இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இந்த வாரம் அமெரிக்காவில் மற்றொரு தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை மாலை, சியெலோ விஸ்டா விற்பனை வளாகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் தொடர்ச்சியாக இது இருக்கிறது. அந்த துப்பாக்கிதாரி தற்கொலை செய்வதற்கு முன்பு, ஐந்து பேரைக் கடுமையாக காயப்படுத்தி மூன்று மாணவர்களை சுட்டுக் கொன்றுள்ளார்.
புதன்கிழமை நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து எல் பாசோ (டெக்சாஸ்) பொலிஸ் துறை, 'இனி பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை' என்று அறிவித்தது. அப்படி இருந்திருந்தால்! வெகுஜனங்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இப்போது அன்றாட அமெரிக்க நிகழ்வு என்பதையே மிஞ்சிவிட்டது. துப்பாக்கி வன்முறைப் பற்றிய தகவல் காப்பகம் 2023 இல் இதுவரை இந்த 46 நாட்களில் வெகுஜனங்கள் மீது 72 துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அந்த துயரகரமான சம்பவங்கள் இந்தாண்டு சுமார் இரண்டு டஜன் மாநிலங்களிலும் கொலம்பியா மாவட்டத்திலும் நடந்துள்ளன. 2022 இல் இவை 37 மாநிலங்களில் நடந்திருந்தன.
இதன் வேகம் அதிகரித்து வருகிறது. ஜனவரியில் மொத்தம் 52 சம்பவங்கள் இதுபோன்று நடந்துள்ளது. இத்தகைய விஷயங்கள் குறித்து பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து, ஜனவரி மாதத்தின் இதுவரையிலான அதிகபட்ச எண்ணிக்கையாக இது இருந்தது. இதற்கு முன்பு ஜனவரியில், அதாவது கடந்தாண்டு, இது 34 ஆக இருந்தது.
இதற்கிடையே, பொலிஸ், FBI மற்றும் பிற சட்ட அமுலாக்க முகவர்கள், இந்த கொடிய உண்மைக்குப் பின்னர், எவ்வளவு விரைவாக அந்த இரத்தக்களரியான இடத்திற்கு விரைந்து சென்றார்கள் என்று கூறும் புகழாரங்களே, அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகங்களிடம் இருந்து பொதுமக்களுக்குக் கிடைக்கின்றன.
உதாரணமாக, எல் பாசோ மாவட்ட ஆணையர் பொலிஸ் அமைப்புகள் 'அனைத்தினதும் அற்புதமான ஒருங்கிணைப்பை' பாராட்டினார். MSU துணை பொலிஸ் தலைவர் 'அந்த முதல் அழைப்புக்கு முழுமையாக மிகப் பெரிய பொலிஸ் விடையிறுப்பு. … ஒரு சில நிமிடங்களில் நம் அதிகாரிகள் அந்தக் கட்டிடத்தில் இருந்தார்கள்,” என்பதைக் குறித்து பெருமைபீற்றினார்.
என்ன நடக்கிறது என்பதை விளக்கவோ அல்லது பொதுமக்களின் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிபடுத்துவதை´´பற்றி எதுவுமே கூறாமல் அரசியல்வாதிகளும், பொலிஸ்காரர்கள் மற்றும் செய்தி ஊடகங்களும் தற்பெருமை பீற்றிக் கொள்வது, அருவருப்பூட்டுவதாக உள்ளது.
இந்த அளவிலான வன்முறையை ஒரு தனிநபரின் நடவடிக்கையாக கருதாமல், ஒரு சமூக நிகழ்வாக கருதி கையாள வேண்டும். சமூகமே நச்சுத்தன்மையோடு ஆபத்தானதாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது பிரதானமாக உடல்ரீதியான பிரச்சினை சம்பந்தப்பட்டதில்லை, மாறாக ஒரு சமூகப் பிரச்சினையாகும். சமூகத்தில் வன்முறை வியாபித்துள்ளது. எப்போதாவது அல்ல அடிக்கடி, ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ, தன்னுடைய நிலையற்றத் தன்மை காரணமாக அஞ்சி பொலிஸைத் தொடர்பு கொள்கிறார், மற்றும் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
சமூக மற்றும் தனிநபர் மன உளைச்சல் அதிகரிப்பதற்கான பொதுவான சூழல் தெளிவாக உள்ளது: உயிராபத்தான கோவிட்-19 பெருந்தொற்றுக்கு, அதிகாரிகள் குற்றகரமான அலட்சியம் மற்றும் புறக்கணிப்பைக் காட்டி விடையிறுத்துள்ளார்கள்; பரந்தளவில் நிலவும் நிலையான கொடிய சமூக சமத்துவமின்மை; பல தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவத்தால் உலகெங்கிலுமான மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் மற்றும் வன்முறை; வேலை பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வேலையை இழப்பது உட்பட பத்து மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சி அடைந்து வருவது; ஆழ்ந்த அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கொந்தளிப்பு; எதேச்சதிகார ஆட்சியை நிறுவ தீர்மானகரமாக உள்ள தீவிர வலதுசாரிகள் உருவாகி இருப்பது ஆகியவை தெளிவாக உள்ளன.
அமெரிக்காவின் வாழ்க்கையில், இந்த அளவிலான சமூக மற்றும் அரசியல் பதற்றம், நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சுறுத்தல், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலத்திற்குப் பின்னர், ஒருபோதும் அறியப்பட்டதில்லை.
இந்த மனிதப் படுகொலைக்குப் பரந்தக் காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை உத்தியோகபூர்வ ஆதாரங்களே ஒப்புக் கொள்ளத் தொடங்கி உள்ளன. 2016 மற்றும் 2020 க்கு இடையே பொது இடங்களிலோ அல்லது ஏறக்குறைய பொது இடங்களாக இருக்கக்கூடிய இடங்களிலும் நடந்த 173 தாக்குதல்களைப் பற்றிய அமெரிக்க இரகசிய சேவையின் சமீபத்திய ஓர் ஆய்வு, கிட்டத்தட்ட ஒவ்வொரு தாக்குதல்தாரியும் (93 சதவீதத்தினர்) “அந்த தாக்குதலுக்கு முந்தைய ஐந்தாண்டுகளுக்குள் அவர்களின் வாழ்வில் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடத்தக்க அழுத்தத்தை' அனுபவித்துள்ளார் என்பதைக் கண்டறிந்தது. மேலும் 77 சதவீதத்தினரைப் பொறுத்த வரை, “ஓராண்டுக்குள் அழுத்தத்தை அனுபவித்திருந்தனர்.” மருத்துவம், விவாகரத்து, வீட்டை இழப்பது, வேலையின்மை பிரச்சினைகள், பள்ளிகள் மற்றும் வேலையிடத்தில் மிரட்டல், “சட்ட அமுலாக்கத்துடன் தொடர்பு,” “பொது விவகார நீதிமன்றங்களுடன் தொடர்பு,” இன்னும் இதர பிற விவகாரங்கள் மீதான கவலைகள் அத்தகைய அழுத்தங்களில் உள்ளடங்குகின்றன.
அமெரிக்காவில் இந்தாண்டு இதுவரை வெகுஜனங்கள் மீது நடந்துள்ள எழுபத்திரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என்பதே ஒரு பயங்கரமான எண்ணிக்கை தான் என்றாலும், ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட கொள்கையால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக உள்ளது என்பதே உண்மையாகும். ஆனால் இதற்கு மிகவும் முரண்பட்ட விதத்தில், மில்லியன் கணக்கானவர்கள் அல்லது அதற்கும் அதிகமானவர்களுக்கு அரசாங்கம் காட்டிய எதிர்வினையால், தடுத்திருக்கக் கூடிய ஒரு பெருந்தொற்றில் ஒரு மில்லியன் பேர் கொல்லப்பட்டதை, ஊடகங்களும் அரசாங்கமும், அமெரிக்க சமூக இழை மீது எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்று நடிக்கின்றன.
பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் சமீபத்தில் தற்கொலை விகிதங்கள் அதிகரித்திருப்பதற்கும் இடையே ஏற்கனவே ஒரு தொடர்பு கண்டுணரப்பட்டுள்ளது. இரண்டாவது கூறப்பட்ட விஷயம், குறிப்பாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் அதிகரித்து வருகிறது. தங்கள் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை விளக்கும் முயற்சியில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமூக பணிகளுக்கான பிரௌன் பயிலகத்தின் பேராசிரியர் டாக்டர் சீன் ஜோ, “ஒருமித்த மன அழுத்தத்தை' (cumulative stress) சுட்டிக் காட்டினார்.
பொதுவான சமூக கஷ்டங்கள், 'ஒருமித்த மன அழுத்தம்' மற்றும் தனிநபர்களின் 'அழுத்தங்களில்' அவற்றின் தனித்துவமான வெளிப்பாடு ஆகியவை பாரியளவிலான மக்கள் மீது சுமை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒரு மிகச் சிறிய சதவீதத்தினர் மட்டும் (ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்கின்ற நிலையில்) அவற்றை எதிர்கொள்ளும் போது திடீரென நிலைகுலைந்து போகிறார்கள்.
வெகுஜனங்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பங்களைப் பரிசீலிக்கையில், அமெரிக்காவின் குறிப்பிட்ட அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டதைப் போல, கொலைகளின் அதிகரிப்பானது 'பொருளாதார ரீதியில், தார்மீக ரீதியில் மற்றும் புத்திஜீவிய ரீதியில் முற்றிலுமாக சிதைவுறும்' ஒரு சமூகத்தின், ரஷ்யாவின் ஓர் அடையாளம் என்றார்.
முடிவில்லாத போரானது, அமெரிக்க சமூகத்தை ஆழமாக, மீளமுடியாத விதத்தில் மூர்க்கமாக்கி உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய சமூகங்களைப் பல தசாப்த காலம் நாசமாக்கிய பின்னர், இப்போது மில்லியன் கணக்கானவர்களின் மரணங்கள் மற்றும் சீரழிவுகளோடு, அமெரிக்க ஆளும் உயரடுக்கு, கணக்கிடவியலா விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுடன், ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கானவர்கள் அழிந்து போகலாம், ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அவர்களின் தோள்களைக் குலுக்கியவாறு, அந்த சாத்தியக்கூறால் 'தடுக்கப்படக்கூடாது' என்ற தங்கள் உறுதியை மீண்டும் வலியுறுத்துகின்றனர். மேலோட்டமான சிந்தனையோடு குற்றகரமான இந்தப் பொறுப்பற்றத்தன்மையில் இருந்து மிகவும் மோசமான குணாம்சங்கள் என்று எதைத் தீர்மானிப்பது? நம்பமுடியாத வகையில் உயிரைத் துச்சமாக மதிக்கிறார்கள்.
அமெரிக்க அரசியல் அமைப்புமுறை முழுக்க முழுக்க பெரும் செல்வந்தர்களின் சேவைக்காக செயல்படுகிறது. ஒவ்வொன்றும் வோல் ஸ்ட்ரீட், பெருநிறுவன தன்னலக்குழுக்கள் மற்றும் செல்வசெழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தினருக்கே ஒழிய, இதர மக்களுக்கு எதுவும் இல்லை. பரந்த மக்கள் அடுக்குகள் தாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று உணர்கிறார்கள், அவர்களின் அவலநிலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே இல்லை. பெருவணிகங்களின் இரண்டு கட்சிகளும் வாஷிங்டனில் உள்ள அவற்றின் பிரதிநிதிகளும் அவமதிக்கப்பட தகுதி உடையவர்கள். சமூகத்தின் முன்னணி அமைப்புகளிடம் இருந்து தாக்குதலையும் துஷ்பிரயோகத்தையும் தவிர வேறெதையும் ஒருவர் எதிர்பார்ப்பதற்கு இல்லை.
பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டம் மீதான ஒடுக்குமுறை, அமெரிக்க வாழ்வில் ஒரு நாசகரமான மற்றும் அழிவுகரமான காரணியாக இருந்துள்ளது, இதற்காக அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்கங்கள் தான் நன்றியைப் பெறுகின்றன, அவை முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஒவ்வொரு சவாலையும் தணிக்கப் படாதபாடுபடுகின்றன. தொழிலாளர்களின் எதிர்ப்பானது நவீன சமூகத்தின் உண்மையான அங்க இலட்சணத்தை வெளிப்படுத்தி, தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கு வழியைக் காட்டுகிறது. இந்த நிலையில், அதை முறியடிப்பது, மக்கள் நனவை சிதைத்து சேதப்படுத்துகிறது.
சீரழிந்த கலாச்சார சூழ்நிலையும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. விஷயங்களின் உண்மையான நிலையைக் காட்ட ஒரு கண்ணாடியைப் பிடிப்பதற்குப் பதிலாக, மக்கள் கலாச்சாரம் பெரிதும் பணத்தையும், பிரபலத்தன்மை, பின்தங்கிய நிலைமை, சமூக அக்கறையின்மையைக் கொண்டாடுகிறது. இசை உலகிலும் பொழுதுபோக்கு உலகிலும் ஆங்காங்கே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் அரைகுறை ஆபாசங்கள், சூழ்நிலையைக் கெடுத்து, சமூக விமர்சனத்தைத் தரங்குறைத்து களங்கப்படுத்தி, படுமோசமான கீழ்தரமான உள்ளுணர்வுகளை ஊக்குவிக்கின்றன.
ஆனால் ஒரு சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கம் சக்தி வாய்ந்த முறையில் மீண்டெழுந்து வருகிறது. கோவிட் பெருந்தொற்று, போர் விரிவாக்கம், சமூக சமத்துவமின்மையின் அதீத அதிகரிப்பு என ஒன்றோடொன்று குறுக்கிடும் இந்த நெருக்கடிகளின் 'பெரும் சுமை', பலமான முறையில் கோபம் மற்றும் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கி உள்ளது. வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி, தற்போது நோக்குநிலை பிறழ்ந்து அழுத்தத்தில் உள்ள பலருக்கு உத்வேகமளித்து, வெளிச்சத்தைக் காட்டும்.
வெகுஜனங்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிர்ச்சிகரமாக அதிகரிப்பது, அளப்பரிய விதத்தில் சமூகம் செயலிழந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க முதலாளித்துவமும் செல்வவளத்தின் மீது வெறிபிடித்த அதன் ஆளும் உயரடுக்கும் மிகப்பெரிய, எப்போதும் நிரந்தரமான 'பொதுமக்களுக்கான ஆபத்தாகும்'! புரட்சியும் சோசலிசமும் மட்டுமே இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழியாக உள்ளது.
