2025க்குள் சீனாவுடனான போருக்கு அச்சுறுத்தல் விடுத்த பிறகு, அமெரிக்கா தைவானுக்கு படைகளை அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனா தனது சொந்தப் பிரதேசம் எனக் கூறும் தைவானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்துகிறது. 2022 ல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் வழியில் பெய்ஜிங்குடன் போரைத் தூண்டும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து சில டசின் மைல்கள் தொலைவில் உள்ள தைவானை ஒரு இராணுவத் தளமாக அமெரிக்கா தீவிரமாக மாற்றி வருகிறது. இத்தீவின் மீது சீனாவை படையெடுக்கத் தூண்டுவதற்கான மற்றும் ‘சீனாவின் ஆக்கிரமிப்பின்’ விளைவாகத்தான் எதிர்வரவிருக்கும் போர் உருவாகும் என்று விபரிப்பதற்கான நோக்கத்தில் அமெரிக்கா இதைச் செய்து வருகிறது.

பெப்ரவரி 23, 2023 அன்று, கடற்படையினர் நியமன மையமான சான்டியாகோவில், முதலாவது நியமன பயிற்சி பட்டாலியனான டெல்டா படைப்பிரிவுடன் இணைந்து அமெரிக்க கடற்படை ஒரு ஊக்கமளித்தல் பயிற்சியை நடத்துகிறது

இந்த அறிவிப்பானது, இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க வான்வழிப் பகுதியில் பறந்த சீன ஆராய்ச்சி பலூனைத் தாக்கிய பைடென் நிர்வாகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சூழலை வழங்கியிருக்கிறது. அமெரிக்கப் பகுதி அல்லது அதன் கடலோரப் பகுதியில் விமானம் ஒரு சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 

இந்தத் தாக்குதலும், அதற்கு முந்திய ஊடக வெறித்தனமும், சீனாவைப் பற்றிய பொது வெறியையும் அச்சத்தையும் தூண்டும் முயற்சியில் பயன்படுத்தப்பட்டது. இது உலகின் மறுபக்கத்தில் ஒரு பாரிய அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துகிறது. 

ஜனவரி மாதம், Air Mobility Command இன் தலைவரான தளபதி மைக் மினிஹான், ‘2025 இல் நான் சண்டையிடுவேன் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது’ என்று தனக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்புக்காக அவர்களின் 'தனிப்பட்ட பொறுப்புக்களை' எடுக்குமாறு அவர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மற்றும் செப்டம்பர் மாதங்களில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், தைவான் மீது சீனா படையெடுத்தால், சீனாவுடனான போருக்கு அமெரிக்கா தயாராக இருக்கும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு இறுதியில் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து துருப்புக்களின் அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அமெரிக்காவின் பல தசாப்தங்கள் பழமையான ‘ஒரே சீனா கொள்கையை’ கைவிடுவதை காட்டுகின்றது. இந்த கொள்கையின் கீழ் வாஷிங்டன் நடைமுறையில், தைபேக்கு நேரடியாக இராணுவ உதவியாளர் மூலம் கடிதம் அனுப்பி, தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவிற்கான ஒரே அரசாங்கமாக பெய்ஜிங் ஆட்சியை அங்கீகரித்துள்ளது. 

அமெரிக்க மக்களின் ஆணையின்றி செயல்படுவதை அறிந்த பைடன் நிர்வாகம், தைவானில் அமெரிக்க துருப்புக்களின் பாரிய விரிவாக்கத்தை குறைந்தபட்ச பொது கவனத்துடன் மேற்கொள்ள முயல்கிறது.

ஒவ்வொரு முறையும் வெள்ளை மாளிகை உலகை அணுஆயுத அழிவுக்கு நெருக்கமாக கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுக்கும்போது, ஒரு​​தொடர் நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன. தைவானில் அமெரிக்க துருப்புக்களை அதிகரிப்பதற்கான அதன் நோக்கத்தை வெள்ளை மாளிகை வியாழனன்று பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தியது. ஆரம்ப அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, அடுத்த நாள் அல்லது பல வாரங்களுக்குப் பிறகு 'வெள்ளிக்கிழமை இரவு செய்தி விளக்க மாநாட்டில்' இந்த நகர்வுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். 

“சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிரான பயிற்சிக்காக தைவானில் துருப்புக்களின் பிரசன்னத்தை அமெரிக்கா விஸ்தரிக்க வேண்டும்,” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இவ்வாறு தெரிவித்துள்ளது: “தைவானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. தீவின் இராணுவத்திற்கான பயிற்சித் திட்டத்தை மேம்படுத்த தற்போதைய துருப்புகளின் எண்ணிக்கையை அது நான்கு மடங்காக உயர்த்துகிறது.”

அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் அனைத்து பிரிவுகளும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கான தயாரிப்புகளின் பின்னணியில் ஒன்றுபட்டுள்ளன. புதனன்று, சீனா குறித்த சபையின் புதிய தேர்வுக் குழுவின் தலைவரான விஸ்கான்சினின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான மைக் கல்லாகர், “நேற்றையதினம் தைவானை முற்றாக  ஆயுதமயமாக்குவதற்கான நேரம் இது என்று இன்னும் உறுதிபட” தமக்குத்தாமே அறிவித்தார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்களை ஊக்குவிக்க ஊடகங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், ‘Meet the Press,’ தொலைக்காட்சி மதிப்பீட்டாளரான சுக் டோட், ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கோரி புக்கரிடம், “தைவான் குறித்த சீனாவுடனான போருக்குத் தயாராவதற்கு நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆதரிக்கப் போகிறீர்களா? இந்த தகுதிநிலைக்கு தயாராக நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டுமா?” போன்ற கேள்விகளை கேட்டார். 

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு வருடத்திற்கு முன்பு அங்கிருந்த சுமார் 30 துருப்புக்களில் இருந்து, எதிர்வரும் மாதங்களில் தீவுக்கு 100 க்கும் 200 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிடுகிறது. பென்டகன் விளம்பரப்படுத்தாமல் இருக்க முயற்சித்த பயிற்சித் திட்டத்தை பெரிய படை விரிவுபடுத்துகிறது. அத்தோடு, பெய்ஜிங்கைத் தூண்டிவிடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான திறன்களை தைபேக்கு வழங்க அமெரிக்கா வேலை செய்கிறது.”

ஜேர்னல் மேலும், “தைவான் குறித்த பயிற்சிக்கு அப்பால், மிச்சிகன் தேசிய காவல்படை தைவான் இராணுவத்தின் ஒரு குழுவிற்கும் பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சி பற்றி நன்கு அறிந்தவர்களின் கருத்துப்படி, வடக்கு மிச்சிகனில் உள்ள கிரேலிங் முகாமில் பல நாடுகளுடனான வருடாந்திர பயிற்சிகளின் போது நடத்தப்படும் பயிற்சிகளும் இதில் அடங்கும்” என்று தொடர்ந்து கூறியது.

பெப்ரவரி 2022 உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை அமெரிக்கா சாக்காக பற்றிக் கொண்டு அதன் பாதுகாப்புச் செலவினங்களை பாரியளவில் விரிவுபடுத்தியுள்ளதோடு, ரஷ்யாவை விட அதிகமாக சீனாவை குறிவைக்கிறது.  

டிசம்பரில், அமெரிக்க பொதுச் சபையும் காங்கிரஸும் 858 பில்லியன் டாலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை (NDAA) அங்கீகரிக்க பெரியளவில் வாக்களித்தது. அதாவது, அது வெள்ளை மாளிகையால் கோரப்பட்டதை விட 45 பில்லியன் டாலர் அதிகமானதும், மேலும் இது பென்டகன் கோரியதை விட மிக அதிகமாக இருந்தது.   

இந்த வரவு செலவுத் திட்டமானது கடந்த ஆண்டை விட எட்டு சதவீத அதிகரிப்பையும், 2016 பென்டகன் வரவு செலவுத் திட்டத்தை விட இராணுவச் செலவினங்களில் 30 சதவீத அதிகரிப்பையும் குறிக்கிறது. கடந்த 12 மாதங்களில் பொதுவாக அமெரிக்க குடும்பத்தின் உண்மையான வருமானம் மூன்று சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், இராணுவச் செலவினங்களில் இந்த பாரிய அதிகரிப்பு நிகழ்கின்றது. 

இந்த மசோதா ஒவ்வொரு இராணுவத் துறைக்கும் ஆயுதத் திட்டத்திற்குமான நிதியை அதிகரிக்கிறது. அமெரிக்க கடற்படையானது, மூன்று Arleigh Burke வகை நாசகாரி கப்பல்கள் மற்றும் இரண்டு வேர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட, புதிய போர்க்கப்பல்களுக்கு 32 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டைப் பெறும். மேலும், 36 F-35 ரக போர் விமானங்களை வாங்க பென்டகனுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் தோராயமாக 89 மில்லியன் டாலர் விலைமதிப்பு உள்ளதாகும். 

“இந்த ஆண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டமானது, அமெரிக்க இராணுவ, அரசியல் பலத்தில் முதலீடு செய்வது, இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்க நிலைப்பாட்டை வலுப்படுத்துவது, மற்றும் நமது நட்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றின் மூலம் சீனாவுடனான எதிர்கால மோதலுக்குத் தயாராகும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது,” என்று குடியரசுக் கட்சி பிரதிநிதி கல்லாகர் கூறியுள்ளார். 

தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டமானது, தைவானுக்கு முதன்முறையாக 10 பில்லியன் டாலர் நேரடி இராணுவ நிதியுதவியை வழங்கி வாஷிங்டனின் முந்தைய ஒரே சீனா கொள்கையை முடிவிற்கு கொண்டுவரும். இந்த மசோதா, பொதுவாக போர்க்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதான ஏலமில்லாத ஒப்பந்த முறையை நிறுவும் என்பதோடு, பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து அவர்கள் விரும்பும் தொகையை வசூலிக்க அனுமதிக்கும். 

உக்ரேன் ரஷ்யாவுடனான போருக்கான அமெரிக்கப் பிரதிநிதியாகச் செயல்படுவதைப் போலவே, தைவானை சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கான முன்னணிப் பினாமியாக இந்த மசோதா மாற்றுகிறது. ஒரு செய்திக் குறிப்பில், கல்லாகர் இந்த மசோதா “உக்ரேனைப் போலவே தைவானையும் ஆயுதம் ஏந்தச் செய்வதற்கு இதேபோன்ற அங்கீகாரத்தை தைவானுக்கு வழங்குகிறது” என்ற உண்மையைப் பாராட்டினார்.

தைவானில் அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற இராணுவமயமாக்கலும் மற்றும் சீனாவுடனான போருக்கான அமெரிக்க தயாரிப்புகளும், தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் எந்தளவிற்கு உலகளாவிய இராணுவக் கொந்தளிப்பாக உருவெடுக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

Loading