மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் நிலை குறித்த மாதக் கணக்கிலான அவர் மவுனத்தை சனிக்கிழமை ஒரு புத்தாண்டு உரையில் கலைத்தார், இந்தத் தடுத்திருக்கக் கூடிய நோய் உலகளவில் பரவி நாசமாக்குவதற்குப் பொறுப்பான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் ஏனைய முதலாளித்துவ அரசியல்வாதிகளின் வெற்றுரைகளையே அது எதிரொலித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸை நெருங்க விடாமல் தடுத்து வைத்திருந்த சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் பொது சுகாதார திட்டத்தை முற்றிலுமாக கலைத்ததைத் தொடர்ந்து, கடந்த மாதத்தில், கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் மரணங்கள் அந்நாட்டில் முன்னோடியில்லா வகையில் அதிகரித்துள்ளன.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இப்போது முற்றிலும் தவறாக காட்டப்படும் வேளையில், சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் சன் யாங் இனது கசிய விடப்பட்ட ஓர் அறிக்கை, டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் நாடெங்கிலும் சுமார் 250 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டது. சீனா எங்கிலும் கோவிட்-19 ஆல் ஒவ்வொரு நாளும் 9,000 பேர் உயிரிழந்து வருவதாக சுகாதார புள்ளிவிபர ஆய்வு நிறுவனம் Airfinity மதிப்பிடுகிறது.
சமீபத்திய கொள்கை மாற்றம் குறித்து ஜி முன்னதாக அவருடைய உரையில் சுற்றி வளைத்து குறிப்பிடுகையில், “கோவிட்-19 ஏற்படத் தொடங்கியதில் இருந்து, நாங்கள் மக்களுக்கு முதலிடம் கொடுத்துள்ளோம், வேறு எல்லாவற்றையும் விட உயிருக்கு முதல் முன்னுரிமை கொடுத்துள்ளோம். விஞ்ஞான அடிப்படையில் இலக்குபூர்வ அணுகுமுறையைப் பின்பற்றி, நாங்கள் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களின் உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க எங்களால் முடிந்த வரை பெரியளவில் நம் கோவிட்-19 விடையிறுப்பை மாற்றி அமைத்துள்ளோம்,” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், “அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், குறிப்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள், இது நெடுகிலும் தைரியமாக அவர்கள் பதவிகளில் செயல்பட்டு வந்துள்ளனர். அசாதாரண முயற்சிகளோடு, நாம் முன்னோடியில்லா சிரமங்கள் மற்றும் சவால்களை வென்றுள்ளோம், இது யாருக்கும் எளிதான பயணம் இல்லை.”
சீனாவை ஆக்கிரமித்துள்ள பேரழிவுகரமான பெருந்தொற்று அலையை மூடிமறைக்கும் விதமான மொழியைப் பயன்படுத்தி, ஜி கூறினார், “இப்போது நாம் கோவிட் விடையிறுப்பின் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளோம், இதில் கடுமையான சவால்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் மிகுந்த மனஉறுதியுடன் இருக்கிறோம், நம் முன்னால் நம்பிக்கை ஒளி உள்ளது. விடாமுயற்சியும் ஒற்றுமையும் வெற்றியைக் குறிக்கும் என்பதால், இன்னும் இழுத்து பிடித்து கூடுதல் முயற்சி செய்வோம்,” என்றார்.
ஜி உற்சாகத்துடன் உரை வழங்கி இருந்தாலும், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் சீனாவில் இந்த நெருக்கடி இன்னும் ஆழமடைய உள்ளது. ஜனவரி 8 இல், சந்திர புத்தாண்டு ஆரம்பமாகும் நிலையில் அதனால் ஏற்படும் வெகுஜன இடப்பெயர்வுக்குச் சற்று முன்னதாக, சீனாவில் அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் நோயாளிகள் மற்றும் மரணங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மலைப்பூட்டும் அளவுக்குத் தினந்தோறும் 25,000 மரணங்கள் என்ற ரீதியில் தற்போதைய நாடுதழுவிய அதிகரிப்பு ஜனவரி 23 இல் உச்சத்தை அடையும் என்று Airfinity நிறுவனம் முன்கணித்துள்ளது. ஏப்ரல் 2023 இறுதிக்குள் உயிரிழப்பு எண்ணிக்கை சீனாவில் 1.7 மில்லியனாக இருக்கும் என்று அவர்களின் மாதிரி கணிக்கிறது.
ஜனவரி 22 சந்திர புத்தாண்டு விடுமுறைக்கு முந்தைய வாரங்களில் வழக்கமாக மக்கள் தங்கள் குடும்பங்களைப் பார்க்க கிராமப்புறங்களுக்கும் மாகாணங்களுக்கும் பயணிப்பதால், இது நாடெங்கிலும் கோவிட்-19 பரவலை உறுதி செய்கிறது. இது அரசாங்கத்திற்குத் தெரியும் என்பதோடு, கிராமப்புற மருத்துவமனைகள் அவற்றின் தீவிர சிகிச்சை பிரிவுகளை (ICU) மேம்படுத்தி, கோவிட்-19 நோயாளிகளை இடம் மாற்றுவதற்கான வாகனங்களைத் தயார்நிலையில் வைக்குமாறு வலியுறுத்தி உள்ளது. சீனாவின் மருத்துவ அமைப்புகள் அவற்றின் 'இருண்ட காலத்தை' எதிர்கொள்ளும் என்று பிரபல தொற்று நோய் நிபுணர் ஜாங் வென்ஹாங் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கைகளும் அரசு ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.
எந்த எச்சரிக்கையோ அல்லது பொதுமக்களிடமிருந்து எந்த உள்ளீடோ இல்லாமல், பூஜ்ஜிய-கோவிட் கொள்கை திடீரென கைவிடப்பட்டிருப்பது, சீனா முழுவதுமான மக்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் நிரம்பிய மருத்துவமனைகளைக் காட்டும் எண்ணற்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன, இவற்றை நூறாயிரக் கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர். நோய்தொற்று ஏற்படலாம் என்று அஞ்சி மக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருப்பதைக் காட்டும் வகையில், நெரிசலான நேரங்களில் காலியாக ஓடும் இரயில்களைக் காட்டும் படங்களும் பரப்பப்பட்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை கடந்த இரண்டு நாட்களில் கூட்டம் நிரம்பிய மருத்துவமனைகள் மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சை மையங்களின் படக்காட்சிகளுடன் கட்டுரைகள் வெளியிட்டன, இவை பெரும்பாலும் வெய்பொ மற்றும் ட்வீட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் இருந்து பெறப்பட்டிருந்தன, நோயாளிகள் தரையில் படுத்திருப்பதையும், வளாகங்கள் கூட்ட நெரிசலில் இருப்பதையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.
இறந்தவர்களை வண்டிகளிலும் சவப்பைகளிலும் வைத்து இறுதிச்சடங்கு இடங்களுக்குக் கொண்டு வந்து, குடும்பங்கள் அங்கே வெளியே நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காட்டும் கீழே உள்ள காணொளியை அமெரிக்கப் பத்திரிகையாளர் விக்டோரியா பிரவுன்வொர்த் பதிவிட்டார்.

லியோனிங் மாகாணத்தின் அன்ஷான் நகரில் உள்ள ஒரு தகன மேடையைக் காட்டும் மற்றொரு காணொளியை இந்திய பத்திரிகையாளர் சவுத்ரி பர்வேஸ் ட்வீட் செய்தார்.

சீனாவில் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், கோவிட்-19 அதிகரித்து வரும் பல நாடுகளும், சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கோவிட்-19 இல்லை என்ற பரிசோதனை முடிவுடன் வருவது கட்டாயம் என்று பாசாங்குத்தனமாக புதிய பயணக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, தைவான், ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இத்தகைய கொள்கைகளை முதலில் முன்னெடுத்த நாடுகளில் உள்ளடங்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா மற்றும் ஸ்பெயின் ஆகியவையும் இதைப் பின்தொடர்ந்தன.
பரந்த உலகளாவிய பொது சுகாதார திட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட இந்தக் கொள்கைகள் எந்த வகையிலும் கோவிட்-19 பரவலைத் தடுக்கப் போவதில்லை, அவை பாரபட்சமானதாகவும் அரசியல் ரீதியில் தூண்டப்பட்டதாகவும் பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.
ஜனவரி 5 இல் இருந்து பயணக் கட்டுப்பாடுகள் தொடங்கும் என்ற அறிவிப்புடன் சேர்ந்து, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், சீனாவின் அறிக்கை மற்றும் மரபணு தொடர் விபர புள்ளிவிபரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறிப்பிடத்தக்க பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 11, 2022 க்குப் பிந்தைய அவரின் முதல் ட்வீட்டில், CDC இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி சீனாவில் இருந்து வருவர்களை இலக்கு வைத்த புதிய பரிசோதனை கொள்கைகளைப் பாராட்டியதுடன், அதேநேரத்தில் “#கோவிட்-19 பரவலை நம்மால் தடுக்க முடியாது' என்றும் குறிப்பிட்டார். இது உலகெங்கிலும் முன்னணி விஞ்ஞானிகளிடம் இருந்து பெரும் விமர்சனத்தைத் தூண்டியது, அவர்களில் பலர் எந்தளவுக்கு வாலென்ஸ்கியும் CDC உம் விஞ்ஞான சமூகத்தின் பார்வையில் மற்றும் பொதுமக்களின் பார்வையில் அவர்களது மதிப்பைக் கெடுத்துக் கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.


சீனாவை நோக்கிய அமெரிக்கக் கொள்கை “கவலைப்படுத்தும் புதிய வகை நுழைவதற்கான வாய்ப்பைக் குறைப்பதாக' CDC வாதிடுகின்ற நிலையில், அதன் பாசாங்குத்தனமும் மற்றும் சிடுமூஞ்சித்தனமும், டிசம்பர் 29 இல் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங்கின் உள்அலுவலக CDC புள்ளிவிபரங்கள் கசியவிடப்பட்ட போது அம்பலமானது. மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக, CDC, தெளிவாக ஓர் அபாயகரமான புதிய வகை பரவுவதை மூடிமறைப்பதில் உடந்தையாய் இருந்துள்ளது. வடகிழக்கு பகுதி முழுவதும் நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளின் அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ள XBB.1.5 மாறுபாடு, மிக வேகமாக அமெரிக்கா முழுவதும் பரவி உள்ளது, இதை CDC கடந்த ஒரு மாதமாக பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் முடக்கி வைத்திருந்தது.

இந்தப் பெருந்தொற்று தொடங்கியதற்குப் பின்னர் இரண்டாவது மிக மோசமான நோய்தொற்று அதிகரிப்பாக இருக்கக்கூடிய ஒன்றில், முதலில் வடகிழக்கை மையமாகக் கொண்டு XBB.1.5 மேலோங்கி வருவதில், இப்போது அமெரிக்கா சிக்கி உள்ளது. ஓமிக்ரோன் BQ.1 மற்றும் BQ.1.1 துணை மாறுபாடுகள் பற்றிய புள்ளிவிபரங்களை முடக்கி வைத்திருந்ததாக முன்னர் CDC அம்பலமாகி இருந்தது.
முன்னணி விஞ்ஞானிகளின் கருத்துப்படி, XBB.1.5 என்பது இன்று வரையில் மிகவும் நோய் எதிர்ப்பு சக்தியையே மீறி 'தப்பிக்கும் மாறுபாடுகளில்' ஒன்றாகும், கடல்வாழ் அசுர விலங்கான 'Kraken” என்ற புனைப்பெயரையே கூட அது பெற்றுள்ளது. ஆனால் CDC உம் ஊடகங்களும் மிகவும் பரபரப்பாக சீனப் பயணியர்களைக் குறித்தும், ஒரு புதிய வகை சீனாவில் உருவெடுக்க வாய்ப்பிருப்பதாக கூறும் எச்சரிக்கைகளிலும் ஒருமுனைப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் எல்லைகளை மதிக்காது அல்லது அதற்கு ஒரு கடவுச்சீட்டு தேவையில்லை. இது ஒரு சர்வதேச பிரச்சனை என்பதோடு, இதற்கு உலகளாவிய ஒருங்கிணைந்த விடையிறுப்பு தேவைப்படுகிறது. சீன தேசிய ஆளும் வர்க்கத்தின் மீது சர்வதேச நிதி மூலதனத்தின் அழுத்தங்களின் விளைவாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மிகவும் மலைப்பூட்டும் வேகத்தில் மற்றும் திடீரென அதன் போக்கை மாற்றியது.
உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையான சர்வதேச தொழிலாள வர்க்கம், அவர்களின் சொந்த நலன்களில், உயிர்களைக் காப்பாற்றும் நலன்களில், ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் முதலாளித்துவம் நெருக்கடியில் உள்ளது என்பதோடு, பொது சுகாதாரத்திற்கு மிகவும் அடிப்படையான தேவைகளை வழங்கக் கூட இலாயக்கற்று இருப்பதை அது நிரூபித்துள்ளது.
