முன்னோக்கு

பைடனின் கியேவ் விஜயம் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடிப் போரை அச்சுறுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.

திங்கட்கிழமை உக்ரேன் தலைநகரான கியேவ் வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், 'எவ்வளவு காலம் எடுக்கிறதோ அதுவரை' ரஷ்யாவுடனான போருக்கு அமெரிக்கா பொறுப்பேற்றிருப்பதாக உறுதியளித்தார். அந்தப் போர்க்களத்திற்கு 'முப்படைகளின் தலைமை தளபதி' வந்திருப்பது, அந்த மோதலை ஓர் அமெரிக்கப் போராக உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்ல, மாறாக பைடென் நிர்வாகத்தின் தீர்மானமான மற்றும் முதன்மையான ஒருமுனைப்பாகவும் உறுதிப்படுத்துகிறது.

இந்தப் போரின் ஓராண்டு நிறைவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு முக்கிய உரை வழங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பைடெனின் இந்த விஜயம், அமெரிக்கா முழுமையாக உள்நுழைந்துவிட்டது என்ற சேதியை அறிவிக்க உத்தேசிக்கிறது.

பெப்ரவரி 20, 2023, திங்கட்கிழமை கியேவுக்கு திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி ஜோ பைடென், செயின்ட் மைக்கேல்ஸ் பொற்கலச தேவாலயத்தின் முன் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் நடந்து செல்கிறார். (AP Photo/Evan Vucci)

போர் நடந்து வரும் இடத்திற்கு பைடென் சென்றிருப்பது, வெள்ளை மாளிகை தகவல்தொடர்பு இயக்குனர் கேட் பெடிங்ஃபீல்டின் வார்த்தைகளில் கூறினால், “அபாயகரமானது' மற்றும் 'முன்னோடி இல்லாததது' என்றாலும், “ஜோ பைடென் இந்த ஆபத்தை எடுக்க விரும்பினார்.”

பைடெனின் வருகை 'ஆபத்தானதாக' இருக்கலாம், ஆனால் அது முன்னோடியில்லாதது இல்லை. ஜூலை 1944 இல், அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜப்பான் மீதான இறுதி வெற்றியை விவாதிக்க, ஹவாய் பேர்ல் துறைமுகத்தில் அவருடைய முன்னணி பசிபிக் தளபதிகள் அனைவரையும் வரவழைத்தார். அதற்கு 13 மாதங்களுக்குள், அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை ஹிரோஷிமா நாகசாகி மீது வீசியது. அதில் ஏறக்குறைய கால் மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

1966 இறுதியில், ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சன் தெற்கு வியட்நாமுக்கு விஜயம் செய்து, வியட்நாம் போரில் அமெரிக்க தலையீட்டின் ஒரு மிகப் பெரிய விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கடுத்தாண்டு முழுவதும், 11,000 க்கும் அதிகமான இராணுவத்தினர் உயிரிழக்க நேர்ந்தது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டில் 6,000 ஆக இருந்தது.

பைடென் கியேவுக்கான அவர் விஜயத்தில், போர் விரிவாக்கத்தைத் திரும்பப் பெற முடியாதவாறு அமெரிக்க-நேட்டோ பொறுப்புறுதியை உறுதிப்படுத்த முயன்று வருகிறார்.

மக்களிடையே போருக்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, அதேவேளையில் நேட்டோவுக்குள் நிலவும் 'ஒற்றுமை' ஐ பைடென் தொடர்ந்து துணைக்கு இழுப்பது, அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகள் எந்தளவுக்கு ரஷ்யாவுடன் நேரடி போரை நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள் என்பதைக் குறித்த ஆழ்ந்த கவலைகளையே உரைக்கிறது.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கருத்துரையில், பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் கிடியோன் ராச்மென் பின்வருமாறு எழுதினார், 'போரிடுபவர்களே எங்கே வந்து சிக்கியுள்ளோம் என்று வருத்தப்படும் ஒரு தருணம் பல போர்களில் ஏற்படுவதுண்டு,” என்றார். செப்டம்பரில் ரஷ்யா இந்தக் கட்டத்தை எட்டியதாகவும், ஆனால் இப்போது அது தாக்குதலில் இறங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “ரஷ்யப் படையெடுப்பின் முதல் ஆண்டு இந்த வாரம் நிறைவடைய உள்ள நிலையில், உக்ரேனை ஆதரிக்கும் மேற்கத்திய கூட்டணியில் தான், கடுமையான கொள்கை விவாதங்கள் நடந்து வருகின்றன,” என்றவர் குறிப்பிட்டார்.

100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டு ஆயுதங்களும் தளவாடங்களும் ஏந்த செய்யப்பட்டுள்ள உக்ரேனில் அமெரிக்காவின் பினாமி படைகளுக்கு மிகப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியில், பைடெனின் கியேவ் பயணம் வருகிறது. “உக்ரேனிய பொருளாதார ஆழ்ந்த சிக்கலில் இருப்பதுடன், மேற்கத்திய உதவிகளைச் சார்ந்துள்ளது. இதனால் தான், பிரபல மேற்கத்திய பகுப்பாய்வாளர்கள், காலம் உக்ரேனுக்குச் சாதகமாக இல்லை — கியேவ் ஜெயிக்க வேண்டுமானால், எதுவும் மிகவும் விரைவாக செய்யப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்,” என்று ராச்மென் குறிப்பிடுகிறார்.

இந்த வாரயிறுதியில் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் நம்பிக்கையான பகிரங்க அறிவிப்புகள் இருந்தாலும், உக்ரேனிய ஆயுதப் படைகள் முகங்கொடுத்து வரும் நிலைமை பயங்கரமாக இருப்பதாக நேட்டோ அதிகாரிகள் சத்தமில்லாமல் எச்சரித்தார்கள். “நாம் போர் நிலைக்கு மாற வேண்டிய அவசரத்தில் உள்ளோம்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் ஜோசப் பொரெல் கூறினார். “வெடிபொருட்களின் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்; இது ஒரு சில வாரங்களில் நடக்க வேண்டும்,” இல்லையென்றால், உக்ரேன் இராணுவத் தோல்வியின் சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது.

உக்ரேனிய இராணுவம் பாரிய இழப்புகளைச் சந்தித்து வருவதுடன், அவசர வலுவூட்டல் இல்லெயென்றால் தோல்விக்கான சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது என்பது அதிகரித்தளவில் ஒப்புக் கொள்ளப்படுவதற்கான சாட்சியங்களாக இத்தகைய அறிக்கைகள் உள்ளன.

போர் அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டது, இது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் போரை விரிவாக்குவதில் ஒரு முக்கிய காரணியாக மாறுகிறது. அமெரிக்காவும் நேட்டோவும் ஓராண்டுக்கு முன்னர் உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டிவிட்டன. அதைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாதளவில் பணமும் இராணுவத் தளவாடங்களும் அந்தப் போர்க் களத்திற்கு அனுப்பப்பட்டன.

இந்தக் கட்டத்தில் எந்தவொரு பின்வாங்கலும், நேட்டோவுக்கு மிகப்பெரும் தோல்வியாகவும் ஐரோப்பாவில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிவதாகவும் இருக்கும். நேட்டோ மீது, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான ஒட்டுமொத்த நம்பகத்தன்மையும் பணயத்தில் உள்ளது. ஆகவே இது முழுமையாக வெற்றி பெறும் வரையில் இந்தப் போரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஓர் உயிர்பிழைப்பு பிரச்சினையாக ஆக்குகிறது.

ரஷ்யாவுடனான மோதலில் அமெரிக்காவும் நேட்டோவும் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்ற எஞ்சியிருந்த எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் கூட பைடெனின் கியேவ் விஜயம் சிதறடிக்கிறது. ஆனால் இது ஒரு நேட்டோ போர் என்றால், அதற்கு நேட்டோ துருப்புகள் தேவைப்படும்.

அமெரிக்க தலையீட்டின் அளவைப் பகிரங்கமாக அதிகரிக்கவும் மற்றும் 'போர்க்களத்தில் தரைப்படையை' இறக்கும் கருத்தை அறிமுகப்படுத்தவும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், உக்ரேனிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் ஓர் ஒருங்கிணைந்த திருப்பம் பைடென் பயணத்திற்கு இணக்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட், கிரிமியாவிற்குள் நடத்தப்பட்ட உக்ரேனிய தாக்குதல்களை முதன்முறையாக வெளிப்படையாக ஆமோதித்தார். 'அவை நியாயமான இலக்குகள் தான்,' நுலாண்ட் கூறினார். 'உக்ரேன் அவற்றைத் தாக்குகிறது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம்,” என்றார்.

வாரயிறுதி வாக்கில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி அலெக்சாண்டர் விண்ட்மேன் அசோசியேட்டெட் பிரஸ்ஸுக்கு அளித்த ஒரு பேட்டியில், உக்ரேனில் அமெரிக்க தலையீட்டுக்கு இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். '[வெள்ளை மாளிகை] உக்ரேனியர்களுக்குத் தேவையான அனைத்தையும், எதை வேண்டுமானாலும் வழங்கும் என்பதில் நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்,' என்றவர் கூறினார். 'இது வெறும் கால அவகாசம் சம்பந்தப்பட்ட விஷயமாக தான் இருக்கும்.'

வாரயிறுதி வாக்கில், அமெரிக்க ஊடகங்கள் உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்புவதற்கான சாத்தியக்கூறை வெளிப்படுத்தத் தொடங்கின. 'இராணுவ முறுக்கேறிய உறுதியான படைப்பிரிவைக் களத்திற்கு' அனுப்புமாறு சனிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்காவின் முன்னணி அரசியல் விவாத நிகழ்ச்சியான 'Meet the Press' இன் தொகுப்பாளர் சக் டொட், 'களத்தில் எந்தவொரு நேட்டோ படைகளையோ அல்லது அமெரிக்கத் தரைப்படைகளையோ நிலைநிறுத்தாமல், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் புட்டினைத் தோற்கடிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, உக்ரேனிய அதிகாரிகள் வாஷிங்டனில் இருந்து அவர்களுக்குச் சம்பளம் வழங்குபவர்களின் நோக்கங்களை வெளிப்படுத்துவதில் இன்னும் அதிகமாகவே வெளிப்படையாக மாறி வருகிறார்கள். உக்ரேனின் பாதுகாப்பு அவைத் தலைவரான Oleksiy Danilov ஞாயிற்றுக்கிழமை the Sun பத்திரிகைக்குக் கூறுகையில், “எங்கள் டாங்கிகள் [ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின்] செஞ்சதுக்கத்தில் இருக்கும். அது தான் நீதியாக இருக்கும்,” என்றார்.

திங்கட்கிழமை, பைடென் கியெவ் வந்தடைந்ததற்கு மறுநாள், நியூ யோர்க் டைம்ஸ் ஒரு பொது-தலையங்கத்தில், “ரஷ்யா உடையாத வரையில் அதுவொரு ஜனநாயகமாக இருக்காது,” என்று அறிவித்து, ஒரு தேசிய அரசாக இருக்கும் ரஷ்யாவை அழிப்பதை அறிவுறுத்தியது.

ஆனால், கிரிமியா உட்பட அதன் எல்லைகளைப் பாதுகாக்க அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதே ரஷ்யாவின் கொள்கையாக உள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டதால், இந்த யதார்த்தம் போரை விரிவாக்குவதற்கான அமெரிக்காவின் நோக்கங்களுக்கு எதிராக உள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இந்த யதார்த்தத்தைக் குறித்து விடையிறுக்கையில், அணுஆயுதப் போருக்கான சாத்தியக்கூறை அவர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதைத் தெளிவுபடுத்துகின்றனர். சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் எலியட் கோஹென் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியது போல, ரஷ்யா அணுஆயுத பதிலடியால் அமெரிக்க அதிகாரிகள் மட்டுப்படுத்தப்படுவார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வது, 'நம்மை நாமே தடுத்துக் கொள்வதை' அர்த்தப்படுத்தும் என்றார்.

அமெரிக்காவுக்கு 'நிஜமான பாதுகாப்புத்துறை அணித்திரட்டல்' தேவைப்படுகிறது என்று கூறிய கோஹன், இதனுடன் சேர்ந்து 'இந்தப் போர் உண்மையில் ஏன் நம் நலன்களின் மையத்தில் உள்ளது என்பதை அமெரிக்க மக்களுக்கு விளக்குவதற்கான ஓர் ஒருங்கிணைந்த முயற்சியும்' இருக்க வேண்டும் என்றார்.

ஆனால் உக்ரேன் விவகாரத்தில் அணுஆயுதப் போர் ஆபத்திற்கு உட்படுத்துவதே 'எங்கள் நலன்கள்' என்பதை துல்லியமாக ஆளும் வர்க்கம் எப்படி அமெரிக்க மக்களுக்கு 'விளக்கும்'? செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முந்தைய ஆண்டுகளில் Zbigniew Brzezinski எழுதிய கருத்துக்களை நினைத்துப் பார்ப்பது மதிப்புடையதாக இருக்கும். “உள்நாட்டு நல்வாழ்வு பற்றிய மக்களின் உணர்வுக்கு ஒரு திடீர் அச்சுறுத்தலோ அல்லது சவாலோ ஏற்படும் நிலைமைகள் இல்லாத வரை, அதிகாரத்தை [அதாவது, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை] பின்தொடர்வது என்பது மக்கள் ஆர்வத்திற்குக் கட்டளையிடும் ஒரு குறிக்கோளாக இருக்காது,” என்றவர் எழுதினார்.

இரயிலில் 20 மணி நேரம் பயணித்தப் பின்னர், பைடென் கியேவில் இருந்த போது, வாஷிங்டனின் பினாமி படைகளுடனும் ஏற்கனவே உக்ரேனில் இருந்த சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளுடனும் என்ன விவாதித்தார் என்பதில் ஒரு பகுதி கூட பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரேன், ரஷ்ய மக்களுக்கும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் கணக்கிடவியலா விளைவுகளுடன், இந்தப் போரைப் பாரியளவிலான விரிவாக்கத்திற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்பதையே பைடெனின் இந்த விஜயம் தெளிவுபடுத்துகிறது.

Loading