச்சிக்கான மிகவும் சாத்தியமான பாதையாகும்.

'இதுதான் கடந்த 15 ஆண்டுகளாக இது உருவாகி வரும் நிலைமையாகும்: இதன் நோக்கம் முடிந்தவரை அதிக நுண்பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல், அவர்களின் செலுத்துமதிகளுக்கு நிதியளிப்பது' என்று கட்டுரையின் ஆசிரியர் எழுதுகிறார். 'இந்த சூழ்நிலையில், 2030 வரை வேலையின்மை 6% க்குள் அதிகமாக இருக்கும், ஊதியங்கள் மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிக்காது. அத்தகைய ஒரு முறையால், ரஷ்யா பின்வருவனவற்றை எதிர்கொள்ளும்: வாழ்க்கைத் தரம், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற குறிகாட்டிகளில், நாடு தவிர்க்க முடியாமல் உலகின் பிற பகுதிகளை விட பின்தங்கியிருக்கும். இது 1980களில் இருந்ததைப் போலவே 'பதிவுசெய்யப்படாததும், ஒழுங்கமைக்கப்படாததுமான மறைமுகமான பொருளாதாரம்' (‘gray economy’) அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்'.

1980 களின் இந்த 'மறைமுகமான பொருளாதாரம்' 1980 களின் நடுப்பகுதியில் ஒரு தீவிர அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்தது என்பதை வாசகர் நினைவுபடுத்த வேண்டும். இது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை கோர்பச்சேவின் 'பெரஸ்துரோய்கா' கொள்கைகளை ஏற்க கட்டாயப்படுத்தியது. இதன் மூலம் நெருக்கடியைத் தீர்க்க ஒரு எதிர்ப்புரட்சிகரமான அதாவது சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுசீரமைப்பு என்ற வழியை முன்மொழிந்தது.

முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு சோவியத் ஒன்றியத்தை கலைத்ததுடன் மற்றும் அதன் இடத்தில் 15 'சுதந்திர' முதலாளித்துவ குடியரசுகளை நிறுவியதுடன் முடிவடைந்தது. இதனூடாக உலக முதலாளித்துவ சந்தையின் மூலம் மேற்கு மற்றும் கிழக்கு மூலதனத்துடன் 'கூட்டுழைப்பு' திறக்கப்பட்டது. இந்த உடைவின் விளைவுகள் இன்றுவரை உணரப்படுகின்றன. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் அத்தகைய ஒரு விளைவாகும்.

எனவே, இந்தப் பொருளாதாரப் பாதை நடைமுறைக்குவரும் பட்சத்தில், முதலாளித்துவ ரஷ்யாவுக்கு கடுமையான அரசியல் நெருக்கடி காத்திருக்கிறது என்றே கூறலாம். புட்டினின் ஆட்சியைப் பொறுத்தவரை, இந்த நெருக்கடி ஆபத்தானது. மற்றொரு கேள்வி: புட்டினின் முதலாளித்துவ ஆட்சியை யார் பிரதியீடு செய்வது? முதலாளித்துவ சமூகத்தின் ஏனைய பாதுகாவலர்களா அல்லது அக்டோபர் புரட்சியின் கொள்கைகளில் நிற்கும் புரட்சிகர மார்க்சிஸ்டுகளா?

மூன்றாவதும் இறுதி சாத்தியமானதுமான பாதை 'வளர்ச்சிக்கான போராட்டமாகும்'. கட்டுரை இந்த பாதையை 'நிறுவனரீதியான மந்தநிலைக்கு' பின்னர் யதார்த்தமாகக்கூடிய இரண்டாவது பாதையாக முன்வைக்கிறது. இந்த இரண்டு பொருளாதார மூலோபாயங்களும் ரஷ்ய ஆளும் உயரடுக்கினரிடையே விவாதப் பொருளாக உள்ளன. இந்த உயரடுக்கு மேற்கிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும், அதாவது ரஷ்ய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் புயலை எப்படியாவது சமாளிக்க முயல்கிறது.

'அதிகாரிகளும் வணிகமும் ஒன்றிணைந்து செயல்படும்' என குஸ்நெட்சோவ் எழுதுகிறார். 'பொருளாதாரத்தில் அரசின் பங்கு அதிகரிக்கும், ஆனால் இலாபங்கள் தனியார் நிறுவனங்களில் கைகளில் இருக்கும். தொழில்நுட்பம் கடன் வாங்கப்பட வேண்டும், மேலும் அனைத்து வகையான சந்தைகளிலும் தீவிரமாக நுழைவதை உறுதி செய்ய வேண்டும். இந்த பாதை வேலையின்மை விகிதத்தை இயற்கையான 4-5%க்குள் வைத்திருக்க அனுமதிக்கும். மேலும் மக்கள் தொகையின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5-3.7% அதிகரிக்கும். இந்த சூழ்நிலைக்கான முன்னறிவிப்புகள் மிகவும் நேர்மறையானவை. இரண்டு ஆண்டுகளில் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையும்” இது உண்மையில் மிகவும் சாதகமான சூழ்நிலை.

உலகளாவிய சூழலைப் பார்க்கும்போது, மூன்றாவது 'நம்பிக்கையான' நிகழ்வு சாத்தியமாகலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ரஷ்யா அனைத்து வகையான சந்தைகளுக்கும் அணுகலைப் பெறுவதற்கு, போர் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால், போர் முடிவுக்கு வரப்போவதில்லை. அதன் இருப்பே முழு உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிக்கு சாட்சியாகும்.

ஏனைய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அதே அச்சுறுத்தல்களையே ரஷ்ய தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்கிறது. ரஷ்யாவில் வேலையின்மை அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1.6 மில்லியன் வேலைகள் ஆபத்தில் உள்ளன. உணவு பற்றாக்குறை இன்னும் 9 சதவீதமாக இருக்கும். ரஷ்யாவின் மத்திய வங்கியின் வட்டி விகிதம் 6 சதவீதமாக இருக்கும்.

பல ஆண்டுகளில் முதல் முறையாக, அரசு வரவு-செலவுத் திட்டம் பற்றாக்குறைக்கு செல்லும். அரச செலவுகள் குறைக்கப்படும். அதுவும் முதலில் சமூகத் துறையில் குறைக்கப்படும். தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக உயரும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023 முழுவதும் எதிர்மறையாக இருக்கும். உலக மந்தநிலையின் போக்கு ரஷ்யாவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமையையும் தீர்மானிக்கும்.

'அனைத்தும் போர்முனைக்காக, அனைத்தும் வெற்றிக்காக' என்பது புட்டினின் ஆட்சியின் எதிர்கால நிதிய மற்றும் பொருளாதார சூழ்ச்சிகளின் நியாயப்படுத்தும் முழக்கமாக இருக்கும். அணிதிரட்டலின் முதல் அலை முடிவுக்கு வந்துவிட்டது, ஆனால் இரண்டாவது அலை பற்றி வெளிப்படையாக பேசப்படுகிறது. இரண்டாவது அலை குறைந்தபட்சம் முதல் அலையைப்போல் போதுமானதாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? புட்டினின் ஆட்சி நிலைமை மேலும் மோசமடைவதற்கான உத்தரவாதங்களைத் தவிர வேறு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஆகஸ்ட் 30 அன்று வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், தொழிலாளர் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு ரஷ்யாவில் தொழிலாளர் போராட்டத்தின் அதிகரிப்பு நிலையை பகுப்பாய்வு செய்தது:

'இவை அனைத்தும் ஏற்ற இறக்கங்களை அதிகரிப்பதையும் அதே நேரத்தில் எதிர்ப்பின் அதிகரிப்பையும் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில் வீழ்ச்சியின் காலங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிகரிப்பை ஈடுசெய்யாது. எதிர்ப்புகளின் வளர்ச்சியின் உச்சகட்டம் மற்றும் வளர்ச்சியின் காலங்களில் எட்டப்பட்ட குறைந்தபட்ச புள்ளி இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் பொருள் பொதுவாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பொதுவாக, தரவுகளின் அதிக மாறுபாடு இருந்தபோதிலும் அதிகரிக்கும் ஒரு போக்குடன் மிகவும் எச்சரிக்கையான இயங்கியல் உள்ளது.'

இது 2022 இன் முதல் பாதியில் எழுதப்பட்டது. பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புட்டினின் உக்ரேன் படையெடுப்பால் ரஷ்ய தொழிலாள வர்க்கம் முடங்கியிருந்ததுடன், கோடையில் மட்டுமே தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. ஆண்டின் இரண்டாம் பாதியில் பெருகும் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் இந்தப் போக்கு அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதை தீவிரப்படுத்தும்.

இறுதியில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி இப்போது வர்க்கப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையில் உள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடி, போர் மற்றும் நடந்து வரும் தொற்றுநோய்க்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் பிற்போக்குத்தனமான தொழிற்சங்க அமைப்புகளுக்கு சவால் விடுகின்றனர். ரஷ்ய தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முதலாளித்துவ சக்திகள் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்புவது 'நம்பிக்கை' முட்டாள்தனம் மற்றும் குறுகிய பார்வை கொண்டதுமாகும். 'புதிய உலக ஒழுங்கை' நிறுவுவதில் தீர்க்கமான தசாப்தம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைத்து முக்கிய தலைவர்களும் ஒப்புக் கொண்டு, உலகின் மறுபகிர்வு இப்போதுதான் தொடங்கியுள்ளது.

அத்தகைய ஒரு 'புதிய உலக ஒழுங்கு' பற்றி முதலாளித்துவத்தால் உணரப்பட்ட தேவையும் மற்றும் உலகின் ஒரு புதிய மறுபகிர்வை நோக்கி ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலானது, தீர்க்கப்படாத முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியிலும் அதன் பகுத்தறிவற்ற தன்மையிலும் வேரூன்றியுள்ளது.

சில தலைவர்கள் அமெரிக்காவின் 'ஒற்றை துருவமுனைத் தருணத்தின்' இறுதி நடைமுறைப்படுத்தலை நாடுகின்றனர். மற்றவர்கள் ஐரோப்பாவின் 'முட்டுக்கட்டை' இலிருந்து வெளியேற முயற்சி செய்கிறார்கள், மற்றவர்கள் சீனா, ரஷ்யா மற்றும் பிற உள்ளடங்கிய 'பலமுனை' கற்பனாவாத திட்டத்தை நிறுவுவது பற்றி நினைக்கிறார்கள். இறுதியில், இந்த முறைகள் அனைத்தும் முதலாளித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முன்முடிவை அடிப்படையாகக் கொண்டவை. இந்த முறைகளுடனும் கருத்தாக்கங்களுடன் எங்களுக்கு பொதுவான எதுவும் இல்லை, அல்லது நாங்கள் அதற்கு முனையவுமில்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் பிரிவுகள் மற்றும் உலகம் முழுவதும் அதன் ஆதரவாளர்கள் இருப்பதன் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிவதாகும். இது மனிதகுலத்தை சுய அழிவுக்கு இட்டுச் செல்லும் பகுத்தறிவற்ற அமைப்பாக மாறியுள்ளது. தொழிலாளர் இயக்கத்தின் அனைத்து முந்தைய அனுபவத்தின் போக்கிலும் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை நாங்கள் சாத்தியமானது எனக் கருதுகிறோம்.

முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டை உணரக்கூடிய ஒரே புரட்சிகர சக்தி, உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் இழைகளால் ஒன்றாக பிணைக்கப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே.

தொழிலாளர்களின் உலகளாவிய அணிதிரட்டல் மட்டுமே உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் தனியார்-முதலாளித்துவ சுரண்டும் வடிவத்திற்கும் இடையேயும், உலகப் பொருளாதாரத்திற்கும் உலகை தேசிய அரசுகளாகப் பிரித்தலுக்கும் இடையிலான முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்க்கும் திறன் கொண்டது.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு நனவான மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச தலைமையை கட்டியெழுப்பாமல் இந்த அணிதிரட்டல் சாத்தியமற்றது. அனைத்துலகக் குழு, பாட்டாளி வர்க்கத் தலைமையின் நெருக்கடியைத் தீர்க்கவும், மனிதனால் மனிதனைச் சுரண்டும் சமூகத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லவும் முயல்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதி ஒவ்வொரு நாட்டிலும் கட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டாலே இது சாத்தியமாகும். போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் ரஷ்யாவிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் இத்தகைய பிரிவுகளை கட்டமைக்க போராடுகிறது.

Loading