நாபுலஸ் மீதான இஸ்ரேலின் கொலைகாரத் தாக்குதல் வேண்டுமென்றே நடாத்தப்பட்ட ஆத்திரமூட்டலாகும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) புதன்கிழமை காலை வட மேற்கு கரை நகரமான நாபுலஸ் மீது ஒரு பாரிய தாக்குதலை நடத்தியது. மிருகத்தனம் மற்றும் இராணுவவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையில் 11 பேர் கொல்லப்பட்டு, 103 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 72 மற்றும் 66 வயதுடைய இரு முதியவர்களும் அடங்குவர்.

பெப்ரவரி 2023, செவ்வாய்கிழமை, 21 பெப்ரவரி 2023 அன்று மேற்குக்கரை அகதிகள் முகாமான பலாடாவில் இறுதிச் சடங்கின் போது, 16 வயதான மொன்டாசர் ஷவ்வாவின் உடலை ஒரு சந்து வழியாக துக்கம் அனுஷ்டித்து, மக்கள் கோஷமிட்டு எடுத்துச் சென்றனர். பெப்ரவரி 8 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இராணுவ நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டார் [AP Photo/Nasser Nasser]

இது பல தசாப்தங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். காயம்பட்டவர்களை சம்பவ இடத்திலிருந்து அவசர மருத்துவ பணியாளர்கள் வெளியேற்றுவதை படையினர் தடுத்து முதலுதவி  வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதலை எதிர்கொண்ட பாலஸ்தீனியர்களின் மீது இராணுவ வாகனத்தை ஓட்டிச் சென்று தாக்குவதை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. மற்றொன்று ஒரு முதியவர் சுடப்பட்டு இரத்தம் சிந்தி தரையில் அசையாமல் கிடப்பதைக் காட்டுகிறது. மற்றவை, நிராயுதபாணியாகத் தெரிந்த மூன்று பேர் ஒரு நடைபாதையில் ஓடுவதைக் காட்டியது. அவர்களில் ஒருவர் சுடப்பட்ட பிறகு தரையில் விழுந்தார்.

மத்திய கிழக்கின் மிக வலிமையான போர் இயந்திரம் ஒரு பரபரப்பான நகர்ப்புறப்பகுதியில் பட்டப்பகலில் நடத்திய இந்த நீதிக்கு புறம்பான கொலைகள், புதிதாக பதவியேற்ற பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தால் செய்யப்பட்ட போர்க்குற்ற நடவடிக்கைக்கு குறைவானது அல்ல.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இஸ்ரேல், அதன் வழக்கமான பாசாங்குத்தனம் மற்றும் சிடுமூஞ்சித்தனத்துடன், அக்டோபரில் ஒரு இஸ்ரேலிய சிப்பாயைக் கொன்று, எதிர்காலத்தில் 'துப்பாக்கிச் சூடு தாக்குதல்களைத் திட்டமிடுவதில்' ஈடுபட்டிருந்த மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை 'கைது செய்ய முயன்றது' என்று கூறி அதன் கொலைகாரத் தாக்குதலை நியாயப்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அது எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. தேடப்படும் மூன்று நபர்களைத் தடுத்து வைக்க முற்பட்ட போது, படையினர் பலத்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதாக கூறிய இராணுவப் பேச்சாளர் ஒருவர், எட்டு பேர் ஏன் கொல்லப்பட்டனர் என்பதைப்பற்றி விளக்கம் கூறிவில்லை.

இந்த தேடுதலானது இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்துடன் இணைந்த முதலாளித்துவ மதக் குழுவான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல்களை துரிதப்படுத்த முன்கணிக்கப்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்ட ஆத்திரமூட்டலாகும். இத்தகைய தாக்குதல்கள், 'பாதுகாப்பு நெருக்கடியை' அறிவிக்கவும், சர்வாதிகார அதிகாரங்களை எடுத்துக்கொள்ளவும், 1967 அரபு இஸ்ரேலியப் போருக்குப் பின்னர் இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனியப் பகுதிகளை இணைப்பதற்கான அவர்களின் பரந்த திட்டங்களைத் தொடர்வதுக்கு நீதித்துறையை செயலிழக்க செய்யவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பு இயக்கத்தை தடம் புரளச் செய்யவும் அதிகாரிகளால் பயன்படுத்தப்படும்.

இஸ்ரேலின் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்கள் பெரும்பாலும் நெதன்யாகு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் இஸ்ரேலுள்ள பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எந்தவொரு அழைப்பு விடுவதற்கும் விரோதமானவர்களாக இருப்பதோடு, நெதன்யாகுவின் பாசிச ஆதரவு அதிகாரத்தை கைப்பற்றுவது முதலாளித்துவ ஆட்சி மற்றும் இஸ்ரேலிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். வளர்ந்து வரும் போராட்ட இயக்கம் பரந்த சமூக அதிருப்தி மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் மிருகத்தனமான ஒடுக்குமுறை மற்றும் நிறவெறி ஆட்சி முறைக்கு எதிர்ப்பு ஆகியவற்றால் தூண்டப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தைப் பாதுகாப்பதுடன் எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றம் ஷேக் ஜர்ராவின் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் மக்களை வெளியேற்றுவது, நிலங்களை கைப்பற்றுதல் மற்றும்  குடியேற்றங்களை அங்கீகரிக்கும் இஸ்ரேலின் சட்டங்களுக்கு தலைவணங்குகின்றது. எதிர்ப்பு பேரணிகளில் பங்கேற்பவர்கள் பாலஸ்தீனியர்களை அணுகி அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

நாபுலஸில் நடந்த கொலைகளுக்குப் பிறகு, ஹமாஸால் இயக்கப்படும் இரண்டு இராணுவத் தளங்களின்மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதை தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக அதன் இரண்டு மில்லியன் மக்களுக்கு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கின்ற காசா பகுதியிலிருந்து ஆறு ராக்கெட்டுகள் இஸ்ரேல்மீது ஏவப்பட்டன. அவற்றில் ஐந்து இஸ்ரேலின் அயர்ன் டோம் (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் புதிய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட மேற்குக் கரையில் புதன் கிழமை நடந்த கொடூரத் தாக்குதல் மூன்றாவது பெரிய நடவடிக்கையாகும். ஜனவரி பிற்பகுதியில் ஜெனின் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பாலஸ்தீனிய போராளிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் ஜெரிகோவில் இதேபோன்ற நடவடிக்கையில் ஐந்து பாலஸ்தீனிய போராளிகள் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய படுகொலைகள், இந்த ஆண்டு இதுவரை இஸ்ரேலிய பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் குடியேற்றவாசிகளின் கைகளில் இறந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை 61 ஆக அதிகரிக்கின்றது. அத்துடன் 10 இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு உக்ரேனிய நாட்டவர் இந்த வன்முறையில் ஈடுபட்டனர். மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் 30 குழந்தைகள் உட்பட குறைந்தது 170 பாலஸ்தீனியர்கள் கடந்த ஆண்டு கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் ஒரே ஆண்டில் மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

நாபுலஸ் அட்டூழியமானது, இஸ்ரேலியர்கள் மீதான தொடர்ச்சியான பாலஸ்தீனிய தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பிரேக்வாட்டரின் நடவடிக்கையின் (Operation Breakwater) ஒரு பகுதியாகும். இது ஜெனின், நப்லஸ், ஹெப்ரோன் மற்றும் ஜெரிகோ நகரங்களை மையமாகக் கொண்ட கிட்டத்தட்ட தினசரி சோதனைகள் மற்றும் மேற்குக் கரையில் கைது நடவடிக்கைகளைக் கண்டது. லயன்ஸ் டென், நப்லஸ் படையணி மற்றும் துபாஸ் படையணி போன்ற புதிய குழுக்களின் பதாகையின் கீழ் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்குக் கரையில் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு கோழைத்தனமாக அடிபணிந்ததற்காக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான அல்ஃபத்தா அமைப்பு ஆதிக்கம் செலுத்தும் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு (PA) எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

உண்மையில், எதிர்த்தாக்குதல் மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்வதுடன், குறிப்பாக அடுத்த மாதம் தொடங்கும் ரம்ழானுக்கு முன்னதாக, ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் மேலும் தாக்குதல்களை எதிர்பார்த்து கூடுதல் ஆட்களை அனுப்புவதாகக் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். இஸ்ரேல் 'மேற்கு கரை, ஜெருசலேம் மற்றும் உள்பகுதியில் பழிவாங்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அல்லது காசா பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல் போன்ற செயல்பாட்டின் சாத்தியமான விளைவுகளுக்கு' தயாராகி வருகிறது என்று ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள ஒன்பது சட்டவிரோத புறக்காவல் நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கும், தற்போதுள்ள குடியிருப்புகளில் 7,000 வீடுகளைக் கட்டுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வுகள் நடந்தன. இது பாலஸ்தீனிய அதிகாரத்தின் வேண்டுகோளின் பேரில், இந்த முடிவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை முன்வைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸை தூண்டியது. ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலுடனான தனது உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பின்னர் வாஷிங்டனின் வற்புறுத்தலின் பேரில் இந்த தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது. இதனால் வழக்கமான அமெரிக்க தடுப்பு அதிகாரம் (veto) இல்லாமல் இந்த தீர்மானம் நிறைவேறும்.

ஐ.நா.வில் திரைமறைவு கையாளுதலின் ஒரு பகுதி என்னவென்றால், பாலஸ்தீன அதிகாரம் நிதி உதவிப் பொதியைப் பெறும் அதே வேளையில், இஸ்ரேல் சட்டவிரோத குடியேற்றங்கள் அல்லது குடியேற்றக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்காது, மேலும் பாலஸ்தீன அதிகாரம்  பெயரளவிலான கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் மேற்குக் கரையில் அதன் ஆயுத ஊடுருவல்களை 'குறைக்கும்' என்பதாகும். இவை அனைத்தும் பொதுமக்களுக்காக கூறப்பட்டவையாகும். மூன்று நாட்களுக்குப் பிறகு, நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தினை முரட்டுத்தனமாக மீறிச் சென்று தேடுதலுக்கு அங்கீகாரம் அளித்தார்.

இந்த சமீபத்திய அட்டூழியத்தை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் அவர்களின் மத்திய கிழக்கு கூட்டாளிகள் வழமையான வார்த்தையாடல்களுடன் எதிர்கொண்டனர். நாட்டை நிறுவுவதற்கான யூத மேலாதிக்கத்தை உள்ளடக்கிய தேச-அரச சட்டமாக, இது பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைத்து, நிறவெறி ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கான அதன் நிகழ்ச்சி நிரலைப் பின்தொடர்வதில், பாலஸ்தீனியர்களை பயமுறுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும், அவர்கள் இஸ்ரேலின் பாசிச அரசாங்கத்திற்கு வெற்றுப்பத்திரத்தை கொடுத்துள்ளனர் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  தங்கள் சொந்த குடிமக்கள் மீது தங்கள் சர்வாதிகார ஆட்சியை நியாயப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக பாலஸ்தீனிய அரசுக்கு தங்கள் ஆதரவை நீண்ட காலமாக அறிவித்த அரேபிய ஆட்சிகள் சியோனிச அரசின் வெளிப்படையான கூட்டாளிகளாக அம்பலப்பட்டு நிற்கின்றன. 

'போர்க்குற்றங்கள்' மற்றும் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் சந்தர்ப்பவாத ரீதியாக பயன்படுத்தப்படுவதையும் இது நிரூபிக்கிறது. பைடென் நிர்வாகம் உக்ரேனில் இதுபோன்ற குற்றங்களுக்காக ரஷ்யாவை தூற்றும் அதே நேரத்தில் மத்திய கிழக்கில் வாஷிங்டனின் கொள்ளையடிக்கும் நலன்களைப் பின்தொடர்வதற்காக அதனால் வழங்கப்பட்ட சேவைகளுக்கு அதன் தாக்குதல் நாய் தினசரி அடிப்படையில் என்ன செய்கிறது என்பது பற்றி மவுனமாக இருக்கின்றது. போர்க்குற்றம் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என வரையறுக்கப்படுவது மற்றும் ஹேக் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவது முற்றிலும் பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைச் சார்ந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் சொந்த அதிகாரிகளுக்காக இந்த நீதமன்றத்தை அங்கீகரிக்கவில்லை.

பாலஸ்தீனிய தொழிலாளர்களின் அவநம்பிக்கையான பொருளாதார மற்றும் சமூக நிலைமைக்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் தீர்வு இல்லை அல்லது தேசிய தீர்வும் கிடையாது. பாலஸ்தீன தலைமை எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும், இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் கொள்கைகளை ஒருபோதும் மாற்ற முடியாது. இது பல தசாப்தங்களாக கசப்பான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய மக்களின் ஒரே உண்மையான கூட்டாளி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சர்வதேச எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலை, இஸ்ரேலின் போர்க்குற்றங்கள், ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் பெரும் மந்தநிலைக்கு பின்னர் உலக முதலாளித்துவத்தின் ஆழமான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் மீதான பெருகிய சீற்றம் மற்றும் வெறுப்பைக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போர்க்குணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 

அரபு மற்றும் யூதத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அணிதிரட்டல்தான், பாலஸ்தீனப் பகுதிகளையும் தாண்டி இஸ்ரேல், லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக்  மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் விரிவடையும் நெருக்கடிக்கு உண்மையான ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுக்கான திறவுகோலைக் கொடுக்கும். இது உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்பிற்காக சியோனிசம், ஏகாதிபத்தியம் மற்றும் மத்திய கிழக்கு முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் நனவான வடிவத்தை எடுக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சிகளும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் போராடும் சர்வதேச சோசலிச முன்னோக்கு இதுதான்.

Loading