வாஷிங்டன் அதன் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கை தொடருகையில், நிலநடுக்கத்தால் அழிவுற்ற சிரியா எந்த உதவியுமின்றி கைவிடப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் சிரியாவில் பலியானவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை அண்ணளவாக 6,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கின்றனர் என்ற நிலையில், இறந்தோர் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்பட வேண்டியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5.3 மில்லியன் சிரிய மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. அவர்களில் பலர் ஏற்கனவே, 11 ஆண்டுகால, அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் போரானது நாட்டை பேரழிவிற்கு உட்படுத்தியதோடு, 300,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களை பலிகொண்டுள்ளது.

சர்வதேச உதவிகளில் பெரும்பங்கு துருக்கிக்கு வழங்கப்பட்டு விட்டதால், சிரியா உதவியின்றி தவித்து வருகிறது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். சிரிய மக்கள், “கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள். மேலும் கிடைக்காத சர்வதேச உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளருமான மார்டின் கிரிபித்ஸ் சமீபத்தில் கூறினார்.

நிலநடுக்கத்திற்கு முன்பே, அண்ணளவாக 90 சதவீத மக்கள் அங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தனர். கிட்டத்தட்ட 14.6 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள்தொகையில் அண்ணளவாக 70 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களாக உள்ளனர். மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் விநியோக வீழ்ச்சியால் சுமார் 12 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.

மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் விடப்பட்டதுடன், அதே நேரத்தில் பெரும்பாலான வீடுகள் குளிர்காலத்தில் வீடுகளை சூடாக்கும் வசதி இல்லாமல் இருக்கின்றன.

இந்த நிலைமைகளுக்கு நெருக்கடிக்குள்ளாக்கும் பாரியளவிலான ஒருதலைப்பட்ச அமெரிக்க பொருளாதாரத் தடைகளும் காரணமாகும். சீசர் சட்டம் (Cesar Act) என்று அழைக்கப்படுவதன் கீழ், சிரியாவுடன் இணைந்து செயலாற்றத் துணியும் எந்தவொரு நாடு அல்லது வெளிநாட்டு நிதி நிறுவனம் அல்லது பிற நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.

சிரிய மக்கள் வேண்டுமென்றே பசி பட்டினியுடன் போராட கைவிடப்படவிடும் இந்த நிலைமையானது, அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு பிரதேசங்கள் மீதான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு மேலும் பங்களிக்கின்றது. அதாவது, அந்நாட்டின் புனரமைப்புக்குத் தேவையான அதன் முக்கிய எரிசக்தி ஆதாரங்களை அது அணுக முடியாமலாக்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்கைக்குப் பின்னால், ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் நோக்கில் வெளிப்படையாக கூறப்படாத மற்றும் இதுவரை தோல்வியுற்ற நோக்கம் உள்ளடங்கியுள்ளது. அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் நிதியையும் வழங்குவதன் மூலம் வாஷிங்டன் எதை சாதிக்கத் தவறியதோ அதை இப்போது சிரிய மக்கள் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் மீது பாரிய துயரங்களை சுமத்துவதன் மூலம் சாதிக்க முயல்கிறது. 

இதேபோல், ஈரான், கியூபா மற்றும் வெனிசுலாவுக்கு எதிராக கையாளப்பட்ட இந்த தந்திரோபாயமானது அந்நாட்டு மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்திருந்தாலும், இதுவரை தோல்வியடைந்துள்ளது.

அதிகரித்து வரும் சர்வதேச சீற்றத்தையும் அழுத்தத்தையும் எதிர்கொள்கையில், வாஷிங்டன், சிரியாவிற்குள் பூகம்ப நிவாரணத்தை அனுமதிக்க அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தற்காலிகமாகவும் மற்றும் பகுதியளவிலும் இடைநிறுத்தம் செய்வதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. இந்த இடைநிறுத்தம் 180 நாட்களுக்கு நீடிக்கும் என்று கருதப்படுகிறது. பின்னர் முழு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நடைமுறை மீண்டும் திரும்பும்.

சிரியா பொது உரிமம் 23 (General License 23) என்று முறையாக அறியப்படும் பொருளாதாரத் தடை இடைநிறுத்தத்தை அறிவிப்பதில், அமெரிக்க கரூவூலத் துறையானது, “சிரியா பொருளாதாரத் தடைகள் விதிமுறைகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும்  பூகம்ப நிவாரணம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு அமெரிக்க அரசாங்கத்தின் எல்லையற்ற பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. இது, இந்த கொடூரமான மற்றும் கொடிய பொருளாதாரத் தடைகளின் விதிமுறைகளானது மனிதாபிமான நிவாரணத்திற்கு எந்த தடையையும் முன்வைக்காது என்று நீண்டகாலமாக கூறி வந்துள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய் என்பது சிரிய மக்கள் ஏற்கனவே தெரிந்திருப்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. 

பொருளாதாரத் தடைகளின் பகுதியளவு இடைநிறுத்தமானது நிலநடுக்கத்திற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் தான் அறிவிக்கப்பட்டது என்ற நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை வெளியே எடுக்க போதுமான கனரக இயந்திரங்கள் மற்றும் ஏனைய உதவிகள் கிடைக்காமல் அதனால் இறந்து போன ஆயிரக்கணக்கானவர்களை மீட்க முடியாமல் அல்லது நிலநடுக்கத்தின் உடனடி பாதிப்புகளை எதிர்கொள்கையில் மருத்துவ வசதி அல்லது பாதுகாப்பான தங்குமிடங்களை அணுக முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவி கிடைப்பது மிகவும் தாமதமானது.

இப்போதும் கூட, அமெரிக்காவில் உள்ள சிரிய புலம்பெயர்ந்தோர், நிலநடுக்க மண்டலத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்தினருக்கு Western Union, Ria, MoneyGram போன்ற நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் இருந்து சிரியாவிற்கு பணம் அனுப்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. Paypal, GoFundMe மற்றும் Patreon போன்ற தளங்கள் சிரியாவிற்கு நிவாரணம் கோரும் பக்கங்களை அகற்றி, பேரழிவிற்குள்ளான நாட்டிற்கு உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளைத் தடுத்துள்ளன.

பெப்ரவரி 14, 2023, செவ்வாய்க்கிழமை, சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் ஜிண்டெரிஸ் நகரில் ஏற்பட்ட பேரழிவுகர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் தங்கள் மரப்பொருட்கள் மற்றும் வீட்டு பாவனைப் பொருட்களை அகற்றுகின்றனர் [AP Photo/Ghaith Alsayed]

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட விதிமுறையானது சிரிய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கக்கூடிய எந்த உதவியையும் தடுக்கிறது. இது கனரக உபகரணங்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதியைத் தடுக்கிறது, விமானப் போக்குவரத்தை முடக்கி மற்றும் சிரியத் துறைமுகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.

இதற்கிடையில், அமெரிக்க பழிவாங்கலுக்குப் பயந்து கடந்த காலத்தில் அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பெரிதும் இணங்கிய நிறுவனங்களும், ஏன் உதவி நிறுவனங்களும் கூட சிரியாவுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுவதில் தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், பைடென் நிர்வாகம் அதன் பங்கிற்கு துருக்கி மற்றும் சிரியா இரு நாடுகளுக்கும் மிக அற்பமாக 85 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இது, வாஷிங்டனின் ஆட்சி மாற்றப் போரில் சிரியாவை நாசப்படுத்திய பினாமி ஜிஹாதிப் படைகளுக்கு அது வாரி வழங்கிய பில்லியன்கள் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உதவிகளுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறியளவாகும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் வழங்கப்பட்டு வரும் சிறு உதவிகளானது சிரிய அரசாங்கத்தை இல்லாதொழிக்கும் அரசியல் ரீதியான நடவடிக்கையாகும். அதிலும் இந்த உதவிகூட, அசாத்தை வீழ்த்துவதற்கான ஆட்சி மாற்றப் போரில் முன்னர் சிஐஏ இன் ஆயுத உதவியும் நிதியுதவியும் பெற்ற அல் கொய்தா மற்றும் ISIS உடன் இணைந்த ஜிஹாதி ஆயுதக் குழுக்களின் எஞ்சியுள்ள ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் வடமேற்கு சிரியாவில் உள்ள இட்லிப் பகுதிக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டு வருகிறது.  

இது பிரிட்டிஷ் உளவுத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்பு அமைப்பு என்று அழைக்கப்படும் White Helmets இனை மேம்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2018 இல் டொமாவில் நடந்ததைப் போல, ஆட்சி மாற்றப் போரில் நேரடி அமெரிக்கா-நேட்டோ தலையீட்டிற்கு ஒரு சாக்குப்போக்காக இருந்த போலி இரசாயன ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இது பரவலாக மதிப்பிழந்து போனது. 

இட்லிப்பில் உள்ள ஜிஹாதிப் படைகள் சர்வதேச நிவாரணப் பொருட்களைத் திருடி, பின்னர் அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிக்கியுள்ள பட்டினியால் வாடும் அகதிகளுக்கு அதிகபட்ச விலைக்கு விற்பதாக ஒரு இழிவான தகவலும் உள்ளது. மேலும், துருக்கிய எல்லை எங்கிலும் சிறிதளவே வழங்கப்பட்ட பூகம்ப நிவாரணப் பொருட்களை கூட அபகரித்துக் கொள்ள அங்குள்ள போட்டி ஆயுதக் குழுக்கள் சண்டையிடுவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும், நிவாரண உதவிகளை வழங்க பொறுப்பாளியாகவுள்ள அசாத் அரசாங்கமே அதைத் தடுக்கும் குற்றவாளியாக இருப்பதாக ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. 

உண்மை என்னவென்றால், சிரியா அதன் வடக்கு எல்லையில் கிட்டத்தட்ட எதையும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, இட்லிப்பில் உள்ள ஜிஹாதிஸ அமைப்புகள், துருக்கிய ஆதரவு ஆயுதக் குழுக்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு குர்திஷ் ஆயுதக் குழு, கிழக்கில் YPG ஆகிய அமைப்புகளின் வசம் இப்பகுதி உள்ளது. அங்கு சிரிய இறையாண்மையை மீறியும், ஐக்கிய நாடுகள் சபையின் எந்த உத்தரவோ அல்லது அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலோ இல்லாமலும் 900 அமெரிக்க துருப்புக்கள் சட்டவிரோதமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இட்லிப் மாகாணத்தின் ஜிஹாதிஸவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய தவறியதற்கு சிரிய அரசாங்கத்தை வாஷிங்டன் குற்றம் சாட்ட முயன்றது. ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டுப் ஆயுதக்குழுக்களின் புழக்கம் சாதாரணமாகிவிடும் என்ற கவலையில், நிலநடுக்கத்திற்கு முன்பு டமாஸ்கஸ், துருக்கிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி துருக்கியிலிருந்து சிரியாவிற்கு ஒரேயொரு பாதை மட்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு பாதைகளைத் திறக்க ஐ.நா.வுடன் சிரியா ஒரு உடன்பாட்டை எட்டியபோது, White Helmets குழுவின் தலைவரான ரேட் அல்-சலே, அசாத் அரசாங்கத்திற்கு ‘சுதந்திரமான அரசியல் ஆதாயத்தை’ வழங்கியிருப்பதாகக் கூறி இந்த ஒப்பந்தத்தைக் கண்டித்தார்.

இதேபோல், சிரியாவில் அல் கொய்தாவின் ஒரு பிரிவான ஆதிக்கவாத ஜிஹாதிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கூட, Red Crescent உதவியமைப்பு ஏற்பாடு செய்திருந்த உதவி சரக்கு வண்டிகளின் வரிசையை சரகேப் வழியாக கடக்கும் பகுதிக்கு அனுப்புவதற்கு சிரிய அரசாங்கம் முயற்சித்ததை கண்டித்தது. இது தொடர்பாக, HTS செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம், “அவர்கள் உதவுவதாக காட்டுவதற்காக இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்த ஆட்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார். அதேவேளை, ஒவ்வொரு சரக்கு வண்டியையும் அங்கு நுழைய அனுமதிப்பதற்கு 10,000 டாலர் பணம் செலுத்துமாறு HTS கோரியதாக அறிக்கைகள் கூறுகின்றன.

நாட்டின் வடக்கு எல்லையைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க ஆதரவு மற்றும் துருக்கிய ஆதரவு போட்டி ஆயுதக் குழுக்களால் சிரியா கட்டுப்படுத்தப்படுவதானது, அப்பகுதிக்கு நிலநடுக்க நிவாரணம் கிடைப்பதற்கு ஒரு பெரிய தடையாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தெற்கு துருக்கியின் இடிபாடுகளில் இருந்து இழுத்து எடுக்கப்பட்ட சிரிய அகதிகளின் உடல்கள் எல்லையை கடக்கும் உதவிகளை விட மிகப் பொதுவானது என்று அல் ஜசீரா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. “புதன்கிழமை காலை நிலவரப்படி, 1,413 சிரியர்களின் உடல்கள் பைகளில் பொதியப்பட்டு தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்தன,” என்று அது தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக கூட, சிரியா கட்டுப்படுத்தப்படுவது அதை உணர வைக்கிறது, அதாவது சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து தப்பியோடிய சிரியர்கள் இப்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு சடலங்களாக அவர்களது சொந்த கிராமங்களுக்கு திரும்ப அனுப்புவதற்கு மறுக்கப்பட்டு, துருக்கியில் இறந்த ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அவர்களின் உடல்களும் புதைக்கப்பட்டன.

நிலநடுக்கத்தின் பயங்கரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான உலக ஒற்றுமை பற்றி பேசப்படும் அதேவேளை, சிரியாவில் போர் நடவடிக்கைகள் இன்னும் தடையின்றி தொடர்கின்றன.

சிரியாவின் எண்ணெய் வயல்களின் மேல் பகுதியில் அமைந்திருக்கும், மற்றும் ஒரு காலத்தில் அவற்றைச் சுரண்டிய அமெரிக்க எரிசக்தி நிறுவனத்தால் பெயரிடப்பட்டதான அமெரிக்க தளமான Mission Support Site Conoco இல் அமெரிக்க துருப்புக்களை கண்காணிப்பதாகக் கூறி ஈரானிய ஆளில்லா விமானத்தை (drone) அதன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பானது (SOHR), ஒரு துருக்கிய ஆளில்லா விமானம் சிரியாவின் கோபேன் நகரில் அமெரிக்க ஆதரவு YPG ஆயுதக் குழுவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இராணுவ வாகனத்தை தாக்கியுள்ளது. இதில் வெளிப்படையாக ஒரு ஆயுததாரி கொல்லப்பட்டு, மேலும் பலர் காயமடைந்தனர்.

சிரியாவின் பல்மிரா நகருக்கு தெற்கே ISIS உடன் இணைந்த படைகள் நடத்திய ஒரு ஆயுதத் தாக்குதலில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பத்து பேர் காயமடைந்தனர்.

மேலும் ஜிஹாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இட்லிப் பகுதியில், அரசாங்கப் படைகள் காரணமின்றி பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக HTS ‘கிளர்ச்சியாளர்கள்’ கூறினர். அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் ட்ரோன் தாக்குதலுக்கு அதன் துருப்புக்கள் பதிலடி கொடுத்ததாக டமாஸ்கஸ் பதிலளித்தது.

ஒன்று மட்டும் இங்கு நிச்சயம். அதாவது அசாத்தின் முதலாளித்துவ தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அடிபணிந்து கிடக்கக்கூடிய ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுவதற்கான தனது நோக்கத்தை வாஷிங்டன் இன்னும் கைவிடவில்லை.

பைடென் நிர்வாகமானது, கிட்டத்தட்ட ஒரு டஜன் வருடகால யுத்தம் மற்றும் பாரிய நிலநடுக்கத்திற்கு பின்னர் கூட சிரியாவை அவசரமாக மனிதாபிமான உதவி தேவைப்படும் ஒரு நாடாக கருதவில்லை. மாறாக, வாஷிங்டனின் இராணுவமும் அரசு இயந்திரமும், அசாத்தின் ஆதரவு பெற்ற மற்றும் சிரியாவின் மத்தியதரைக் கடல் துறைமுகமான டார்டஸில் அதன் ஒரே வெளிநாட்டு கடற்படை தளத்தை இயக்கும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் நடத்தப்படும் போரில் மற்றொரு போர்க்களமாகவே சிரியாவைப் பார்க்கிறது. 

மூன்று தசாப்த கால இடைவிடாத போருக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஆப்கானிஸ்தான் முதல் ஈராக், லிபியா மற்றும் சிரியா வரையிலான முழு சமூகங்களையும் அழிவிற்குள்ளாக்கிவிட்டது. மேலும், பசியினாலும் குளிரினாலும் அல்லது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் மூலோபாய எரிசக்தி வளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் உந்துதலை மேலும் தீவிரப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட இராணுவ மோதலில் இன்னும் நூறாயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கே அது தயாராக உள்ளது..

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும், மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் சிரியாவிற்கு எதிரான அனைத்து அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கும் உண்மையான மற்றும் நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றும் இந்நாட்டை ஆக்கிரமித்துள்ள அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் உடனடியாக மீளப் பெற வைக்கவும் கோர வேண்டும். இந்த கோரிக்கைகளானது, முதலாளித்துவ இலாப முறையின் மூலாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக போருக்கு எதிரான ஒரு பாரிய இயக்கம் கட்டமைக்கப்படுவதற்கு ஒருங்கே முன்வைக்கப்பட வேண்டும்.

Loading