முன்னோக்கு

உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் அதன் இரண்டாம் ஆண்டில் நுழைகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பெப்ரவரி 24, 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்து இன்று ஒரு வருடம் நிறைவடைகிறது. நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கத்தாலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களாலும் தூண்டப்பட்ட இந்தப் போர், பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளுடன் மூன்றாம் உலகப் போரை நோக்கி விரிவடைந்து வருகிறது.

ஏறக்குறைய ஒவ்வொரு போரின் ஆரம்ப கட்டங்களிலுமே, அரசாங்கங்கள் தற்காப்புக்காக செயல்படுவதாகக் கூறுவதுடன், யார் 'முதலில் சுட்டது ' என்ற பிரச்சினையிலேயே ஒருமுனைப்படுகின்றன. எதிரியைப் பூதாகரமாக காட்டும் நோக்கில் இடைவிடாத அட்டூழிய பிரச்சாரமும் வழமையாக இதைப் பின்தொடர்கிறது. ஆனால், தவிர்க்க முடியாமல், உயிரிழப்புகள் குவிந்து, இரண்டு தரப்பிலும் ஆரம்ப எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, ஆழமான காரணங்களும் உந்தும் காரணிகளும் வெளிப்படுகின்றன. உக்ரேன் போரும் இப்படித் தான் உள்ளது.

இந்தப் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதற்கு ஒரு நாள் முன்னர், வியாழக்கிழமை, பெப்ரவரி 23, 2023 இல், உக்ரேனின் கார்கிவ் பகுதியில் நடந்த ஒரு பயிற்சியில், 3 வது தனி டாங்கிப் படைப்பிரிவின் உக்ரேனிய சிப்பாய்கள் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த மோதல் அதன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இது ரஷ்யாவுக்கு எதிராக அதன் நேட்டோ துணைநாடுகளுடன் சேர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அறிவிக்கப்படாத போராக இதுவரை இருந்தாலும், இந்த மோதல் பகிரங்கமாக உருவெடுத்துள்ளது. பொய்கள் அம்பலப்பட்டு வருகின்றன. இந்தப் போர் உக்ரேனில் இருந்திராத 'ஜனநாயகத்தின்' பாதுகாப்புக்காக நடத்தப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், இது உக்ரேனைப் பாதுகாப்பது சம்பந்தமானது கூட இல்லை. மாறாக இதுவொரு ஏகாதிபத்திய போராகும். ரஷ்யாவை இராணுவரீதியில் தோற்கடித்து, அதன் அரசாங்கத்தை அகற்றி, ஒரு கைப்பாவை ஆட்சியை ஏற்படுத்துவதையே அதன் நோக்கமாக கொண்டுள்ளது. ரஷ்யாவின் பரந்த இயற்கை வளங்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கும், யூரேசிய பெருநிலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், சீனாவுடனான போருக்குப் பாதையை உருவாக்குவதற்காகவும் இந்த விளைவு எதிர்நோக்கப்படுகிறது.

இந்த நோக்கங்களைப் பின்தொடர்வதில், அமெரிக்காவும் நேட்டோவும் முன்னர் அறிவித்த அனைத்து 'எச்சரிக்கைக் கோடுகளையும்' கடந்து வருகின்றன. 2023 இன் வெறும் முதல் இரண்டு மாதங்களிலேயே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குப் போர் டாங்கிகள், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை அனுப்புவதாக அல்லது அனுப்பத் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளன.

பைடென் இந்த வாரம் கியேவ் மற்றும் வார்சோவிற்கான அவது பயணத்தில், ரஷ்யாவின் ஒரு மூலோபாய தோல்வியே போரின் இலக்கு என்பதை மீண்டும் வலியுறுத்தினார். ரஷ்யாவுக்கு ஏதேனும் விதத்தில் விட்டுக்கொடுக்கும் வகையில் ஒரு போர் நிறுத்தம் மற்றும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை. பைடென் நிர்வாகம் பின்வாங்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் அவ்வாறு செய்வது அதன் மதிப்பையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்துவிடும் என்பதோடு, நேட்டோவின் உடைவுக்கும் வழிவகுக்கும். இந்தப் போரில் வெற்றி என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உயிர்பிழைப்புக்கான கேள்வியாக மாறியுள்ளது.

விலைகொடுக்கக் கூடியவர்களாக பார்க்கப்படும் உக்ரேனிய வெகுஜனங்களின் நிலைமை, ஆழ்ந்த பெரும் துயரமாக உள்ளது. போர்க்களத்தில் உக்ரேனின் எல்லா முக்கிய முன்னேற்றங்கள் குறித்து கூறப்பட்டாலும், அந்த கைப்பாவை அரசின் மக்கள் தான் இரத்தம் சிந்தி வருகிறார்கள். ரஷ்ய தரப்பில் பாரியளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள், தெளிவான ஆதாரம் இல்லாமல், பெருமை பேசும் அதேவேளையில், பயங்கரமான அளவில் உக்ரேனிய இழப்புகளைக் குறித்து ஏறக்குறைய முழுமையாக அங்கே மவுனம் நிலவுகிறது. கொல்லப்பட்ட உக்ரேனிய படையினர்களின் எண்ணிக்கை 150,000 முதல் 200,000 வரை இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன. பைடென் நிர்வாகத்தின் நவ-பழமைவாத போர்வெறியர்களால் ஒரு தலைமுறை உக்ரேனிய இளைஞர்கள் பலியாக்கப்பட்டு வருகிறார்கள்.

உக்ரேனிய ஆட்சியைப் பெருமைப்படுத்துவதற்கான அனைத்து பிரச்சார முயற்சிகள் இருந்தபோதிலும், முன்னாள் கோமாளி நடிகர் செலென்ஸ்கி, அந்நாட்டைக் கட்டுப்படுத்தும் ஊழல் நிறைந்த தன்னலக்குழுக்களுக்கும் மற்றும் இராணுவத்திற்குள் வேரூன்றியிருக்கும் நவ-நாஜிக்களுக்குமாக ஒரு தலைவராக இருக்கிறார். பாரியளவில் பணம் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் இல்லாமல், இந்த ஆட்சி இன்னும் ஒரு வாரம் கூட உயிர்பிழைக்காது.

இன்னும் அதிநவீன ஆயுதங்களை அனுப்புமாறு கோரும் இடைவிடாத கோரிக்கைகள், அடுத்து எதிர்பார்க்கப்படும் ரஷ்யத் தாக்குதல் உக்ரேனிய இராணுவம் மற்றும் ஆட்சியை முழு அளவில் தோற்கடிக்கும் என்பதன் மீது அதிகரித்து வரும் அச்சங்களையே பிரதிபலிக்கின்றன. உக்ரேன் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையை வெறும் டாங்கிகள் மற்றும் விமானங்களால் தீர்க்க முடியாது. நேட்டோ துருப்புக்களை அனுப்புவது அவசியமாகிறது. நேட்டோவுக்குள் நிலவும் பிளவுகளைக் கடந்து, அடுத்த கட்டத்திற்கு மக்கள் கருத்தை தயார் செய்வதே பைடென் விஜயத்தின் நோக்கமாக இருக்கிறது.

எப்போதும் போல ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் பொய்யினாலும் பாசாங்குத்தனத்தினாலும் நியாயப்படுத்தப்படுகின்றன. பைடென் வார்சோவில் ஆற்றிய உரையில், 'உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகங்களின் சுதந்திரம்' 'இந்த மோதலில் பணயத்தில்' இருப்பதாக  அறிவித்தார். நேட்டோவில் உள்ள கிழக்கு ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உடனான ஒரு கூட்டத்திற்கு முன்னர் அவர் இந்த உரையை வழங்கினார். இந்த நாடுகள் அனைத்திலுமே வலதுசாரி எதேச்சதிகார அரசாங்கங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

உக்ரேனிய ஆட்சியும் அதன் இராணுவப் படைகளும் நவ-பாசிசவாதிகளால் நிரம்பியுள்ளன என்ற உண்மை சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. இழிபுகழ்பெற்ற உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பை (Organization of Ukrainian Nationalists) வழிநடத்திய வெகுஜனங்களைப் படுகொலை செய்த பாசிசவாதியும் மூன்றாம் ஜேர்மன் குடியரசின் கூட்டாளியுமான ஸ்டீபன் பண்டேராவை ஒரு தேசிய மாவீரராக ஊக்குவிக்கும் ஒரு கட்டுக்கதையின் அடிப்படையில் உக்ரேனின் வரலாறு திருத்தி எழுதப்பட்டு வருகிறது.

பைடெனை உரையாற்ற அழைத்திருந்த போலந்து அரசாங்கம், அதிவலதுசாரிக் கட்சியான சட்டம் மற்றும் நீதிக் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது போலந்து யூத-எதிர்ப்புவாத பற்றி பேசுவதை மற்றும் வரலாற்று ஆராய்ச்சியை குற்றமாக்கியுள்ளது, அதேவேளையில் போலந்தை ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான நுழைவுத்தளமாக மாற்றி வருகிறது. போலந்தின் முன்னாள் ஜனாதிபதி லேக் வலேசா இந்த வாரம் Haaretz க்கு அளித்த பேட்டியில், போலந்தில் ஜனநாயகம் சவக்குழிக்கு அருகாமையில் இருப்பதாகவும், அதற்கு 'பலத்தை பயன்படுத்தும் ஒரு புரட்சி வீதிகளில்…' தேவைப்படும் என்றும், 'சட்டம் மற்றும் நீதிக் கட்சி அந்தளவுக்கு ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் அழித்தொழித்துவிட்டது,” என்றார்.

அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் செய்தித்தாளான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த வாரம் 'உக்ரேனில் அமெரிக்காவின் விருப்பத்தெரிவு' என்ற ஒரு தலையங்கத்தில் உண்மையான பிரச்சினைகளை முன்வைத்தது. 'சமாதானத்தை நோக்கிய வேகமான பாதை,” 'திரு. புட்டினை தோற்கடிப்பதே...' என ஜேர்னல் குறிப்பிட்டது. போருக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற கவனத்துடன், ஜேர்னல் பைடென் நிர்வாகத்திற்குப் பின்வருமாறு அறிவுறுத்துகிறது, 'உக்ரேனில் பணயத்தில் இருப்பதைக் குறித்து அதிகரித்தளவில் ஐயறவு கொண்டுள்ள அமெரிக்கர்களை நோக்கி இன்னும் நேரடியாக பேசுங்கள். அமெரிக்க ஆதரவினை அவர் விஷயத்தை வெளிநாட்டு 'இறையாண்மை' மற்றும் ஜனநாயகம் என்று வில்சன் பறக்கவிட்டதைப் போல இல்லாமல், தேசிய நலன்களின் மையத்தில் அதை நிலைநிறுத்துங்கள்,” என்றது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் போர் பற்றிய அனைத்து விவாதங்களும், தீய சக்தியான விளாடிமீர் புட்டினால் எந்தக் காரணமும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு 'தூண்டுதலற்ற போர்' என்ற பிரச்சாரக் கட்டுக்கதையின் அடிப்படையில் உள்ளன. பெப்ரவரி 24, 2022 க்கு முந்தைய ஆண்டுகள் மற்றும் பல தசாப்தங்களில் நடந்த அனைத்தும் சர்வ சாதாரணமாக உதறித் தள்ளப்படுகின்றன. மற்றப் போர்களைப் போலன்றி, இந்தப் போர் வரலாற்று காரணமில்லை எனப்படுகின்றது.

உண்மையில், ரஷ்யாவுடனான இந்த மோதல், 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்ட முடிவில்லாத தொடர்ச்சியான போர்கள் மற்றும் தலையீடுகளின் தொடர்ச்சியாகும். உலக கையிருப்பு செலாவணியாக டாலரின் அந்தஸ்துக்கே அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது மற்றும் உள் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருப்பது உட்பட, அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார அந்தஸ்து நீண்டகாலமாக சரிந்து வருவதை முகங்கொடுக்கும் அது, அதன் உலகளாவிய மேலாதிக்க அந்தஸ்தைப் பேணுவதற்கு அதன் இராணுவ பலத்தை வழிவகையாகப் பார்க்கிறது.

ரஷ்யாவுடனான இந்த மோதல் ரஷ்ய எல்லைகளில் நேட்டோ பல தசாப்தங்களாக விரிவாக்கப்பட்டதால் இயக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 2014 இல், உக்ரேனில் ரஷ்ய சார்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உக்ரேனில் ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முன்னெடுத்தது, இது கிழக்கில் எட்டாண்டுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டியது. ரஷ்ய படையெடுப்புக்கு முந்தைய எட்டு ஆண்டுகளில், பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களைக் கொண்டு உக்ரேன் ஆயுதமயப்படுத்தப்பட்டது. அது நடைமுறையளவில் நேட்டோ இராணுவக் கூட்டணியின் ஓர் உறுப்பினராக மாற்றப்பட்டது.

ரஷ்யாவின் தரப்பில், ஓராண்டுக்கு முன்னர் 'சிறப்பு இராணுவ நடவடிக்கையை' தொடங்குவதென எடுக்கப்பட்ட முடிவு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டு, அரசு சொத்துக்களைத் தனியார்மயப்படுத்தி திருடுவதன் அடிப்படையில் ஒரு தன்னலக்குழு ஆட்சி உருவாக்கப்பட்டதன் பேரழிவுகரமான விளைவுகளுக்கு அவநம்பிக்கையான மற்றும் பிற்போக்குத்தனமான விடையிறுப்பாக இருந்தது.

புட்டின் அரசாங்கம் எந்த நலன்களுக்காகப் போராடுகிறதோ அவை ரஷ்ய மக்களின் நலன்கள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கானதாகும். ரஷ்ய அரசின் 'பாதுகாப்பு நலன்களை' அமெரிக்கா அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒரு சமரசமான தீர்வை எட்டலாம். அது ஏகாதிபத்திய சக்திகளின் நேரடி தலையீடு இல்லாமல் ரஷ்ய ஆதாரவளங்களைச் சூறையாட ரஷ்ய தன்னலக்குழுக்களை அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில் அது இந்தப் படையெடுப்பைத் தொடங்கியது.

பிற்போக்குத்தனமான தேசிய பேரினவாதத்தைத் தூண்டுவதன் மூலம் புட்டின் இந்தப் போருக்கான ஆதரவை உருவாக்க முயன்று வருகிறார். ஆனால் இந்த போர் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளிடையே ஆழமாக செல்வாக்கற்றுள்ளது.

இந்தப் போர், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ளது என்ற புரிதல் பரந்தளவில் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

வெறித்தனமான ஆளும் வர்க்கத்தால் இந்த போருக்குள் இழுக்கப்பட்டுள்ள பெருந்திரளான உக்ரேனிய மக்களிடையேயும் இத்தகைய உணர்வுகள் உள்ளன.

எந்த தரப்பின் இராணுவ வெற்றியில் இருந்தும் இந்த போருக்கான பதிலைக் காண முடியாது, மாறாக ஏகாதிபத்தியம் மற்றும் அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராகவும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தில் மட்டுமே இதற்கான பதில் உள்ளது.

ரஷ்யாவின் இராணுவத் தோல்வியைத் தவிர இந்த மோதலுக்கு வேறெந்த தீர்வையும் ஏற்க முடியாது என்பதேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் அர்த்தப்படுத்துகின்றன. மேலும் ரஷ்யாவையும் கடந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கனவே சீனாவுடனான மோதலுக்கு தயாராகி வருகிறது. இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வெடிக்கும் என்று அமெரிக்க தளபதிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்கங்களின் கொள்கைகள் வெகுஜன மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி அவை அலட்சியமாக உள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்று ஆண்டுகளின் போது, ஆளும் வர்க்கம் பின்பற்றிய கொள்கையால் 22 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 150,000 பேர் கொல்லப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவின் பேரழிவுகரமான நிலநடுக்கத்திற்கு, அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும், அக்கறை காட்டாது, போரை விரிவாக்கும் பணியில் இது ஒரு சிறிய இடையூறு என்பதைப் போல விடையிறுத்துள்ளன.

ஆனால் ஏகாதிபத்திய போரை உருவாக்கும் அதே முரண்பாடுகள் சமூகப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகின்றன. 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு நிலைமைகளை உருவாக்கிய முதல் உலகப் போரை, அந்தப் புரட்சியே முடிவுக்குக் கொண்டு வந்தது. இன்று, ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் இழுக்க முயன்று வரும் நிலையில், உலகம் முழுவதும் புரட்சிகர போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

பிரான்சில், ஓய்வூதியங்கள் மீதான மக்ரோன் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். பிரிட்டனில், எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் நசுக்கவும் தொழிற்சங்க எந்திரத்தின் முயற்சிகள் இருக்கின்ற போதிலும், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில், வெறுப்புக்கு ஆளான கோட்டபாய இராஜபக்ஷ ஆட்சி கடந்தாண்டு பாரிய வெகுஜன போராட்டங்களால் வெளியேற நிர்பந்திக்கப்பட்டு பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவாக நடைமுறைப்படுத்தி வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அமெரிக்காவோ ஒரு சமூக வெடிஉலையாக உள்ளது. சமூக சமத்துவமின்மை, 1930களின் பெருமந்தநிலைக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்ததற்குப் பின்னர் காணப்படாத மட்டங்களில் உள்ளது. அனைத்து சமூக மற்றும் பொருளாதார வாழ்வையும் வோல் ஸ்ட்ரீட்டில் ஊக வெறியாட்டத்திற்கும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் போர்க் கொள்கைக்கும் அடிபணியச் செய்வதென்பது, சமூக உள்கட்டமைப்பை அழிப்பதை அர்த்தப்படுத்துகிறது. இது இம்மாதம் ஓஹியோவின் கிழக்கு பாலஸ்டைனில் பேரழிவுகரமாக இரயில் தடம் புரண்டு ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டில் வெளிப்பட்டது.

போருக்கு எதிரான ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது, அதன் அடிப்படைக் காரணங்களையும் அதை உந்தும் சமூக சக்திகளையும் சரியாக கண்டறிவதைச் சார்ந்துள்ளது. அது போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கி இருக்க வேண்டும்.

தார்மீகத்தன்மை இழந்த நடுத்தர வர்க்க தாராளவாதிகள் மற்றும் நோக்குநிலை பிறழ்ந்த தீவிரக் கொள்கையாளர்கள் முற்றுமுதலான பாசிசவாதிகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய ஒரு பிற்போக்குத்தனமான 'இடது-வலது கூட்டணி' அடிப்படையில் நடுத்தர வர்க்க பிரிவுகள் ஊக்குவித்து வரும் மோசடியான மற்றும் பிற்போக்குத்தனமான 'போர்-எதிர்ப்பு' இயக்கத்தை உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும்.

கடந்த வாரயிறுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 'போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்' என்ற பேரணியில், இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் போராட்டக்காரர்கள், சுதந்திரவாதிகளுடனும் பாசிசவாத மற்றும் யூத-விரோத சக்திகளுடனும் கைகோர்த்தனர். அத்தகைய கூட்டணி மூலமாக மட்டுமே மூன்றாம் உலகப் போருக்கான முனைவைத் தடுக்க முடியும் என்று அவர்கள் வாதிட்டனர். இதே போன்ற கூட்டணிகள் சர்வதேச அளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. ஜேர்மனியில் பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியுடன்(AfD) நெருங்கி செயலாற்றி உள்ள இடது கட்சியின் சாரா வாகன்கினெக்டும் (Sahra Wagenknecht) இதில் உள்ளடங்குவார்.

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் இந்த 'இடது-வலது கூட்டணிக்கும்' எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியை திசைதிருப்பவும் தடுக்கவுமே இது சேவையாற்றுகிறது.

இறுதி ஆய்வுகளில், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு அதிவலதின் குறிப்பிட்ட எதிர்ப்பானது, வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் பிளவுகளுடன் பிணைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில், இத்தகைய பிற்போக்குத்தனமான போக்குகள் சமாதானத்தை ஆதரிப்பவர்களாக கூறப்பட்டு முன்னுக்குக் கொண்டு வரப்பட்டன. அமெரிக்காவில், இது நாஜி அனுதாபியான சார்லஸ் லிண்ட்பெர்க்கின் 'அமெரிக்கா முதலில்' இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்தது. அவர் ரூஸ்வெல்ட்டின் கொள்கைகளை ஏகாதிபத்திய-எதிர்ப்பு அடிப்படையில் அல்ல மாறாக பிற்போக்குத்தனமான தேசியவாத மற்றும் யூத-எதிர்ப்புவாதத்தின் அடிப்படையில் எதிர்த்தார். இங்கிலாந்தில், இந்த போக்கு ஒஸ்வால்ட் மோஸ்லியுடன் தொடர்புபட்டிருந்தது. இவர் பாசிசவாதிகளின் பிரிட்டிஷ் ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவினார்.

1939 இல் வெடித்த போரில் அமெரிக்கா நுழைவதைத் தடுப்பதற்காக, வலதுசாரி கூட்டணி-எதிர்ப்பாளர்களுடனும் பாசிச லிண்ட்பெர்க் உடனும் ஒரு கூட்டணி ஏற்படுத்துவதை நியாயப்படுத்தியவர்களை எதிர்த்து, அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பிரசுரமான The Militant செப்டம்பர் 1941 இல் பின்வருமாறு எச்சரித்தது:  

பெருந்திரளான வெகுஜனங்கள் ஏகாதிபத்திய போரை வெறுப்பதுடன், ரூஸ்வெல்ட்டின் போர் திட்டத்தை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். மேலும் அது நியாயமானதும் கூட. ஆனால் கூட்டணி-எதிர்ப்பாளர்களிடம் உள்ள போர்வெறியர்களுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

கூட்டணி-எதிர்ப்பாளர்களைப் பொறுத்த வரை, அவர்கள் போருக்கான உண்மையான காரணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தவில்லை. உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் போரின் உண்மையான காரணத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப மட்டுமே உதவுகிறார்கள். இது போரை வெற்றிகரமாக எதிர்ப்பதற்கு முன் முழுமையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். …

இத்தகைய பிரச்சாரத்தின் மூலம் அவர்கள் போர்வெறியர்களுக்கு எதிராக பின்தங்கிய மற்றும் குறுகிய புத்தியுள்ள கூறுபாடுகளைக் கோபப்படுத்தலாம் மற்றும் தூண்டிவிடலாமே தவிர, அந்த வழியில் போரைத் தடுக்கவோ அல்லது முடிவுக்கு கொண்டு வரவோ அவர்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது.

புரட்சிகர சர்வதேசியமே போருக்கான ஒரே பதிலாக உள்ளது. இது போருக்குக் காரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முற்றிலுமாக இல்லாதொழிக்க அறிவுறுத்துகிறது.

1941 இல் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் விடுத்த இந்த எச்சரிக்கை அதன் முழு முக்கியத்துவத்தையும் தக்க வைத்துள்ளது. போருக்கு எதிரான போராட்டத்திற்குப் பாசிசவாதிகளுடன் ஒரு கூட்டணியை நியாயப்படுத்தும் கொள்கையானது, போர் மற்றும் பாசிசவாதத்தில் மட்டுமே போய் முடியும்.

போருக்கு எதிரான போராட்டத்திற்கான இன்றியமையாத அடித்தளம் என்னவென்றால், அதன் காரணங்களைப் புரிந்துகொள்வதாகும். முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் போராட்ட விஷயங்களைத் தவிர்த்து விட்டு, போரை எதிர்ப்பதற்கான எல்லா விவாதமும் நேரத்தை வீணடிப்பதாகும்.

அணுஆயுதப் போரின் பேரழிவை நோக்கி மனிதகுலத்தை இழுத்துச் சென்று கொண்டிருக்கும் இந்தப் போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான ஒரு சோசலிச சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இதற்கு, போருக்கு எதிரான போராட்டத்தைச் சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பது அவசியமாகிறது.

உக்ரேன் போர் அதன் இரண்டாம் ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் இயக்கம் சோசலிசத்திற்கான ஒரு நனவுப்பூர்வ அரசியல் இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) இந்த போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்காகவே போராடி வருகின்றன.

பெப்ரவரி 25 திகதி, உலக சோசலிச வலைத் தளமும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் 'உக்ரேன் போரை நிறுத்துவது எப்படி' என்ற தலைப்பில் ஓர் இணையவழி விவாதக் கூட்டத்தை நடாத்தியது. WSWS வாசகர்கள் அனைவரும் இக் கூட்டத்தினை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading