மூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்குப் பின்னர் நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புட்டின் ஆட்சியின் உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்பு தொடங்கி ஓராண்டுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் ஒரு பாரியளவிலான போரைத் தீவிரப்படுத்த ஏற்பாடு செய்து வருவதானது, அணுவாயுத உலகப் போருக்கான அச்சுறுத்தலை பெரிதும் அதிகரிக்கிறது. 

திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கியேவிற்கு ‘திடீர் விஜயம்’ செய்தார். மேலும், கிரிமியா மற்றும் ரஷ்யாவின் மையப்பகுதிகளில் உள்ள இலக்குகளை உக்ரேன் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகள் உட்பட மேலதிக ஆயுத விநியோகங்களை அவர் அறிவித்தார். திரைக்குப் பின்னால் எடுக்கப்பட்ட மற்ற நீண்டகால விளைவுகள் பற்றிய முடிவுகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க ஊடகங்களில் F-16 ரக போர் விமானங்கள் நேட்டோ தரைப்படைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.  

போர் விரிவாக்க சுழல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை இந்த விஜயம் காட்டியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவனின் கூற்றுப்படி, பைடென் புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் வெள்ளை மாளிகை பைடெனின் திட்டமிட்ட கிரெம்ளின் விஜயம் பற்றி தெரிவித்தது. “இரண்டு அணுவாயுத சக்திகளுக்கு இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்” என்ற நோக்கில் Der Spiegel எழுதியது.

செவ்வாயன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது தேசத்திற்கான உரையில் ‘புதிய தொடக்க’ (“New Start”) ஒப்பந்தத்தில் ரஷ்யா பங்கேற்பதை அது நிறுத்துகின்றது என்று கூறினார். இந்த ஒப்பந்தம், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அணுவாயுத படைக்கலச்சாலைகளில் 800 விநியோக அமைப்புகள் மற்றும் 1,550 செயல்பாட்டு அணுவாயுதங்கள் வரை இருப்பு வைத்திருக்கலாம் என்று கட்டுப்படுத்துகிறது. ‘நாங்கள் அதிலிருந்து விலகவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் பங்கேற்பை இடைநிறுத்துகிறோம்’ என்று புட்டின் கூறினார். 

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடென், பெப்ரவரி 21, 2023, செவ்வாய்க்கிழமை அன்று, வார்சாவில் உள்ள ராயல் கேஸ்டில் கார்டனில் உரை நிகழ்த்துகிறார். [AP Photo/Evan Vucci]

செவ்வாய்க்கிழமை மாலை, வார்சாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அரச மாளிகையில் பைடென் மற்றொரு உரையை நிகழ்த்தினார். கடுமையான இழப்புகளுடனான ஒரு நீண்ட போரில் ‘கடினமான மற்றும் மிகவும் கசப்பான நாட்கள், வெற்றிகள் மற்றும் சோகங்கள்’ தொடர்ந்து இருக்கும் என்று அவர் தனக்கு முன் இருந்த ஒருசில பார்வையாளர்களுக்கு தெரிவித்தார். பின்னர் அவர் மிரட்டும் தொனியில் இவ்வாறு அறிவித்தார்: “உக்ரேன் ரஷ்யாவிற்கு ஒருபோதும் வெற்றியாக இருக்காது. உக்ரேன் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதை உறுதிசெய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்.”  

ஏற்கனவே வார இறுதியில் நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஏகாதிபத்திய சக்திகளின் தொலைநோக்கான போர் இலக்குகள் வெளிப்படையாக வகுக்கப்பட்டன: அதாவது, உக்ரேனில் ரஷ்யாவை முழுமையான இராணுவத் தோல்விக்கு உட்படுத்துவதும் மற்றும் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வளங்கள் நிறைந்த அந்நாட்டை பலவீனப்படுத்தி இறுதியில் அடிபணிய வைப்பதும் ஆகும்.  

“நம்மை அழிக்க நினைக்கும் கோலியாத்தை நாம் தோற்கடிக்க வேண்டும்,” என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறினார். டேவிட் என்றால் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அவர் மேலும் தொடர்ந்தார். மேலும் வெற்றி பெற, டேவிட் கோலியாத்தை தோற்கடித்தது போல், ‘ஆக்கிரமிப்பு ரஷ்யாவை’ தோற்கடிக்க நமக்கு ஒரு ‘கவண் தாக்குதல்’ தேவைப்படும் என்றார். ஆனால் உக்ரேனுக்கு இன்னும் அந்த கவண் கிடைக்கவில்லை என்று செலென்ஸ்கி மேலும் கூறினார்.

இந்த மாநாட்டின் முதல் நாளில் செலென்ஸ்கி பேசிய ஒளிப்பதிவு அங்கு ஒரு உறுதிப்பாட்டை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் நேட்டோ சக்திகளின் அரசாங்கத் தலைவர்கள், கியேவிற்கு இன்னும் அதிக வேகத்துடன் ஆயுத விநியோகம் மேற்கொள்ளப்பட்டு, ஒரு நிலையான இராணுவ விரிவாக்கத்தை உருவாக்குவதற்கான கோரிக்கைகளுடன் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் உத்தியோகபூர்வ உரை நிகழ்த்தியதுடன், அறிக்கைகளையும் வெளியிட்டனர்.   

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த, அதாவது வெற்றியின் அமைதியை நாட்டின் மீது திணிக்க அதிக இராணுவ உதவிக்கு அழைப்பு விடுத்தார். உக்ரேனியர்கள் ஒரு ‘எதிர் தாக்குதலில்’ ஈடுபடுவதற்கு ‘எங்கள் ஆதரவையும் முயற்சிகளையும் தீவிரப்படுத்துவது மிக முக்கியம்’ என்று அவர் கூறினார். மேலும், ‘வரவிருக்கும் வாரங்களும் மாதங்களும் முக்கியமானவையாகும். பிரான்ஸ் இன்னும் நீண்ட மோதலுக்கு தயாராக உள்ளது. இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான நேரம் இல்லை’ என்று அவர் கூறினார். 

ஏனைய நாடுகளுடன் இணைந்து உக்ரேனுக்கு போர் விமானங்களை வழங்க போலந்து தயாராக இருப்பதாக போலந்து பிரதமர் மாடேயுஸ் மோறாவிக்கி தெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கைக்கு ‘நேட்டோவின் தீர்மானம்’ முன்நிபந்தனையாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்பாக, நீண்டகாலமாக உத்தியோகபூர்வமாக கட்டுப்படுத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட ஜேர்மன் அரசாங்கம், இப்போது ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலில் முன்வரிசையில் நிற்கிறது. பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸூம் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸூம் தங்கள் உரைகளில், உக்ரேனுக்கான ஜேர்மன் இராணுவ ஆதரவைப் பற்றி பெருமை பேசியதுடன், ரஷ்யாவிற்கு எதிராக ஒரு டாங்கி இராணுவத்தை கட்டமைப்பதற்கு ‘பங்காளிகளிடம்’ கூடுதல் ஆதரவைக் கோரினார்.  

“உக்ரேனுக்கு கடந்த ஆண்டு ஜேர்மனி வழங்கிய ஆயுத உதவி 12 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமாகும்,” என்று ஷோல்ஸ் கூறினார். “ஐரோப்பா கண்டத்தில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட அதிகளவில் அதிநவீன ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவத் தளபாடங்களை உக்ரேனுக்கு நாங்கள் வழங்குகிறோம்” என்று அவர் கூறினார். மேலும், இது “எங்கள் கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு” ஒத்துழைப்பதாக மட்டுமல்ல, “ஜேர்மனியின் அளவு, அமைவிடம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபோன்ற காலங்களில் தோள்களில் சுமக்க வேண்டிய பொறுப்பை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்” என்பதை காட்டுவதற்காகவும் தான் என்று அவர் கூறினார். 

ஜேர்மனியின் ஆயுத விநியோகம் ஒரு நீண்ட, தீவிரமான போரை இலக்காகக் கொண்டது என்பதையும் ஷோல்ஸ் தெளிவுபடுத்தினார். “நாங்கள் அதை நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க ஆரம்பத்திலிருந்தே எங்கள் ஆதரவை வழங்குவது முக்கியம்” என்று அவர் கூறினார். “புதிய ஆயுத அமைப்புகளை வழங்குவதில் எங்களின் அளவுகோல் இதுவாகும்: அதாவது, சுயமாக-இயக்கப்படும் பீரங்கிகள் மற்றும் பல்குழல் ராக்கெட் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள், கவச வாகனங்கள், பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகள், மற்றும் மிக சமீபத்தில் வழங்கப்பட்ட மேற்கத்திய போர் டாங்கிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.” இது ‘எதிர்காலத்திலும்’ இப்படியே தொடரும்.

இதன் பொருள், “அத்தகைய போர் டாங்கிகளை வழங்கக்கூடிய அனைவரும் உண்மையில் இப்போது அதைச் செய்ய வேண்டும்,” என்று ஷோல்ஸ் தொடர்ந்து கூறினார். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்டோரியஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயபொக் ஆகியோருடன் சேர்ந்து, ஷோல்ஸ் இந்த விடயத்தை முழு வீச்சுடன் ஊக்குவித்தார். “எங்கள் கூட்டாளிகளுக்கு இந்த முடிவை எளிதாக்குவதற்கு ஜேர்மனி உதவும். உதாரணமாக, உக்ரேனிய படையினருக்கு ஜேர்மனியில் பயிற்சி அளிப்பதன் மூலம் அல்லது உக்ரேனுக்கு ஆயுதங்களையும் தளபாடங்களையும் வழங்கி ஆதரவளிப்பதன் மூலம் நாங்கள் உதவுவோம்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.  

பெப்ரவரி 20, 2023, திங்கட்கிழமை, ஜேர்மனியின் மன்ஸ்டரில் உள்ள ஜேர்மன் இராணுவ பயிற்சித் தளத்தில் உக்ரேனிய சிப்பாய்களுடன் ஒரு ஜேர்மன் அதிகாரி பேசுகிறார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், லியோபாட் 2 முக்கிய போர் டாங்கி மற்றும் மார்டர் காலாட்படை சண்டை வாகனம் ஆகியவற்றில் உக்ரேனிய சிப்பாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பகுதியை பார்வையிடுகிறார். [AP Photo/Gregor Fischer]

அதே மூச்சில், ஷோல்ஸ் “நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் இல்லை என்பதை அவர் உறுதி” செய்வதாக வலியுறுத்தினார். இந்தக் கூற்று மிகவும் அபத்தமானது. உண்மையில், நேட்டோ இராணுவக் கூட்டணி ரஷ்யாவுடனான போரில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளதோடு, மோதலை அதிகரித்து வருகிறது. இதை சமீபத்தில் பெயபொக் வெளிப்படையாக “நாங்கள் ரஷ்யாவிற்கு எதிராகத்தான் போராடுகிறோமே தவிர, ஒருவருக்கொருவர் எதிராக அல்ல,” என்று அவர் ஜனவரி பிற்பகுதியில் ஐரோப்பிய குழுவின் பாராளுமன்ற கூட்டத்தில் கூறினார்.   

ஜேர்மனியின் ஆளும் வர்க்கமானது இன்னும் விரிவான போர் இலக்குகளை தொடர்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2014 இல் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட அதன் பெரும் வல்லரசாகும் இலட்சியங்களை செயல்படுத்தவும், மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் இழந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் ஜேர்மனியை மீண்டும் முன்னணி இராணுவ மற்றும் போர் சக்தியாக உருவாக்கவும் தான் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை இது பயன்படுத்துகிறது. 

“இந்த மேடையில் இருந்துதான், ஜேர்மனி தனது பாதுகாப்புக் கொள்கைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி பேசப்படுகிறது,” என்று ஷோல்ஸ் கூறினார். மேலும், “நாங்கள் இந்த கோரிக்கையை பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்” என்று அவர் கூறினார். ஜேர்மனி, மற்ற விடயங்களுடன், தனது தலைமையின் கீழ் ஒரு ‘கூடுதல் படைப்பிரிவை’ லிதுவேனியாவிற்கு அனுப்பியது, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு வான் பாதுகாப்பு வழங்கி ஆதரித்தது, மற்றும் தற்போது நேட்டோ விரைவு தயார்நிலை படையை வழிநடத்துகிறது, “இதற்காக நாங்கள் 17,000 சிப்பாய்களை தயார்நிலையில் வைத்துள்ளோம்” என்றெல்லாம் சான்சிலர் பெருமை பேசினார்.

“இதையும், எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக சாதிக்க நாங்கள் ஆயுதப்படைகள் பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்,” என்று ஷோல்ஸ் தொடர்ந்து கூறினார். 100 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஜேர்மன் ஆயுதப்படை சிறப்பு நிதியானது இதற்கு ‘அடித்தளம் அமைத்தது’ என்பதுடன் ஆயுதப்படைகளின் ‘திறன்களின் வளர்ச்சியில் நிரந்தர பாதை மாற்றத்தை’ சாத்தியமாக்கியது. ஆனால் இராணுவச் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நிச்சயமாக, புதிய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் மற்றும் டாங்கிகள், வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்கள், பராமரிப்பு, பயிற்சிகள், பயிற்சி மற்றும் பணியாளர்களுக்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன,” என்று அவர் கூறினார். எனவே, ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீத அளவிற்கு நிரந்தரமாக உயர்த்தும் என்பதை அவர் மீளுறுதிப்படுத்தினார். பிஸ்டோரியஸ் அடுத்த ஆண்டு பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மேலும் 10 பில்லியன் யூரோக்கள் அதிகரிக்கப்படும் என்று எச்சரித்தார். 

ஆளும் வர்க்கம் ஜேர்மனியின் விரிவான இராணுவமயமாக்கலை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஐரோப்பா இராணுவமயமாக்கப்படுவதை கற்பனை செய்கிறது. “இந்த நிதிகளை புத்திசாலித்தனமாகவும் நிலையானதாகவும் முதலீடு செய்வதற்கு, ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் எங்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட மற்றும் போட்டி ஆயுதத் தொழில் தேவை,” என்று ஷோல்ஸ் கூறினார். எதிர்கால வான்வழி போர் அமைப்பு (Future Combat Air System), முக்கிய தரைப்படை போர் அமைப்பு (Main Ground Combat System), மற்றும் “ஜேர்மனியால் தொடங்கப்பட்ட, ஐரோப்பிய வான் பாதுகாப்பு (European Sky Shield) போன்ற பிரமாண்டமான ஆயுதத் திட்டங்களானது, “பாதுகாப்பான மற்றும் போதுமான போர் தளபாடங்கள் உள்ள ஐரோப்பாவை உருவாக்குவதை நோக்கிய” மற்றும் “அதிக புவிசார் அரசியல் திறன் கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவதை நோக்கிய” படிகள் ஆகும்.  

சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றி ஷோல்ஸ், பைடென் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மீண்டும் மீண்டும் கூறிவரும் அனைத்து வார்த்தைஜாலங்களும், முன்னணி நேட்டோ சக்திகளும் அவற்றின் பினாமிகளும் உக்ரேனில் ஒரு கண்ணியமற்ற ஏகாதிபத்திய போரை நடத்துகின்றனர் என்ற உண்மையை மறைக்க முடியாது. மூனிச்சில், உக்ரேனிய அரசாங்கத்தின் துணைத் தலைவர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ், கியேவுக்கு கிளஸ்டர் கொத்து குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் வழங்குமாறு அழைப்புவிடுத்தார். “நாங்கள் ஏன் அவற்றைப் பயன்படுத்த முடியாது?” என்று ஆத்திரமூட்டும் வகையில் அவர் கேட்டார். “இது எங்கள் பிரதேசம்” மற்றும் ஆயுதங்கள் ரஷ்ய இராணுவத்தை எதிர்த்து நிற்க உதவும் என்று கூறினார்.  

கிளஸ்டர் கொத்து குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. இந்த ஆயுதங்களின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவையாகும். ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகளை உள்ளடக்கிய கிளஸ்டர் கொத்து குண்டுகள் என்பவை, காற்றில் உடைந்து ஏராளமான சிறிய வெடிக்கக்கூடிய வெடிபொருட்களை வெளியிடுகின்றன. பொஸ்பரஸ் மிகவும் எரியக்கூடிய இரசாயனம் ஆகும், இதை அணைப்பது கடினமாகும். இது எலும்பிலுள்ள சதையை எரிக்கிறது மற்றும் அதன் நச்சுப் புகைகள் சுவாசக் குழாயின் கடுமையான தீக்காயங்களுக்கு வழிவகுக்கும். இரண்டு ஆயுதங்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மற்றும் கண்மூடித்தனமாக மக்களைக் கொல்லவும் சிதைக்கவும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.                                                                       

குப்ரகோவின் கோரிக்கையை நேட்டோ தலைவர்கள் பகிரங்கமாக நிராகரித்த போதிலும், அவர் யாரிடம் பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியும். இந்த பேரழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ஏகாதிபத்திய சக்திகள் ‘நிபுணர்கள்’ ஆவர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையின்படி, 1.8 முதல் 2 மில்லியன் துணை வெடிகுண்டுகளை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 13,000 கொத்துகுண்டுகள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் ஈராக் மீதான படையெடுப்பின் போது அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தால் பிரயோகிக்கப்பட்டது. மேலும், பல்லூஜாவின் அழிவின் போது பொதுமக்களுக்கு எதிராக வெண்பொஸ்பரஸ் கொண்ட ஏவுகணைகளும் குண்டுகளும் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டன. 

Loading