இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மார்ச் 9 அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ நகர சபை, மத்திய பெருந்தோட்டங்களில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபை, யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு சோ.ச.க. 53 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

விலானி பீரிஸ், மயில்வாகனம் தேவராஜா மற்றும் பரமு திருஞானசம்பந்தர்

கட்சியின் அரசியல் குழுவின் முன்னணி உறுப்பினர்களும் சோசலிச அனைத்துலகவாதத்திற்கான பல தசாப்த கால போராளிகளுமான விலானி பீரிஸ், மயில்வாகனம் தேவராஜா, பரமு திருஞானசம்பந்தர் ஆகியோர் எமது வேட்பாளர் குழுக்களுக்கு தலைமை வகிக்கின்றனர்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அணிதிரள்வுக்காகவும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளால் தூண்டப்படும் இனவாத பிளவுகளுக்கு எதிராகவும் போராடுகிறது.

எங்கள் தேர்தல் பிரச்சாரமானது உக்கிரமடைந்து வரும் ஏகாதிபத்திய போர் ஆபத்துக்கு, கொழும்பின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக, கிராமப்புற ஏழைகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டினரை அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டதாகும். தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக நாங்கள் முன்நிற்கின்றோம்.

கொவிட்-19 தொற்றுநோயினாலும் ஒரு உலகப் போரை தூண்டிவிட அச்சுறுத்தும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினாலும் உக்கிரமடைந்த முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் உலகளாவிய வீழ்ச்சியின் ஒரு பகுதியாக, இலங்கையில் முதலாளித்துவ ஆட்சி பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஆட்சியைப் போலவே, பிணை எடுப்பு கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்க செலவினங்களில் பாரிய வெட்டுக்கள், இலட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் வருமான வரி அதிகரிப்பு, விலை மானியங்கள் வெட்டு, தனியார்மயமாக்கல் மற்றும் பாரிய அரசாங்க வேலை அழிப்புக்களையும் உள்ளடக்கிய ஒரு கொடூரமான திட்டத்தை அது இப்போது செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலையில் வெகுஜனப் போராட்டங்கள் வெடித்ததில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறும், பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீட்டிக்கப்பட்ட மின்வெட்டுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்றும் கோரினர். இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பின்னர் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட அதே வேளை, அவருக்குப் பதிலாக நீண்டகாலமாக அமெரிக்க கைக்கூலியாக இருந்து வரும் மதிப்பிழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) உட்பட போலி-இடதுகளின் ஆதரவுடன், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் காட்டிகொடுத்து, ஒரு இடைக்கால முதலாளித்துவ ஆட்சிக்கு அழைப்புவிடுப்பதன் பக்கம் திசைதிருப்பிவிட்டதாலேயே விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தார்.

ஊதியங்கள், வேலை நிலைமைகள், தொழில்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள், தொலைத்தொடர்பு, தபால், வங்கி, சுகாதாரம், புகையிரதம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான போராட்டங்களின் ஒரு புதிய அலையைத் தூண்டிவிட்டன. ஜனவரி 23 அன்று, ஆயிரக்கணக்கான துறைமுகத் தொழிலாளர்கள் கொழும்பில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்ப்பதற்கும், பெரும் வருமான வரி உயர்வை நிறுத்துவதற்கும் சம்பள உயர்வு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது சர்வதேச அளவில் தலைதூக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளின் வளர்ந்து வரும் அலைகளின் ஒரு பகுதியாகும்.

வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரை தீவிரப்படுத்தும் அதே நேரம், மறுபக்கம் சீனாவிற்கு எதிரான போருக்கான இராணுவ தயாரிப்புகளை தீவிரப்படுத்தி, அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மூன்றாம் உலக யுத்த ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிரான தங்களது போர் உந்துதலில் அதன் இராணுவத்தை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்க கொழும்பிற்கு அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை, பெய்ஜிங் இலங்கையில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் இந்த நகர்வுகளை எதிர்க்கவும் முயல்கிறது.

ஒரு அவமானகரமான தேர்தல் தோல்வியில் பரந்த வெகுஜன எதிர்ப்பு வெளிப்படும் என்று அஞ்சி, உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க விக்கிரமசிங்க ஆட்சி பலமுறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்தை நேரடியாக அச்சுறுத்தாது என்றாலும், வாக்கெடுப்பில் ஏற்படும் எந்தவொரு தோல்வியும் அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரமாக்குவதோடு சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை முன்நகர்த்துவதற்குரிய அதன் திறனைக் கீழறுத்துவிடும் என்று அது கவலை கொண்டுள்ளது. தேர்தலை முடக்கும் கடைசி நிமிட நகர்வுகளை நிராகரிக்க முடியாது.

பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் (தே.ம.ச.) உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்த்தன. அவை, ஒவ்வொன்றும் புதிய தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கையில் உள்ளூராட்சித் தேர்தல்களில் கிடைக்கும் வெற்றியைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கின்றன.

விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன சீற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையில், ஐ.ம.ச., ஜே.வி.பி.,/தே.ம.ச. ஆகியவை, ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாகவும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவை எதிர்ப்பவர்களாகவும் காட்டிக் கொள்கின்றன. அவற்றின் தோரணை போலியானதாகும். இரண்டும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் அல்லது அதன் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள திட்டங்களுடன் அடிப்படை வேறுபாடுகளை கொண்டிருக்கவில்லை. இந்தக் கட்சிகளால் உருவாக்கப்படும் எந்தவொரு எதிர்கால அரசாங்கமும் தற்போதைய ஆட்சியைப் போலவே கடுமையானதாக இருப்பதோடு தவிர்க்க முடியாதவாறு வெகுஜன எதிர்ப்பிற்கு எதிராக அரச அடக்குமுறையை உடனடியாக கையிலெடுக்கும்.

ஐ.ம.ச., முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை விரைவில் அணுகவில்லை என்பதற்காக முன்னர் அதை விமர்சித்ததுடன், 'சர்வதேச கடன் வழங்குனர்கள் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்' என்றும் பெருமையடித்துக் கொண்டது.

கொழும்பு ஸ்தாபனத்தின் பிரதான கட்சிகள் அரசியல்ரீதியாக மக்கள் மத்தியில் மதிப்பிழந்துள்ள நிலைமைகளின் கீழ், ஜே.வி.பி/தே.ம.ச. இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான சிறந்த வழிமுறையாக தன்னை ஆளும் உயரடுக்கு, பெருவணிகம் மற்றும் உயர்-மத்தியதர வர்க்கத்தினரிடம் காட்டிக் கொள்கின்றது. கடந்த அக்டோபரில், ஜே.வி.பி/தே.ம.ச. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தனியார் தொலைக்காட்சியான சுவர்ணவாஹினியிடம் பேசும் போது, தனது கட்சி, சர்வதேச நாணய நிதிய நடவடிக்கையின் 'செலவை மக்களையே ஏற்கவைக்க' கூடிய 'ஒரு முன்மாதிரியான குழு' என்று தெரிவித்தார். 

மதிப்பிழந்த மற்றும் பிளவுபட்ட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழிமுறையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஆதரிக்கும் அதே வேளை, மக்களை ஏமாற்றுவதற்கும் சூழ்ச்சி செய்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் அதன் பிரதான கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) உட்பட கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகள், தமிழரசுக் கட்சி தங்களை ஓரங்கட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளன.

இந்தக் கட்சிகள் அனைத்தும் கொழும்புடன் ஏதோவொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைப் பெறுவதற்கும், அதன் மூலம் தமிழ் பேசும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் இழப்பில் தமிழ் உயரடுக்கிற்கு சிறப்புச் சலுகைகளைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கின்றன. அவை அனைத்தும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க-இந்திய போர் உந்துதலை ஆதரிப்பதோடு, அவ்வாறு செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதில் வாஷிங்டனின் உதவியைப் பெற எதிர்பார்க்கின்றன. 

முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட பல்வேறு போலி-இடது கட்சிகள், தொழிலாள வர்க்கத்தை பிற்போக்கு பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் சிக்க வைத்து அவர்களின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் உருவாவதைத் தடுப்பதில் துரோகப் பாத்திரத்தை வகிக்கின்றன. முன்னிலை சோசலிசக் கட்சி பல உள்ளூராட்சி மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது தன்னை 'சோசலிஸ்ட்' என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை 'எதிர்ப்பதாகவும்' மோசடியாக கூறிக் கொள்கிறது.

மக்களுக்கு ஆதரவான திட்டங்களை செயல்படுத்த பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுப்பதன் பேரில், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சபையை அமைக்க பிரச்சாரம் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிவிக்கிறது. இது உழைக்கும் மக்களை அரசியல் ஸ்தாபனத்துடன் பிணைத்து, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான இயக்கமும் உருவாவதை தடுக்கும் மற்றொரு முயற்சியாகும்.

இந்தக் கட்சிகள் அனைத்திற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது அடிப்படை சமூகத் தேவைகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்தவற்காக ஒவ்வொரு வேலைத்தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப் பகுதிகளிலும், அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து பிரிந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, இந்த நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கு சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி வரவிருக்கும் நாட்களில் கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கை கோடிட்டுக் காட்டும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதோடு எமது கொள்கைகளை விளக்க இணையவழி மற்றும் வெளியரங்க கூட்டங்களை நடத்தும். அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட அறிவுஜீவிகளையும் எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் அதில் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி 700,000 ரூபாய் ($1,920) தேர்தல் நிதியையும் சேர்க்கத் தொடங்கியுள்ளதுடன் ஆகக் கூடிய ஆதரவையும் கோருகிறது. தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான புரட்சிகர தலைமையை ஸ்தாபிக்கவே நாங்கள் போராடுகிறோம். இதன் அர்த்தம் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப வேண்டும், என்பதே. சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு, எங்களின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்புகொண்டு எங்கள் பிரச்சாரத்தில் இணைந்துகொண்டு உதவுங்கள்:

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

தொலைபேசி: +94773562327

பேஸ்புக்: https://www.facebook.com/sep.lk

எங்கள் தேர்தல் நிதிக்கான நன்கொடைகளை இங்கே வைப்பிலிட முடியும்:

கணக்கு எண்: 1472834301

கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: சோசலிச சமத்துவக் கட்சி, கொமர்ஷல் வங்கி, கிருலப்பனை கிளை

இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இலங்கையில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை அரச மருத்துவமனைகளில் கட்டண வாட்டுகளை உருவாக்கும் திட்டத்தை தோற்கடி!

Loading