உக்ரேனிய இளைஞர்கள் ஒரு வருட நேட்டோ-ரஷ்யா போரைப் பற்றி பேசுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நாட்டில் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் பேரழிவைத் தவிர வேறொன்றையும் எதிர்கொள்ளவில்லை. நவம்பரில், அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி மார்க் மில்லி, உக்ரேனும் ரஷ்யாவும் தலா 100,000 இராணுவத்தை பலிகொடுத்திருப்பதாகக் கூறினார். போரின் போது பல மாதங்களாக, உக்ரேனால் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தினசரி இறப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கான படையினருக்கும் அதிகமாக இருந்தது. பாரிய படுகொலையின் அளவைப் பற்றிய ஒரு அரிய அறிகுறியாக, உக்ரேனிய இராணுவத்துடன் டொன்பாஸில் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படையினர் ABC செய்தியிடம், 'போர்முனையில் ஆயுட்காலம் நான்கு மணிநேரமே ஆகும்' என்றும் பக்மூத்தில் நிலைமை ஒரு 'இறைச்சி அரைப்பதை' போல் இருந்தது எனவும் தெரிவித்தார்.

ஆனால் கொடூரமான இராணுவ உயிரிழப்புகள், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரின் மைய அரங்காக மாற்றப்பட்ட நாட்டை வேதனைப்படுத்தும் பேரழிவின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது. போருக்கு முன்பே, உக்ரேன் ஐரோப்பாவின் ஏழ்மையான நாடாக இருந்தது. முதலாளித்துவத்தின் ஸ்ராலினிச மறுசீரமைப்பு மற்றும் தொடர்ச்சியான IMF சிக்கன திட்டங்களின் விளைவாக அதன் மக்கள் கசப்பான முறையில் சுரண்டப்பட்டு வறிய நிலையில் இருந்தனர்.

போருக்கு மத்தியில், இந்த போக்கு பாரியளவான முறையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நேட்டோ சக்திகள் பல்லாயிரக்கணக்கான டாலர்களை உக்ரேனிய இராணுவத்திற்காகவும், பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல உதவுகின்ற ஆயுதங்களுக்காகவும் செலவிட்டதாலும், மக்களில் பெரும்பாலோர் உண்மையில் பட்டினியால் வாடியுள்ளனர். உலக பசி வரைபடத்தின்படி, உக்ரேனில் இன்னும் வசிக்கும் 30 மில்லியன் மக்களில் 12.8 மில்லியன் பேர் போதிய உணவு இல்லாமல் அவதிப்படுகின்றனர். போருக்கு முந்தைய மக்கள் தொகையான 39 மில்லியன் பேரில் சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கிழக்கில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான குறிகாட்டிகள் குறிப்பாக அதிகமாக உள்ளன. டொனெட்ஸ்க் பிராந்தியத்திலுள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது  54 சதவீதம் அல்லது 2 மில்லியன் மக்கள் போதிய உணவு நுகர்வின்மையால் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும், 8.2 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 22.9 சதவீதம் பேர் போதிய உணவு உட்கொள்ளவில்லை. இவை ஐரோப்பாவின் மிக மோசமான குறிகாட்டிகளாகும்.

18 வயதான ரோமன் கோவலென்கோ, வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12, 2022 அன்று கிழக்கு உக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்கில் அவரது நண்பரான ஒலெக்சாண்டர் ப்ருஜினா (18வயது) இனை  சந்தித்துவிட்டு வெளியேறுகின்றார் [AP Photo/David Goldman]

உலக சோசலிச வலைத் தளம் உக்ரேனின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல இளைஞர்களுடன் போரின் தொடக்கத்திலிருந்து அவர்களின் அனுபவங்களைப் பற்றி பேசியிருக்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து பதில்களும் அநாமதேயமாக்கப்பட்டுள்ளன.

போரின் முதல் வருடத்தை அவர் எப்படி அனுபவித்தார் என்ற கேள்விக்கு, மோதலின் பெரும்பகுதி போர்முன்னணியில் இருந்த டினிப்ரோபெட்ரோவ்ஸ்கிலிருந்து ஒரு இளைஞன் பின்வருமாறு பதிலளித்தார். 'முதல் ஆண்டில், பயங்கரமான குண்டு வெடிப்புகளை நான் தொடர்ந்து அனுபவித்தேன். இப்போது குறைவாக உள்ளன, ஆனால் இன்னும் சிலவேளை கேட்கின்றது. போர் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஒரு ஆச்சரியம்போல் வந்தது. இது மிகவும் திடீரென்று நடந்தது” என்றார்.

வயது இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞன் தெற்கு உக்ரேனில் கடுமையான போர்களை கண்டதை நினைவு கூர்ந்தான்.

2021 இன் தொடக்கத்தில் கஜகஸ்தானில் ரஷ்ய படையினர்கள் மற்றும் ரஷ்ய ஆயுதங்களின் உதவியுடன் அங்கு நடந்த போராட்டங்களை ஒடுக்குவதை நான் பார்த்தபோது, ஒரு போர் நிகழும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த நேரத்தில் என்னை அப்படி நினைக்க வைத்தது, ரஷ்யாவில் இன்னும் தேசிய பேரினவாத நலன்களால் உந்தப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல. ஏனென்றால் இந்த போரை அதற்குள் மட்டுப்படுத்த முடியாது. ஆனால் ரஷ்யாவின் உயிர்வாழ்வு பற்றிய கேள்வி இதில் முன்வைக்கப்பட்டது. உக்ரேனிய எல்லைக்கு நெருக்கமான பகுதிகளில் இராணுவப் பயிற்சியின் போது மிகவும் பதட்டமான சூழ்நிலை பற்றி எனக்கு நினைவிருக்கின்றது.

நிச்சயமாக, ரஷ்யா தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும், செலென்ஸ்கிக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுப்பதாகவும் அப்போது பேசப்பட்டது. ஏனெனில் அவரை ஆதரிக்காதவர்கள் புட்டினை ஆதரிப்பார்கள். அந்தநேர மனநிலைக்கு இரண்டு பொதுவான காரணிகள் இருந்தன என்று நான் கூறுவேன். ஒருபுறம், போர் தொடங்குவதற்கு இன்னும் சிறிது நேரம் மட்டுமே இருப்பதாக பலர் உணர்ந்தனர். ஆனால் மறுபுறம், அது இப்போது அவ்வாறானது ஒன்று நடக்காது என்று அவர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் பலர் பதற்றத்திலும் பயத்திலும் வாழ்ந்தனர். ஆனால் புட்டின் தாக்க மாட்டார் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருந்தது. போர் தொடங்கியபோது, புட்டின் மிகவும் நல்லவர் என்று அவர் எப்படி நினைத்தார் என்று என்னிடம் கூறிய ஒரு நூலகரிடம் நான் பேசினேன். ஆனால் இப்போது அவர் தாக்கினார். அது எப்படி சாத்தியம் என்று அவருக்குப் புரியவில்லை என்றார்.

இரண்டு உக்ரேனிய ஆயுதம்தரித்த கவசவாகனங்கள் ரஷ்ய எல்லையைத் தாண்டியபோது புட்டின் DNR [ டொனெஸ்க் மக்கள் குடியரசு] மற்றும் LNR [லுகான்ஸ்க் மக்கள் குடியரசு] ஆகியவற்றை அங்கீகரித்தபோது, ரஷ்ய கூட்டமைப்பு துருப்புக்கள் அந்த எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன. டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியின் முழுப் பகுதியும் DNR மற்றும் LNR இன் பகுதியாக இருக்க வேண்டும் எனக்கூறப்பட்டபோது போர் தவிர்க்க முடியாதது என்பதை நான் அறிநது கொண்டேன்.

போருக்கு முன்பும், போர் தொடங்கியபோதும் புட்டின் கியேவை கைப்பற்றுவார் என்று நினைத்தோம். அவர்கள் எங்கள் நகரத்திற்கும் வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். முதல் எச்சரிக்கை ஒலிகள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முதல் வெடிகுண்டு பாதுகாப்பு பதுங்குகுழிகள் எவ்வாறு திறக்கப்பட்டன என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பெப்ரவரி மாத இறுதியில் எனது நகரத்திற்கு அருகில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடந்தன என்பது எனக்கு நினைவிருக்கிறது. க்ரூஸ் ஏவுகணைகள் நம்மைக் கடந்து பறந்தது எனக்கு நினைவிருக்கிறது. டிசம்பர் இரண்டாம் பாதியில், எங்களுக்கு மேலே, இரவில், வான் பாதுகாப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது பலத்த வெடி சத்தமும் மற்றும் தீயும் மளமளவெனவும் பற்றியெரிந்தது.

உக்ரேனின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், நேரடிச் சண்டைகளால் குறைந்த பாதிப்புக்குள்ளாகி இருந்போதிலும், கடுமையான பொருளாதார மற்றும் சமூகச் சரிவின் பிடியில் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டில் நிலவும் தீவிர சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் குறித்து அவர்கள் பேசினர். போரின் காரணமாக பொருளாதாரம் முற்றிலும் சரிந்துள்ள நிலையில், உழைக்கும் வயதினரில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது வேலையில்லாமல் உள்ளனர்.

ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியாவை எல்லையாகக் கொண்ட மேற்கு உக்ரேனில் உள்ள டிரான்ஸ்கார்பதியா பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், “வேலை நிலைமை பயங்கரமானது, எந்த விதமான ஒரு பகுதிநேர வேலையும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. சாதாரணமாக உயிர்வாழ்வதற்கு கூட ஒரு பகுதிநேர வேலைகூட கிடைக்காமை, மக்களின் சமூக தொடர்புகளை ஒரு முட்டுச்சந்தியில் நிறுத்துகின்றது. வேலையின்மையால் மக்கள் ஒதுக்கப்பட்டு சமூக ஏணியின் அடிமட்டத்தில் விழுவதை நாம் இவ்வாறு பார்த்திருக்கவில்லை. போருக்கு முன்பு பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்குச் சென்று இன்னும் அங்கேயே இருப்பவர்களின் நிலைமை சிறப்பாக உள்ளது. இது உக்ரேனில் இன்னும் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வாய்ப்பளிக்கிறது”.

ஒடெசாவில், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் மிகவும் உயர்ந்த நிலைகள் குறித்து ஒரு இளைஞர் கருத்துத் தெரிவித்தார். 'விலைகளின் தாராளமயமாக்கல்' இனி அரசினால்   கட்டுப்படுத்தப்படாததால் ATB யில் (ஒரு மளிகைக் கடை சங்கிலி) மலிவான பாலாடைக்கட்டிகளை வாங்க 'இனி நீங்கள் செல்லமுடியாது' என்ற நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்று வலியுறுத்தினார். ஏனெனில் அவை அனைத்தின் விலைகளும் அதிகரித்துவிட்டன. எல்லாமே விலை உயர்ந்ததாகிவிட்டது. வேலையின்மையைப் பொறுத்தவரை - இது பொதுவாக பரவலாக உள்ளது; சேவைத் துறை மட்டுமே சில வேலைகளை வழங்குகிறது, ஆனால் அது வேலை இல்லை, அது அடிமைத்தனம்” என்றார். 

தெற்கு உக்ரேனின் மற்றொரு பகுதியில், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போதிய உணவு உட்கொள்ளக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர் என ஒரு இளைஞன் குறிப்பிட்டார். “எனது ஊரில் உணவு விஷயத்தில் எல்லாம் என்னிடம் உள்ளது. மேலும், எங்கள் பகுதி போர்முனைக்கு அருகில் இருப்பதால், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நகர அதிகாரிகளிடமிருந்து உதவிப் பொதிகளைப் பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில், 1 மற்றும் 2 வது குழுவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை பங்கீட்டுப்பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை அவற்றைப் பெறத் தொடங்கினர்.

இருப்பினும், அருகிலுள்ள நகரமான நிகோலேவில், நிலைமை மிகவும் கடினமாக இருந்தது. இங்கே, “என் வயது இளைஞர்கள் உணவைப் பெற குப்பைத் தொட்டியில் தோண்டுகிறார்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன, எல்லாமே மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டன”.

இந்த மிகப்பெரிய சமூக நெருக்கடி மற்றும் இடைவிடாத நேட்டோ போரின் விரிவாக்கத்திற்கு மத்தியில், அசோவ் பட்டாலியன் போன்ற வெளிப்படையான பாசிச சக்திகள் மற்றும் ஸ்டீபன் பண்டேரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களை அரசு ஊக்குவிப்பது நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.

டினிப்ரோபெட்ரோவ்ஸ்கில் உள்ள ஒரு இளைஞன், 'இது பயங்கரமானது, குறிப்பாக அசோவ், அவர்கள் நாஜிக்களின் ஸ்வஸ்திகா சின்னங்களை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி வீரர்களாக முடியும்? ஆம், இந்த பட்டாலியன்களில் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள், ஆனால் இன்னும், பண்டேரா ஒரு உண்மையான நாஜி, அவர் எப்படி ஒரு வீரனாக இருக்க முடியும்? ஒடெஸாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், “இவ்வாறுதான் மக்களைச் சுற்றி ஒரு தகவல் வெற்றிடம் உருவாகிறது. இதன் மூலம், இந்தக் கருத்துக்கள் அனைத்தும் தேசபக்தியின் ஒரு வடிவமாக, திகைப்பூட்டும் வீரியத்துடன் புகுத்தப்படுகின்றன. மேலும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட ஏற்கனவே ‘துரோகம்’ போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அதே நகரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் குறிப்பிட்டார், “பாசிசத்தை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை எடுத்துக்காட்டாக, ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் இசை அமைப்புகளிலும், கச்சேரி நிகழ்ச்சிகளிலும், வானொலிகளிலும் மற்றும் உக்ரேனிய அரசாங்கத்தின் கொள்கையையிலும் கவனிக்க முடியும். போர்க்காலத்தின் போது தேசியவாதம் குறிப்பாக அப்பட்டமான வடிவத்தைப் பெற்றுள்ளது. மேலும் இது பொது இடங்களில் கருத்தியல் சுவரொட்டிகள் உட்பட பிற தகவல் ஆதாரங்களையும் பாதிக்கிறது”.

மற்றொருவர், “தேசியவாதத்தினை ஊக்குவிக்கின்ற பிரச்சாரம் பிரதான ஊடகங்களில் உள்ள ஒவ்வொரு கலாச்சார மூலத்திலிருந்தும் வருகிறது. பல்வேறு சமூக வலைப்பின்னல்கள் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்கள் மூலம் இளைய தலைமுறையினரை குறிவைத்து ஒரு தனிப் பிரிவு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டு நிகழ்வுகளின் ஒரு பெரிய திருத்தல் நடைபெறுகிறது: தெருப் பெயர்கள் மாறி வருகின்றன, ஆளும் வர்க்கத்தின் படி 'சுதந்திரத்திற்காக' போராடாதவர்களின் நினைவுச்சின்னங்கள் இடிக்கப்படுகின்றன”.

டிரான்ஸ்கார்பதியாவில் ஒரு இளைஞன் பின்வருமாறு கூறினார். “இந்தப் போரை ஆதரிப்பவர்களால் செய்ய முடியாத குற்றங்கள் எதுவும் இல்லை என்பதை ஒரு வருட யுத்தம் காட்டியுள்ளது. இந்தப் போரில் இரு தரப்பினராலும் மிக அதிகமான விலை கொடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மோதலுக்கு சமாதானமான தீர்வு கிடைக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. மாறாக, இந்த அழிப்புப் போர் இறுதியில் ஒரு தரப்பை வளங்கள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் வைக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலை விரைவில் வராது”.

தெற்கு உக்ரேனில் உள்ள அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் ஒருவர், உக்ரேனில் உள்ள தொழிலாள வர்க்கம் 'தனது சொந்த நலன்களையும், தொழிலாளர்களை இந்தப் போருக்கு அனுப்புபவர்களின் நலன்களையும் புரிந்து கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தினார். உக்ரேனிய பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும். அதற்கு, அதை வெற்றியை நோக்கி நகர்த்தக்கூடிய ஒரு முன்னணிக் கட்சி இருக்க வேண்டும்.

Loading