நிலநடுக்கத்தின் பேரழிவு தாக்கம் குறித்து ஒரு சிரிய வாசகரின் கடிதம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிரியாவிற்கும் துருக்கிக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு பயங்கரமான மனிதாபிமான பேரழிவை விட்டுச்சென்றுள்ளது....பேரிடர் மீட்புக்கான உச்சக் குழுவும், பேரிடர்களைச் சமாளிப்பதற்கும், பொதுக் கட்டிடங்களை காலி செய்வதற்கும் எழுதப்பட்ட அரசு திட்டங்கள் இருந்த போதிலும், இந்த அளவிலான பேரழிவைச் சமாளிப்பதற்கான எந்த அரசாங்கத் தயாரிப்புகளும் இருக்கவில்லை. பேரழிவிற்கு முன்னர், வாஷிங்டன் திட்டமிட்டு நிதியுதவி செய்த ஒரு பேரழிவுகரமான போரின் விளைவுகளால் நாடு பாதிக்கப்பட்டது. அது ஏற்கனவே இருக்கும் அரசாங்கத்தை தூக்கியெறிந்து, வெள்ளை மாளிகையின் உத்தரவுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டு ஒரு சார்புடைய ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது. 

சிரியாவின் ஹமா நகரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் [Photo: Sana.Sy]

மில்லியன் கணக்கான சிரியர்கள் தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இந்த நிலைமை ஒரு உண்மையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறினர், பலர் ஆயுத மோதல் பகுதிகளில் இருந்து சிரியாவிற்குள்ளேயே பல்வேறு நகரங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு தப்பி ஓடினர்….

300,000 க்கும் அதிகமான மக்கள் போரில் கொல்லப்பட்டதுடன், மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் ஊனமுற்றவர்களாகியதால், நாடு அதன் மனித வளங்களில் உண்மையான பற்றாக்குறைக்கு உட்பட்டது. ... உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்புகளைத் தேடி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடம்பெயர்ந்தனர். போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் சுகாதாரப் பாதுகாப்பும் ஒன்றாகும். மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களும் சேதமடைந்தன. மேலும் அவசரகால அமைப்பு ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் முதலுதவி வாகனங்களுக்கான உதிரிப் பாகங்களின் இழப்பால் இது மேலும் பாதிக்கப்பட்டது. இந்த சாதனங்களின் செயல்பாட்டிற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் கிடைக்காமையினால் MRIகள் மற்றும் CT படக்கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவ உபகரணங்களின் செயலிழப்பு பற்றி குறிப்பிட வேண்டியதில்லை.

பேரிடர்களுக்கான மருத்துவத் திட்டங்களைப் பொறுத்தமட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பொது சுகாதாரத் துறையில் பணியாளராக இருந்தபோது நான் பணிபுரிந்த பகுதியான இது... பயனுள்ள  திட்டங்களை உருவாக்குவதற்கான நிபந்தனைகளில் ஒன்றான தரவுத்தளம் இல்லாமை, பல்வேறு நிபுணத்துவ மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற மனித வளங்கள் இல்லாமையும் அடங்கும். இவை மனித வளங்களின் பற்றாக்குறை மற்றும் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதில் உள்ள சிரமம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது ...

சிரியாவில், பொது சுகாதாரத் துறையானது, கோட்பாட்டளவில், சுகாதார அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படுகிறது. இது அவசரகால அமைப்புக்கு கூடுதலாக சுகாதார மையங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பெரும்பகுதியை நிர்வகிக்கிறது. இந்த தரப்பினர் ஒவ்வொன்றும் பேரழிவுகளை சமாளிக்க ஒரு திட்டத்தை வைத்திருந்தாலும், மற்ற தரப்பினருடனான ஒருங்கிணைப்பு இல்லை.

வரலாற்று ரீதியாக பல பேரழிவுகரமான பூகம்பங்களுக்கு ஆளான ஒரு பகுதியில் நாடு அமைந்திருந்தாலும் கூட, நிலநடுக்க பேரழிவுக்கு தயாராக இல்லாதிருந்த பொது சுகாதாரத் துறையின் மோசமான பிரதிபலிப்பை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பது, கொள்கையளவில், பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் பணிகளில் ஒன்றாகும். இது சிரியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ளதுடன் இந்த அளவிலான பேரழிவை ஒருபோதும் அது கையாளவில்லை. இவை அனைத்திற்கும் மேலாக, திணறடிக்கும் எரிபொருள் நெருக்கடி மற்றும் நீண்ட மணிநேரம் மின்சார வெட்டால், பல சாதனங்கள் தங்கள் மின்கலங்களை மின்னேற்றம் செய்ய இயலவில்லை. இதன் விளைவாக தகவல்தொடர்புகள் சீர்குலைந்தது.

நிலநடுக்கம் அதிர்ச்சி போல் வந்ததுடன், யாரிடமிருந்தோ அல்லது எங்கிருந்தோ வர வேண்டிய அறிவுரைகளுக்காக காத்திருக்கும் மனநிலையின் விளைவாக அரசாங்கத்தின் பதில் தாமதமானது என்பது முதல் நொடியில் தெரிந்தது... எனவே, சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் அனுபவம் மற்றும் தேவையான உபகரணங்கள் இரண்டும் இல்லாதவர்களால் இடிபாடுகளின் கீழ் தேடுதல் தொடங்கப்பட்டது ...

மறுபுறம், வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்ற பொது கட்டிடங்களிலும், வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டதால், மக்களின் பிரதிபலிப்பு அற்புதமாக இருந்தது. கட்டிட தொழில் வழங்குனர்கள் தமது பாரம்தூக்கிகளை வழங்கியபோதும் இடிபாடுகளையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அடைவதில் பெரும் சிரமம் இருந்தது. கனரக வாகன ஓட்டிகளுக்கு 24 மணி நேரமும் பணியில் ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் வாகனங்களின் உரிமையாளர்கள் கருத்தின்படி வாகன ஓட்டுனர்களே அந்த வாகனங்களுக்கு பொறுப்பு என்பதால், அவர்கள் மற்றவர்களிடம் வாகனத்தை கையளிக்க இயலாதிருந்தனர். 

வீட்டுப் பிரச்சனை

அலெப்போ நகரில், 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துடன், 100,000 க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் 30,000 பேர் மட்டுமே அரசு நடத்தும் கட்டிடங்களில் தங்கியிருந்தனர் ... இது பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரின் போது அழிக்கப்பட்ட, 60 சதவீதமான கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் ஒரு நகரத்தில் நடந்தது. பூகம்பம் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அலெப்போவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. மற்றும் கட்டிட உரிமையாளர் பாதுகாப்பு விதிகள் அல்லது சிரியாவின் பொறியியல் குறியீட்டைக் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக 16 பேர் இறந்தனர். கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதில் அரசின் பின்னடைவு, பாதுகாப்பு நிலைமைகளைக் கவனிக்காமல் கட்டுமானத்தில் மோசமான பொருட்களைப் பயன்படுத்தத் தயங்காத ஒப்பந்தக்காரர்களின் பேராசையுடன் சேர்ந்துள்ளது….

கடலோர நகரமான ஜப்லேவில், டசின் கணக்கான புதிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் பண்டைய ரோமானிய நாடக அரங்க கட்டிடத்தில் இருந்து ஒரு கல் கூட விழவில்லை ... நகரத்திலிருந்து இடம்பெயர்ந்த ஜப்லே கிராம மக்கள், பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது ஒற்றுமையை காட்டினர். ஆனால் இது தொடர இயலாது. அப்பகுதியின் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஏற்கனவே கடினமான பொருளாதார நிலைமைகள் பற்றி புகார் செய்கின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த குடும்பங்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை கூட வழங்க முடியாதுள்ளனர்.

குடியிருப்புகளை தற்காலிகமாக வாடகைக்கு எடுப்பது ஒரு தீர்வாக இருக்கும் என்று சிலர் நம்பினர். ஆனால் ஊக வணிகர்கள் நெருக்கடியைப் பயன்படுத்தி வாடகையை இரட்டிப்பாக்கியுள்ளனர். ஜப்லே நகரின் வாடகை பேரழிவிற்கு முன் மாதத்திற்கு 150,000 பவுண்டுகளில் இருந்து  (இந்தத் தொகை ஏற்கனவே ஆயிரக்கணக்கான சிரியர்களின் மாத வருமானத்தை தாண்டியது) மாதத்திற்கு ஒரு மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது...

பேரழிவைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் உணவுப் பொருட்களின் விலையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பொது உயர்வு ஏற்பட்டது ... துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் டீசல் எரிபொருளின் விலையை குளிர் காலத்தில் வீடுகளை வெப்பமாக்குவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக பாவிப்பதற்கு உயர்த்த முடிவு செய்தது. இது உணவு விலையில் மற்றொரு உயர்வை ஏற்படுத்தியது.

பொதுமைப்படுத்தப்பட்ட வறுமை

நாட்டில் பொதுமைப்படுத்தப்பட்ட வறுமை உள்ளது. 90 சதவீத மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். மேலும் தேசிய நாணயத்தின் மதிப்பின் சரிவுக்குப் பிறகு சிரியாவிற்கு வெளியே வசிக்கும் குடும்ப உறுப்பினர்களால் அனுப்பப்பட்ட உதவியிலேயே பெரும் குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு டொலருக்கு நான்கு சிரிய பவுண்டுகள் மாற்று விகிதம் இருந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் ... 2010 இல் டொலருக்கு 45 சிரிய பவுண்டுகள் அடையும் வரை தேசிய நாணய நிலைமை மோசமடைந்தது. ஆனால் இன்று, ஒரு டொலர் ஏழாயிரம் பவுண்டுகள் வரை விற்கப்படுகின்றது.

பேரழிவுக்கு முன், வெளிநாடுகளில் இருந்து மாற்றப்படும் டொலர்களின் மதிப்பை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுத்தது. அது டொலருக்கு இரண்டாயிரம் பவுண்டுகளுக்கும் குறைவான நிர்ணய விலையை பல ஆண்டுகளாக கைப்பிடித்துக் கொண்டிருந்தது. இது  நாணய ஊக வணிகர்களின் கறுப்புச் சந்தையின் தோற்றத்திற்கு வழி வகுத்தது...

பொருளாதார நிலைமை ஒரு மூச்சுத்திணறும் நெருக்கடிக்கு வழிவகுத்தது. ஒரு ஸ்ராலினிசப் பிரிவினரால் வெளியிடப்பட்ட Qasioun செய்தித்தாள், குறைந்தபட்ச உணவுச் செலவுகள் குறைந்தபட்ச ஊதியத்தின் 1,441 சதவீதத்திற்குச் சமம் என்று மதிப்பிட்டுள்ளது! வீட்டு வாடகை, போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளை செலுத்துவதில் உள்ள சுமைகளை குறிப்பிட தேவையில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 14 மில்லியன் சிரியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் பதில்

அரசாங்கத்தின் பிரதிபலிப்பு ஒழுங்கமைக்கப்படாததாகவும் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் பேரழிவின் அளவு ஆகியவற்றின் தரவு இல்லாததால் தெளிவான பார்வை இல்லாதிருந்தது. இருப்பினும், சிரியர்கள் அரசாங்கம் அதன் சமூகப் பாத்திரத்தை கைவிட்டதிலிருந்து அதனை நம்பியிருக்கவில்லை. மாறாக, பெரும் செல்வம் உள்ளவர்களும், அதிகாரத்துவ இயந்திரத்தில் செல்வாக்கு உள்ளவர்களும், பெரும் பகுதி மக்களை வறுமையில் ஆழ்த்துவதன் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை அறுவடை செய்வதற்கான வாய்ப்பை வழங்கிய நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

மறுபுறம், பலர் பேரழிவை நேர்மறையாக எதிர்கொண்டனர். மேலும் பலர் பொது முன்முயற்சிகளால் பணம் மற்றும் பொருள் நன்கொடைகளை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் புகலிடப் பகுதிகளுக்கும் வழங்கியிருந்தனர்.

நிலநடுக்கத்தால் அழிந்ததை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு $30 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் நாடு எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, வீடுகளை இழந்தவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான தங்குமிடத்தைப் பாதுகாப்பதாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்குவதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. ஆனால் முன்மொழியப்பட்ட கடன்களின் மதிப்பு, கட்டுமானத்திற்காக இலவச நிலம் வழங்கப்பட்டாலும், ஒரு அறையைக் கட்டுவதற்கான செலவை ஈடுகட்டாது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், வீட்டு வளாகங்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், அணைகள் என நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய அரசின் கட்டுமான நிறுவனங்கள், கடந்த ஆண்டுகளில் முடங்கியுள்ளன. இன்று, அழிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இடமளிக்கக்கூடிய வீட்டுத் திட்டங்களை நிர்மாணிக்கும் திறன் கொண்ட எந்தவொரு நிறுவனமும் நாட்டில் இல்லை. மறுபுறம், போர் மற்றும் முற்றுகையின் செல்வாக்கின் கீழ் ஸ்தம்பிதமடைந்த ஆயிரக்கணக்கான வீட்டு பிரிவுகளை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் அவை தனியார் சொத்துக்களாகும்.

மேற்கத்திய நாடுகள் சிரியாவிற்கு தீவிரமான உதவிகளை வழங்கத் தவறியதன் மீதான மக்களின் ஏமாற்றத்தை, அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் தூக்கி எறிய பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்த அரசாங்கத்துடனான உறவுகளை மீட்டெடுப்பதை இது குறிக்கும் என்ற போலிக்காரணத்தினை நிராகரிக்க முடியாது. சில அரபு அரசாங்கங்கள் சில உதவிகளை வழங்க முன்முயற்சி எடுத்தது உண்மைதான். ஆனால் அந்தத் தொகை சிறியது மற்றும் துருக்கிக்கு உதவ இதே அரசாங்கங்கள் வழங்கியதுடன் ஒப்பிட முடியாது. மறுபுறம், பல அரபு நாடுகளில் இருந்து பணம், உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் நன்கொடைகள் உள்ளிட்ட பிரபலமான முயற்சிகள் இருந்தன.

சுருக்கமாக, சிரியாவின் நிலைமை பேரழிவு தரக்கூடியது. மேலும் பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி உலகளாவிய பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். மற்றும் சிரியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை நிறுத்த வேண்டும்.

Loading