ஷான் ஃபைனின் பிரச்சாரத்திற்கு 25,000 டாலர்கள் நன்கொடையளித்ததன் பின்னர் தலைமை பதவிக்கு ஆண்டுக்கு 174,000 டாலர்கள் ஊதியத்தில் ஒரு UAW அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

UAW தேசிய அதிகாரிகள் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலின் மோசடித் தன்மை மற்றும் நடந்துவரும் ஊழல் ஆகிய இரண்டையும் குறித்தும் மற்றும் UAW அதிகாரத்துவத்திற்கு இருக்கும் ஆதரவு குறித்தும் ஒரு அநீதி வெளிப்பட்டுள்ளது. 

UAW சர்வதேச தலைவர் வேட்பாளரான ஷான் ஃபைன் [Photo: UAWD]

புதன்கிழமை, UAW தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷான் ஃபைனின் வேட்புமனுவை ஆதரிக்கும் ஜனநாயகத்திற்காக அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துங்கள் (UAWD) என்ற குழு வெளியிட்ட ஒரு அறிக்கையானது, தொழிலாளர் துறை கோப்புகளின்படி, தொழிற்சங்க பிரிவு  2320 இன் துணைத் தலைவரும் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால செயல்பாட்டாளருமான வைல் கோஹ்னெர்ட்-யூன்ட் பைனின் பிரச்சாரத்திற்கு 25,000 டாலர்கள் நன்கொடையளித்தார் என்பதையும், அதன்பின்னர் ஆண்டிற்கு 174,000 டாலர்கள் சம்பளத்துடன் ஒரு உயர்மட்ட தலைமை அலுவலகத்தில் 9A பிராந்தியத்தின் உதவி இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார் என்பதையும் ஒப்புக்கொள்கிறது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு உதவி இயக்குனர் மட்டுமே உள்ளார் என்பது, உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படாத உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரியை அப்பதவியில் நியமிக்க வழி செய்கிறது.  

ஒரு சில ‘மர்ம நன்கொடையாளர்கள்’ ஃபைனின் பிரச்சாரத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்கள் பங்களிப்பு செய்துள்ளனர் என்று பெப்ரவரி 17 அன்று Detroit Free Press செய்தியிதழின் கட்டுரை உறுதிப்படுத்தியதை அடுத்து UAWD இன் அறிக்கை வெளியானது. அதன்பின்னர், தற்போதைய UAW ஜனாதிபதி ரே கரி, ஃபைனும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9A பிராந்தியத்தின் இயக்குனர் பிராண்டன் மான்சில்லாவும் (ஃபைனை ஆதரிப்பவர்) கோஹ்னெர்ட்-யூன்டை நியமிக்க முன்மொழிந்ததுடன், அது பற்றி ஆய்வு செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவரது கடந்தகால நன்கொடைகள் பற்றிய விபரங்களை மூடிமறைத்து விட்டனர் என்று கூறும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கோஹ்னெர்ட்-யூன்டின் நியமனத்திற்கு கரி கூட ஒப்புதல் அளித்தார்.

இது உண்மையாக இருந்தால், ஒரு உள்ளூர் UAW அதிகாரி 25,000 டாலர்கள் நன்கொடையளித்து, ஆண்டுக்கு 174,000 டாலர்கள் மதிப்புள்ள தலைமைப் பதவியைப் பெற்றார் என்பது உறுதிப்படுத்தப்படும். நீதிமன்றங்களும் UAW தலைவர்களும் தாங்கள் வேரறுப்பதாகக் கூறியது இந்த வகையான ஊழலைத்தான். 

ஆரம்பத்திலேயே, கரி இந்த நியமனத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால், அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், இப்போது அவரது பிரச்சாரமானது, தேர்தலில் ஃபைனுக்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கான வாய்வீச்சு முயற்சியில் இந்த நியமன விவகாரத்தின் மீது தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது, அனுசரணையும் ஊழலும் தான் தற்போது அவர் தலைமை வகிக்கும் அதிகாரத்துவத்தின் செயல்முறை என்ற பரவலாக அறியப்பட்ட உண்மையிலிருந்து திசைதிருப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கரியின் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் சிலர் பெரு நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். அதேவேளை, அவரது பிரச்சாரமானது மற்ற ஒவ்வொரு வேட்பாளருக்கும் ‘வெளியிலிருந்து’ ஆதரவு வருவதாக பொய்யாக குற்றம் சாட்டியுள்ளது.  

இந்த நியமனம் ஒரு தீவிரமான விடயமாகும். முதலாவதாக, ஷான் ஃபைனும் அவரது ஆதரவாளர்களும் அதிகாரத்துவத்திற்கு ஒரு மாற்றீடு அல்ல, மாறாக அவர்களும் அதன் ஒரு பகுதி என்பதை இது காட்டுகிறது. எனவே, அவர்கள் கரியும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்திய அதே அனுசரணை முறைகளை பின்பற்றுவது குறித்தோ, மேலும் அவர்கள் அங்கம் வகிக்கும் பாரிய இயந்தரத்திற்கு தீனி போட தொழிலாளர்களின் சந்தாத் தொகையை கையகப்படுத்துவது குறித்தோ எந்த ஆச்சரியமும் இல்லை. உண்மை என்னவென்றால், ஒரு ஜனநாயகக் கட்சி அதிகாரியை நியமிப்பதற்கு கரி ஒப்புக்கொண்டதானது, அதிகாரத்துவத்தின் ஃபைன் மற்றும் கரி இருவரின் பிரிவுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை மேலும் காட்டுகிறது. 

கோஹ்னெர்ட்-யூன்ட் போன்ற ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர்களின் பிரிவினருக்கு வேலைகள் வழங்குவது தான் UAW எந்திரத்தின் முக்கிய செயல்பாடு என்பதையும் இந்த நியமனம் அம்பலப்படுத்துகிறது. இவர்கள் தொழிலாளர்களின் சந்தாத் தொகையில் இருந்து ஊதியம் பெறும் அதேவேளை ஜனநாயகக் கட்சியின் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்ல தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த அதிகாரிகள், அவர்கள் ‘பிரதிநிதித்துவம் செய்வதாக’ கூறப்படும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர்கள் எதுவும் செய்வதில்லை, மாறாக தேர்தல் நேரங்களில் ஜனநாயகக் கட்சியினருக்காக பிரச்சாரம் செய்வதற்கும், இடையிடையே ஜனநாயகக் கட்சியின் வேலைகளைச் செய்வதற்கும் தான் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

UAWD இன் பெப்ரவரி 22 அறிக்கை அடிப்படை உண்மைகளை உறுதிப்படுத்துகிறது. கோஹ்னெர்ட்-யூன்ட் “மொத்தம் 25,000 டாலர்கள் வரை கணிசமான நிதி பங்களிப்புகளை செய்துள்ளார்,” என்பதை இவ்வறிக்கை ஒப்புக்கொள்வதோடு, “9A பிராந்திய இயக்குனர் பிராண்டன் மான்சில்லாவால் அவர் எங்கள் உதவி இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டார்” என்பதும் உண்மை என்று தெரிவிக்கிறது. 

எவ்வாறாயினும், “அவர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது நன்கொடைகள் முற்றிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும், மான்சில்லாவுக்கு “அவரது நன்கொடைகளின் விபரம் எதுவும் தெரியாது” என்பதையும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

UAWD, இதை நம்பவைப்பது கடினமானது என்பதை ஒப்புக்கொள்கிறது: “அதாவது, பிரச்சாரத்திற்கு தனது நேரத்தையும் பணத்தையும் பங்களித்ததன் பின்னர் அவர் ஒரு உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்ற நிலையில், ஏனைய UAW உறுப்பினர்களும் கூட இதுபற்றி கவலைப்படக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். UAW இன் ஆட்சேர்ப்பு மற்றும் நியமனம் தொடர்பான செயல்முறைகளின் இரகசியத் தன்மையையும், அணுசரனை வரலாற்றையும் கருத்தில் கொண்டு இந்த கவலையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.”  

UAWD இன் அறிக்கை, பாலினவாதத்தால் உந்துதல் பெற்ற அவரது நியமனம் பற்றிய கவலைகளை நிராகரித்து, “வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் பெண்களின் மீது பாரபட்சமாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன” என்று கூறுகிறது. “தொழிலாளர் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு கோஹ்னெர்ட்-யூன்ட் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதால்” “எங்கள் உறுப்பினர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு நல்ல பதவியில் இருக்கும்” அவரை அறிக்கை பாதுகாக்கிறது. இந்த அறிக்கை, கோஹ்னெர்ட்-யூன்ட்டை கிட்டத்தட்ட தொழிற்சங்க அங்கத்துவத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு சாமானிய தொழிலாளர்களின் ஆர்வலராக முன்வைக்கிறது.  

இது உண்மையல்ல, மேலும் இதை மறுதலிக்க அவரது அரசியல் வாழ்க்கையை ஆராய வேண்டும். இவர் தொழிலாளர் இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தனிநபராவார். மாறாக, அவர் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட நன்கொடையாளர்களின் குடும்பத்தில் இருந்து நன்கு இணைக்கப்பட்ட ஒரு ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர் ஆவார். இந்த வரலாற்றின் காரணமாக ரே கரி அவரது நியமனத்தை அங்கீகரிப்பதில் எந்த சிக்கலையும் காணவில்லை என்பது தெளிவாக இருந்தது. 

கோஹ்னெர்ட்-யூன்ட், ஆர்வமுள்ள அரசியல்வாதிகளால் முதன்மையாக தேர்ந்தெடுக்கப்படும் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவார். அப்போது அவர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் வெள்ளை மாளிகையில் மாணவர் பயிற்சியாளராக பணியாற்றினார். வெள்ளை மாளிகையில் மாணவர் பயிற்சிக்கு செல்வது மிகவும் கடினமாகும். பொதுவாக முக்கியமான அரசியல் தொடர்புகளைக் கொண்ட தனிநபர்களுக்கே அத்தகைய வாய்ப்பு ஒதுக்கப்படுகிறது. கோஹ்னெர்ட்-யூன்டின் பெற்றோர் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட நன்கொடையாளர்களாவர். opensecrets.org வலைத்தளத்தின்படி, 2020 முதல் 2022 வரையிலான வெறும் மூன்று ஆண்டுகளில் இவரது பெற்றோர் மட்டும் ஜனநாயகக் கட்சிக்கு 309,380 டாலர்கள் அளவிற்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர். 

2022 இல் பல மாதங்களில் கோஹ்னெர்ட்-யூன்டின் குடும்பம் வழங்கிய நன்கொடைகளின் ஒரு குறிப்பிட்ட பட்டியல் (Open Secrets) [Photo: OpenSecrets.org] [Photo: OpenSecrets.org]

இணையத் தளத்தில் கிடைக்கும் கோஹ்னெர்ட்-யூன்டின் ஒரு சுயசரிதையின்படி, “கல்லூரியில் படிக்கையில், வெய்ல் ALF-CIO, வெள்ளை மாளிகை, மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மாணவர் பயிற்சி பெற்றார்.” 2013 இல் பட்டப் படிப்பு முடித்ததன் பின்னர், “ஒபாமா நிர்வாகத்தில் அரசியல் நியமனம் பெற்றவராக தொழிலாளர் துறையில்” அவர் பணியாற்றினார்.

பொது ஆவணங்களின்படி, இந்த வேலையானது தொழிலாளர் துறையின் சர்வதேச தொழிலாளர் விவகாரங்களுக்கான பணியகத்தில் சிறப்பு உதவியாளர் பணியிடத்திற்கானது. இந்த பணியகம் 1947 இல் ஹாரி ட்ரூமனால் ஸ்தாபிக்கப்பட்டது. இது CIA உடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட ஒரு மத்திய நிறுவனமான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமை (United States Agency for International Development-USAID) உடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. தொழிலாளர் துறையின் சர்வதேச தொழிலாளர் விவகாரங்களுக்கான பணியகத்தின் நோக்கம், வேலைநிறுத்தம் செய்பவர்களை கொலை மற்றும் படுகொலை செய்வது உட்பட, ஒவ்வொரு நாட்டிலும் வோல் ஸ்ட்ரீட் சார்பாக வர்க்கப் போராட்டத்தை கண்காணித்து ஒடுக்குவதாகும். மிக சமீபத்தில், கடந்த டிசம்பரில் 100,000 இரயில்வே தொழிலாளர்களின் தகுதி வாய்ந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமாக்கப்படுவதை மேற்பார்வையிட்ட பெருநிறுவன ஆட்சியின் நிறுவனமாக தொழிலாளர் துறை இருந்தது. 

‘Plum Book’ இல் உள்ள கோஹ்னெர்ட்-யூன்டின் சுயவிபரம்

கோஹ்னெர்ட்-யூன்டின் பெயர் Plum Book இல் உள்ளது. இது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களையும் அவர்களது பதவிகளுடன் அடையாளப்படுத்தும் அதிகாரப்பூர்வ அரசாங்க வெளியீடாகும். Plum Book அவரது ‘நியமன வகையை’ ‘SC,’ என்று பட்டியலிடுகிறது. Plum Book இன் பிற்சேர்க்கையின்படி, இது ‘இரகசிய அல்லது கொள்கை உருவாக்க நிலையை’ குறிக்கும் ஒரு அரசாங்கக் குறியீட்டுச் சொல்லாகும். Plum Book இனைப் பற்றிய அமெரிக்க அரசியலமைப்புச் சங்க ஆவணம், ‘SC’ பதவியைக் கொண்ட ஒரு நபருக்கு “தற்போதைய அலுவலர் அல்லது முக்கிய அரசியல் அதிகாரிகளுடன் நெருங்கிய பணி உறவு தேவை” என்று விளக்குகிறது.

தொழிலாளர் துறையில் பணிபுரிந்ததன் பின்னர், கோஹ்னெர்ட்-யூன்ட் ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர், டெக்சாஸில் சட்ட உதவிக்கான வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கினார். மேலும் சட்ட உதவி வழக்குரைஞர்களை உள்ளடக்கிய UAW பிரிவு 2320 இன் துணைத் தலைவரானார். 9A பிராந்தியத்தின் உதவி இயக்குனர் என்ற பதவி அவரது சமீபத்திய அரசியல் நியமனமாகும். அதாவது, சட்ட உதவி வழக்குரைஞர்களின் அற்ப ஊதியத்தை விட அதிக அளவிலான ஊதியம் கிடைக்கும் பதவியாகும். இந்த ஃபைன் சார்பு அமைப்பாளர் தொழிற்சங்கத்தின் தலைமைப் பதவியில் அமர்த்தப்படுவது, ஜனநாயகக் கட்சி, மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாகும். அதாவது, தொழிலாளர்களின் பார்வையில் அதற்கு ஒரு சட்டப்பூர்வ தன்மை கிடைக்கும் என்ற அவநம்பிக்கையுடன் UAW அதிகாரத்துவத்தை ‘சீர்திருத்தப்பட்ட’ அமைப்பாக முன்வைக்க UAWD இன் பக்கம் நிற்பதாக காட்டும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டது. தேர்தலில் கரி அல்லது ஃபைன் யார் வெற்றி பெற்றாலும், ஜனநாயகக் கட்சி அரசுக்கும் UAW எந்திரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆழப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கரி மற்றும் ஃபைனின் பிரச்சாரங்களானது UAW தேர்தலின் முதல் சுற்று முழுவதையும், பென்சில்வேனியாவின் மகுங்கியில் உள்ள மாக் டிரக்ஸ் நிறுவனத்தின் ஒரு சாமானிய வாகனத் தொழிலாளியான வில்லியம் லெஹ்மனுக்கு ‘அனுபவமும் கிடையாது’ என்பதை பரப்புவதற்கே செலவழித்தன. வெளிப்படையாகவே அதிகாரத்துவம் வெள்ளை மாளிகை மற்றும் தொழிலாளர் துறையில் பணிபுரிந்த ஒருவரின் ‘அனுபவத்தை’ மதிக்கிறது, மாறாக ஓய்வூதியம் இல்லாத ஒரு அடுக்கு ஊதிய முறையின் கீழ் ஒரு வாகன ஆலையின் விற்பனைத் தளத்தில் பணிபுரிந்த ஒருவரின் அனுபவத்தை அது மதிப்பதில்லை. 

இந்த சர்ச்சை பற்றிய UAWD இன் அறிக்கையின் தெளிவற்ற, சட்டரீதியான வார்த்தைகளால் இந்த நியமனம் குறித்து பல கேள்விகள் உள்ளன. 25,000 டாலர்கள் நன்கொடை கொடுக்கப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்றும் தேர்தல் விதிகள் மீறப்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது. ஆனால் ஒரு UAW உள்ளூர் அதிகாரி ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளித்து UAW இன் தலைமைப் பதவியில் உயர்மட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது உண்மையாக இருந்தால், அது UAW இல் இருந்து ஊழலையும் அனுசரணையையும் வேரறுப்பதற்கு ஒரு மத்திய நீதிபதியால் வெளியிடப்பட்ட ஒப்புதல் ஆணையை கடுமையாக மீறுவதாகும்.  

மேலும், UAWD அறிக்கையானது, நியமனம் ‘எந்த விசாரணையிலும்’ தொடர்ந்து நிலைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆனால் விசாரணை எதுவும் தொடங்கப்பட்டுள்ளதா என்பது பற்றி குறிப்பிடவில்லை, அப்படியானால், அதற்கு யார் பொறுப்பாளி, மற்றும் விசாரணையிலிருந்து என்ன தகவல்கள் வெளிவருகின்றன? அப்படி ஒரு விசாரணை இரகசியமாக நடக்கும் பட்சத்தில், அதைத் தெரிந்துகொள்ள உரிமையுள்ள சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுவின் முன்பாக அது நடத்தப்பட வேண்டும். 

அதாவது, செல்வமும் அதிகாரமும் படைத்தவர்கள் UAW அதிகாரத்துவத்தின் தலைமையை எளிதில் அணுக முடியும் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. மொத்தத்தில், ஊழல் மோசடி இதைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. பெருநிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானதைப் பாதுகாக்க தலைமையின் கைகளில் கையூட்டு வழங்க  முடிந்தது, மேலும் அதே நடைமுறைகள் இன்றும் தொடர்வதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.  

இதற்கிடையில், சாமானிய தொழிலாளர்கள் பற்றி UAW இல் எந்த கருத்தும் இல்லை. மேலேறும் சுழல்போன்ற பணவீக்கத்தை எதிர்கொள்கையில் தொழிலாளர்களின் ஊதியம் குறைந்து வருவதுடன், UAW வுக்குள் செல்வாக்கைப் பெறுவதற்கு 25,000 டாலர்கள் செலவழிக்காத தொழிலாளர்களால் தங்கள் குழு உறுப்பினர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. UAW எந்திரத்துடனான தொழிலாளர்களின் தொடர்புகளின் அளவு என்னவென்று அறிய முற்பட்டால், அதிகாரத்துவத்தினர் அவர்களிடம் ‘நிறுவனம் அதைச் செய்ய முடியும்’ என்றும் ‘நீங்கள் ஒரு வேலையைப் பெறுவது அதிர்ஷ்டம்’ என்றும் கூறுகிறது.  

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) கோஹ்னெர்ட்-யூன்ட், பிராண்டன் மான்சில்லா, ஷான் ஃபைன் மற்றும் ஐக்கியப்பட்ட உறுப்பினர்களை அணுகி, நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்து விளக்கம் கேட்டது. இந்த நியமனத்தில் ஃபைன் ஈடுபட்டாரா அல்லது அந்த நேரத்தில் மான்சில்லாவுக்கு கோஹ்னெர்ட்-யூன்ட் பெரிய பங்களிப்பு வழங்கியது பற்றி அவர் விவாதித்தாரா என்பதை தெளிவுபடுத்துவதற்கான கோரிக்கைக்கு அவர் பதிலளிக்கவில்லை.  

கோஹ்னெர்ட்-யூன்டின் சரியான தொடக்கச் சம்பளம் என்னவாக இருக்கும் என்பது பற்றி அல்லது அவர் தனது பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர் என்பது பற்றி மான்சில்லா ஃபைனிடம் சொன்னாரா என்பதை அறியும் கோரிக்கைக்கு மான்சில்லா பதிலளிக்கவில்லை. மேலும், விண்ணப்பச் செயல்பாட்டின் போது 25,000 டாலர்கள் நன்கொடையை அவர் வழங்கினாரா என்று கேட்டதற்கு கோஹ்னெர்ட்-யூன்டும் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், உலக சோசலிச வலைத் தளம் மேலும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது அங்கத்துவர்களுக்கு அது பற்றி தொடர்ந்து தெரிவிக்கும்.

Loading