இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த மாதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் புதிய அடக்குமுறை புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தை வெளியிட்டது. இந்தச் சட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, செப்டம்பர் 23 அன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச இராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
திங்களன்று, சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா அரசியலமைப்பிற்கு முரணானது என்று வாதிட்ட 6 மனுக்கள் மீதான விசாரணையை இலங்கையின் உயர் நீதிமன்றம் தொடங்கியது.
இலங்கை ஆரம்பத்தில் 1980களின் முற்பகுதியில் அதன் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஆகியவற்றின் கீழ் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகத்தை நிறுவியது. 'தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், தீவிரமான அல்லது அழிவுகரமான நாசவேலைகளில் ஈடுபடும் நபர்கள்' மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பல மையங்கள் நிறுவப்பட்டன.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 வருட இரத்தக்களரி இனவாதப் போரின் போது இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பலர் 'முன்னாள் போராளிகள்' என்று அறிவிக்கப்பட்டு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். 2009 இல், புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியாவில் இராணுவத்தால் நடத்தப்பட்ட முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 11,000 இளைஞர்களும் இதில் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காணாமல் போயினர், மற்றவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் புலனாய்வு அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நவீனப்படுத்தப்பட்ட பணியகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் விஜயதாச இராஜபக்ஷ தன்வசம் கொண்டிருக்கும் அதேவேளை, அதன் நிர்வாக சபையில் பாதுகாப்புச் செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி, பொலிஸ் மா அதிபர் அல்லது அவரது பிரதிநிதி ஆகியோர் அடங்குவர். இவர்களே அதன் நடவடிக்கைகளை தீர்மானிப்பர். முன்னர் இதன் ஆணையாளர் நாயகமாக இருந்த அனைவரும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளாக இருந்துள்ளனர்.
தற்போதைய மசோதா, பணியகத்தின் முன்பு இருந்த அதிகாரங்களை விரிவுபடுத்தி, அதன் பங்கு 'தேசிய முக்கியத்துவம்' கொண்டது என்று அறிவிக்கிறது. அதன் கடமைகள் மற்றும் செயல்பாடுகள், 'முன்னாள் போராளிகள், வன்முறை அதிதீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் சிகிச்சையும் புனர்வாழ்வும் கோரும் நபர்கள், அல்லது சட்டப்படி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டிய நபர்களுக்கு' புனர்வாழ்வு அழிப்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் உட்பட பரந்த அளவிலான அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களின் எந்தவொரு தனிநபரும் புனர்வாழ்வு மையங்களில் சிறையில் அடைக்கப்படலாம்.
சட்டமூலத்தை எதிர்க்கும் சிவில் உரிமைகள் சட்டத்தரணிகள், இதில் நீதித்துறை நடைமுறைகள் எதுவும் இல்லை என்றும் பொலிசார் யாரையும் கைது செய்து நேரடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டினர். மசோதாவின் பிற அங்கங்கள் பின்வருமாறு:
- புனர்வாழ்வு முகாம்களின் 'அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளை' மேற்கொள்வதற்கு 'முப்படைகளின் உறுப்பினர்களுக்கு' [இராணுவம்] கைதிகள் பற்றிய இரகசிய பதிவுகளுடன் அதிகாரம் அளிக்கப்படும்.
- இந்த இடங்களில் பணிபுரியும் அனைவரின் கடமை, 'புனர்வாழ்வு பெறும் நபர்கள் மத்தியில் ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தைப் பேணுவதாகும்' மற்றும் 'அதிகாரியால் வழங்கப்படும் எந்தவொரு சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களுக்கும் கீழ்ப்படிவதற்கு நியாயமான முறையில் அவசியமானதாக இருக்கக் கூடிய குறைந்தபட்ச பலம் உட்பட அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது' இங்கு சட்டப்பூர்வமானதாகும்.'
- பணியகத்தின் எந்தவொரு அதிகாரிக்கும் அல்லது அத்தகைய அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரிக்கும், பணியகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அதிகாரம், கடமை அல்லது பணியை செயல்படுத்தும், மேற்கொள்ளும் அல்லது நிறைவேற்றும் போது, நல்ல நம்பிக்கையுடன் எது செய்யப்பட்டாலும், இந்த சட்டத்தின் கீழ் அது எதற்கும் சிவில் அல்லது குற்றவியல் பொறுப்பு கிடையாது.' இதன் அர்த்தம் இந்த முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளுக்கு முழு 'விலக்களிப்பு' கொடுக்கப்பட்டு, கைதிகள் மீது உடல் ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.
- சமீபத்திய வழக்கில், போதைக்கு அடிமையானவர் என்று குற்றம் சாட்டப்பட்டு, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 36 வயது நபர், முகாமில் பாதுகாப்பற்ற கோவிட்-19 நிலைமைகள் தொடர்பாக கைதிகள் நடத்திய போராட்டத்தின் போது படையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சில இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டாலும், புதிய சட்டத்தின் கீழ், கைதிகளுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தும் எந்த அதிகாரிக்கும் முழுமையான விலக்களிப்பு இருக்கும்.
- மையங்களில் 'தடுத்தல்' அல்லது 'அதிகாரிகளைத் தடுக்க முயற்சித்தலும்' தண்டனைக்குரியது ஆகும். சந்தேக நபர்கள் ஒரு நீதவான் முன்னால் நிறுத்தப்படுவர். அவரால் அவர்களுக்கு 50,000 ரூபா அபராதம், ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
- சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெறும் நபர்கள் 'பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உற்பத்தி ரீதியாக பயன்படுத்தப்படலாம்' - அதாவது, முகாம்கள் கட்டாய உழைப்பு மையங்களாகவும் மாறும்.
இந்த அடக்குமுறை நடவடிக்கைகளும் அரசு எந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதும், ஏப்ரலில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை உள்ளடக்கிய பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததற்கான பிரதிபலிப்பாகும். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கைக்கூலியும் இராஜபக்ஷவை அடுத்து பதவியில் அமர்த்தப்பட்டவருமான ரணில் விக்கிரமசிங்க, இந்த ஜனநாயக விரோத தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளார்.
இதுவரை, ஏப்ரலில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 பேர் இன்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயையும் இரண்டு செயற்பாட்டாளர்களையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க விக்கிரமசிங்க உத்தரவிட்டார். இந்த நபர்கள் புதிய புனர்வாழ்வு பணியக சட்டத்தின் முதல் பலிக்கடாக்களாக இருக்கலாம்.
செப்டம்பர் 24 அன்று, விக்கிரமசிங்க, போர்க்கால நடவடிக்கைகளைப் போன்று, கொழும்பின் சில பகுதிகளையும் அதன் புறநகர் பிரதேசங்களையும் உயர் பாதுகாப்பு வலயங்களை (HSZ) பிரகடனம் செய்யும் வர்த்தமானியை வெளியிட்டார்.
பரவலான எதிர்ப்பு மற்றும் சட்டப்பூர்வமான சவால்களை எதிர்கொண்ட விக்கிரமசிங்க, திங்களன்று வர்த்தமானியை திரும்பப் பெறவும் பின்வாங்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார். உயர் பாதுகாப்பு வலயங்களை அமுல்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றியமைக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன பின்னர் தெரிவித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 27 அன்று, அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பொது நிர்வாகச் செயலாளர், அரச ஊழியர்களுக்கு சமூக ஊடக தளங்களில் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.
விக்கிரமசிங்கவின் அடக்குமுறை நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதிபலிக்கும் வகையில் வெகுஜனப் போராட்டங்களின் தவிர்க்க முடியாத மீள் எழுச்சியை நசுக்குவதற்கான தயாரிப்பாகும். இந்த சிக்கன நடவடிக்கைகளில் வரி அதிகரிப்பு, பல்லாயிரக்கணக்கான அரச தொழில் அழிப்பு, சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிக விலை அதிகரிப்பும் அடங்கும்.
ஏனைய எல்லா நாடுகளிலும் போலவே, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரும் இலங்கையின் நிதி நெருக்கடியை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரப்படுத்தியுள்ளது. கொழும்பில் பணவீக்கம் செப்டம்பரில் 70 சதவீதமாக உயர்ந்தது, உணவு விலையதிகரிப்பு 95 சதவீதத்தை எட்டியது. அதிக பணவீக்கம் தீவு முழுவதும் தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குவதுடன் பலர் பட்டினி கிடக்கின்றனர் அல்லது உணவைத் தவிர்க்கின்றனர்.
இலங்கையின் பாராளுமன்ற எதிர்கட்சிகள், தொழிலாளர்களதும் ஏழைகளினதும் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொழும்பின் தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
விக்கிரமசிங்கவின் புனர்வாழ்வு சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆவார். ஐக்கிய மக்கள் சக்தியின் 'ஜனநாயக' தோரணை போலியானதாகும். இந்த வலதுசாரி முதலாளித்துவக் கட்சியின் தலைவர்கள், சர்வதேச நாணய நிநியத்தின் சிக்கன நடவடிக்கையை தொடர்ந்து ஆதரித்து வருவதுடன், அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆதரிப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் புதிய சட்டம் 'நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று கருதப்படும் அடிப்படைக் கோட்பாட்டை அப்பட்டமாக மீறுகிறது' என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆனால் இந்த முதலாளித்துவக் கட்சியும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஆதரிப்பதுடன் அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று மக்களை நம்பவைக்க இழிந்த முறையில் முயற்சிக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விக்கிரமசிங்கவின் புதிய 'புனர்வாழ்வு' சட்டமூலத்தையும், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட ஏனைய அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் எதிர்ப்பதுடன் எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் போராடுகிறது.
தொழிலாள வர்க்கம், அதன் சுயாதீனமான அரசியல் பலத்தை அணிதிரட்டுவதன் மூலமும், கிராமப்புற ஏழைகளின் ஆதரவைப் பெறுவதன் மூலமுமே சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய அரசாங்கத்தின் விரைவான நகர்வுகளை தோற்கடித்து, அதன் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களுடன், ஒவ்வொரு வேலைத் தளத்திலும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களை சோ.ச.க. வலியுறுத்துகிறது.
ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான கொழும்பின் அதிகரித்துவரும் தாக்குதல், உலகளாவிய இலாப அமைப்பின் ஆழமான நெருக்கடியால் உந்தப்படுகிறது, அதனாலேயே தொழிலாள வர்க்கம் தனது போராட்டத்தை ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். இது அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்வது மற்றும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகத் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதைக் குறிக்கிறது.
சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு அடித்தளமாக இருப்பது இந்த முன்னோக்கே ஆகும். தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை சிறையில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கோரி போராடிய எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
அரசாங்க-விரோத போராட்டங்களை நசுக்கப் போவதாக இலங்கை ஜனாதிபதி மிரட்டுகிறார்
