நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகள் பிராந்தியத்தை உலுக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 150,000 வரை அதிகரித்திருக்கலாம் என்று துருக்கிய அதிகாரி கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, 6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டு நில அதிர்வுகளில், துருக்கி-சிரிய எல்லையில் உள்ள ஹடேயில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிற்கான முக்கிய காரணம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் கூடாரங்கள் மற்றும் கொள்கலன்கள் இல்லாததே என நம்பப்படுகிறது. இதனால், சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வழிவகுத்ததோடு, அவை 'சிறிய' அல்லது 'மிதமான' சேதத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது 

இதற்கிடையில், பெப்ரவரி 6 நிலநடுக்கத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட உண்மையான இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் அறிக்கை வெளிவந்துள்ளது. சமூக ஊடகங்களில் மேலோட்டமாக பரவி, பெப்ரவரி 13, திங்கட்கிழமை வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு உரையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட காசியான்டெப் மாகாணத்தின் நுர்டாகி மாவட்டத்தின் ‘ஒருங்கிணைப்பாளராக’ நியமிக்கப்பட்டுள்ள சிர்நாக் ஆளுநர் ஒஸ்மான் பில்கின், உண்மையான இறப்பு எண்ணிக்கை இன்னும் ஐந்து மடங்கு அதிகமானதாக மோசமாக இருக்கும் என்று கூறினார். அவர் உரை நிகழ்த்திய நாளான பெப்ரவரி 13 நிலவரப்படி, துருக்கியில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை சுமார் 31,000 ஆக இருந்தது.  

ஒரு வான்வழி புகைப்படம் பெப்ரவரி 7 அன்று துருக்கியின் ஹடாயில் இடிந்து விழுந்த கட்டிடங்களையும் அழிவுகளையும் காட்டுகிறது [AP Photo/IHA]

நுர்டாகியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் உரையாற்றிய பில்கின், அரசு மிகவும் தாமதமாகத் தலையிட்டதாக ஒப்புக்கொண்டதுடன், இவ்வாறு கூறினார்: “மன்னிக்கவும், ஒருவேளை நாங்கள் தாமதமாக வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் பார்த்ததையும் அறிந்ததையும் விட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதாவது, அறிவிக்கப்பட்ட புள்ளிவிபரங்களை விட ஒருவேளை 3-4, ஏன் 5 மடங்கு அதிகமாக மோசமாக இருக்கலாம்.” 

அவர் மேலும், “நுர்டாகி மாவட்டத்தை நாங்கள் முற்றிலுமாக இடித்து வருகிறோம். சுற்றுச்சூழல் அமைச்சருடன் நேற்று இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் இடித்து வருகிறோம். நீங்கள் பேரழிவின் அளவைப் புரிந்து கொள்வதற்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்… அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் 150 பேர் இறந்துள்ளனர். நிச்சயமாக, இந்த பேரழிவு கடவுளின் விருப்பமாகும். ஆனால் மனிதர்களாகிய நாம் நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

விஞ்ஞானிகளும் அரசு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக உத்தியோகபூர்வ அறிக்கைகளில் எச்சரித்து வந்துள்ளதான பூகம்ப அபாயத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டியது அரசின் ‘பொறுப்பு’ ஆகும். பெரிய நிலநடுக்கங்களின் போது பாதுகாப்பற்றதாக அறியப்பட்ட பூமித்தட்டுக்களின் அழுத்தம்மிக்க தடங்களில் உள்ள குடியிருப்புக்களும் கட்டிடங்களும் காலி செய்யப்பட்டிருக்க வேண்டும். பெருநிறுவன இலாபங்களை விழுங்கிவிடும் இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம் அப்பகுதி மக்கள் அவர்களின் தலைவிதியை அவர்களே எதிர்கொள்ள கைவிட்டது.

நேற்றைய நிலவரப்படி, துருக்கியில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 41,000 ஐத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 10 நாட்களாக 5,800 ஆக நீடிக்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் போரினாலும், 2011 முதல் நாட்டை முடமாக்கும் ஏகாதிபத்திய பொருளாதாரத் தடைகளாலும் ஏற்கனவே அந்நாடு பேரழிவிற்குள்ளாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை, துரதிர்ஷ்டவசமாக, தீவிரமாக குறைத்துக் மதிப்பிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய மதிப்பீடுகள், துருக்கி-சிரியா பூகம்பப் பேரழிவின் தடுக்கக்கூடிய சமூகப் பேரழிவானது ஏற்கனவே நினைத்ததை விட மிக மிக கொடூரமானது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இது, 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளான 2004 ஆம் ஆண்டில் சுமார் 228,000 மக்களை பலி கொண்ட இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி, மற்றும் சுமார் 316,000 பேரை அழித்த 2010 ஹைட்டி பூகம்பம் ஆகியவற்றில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் அளவினதாக இருக்கும்.   

நேற்றைய நிலவரப்படி, சுற்றுச்சூழல், நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பாதிக்கப்பட்ட பகுதியில் 927,000 கட்டிடங்களை ஆய்வு செய்துள்ளது. அவற்றில் சுமார் 118,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன அல்லது பெரிதும் சேதமடைந்துள்ளன என்று அறிவித்துள்ளது. கடந்த வாரம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2.2 மில்லியன் மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேறியதாக எர்டோகன் கூறினார். இந்த எண்ணிக்கை தற்போது 4 மில்லியனைத் தாண்டும் என்று கருதப்படுகிறது.  

எர்டோகன், “குடியிருப்பு கொள்கலன் நகரங்களுக்கு வெளியே தஞ்சம் புகும் மக்கள் வீட்டு உரிமையாளர்களாக இருந்தால் 5,000 லிராக்களையும், வாடகைதாரர்களாக இருந்தால் 2,000 லிராக்களையும் மாத வாடகை மானியமாகப் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார். வாடகைதாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையில் காட்டப்படும் இந்த வேறுபாடு சமூக கோபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், துருக்கியில் 2,000 லிராக்களுக்கு வாடகைக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.

சிரியாவில், நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாக இருப்பதாக ஐ.நா. மதிப்பிடுகிறது. ஏகாதிபத்திய சக்திகளால் கைவிடப்பட்டு முற்றுகையிடப்பட்ட இந்த நாட்டிற்கு சொற்ப அளவிலான சர்வதேச உதவிகளே வந்தடைந்துள்ளன. அமெரிக்க மற்றும் துருக்கிய துருப்புக்களின், அத்துடன் இஸ்லாமிய ஜிஹாதிப் படைகளின் வடக்கு சிரியா மீதான நடந்து வரும் ஆக்கிரமிப்பானது, சிரிய அரசாங்கத்தின் மையப்படுத்தப்பட்ட பூகம்ப நிவாரண நடவடிக்கைகளை தடுத்துள்ளன.  

ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் மற்றொரு செயல் விளக்கமாக, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை துருக்கிக்கு விஜயம் செய்து, துருக்கி மற்றும் சிரியாவிற்கு கூடுதலாக 100 மில்லியன் டாலர் பூகம்ப உதவியளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், மொத்தம் 185 மில்லியன் டாலர் அமெரிக்க ‘நிதியுதவி’ எப்படி சிரியாவிற்குச் சென்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சென்றடையும் என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும், சிரியாவை அழிக்கவும், இப்போது உக்ரேனில் போரை நடத்தவும் ஆயுதங்களுக்காக நேட்டோ செலவிட்ட பில்லியன் கணக்கான டாலர்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் அற்பமானதே.

மேலும், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள பொதுமக்கள் பகுதிகளை குண்டுவீசி தாக்கியதில், குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். “ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் சிரிய தலைநகரில் இஸ்ரேல் நடத்திய மிக மோசமான தாக்குதலாகும்” என்று மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் ராமி அப்தெல் ரஹ்மான் கூறினார். இந்த வான்வழித் தாக்குதலானது “ஒமய்யாட் சதுக்கத்திற்கு அருகில் மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியைத் தாக்கியது” என்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டது.

கடந்த மாதம், டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் அவலநிலை குறித்து சில அறிக்கைகள் மட்டுமே வெளிவரும் அதேவேளை, நிலநடுக்கத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கூட, துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. எர்டோகன் அரசாங்கம் தான் சேகரித்து வழங்கிய உதவிகளைப் பற்றி பெருமிதம் கொள்ளும் அதேவேளை, ஏராளமான மக்கள் இரவில் குளிரில் வெளியில் உறங்குவதைப் படங்கள் காட்டுகின்றன. 

Evrensel நாளிதழின்படி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மலாத்யாவின் யேசில்யுர்ட் (Yesilyurt) மாவட்டத்திற்கு இதுவரை அரசின் நிவாரணங்களோ அல்லது உதவிகளோ கிடைக்கவில்லை. அங்கு நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் கூறியதாவது: “நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்களாகியும், இந்த மாவட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. இடிபாடுகளைத் தோண்டுவது முதல் மற்ற அனைத்து வேலைகளையும் நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் செய்தோம். இங்கு கழிப்பறைகள் இல்லாத நிலையில், நாங்கள் பல நாட்களாக திறந்தவெளிகளைப் பயன்படுத்துகிறோம். 13 நாட்களாக நாங்கள் குளிக்கவில்லை, அழுக்கு மற்றும் அசுத்தத்தால் நாங்கள் மூடப்பட்டுள்ளோம். இங்கு எந்த அரசும் கிடையாது.” 

ஒரு வயதான பெண், “பல நாட்களாக மக்களிடமிருந்து மட்டுமே உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசு சார்பான ஒருவரையும் நாங்கள் பார்க்கவில்லை. சூடான உணவு எமக்கு கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சூப் கிடைக்கும். இந்நிலையில், எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, எங்களுக்கு வீடு இல்லை, எங்கு தங்குவது என்றும் தெரியவில்லை” என்று கூறினார்.  

துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தலைமையகம் (Turkey’s Disaster and Emergency Management Presidency-AFAD) மூலம் அமைக்கப்பட்டுள்ள கூடார நகரங்களில் குறிப்பாக தொற்றுநோய்கள் பரவுவதற்கான சிக்கல்கள் உள்ளன. மராஸின் பஸார்சிக் மாவட்டத்தில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் (SES) நிர்வாகியான பேராசிரியர் டாக்டர் சிபெல் பெர்சினெல் Evrensel இடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “கழிவறை மற்றும் குளியலறை தேவையை பூர்த்தி செய்ய முடியாது. AFAD குழு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை. ஒரு நோயாளியின் கால்கள் குடல் புழுவால் பாதிக்கப்பட்டு அதனை, துண்டிக்கமுடியாமல் இருப்பதை நாங்கள் கண்டோம்” எனறு தெரிவித்தார்.

மேலும், துருக்கியில் சிரிய அகதிகள் எதிர்கொள்ளும் பயங்கரமான சூழ்நிலையையும் அவர் சுட்டிக்காட்டினார்: “இங்கு சிரிய குடும்பங்களின் நிலைமை இன்னும் கடினமானது. அவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வாழ்கிறார்கள் மற்றும் தகவல்தொடர்பு பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர். தன்னார்வலர்கள் இங்கு அதிக நோய் தடுப்பு சுகாதார சேவைகளை வழங்க முடியும். சுகாதார நிலைமைகள் கூடிய விரைவில் மேம்படுத்தப்படாவிட்டால், நிகழக்கூடிய நோய்தொற்று வெடிப்புக்களானது நிவாரணப் பணிகளை இன்னும் கடினமாக்கும்”.

பெப்ரவரி 6 அன்று ஒன்பது மணி நேரத்திற்குள் ஏற்பட்ட 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவுகள் கொண்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களை ‘நூற்றாண்டின் பேரழிவு,’ என்று விவரிக்கும் அதேவேளை, எர்டோகன் அரசாங்கம் இந்த தடுக்கக்கூடிய சமூகப் பேரழிவுக்கான பொறுப்பை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுவரை 133 பேர், பெரும்பாலும் ஒப்பந்ததாரர்கள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூத்த அரசு அதிகாரிகள் யாரும் இராஜினாமா செய்யவில்லை. 

இருப்பினும், சம்சுன் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹூசையின் சிம்சிட், ஜனாதிபதி எர்டோகன்; சுற்றுச்சூழல், நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் அமைச்சர் மூராட் குரும்; உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு; தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹூலுசி அகர்; சுகாதார அமைச்சர் பாஹ்ரெட்டின் கோகா; மற்றும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் அடில் கரைஸ்மைலோக்லு ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த குற்றப் பத்திரிகை, 1999 மற்றும் 2023 காலக்கட்டத்தில் பூகம்பத்தால் பேரழிவுக்குள்ளாகிய மாகாணங்களில் பணியாற்றிய மேயர்கள், நகராட்சி குழு உறுப்பினர்கள், திட்ட அதிகாரிகள் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைப்பு மேலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியது எனக் கூறப்படுகிறது.

இந்த தனிநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரும் இந்தப் புகார் மனுவானது, “கடமை புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோகத்தால் 36,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிட்டது,” “ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு வழிவகுத்தது” மற்றும் “நாட்டின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியது” போன்ற குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதாகும். 

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் மூலம் மட்டுமே, அரசியல் ஸ்தாபகத்திலும் தனியார் துறையிலும் உள்ள இந்த மாபெரும் சமூகக் குற்றத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

Loading