முன்னோக்கு

உக்ரேன் போர் விரிவாக்கத்தை நியாயப்படுத்த, வாஷிங்டன் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக" ரஷ்யாவை குற்றஞ்சாட்டுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.

உக்ரேன் மீதான போரில் அமெரிக்க-நேட்டோ துருப்புக்களை நேரடியாக நிலைநிறுத்துவதற்கான பொதுக்கருத்தை ஏற்படுத்தி, விரிவாக்கப்பட்டு வரும் ஒரு பிரச்சார நடவடிக்கையின் பாகமாக, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ரஷ்யா 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' நடத்தி வருவதாக சனிக்கிழமை முதல்முறையாக உத்தியோகப்பூர்வமாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டினார்.   

மூனீச் பாதுகாப்பு அவையில் பேசிய ஹாரிஸ், “ரஷ்யப் படைகள் அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக பரந்தளவில் திட்டமிட்ட தாக்குதலையும், கொலை, சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் நாடு கடத்தல் ஆகிய கொடூரமான செயல்களையும் நடத்தி உள்ளன. மரணதண்டனை பாணியில் படுகொலைகள், அடிப்பது மற்றும் மின்தாக்குதலுக்கு உள்ளாக்குதல். இடம்பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.

ஹாரிஸ் அறிவித்தார், “உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில், நாங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளோம். சட்ட தரநிலைகள் எங்களுக்குத் தெரியும். இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

ஊகிக்கத்தக்க வகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்ட சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இத்தகைய குற்றங்களின் வரையறையையே ஹாரீஸ் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஹாரிஸின் கருத்துக்களுக்கு பதிலளித்து, WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் பின்வருமாறு குறிப்பிட்டார், “ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக ஹாரிஸ் குறிப்பிடும் அந்தச் சட்ட சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை, 1945 இல் இருந்து ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும் செய்து வந்துள்ளன. (நிச்சயமாக, நகரங்கள் மீது நெருப்புக்குண்டுகள் (firebombing) வீசியதில் இருந்து மற்றும் ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசியதில் இருந்து தொடங்கி.)”

உண்மையில், அமெரிக்க அரசாங்கம் அதன் சொந்த அதிகாரிகள் மீதான  விசாரணைக்கும் சர்வதேச சட்ட அதிகாரத்தை அங்கீகரிப்பதில்லை, ஆனால் எந்தவொரு புறநிலை நெறிமுறைகளின்படி பார்த்தால், இப்போது உயிரோடிருக்கும் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் போர் குற்றங்களுக்கான தீர்ப்பாயத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்களாவர்.

வியட்நாம் போரின் போது, படுகொலை மற்றும் சொத்துக்களை அழிப்பதன் மூலம் அப்பாவி மக்களை மிரட்டும் ஒரு கொள்கையை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. “ஒரு கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக அதை அழிப்பது' என்று பத்திரையாளர் பீட்டர் ஆர்னெட் ஓர் அமெரிக்க தளபதியைக் குறித்து குறிப்பிடுகையில் பயன்படுத்திய வரிகளை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியது.

கொள்கைரீதியில், வியட்நாமின் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் திட்டமிட்டுக் கொல்வதற்காக, அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அங்கே நியமிக்கப்பட்டார்கள். அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட எந்தவொரு நபரும், அது ஒரு குழந்தையாக இருந்தாலும், 'எதிரி போராளி' என்று வகைப்படுத்தப்படுவார்கள். அந்த மோதலின் போது ஏறக்குறைய 1 மில்லியன் வட வியட்நாமிய மக்கள் கொல்லப்பட்டார்கள்.

மை லாய் படுகொலைக்குப் பின்னர், சாலையில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதைக் காட்டும் இந்த புகைப்படம், மார்ச் 16, 1968 இல் அமெரிக்க ஆயுதப்படையின் புகைப்பட வல்லுனர் ரோனால்ட் எல். ஹேபர்லேயால் எடுக்கப்பட்டது [Photo: US Army]

மை லாய் படுகொலையில், அமெரிக்க துருப்புக்கள் 347 இல் இருந்து 504 வரையிலான நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றனர். அந்தச் சிப்பாய்களில் ஒருவர் கூறியது போல, இது 'ஒரு நாஜிகள் செய்த  மாதிரியான விஷயம்: ஒரு அதிகாரி [ஒரு குழியில்] இருந்த அனைவரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுடுமாறு ஒரு குழந்தைக்குக் கட்டளையிட்டார்.” அமெரிக்க சிப்பாய்கள் திட்டமிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை வெட்டி கொல்வதற்கு முன்னர், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்கள். அதில் சுமார் 10 வயது குழந்தைகளும் இருந்தனர். இதைச் செய்த குற்றவாளிகளில் யாருமே சிறைக்கு அனுப்பப்படவில்லை.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா உலகளவில் இராணுவ வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியது. வேண்டுமென்றே பொதுமக்களை மட்டுமல்ல, மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் இலக்கில் வைத்தது.

1999 இல் யூகோஸ்லாவியா மீதான நேட்டோ குண்டுவீச்சில், அமெரிக்க இராணுவம் திட்டமிட்ட முறையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் மக்கள் ஒலி/ஒளிபரப்பு நிலையங்களை இலக்கு வைத்தது. 'ஒவ்வொரு வாரமும் நீங்கள் கொசோவோவை நாசமாக்குகையில், இன்னொரு தசாப்தத்திற்கு உங்களைத் தகர்த்து உங்கள் நாட்டை நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோம்' என்று நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் பிரீட்மேன் அறிவித்தார். “உங்களுக்கு 1950 வேண்டுமா? எங்களால் 1950 ஐ ஏற்படுத்த முடியும். உங்களுக்கு 1398 வேண்டுமா? எங்களால் 1398 ஐயும் ஏற்படுத்த முடியும்.”

ஈராக் மீதான 2003 படையெடுப்புக்கு முன்னர், பாக்தாத் மீது 'அதிரடி அதிர்ச்சி' குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இறுதியில் அதில், அமெரிக்க துருப்புகள் அல்லது அவற்றின் கூட்டாளிகளின் கரங்களால் 275,000 முதல் 306,000 வரையிலான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

மார்ச் 21, 2003 இன் இந்தப் பழைய புகைப்படத்தில், அமெரிக்க தலைமையிலான படைகள் ஈராக்கின் பாக்தாத் மீது கடுமையாக குண்டுவீசியதில் ஓர் அரசு கட்டிடம் தீப்பற்றி எரிகிறது [AP Photo/Jerome Delay]

இந்தப் போர்களில், அமெரிக்கா சித்திரவதையைக் கொள்கைரீதியில் கருவியாகப் பயன்படுத்தியது. ஈராக்கின் அபு கிரைப் இருள் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை அடித்து, கற்பழித்து, படுகொலை செய்வதை அமெரிக்க துருப்புகள் அவர்களே புகைப்படம் எடுத்துள்ளார்கள். மின்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ஒருவரை முகமூடி அணிவித்து ஒரு பெட்டியின் மீது நிற்க வைத்திருப்பதைக் காட்டும் புகைப்படமே அபு கிரைபின் மிகவும் பிரபல்யமான புகைப்படம் என்பதை வைத்து பார்த்தால், “மின்தாக்குதலுக்கு உட்படுத்தி கொல்வதை' குறித்து ஹாரீஸ் குறிப்பிடுவது, மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

அபு கிரைபில் ஓர் ஈராக்கிய கைதியை ஓர் அமெரிக்க சிப்பாய் அச்சுறுத்துகிறார் [Photo: Washington Post]

அக்டோபர் 3, 2015 இல், ஆப்கானிஸ்தானில், ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க விமானப்படை Médecins Sans Frontières (MSF) மருத்துவமனை மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியது. அதில் 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை, வேண்டுமென்றே நடத்தப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் என்றும் போர்க்குற்றம் என்றும் MSF குறிப்பிட்டது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) உடன் சேர்ந்து எலன் கோஸ்டிகன் ஒரு பதாகை ஏந்தியுள்ளார். ஆப்கானிஸ்தானின் குண்டூஸில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் (MSF) தீவிர சிகிச்சை மருத்துவமனை மீதான அக்டோபர் தாக்குதல் மீது ஒரு சுதந்திரமான விசாரணைக் கோரும் மனுவை வெள்ளை மாளிகைக்கு வழங்குவதைக் குறிக்கும் ஒரு நிகழ்வில், டிசம்பர் 9, 2015, புதன்கிழமை, அவரும் மற்றவர்களும், வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள லஃபாயெட் பூங்காவில் நிற்கின்றனர் [AP Photo/Carolyn Kaster]

'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' சம்பந்தமாக மொத்தம் 14,000 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா, அரசு கொள்கையின் ஒரு வழிவகையாகப் படுகொலைகளை நடத்துகிறது. இவற்றில் பெரும்பான்மை ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்டது. புலனாய்வு இதழியல் அமைப்பின் தகவல்படி, இந்த ட்ரோன் தாக்குதல்களில் 10,000 முதல் 20,000 வரையிலான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

'குழந்தைகள் உட்பட நூறாயிரக்கணக்கான மக்களை ரஷ்ய அதிகாரிகள் உக்ரேனில் இருந்து ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தியுள்ளனர்' என்றும், ரஷ்யா 'குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து கொடூரமாகப் பிரித்துள்ளது' என்றும் ஹாரிஸ் வலியுறுத்தினார். ஆனால் பைடென் நிர்வாகம் 4 மில்லியன் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து, நாடு கடத்தியது அல்லது வெளியேற்றியுள்ளது. இந்தக் கொடூரமான குடியேற்றக் கொள்கை, வழமையாக இந்த செயல்பாடுகளில் குடும்பங்களைச் சிதைக்கின்றன.

ரஷ்யாவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய முந்தைய அமெரிக்க பிரகடனங்களைப் போலவே, ஹாரிஸின் கருத்துக்கள் ரஷ்யாவின் வீட்டு வாசலில் வாஷிங்டன் நடத்தி வரும் போரை இன்னும் பெரியளவில் விரிவாக்குவதற்கான சாக்குபோக்கை வழங்குவதற்காகவே இருந்தன.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா உக்ரேனுக்கு முக்கிய போர் டாங்கிகளை வழங்கிய பின்னர், F-16 போர் விமானங்களையும், அத்துடன் அவற்றில் சேவையாற்ற 'படைத்துறைசாரா ஒப்பந்ததாரர்களையும்' அனுப்ப செயலூக்கத்துடன் தயாரிப்புகளைச் செய்து வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில், அமெரிக்க ஊடகங்கள் உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைக்கத் தொடங்கி உள்ளன. இந்த வாரயிறுதி தலையங்கம் ஒன்றில், வாஷிங்டன் போஸ்ட் 'இராணுவ முறுக்கேறிய ஒரு படைப்பிரிவைக் களத்திற்கு' அனுப்புமாறு நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்காவின் முன்னணி அரசியல் விவாத நிகழ்ச்சியான Meet the Pres இன் தொகுப்பாளர் சக் டொட், 'அங்கே களத்தில் நேட்டோ தரைப்படையோ அல்லது அமெரிக்க தரைப்படையோ நிலைநிறுத்தாமல், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் புட்டினைத் தோற்கடிக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

வார இறுதியில், முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி அலெக்சாண்டர் விண்ட்மேன் அசோசியேட்டெட் பிரஸ்ஸுக்கு அளித்த ஒரு பேட்டியில், உக்ரேனில் அமெரிக்க தலையீடு செய்வதற்கான எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். '[வெள்ளை மாளிகை] உக்ரேனியர்களுக்குத் தேவையான அனைத்தையும், எதை வேண்டுமானாலும் வழங்கும் என்பதில் நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்,' என்றவர் தெரிவித்தார். 'இது வெறும் ஒரு கால அவகாசம் சார்ந்த விஷயமாகத் தான் இருக்கப் போகிறது.”

ரஷ்ய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்வதாக பைடென் நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாகக் குற்றஞ்சாட்டுவதன் மூலம், ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா இலக்கில் வைத்த மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதியையே ரஷ்ய தலைவர்கள் முகங்கொடுக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த மோதலை நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு முழு அளவிலான போராக மாற்றுவதற்காக, அமெரிக்கா, இராஜாங்க வழிவகைகள் மூலம் தீர்ப்பதற்கான எஞ்சியுள்ள எல்லா பாதைகளையும் அடைக்க முயன்று வருகிறது.

அமெரிக்காவின் குற்றகரமான தன்மை, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை நியாயப்படுத்தாது. அது அமெரிக்கா மற்றும் நேட்டோவால் ரஷ்யா சுற்றி வளைக்கப்பட்டதற்குக் காட்டப்பட்ட ஒரு திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான விடையிறுப்பாகும். ஆனால் அமெரிக்கா உக்ரேனிய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தவும், இலஞ்சங்கள் வழங்கவும் மற்றும் அடிபணிய செய்யவும் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டுள்ளதுடன், அந்நாட்டை நடைமுறையளவில் அமெரிக்காவின் ஒரு காலனியாக மாற்றி, திட்டமிட்டு முறையாக இந்தப் போரை தூண்டியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்வரலாறை எப்படி ஆராய்ந்தாலும், வாஷிங்டன் ஏதாவதொரு குற்றத்திற்கு ஆளாகி இருப்பதைத் தெளிவுப்படுத்துகிறது. ஓர் அணுஆயுதமேந்திய சக்தியுடன் போரைத் தூண்டியதன் மூலம், அமெரிக்கா இதுவரையிலான அதன் இரத்தக்களரிகளிலேயே மிகப் பெரிய ஒன்றை நடத்த தயாராகி வருகிறது. அதன் விளைவுகளை உக்ரேன் மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தைப் போலவே அமெரிக்க தொழிலாள வர்க்கத்தாலும் உணரப்படும்.

இந்த விரிவடைந்து வரும் பேரிடர் தடுக்கப்பட வேண்டும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், சோசலிச முன்னோக்கினதும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தினதும் அடிப்படையில் போருக்கு எதிராக ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப அணிதிரள வேண்டும்.

Loading