முன்னோக்கு

கோவிட் மூடிமறைப்பு, அல்லது ஆளும் வர்க்கம் இந்த வைரஸைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டு, எப்படி அதை நேசிக்கக் கற்றுக் கொண்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் தொடர்ந்து கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை இருட்டடிப்பு செய்வது, கடந்த இரண்டு மாதங்களில் ஒரு புதிய மட்டத்தை எட்டியுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தொடர்ந்து கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட உள்ளனர் என்பதோடு ஆயிரக் கணக்கானவர்கள் ஒவ்வொரு வாரமும் உயிரிழக்க உள்ளனர் என்ற உண்மை, இப்போது ஆளும் உயரடுக்கின் முழு அலட்சியத்தை சந்தித்துள்ளது. நடைமுறையில் ஆழமடைந்து வரும் இந்த உலக நெருக்கடி பற்றிய எந்த செய்தியும் இல்லை.

கடந்த செப்டம்பரில் 'இந்தப் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக' பொய்யாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், மக்களின் துன்பங்களுக்கு உத்தியோகபூர்வ அக்கறையின்மைக்கு முன்னுதாரணமாக உள்ளார். கோவிட்-19 ஆல் 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர் என்ற உண்மையைப் பற்றி தயாரிப்பின்றி கருத்துரைக்கையில், கடந்த மாத நகரசபை தலைவர்கள் மாநாட்டில் பைடென் அப்பட்டமாக 'நான் அதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டதால் சிலவேளைகளில் நான் அதை குறைமதிப்பீடு செய்கிறேன்” என்றார்.

இது வெறுமனே பைடெனின் சிந்தனை ரீதியான கவனக்குறைவுக்கான ஓர் அறிகுறி அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தை நோக்கி முதலாளித்துவவாதிகளின் சமூக உணர்வற்ற கண்ணோட்டத்தின் ஒரு வெளிப்பாடாகும். கோவிட்-19 ஆல் ஏற்பட்ட பாரிய மரணங்களுக்கு இவர்கள் தான் பொறுப்பாகிறார்கள். இது, இன்னும் அதிகமானவர்களைக் கொல்லுவதை அவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்வதாகவும் இருக்கிறது.

பைடெனின் கருத்துக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், கோவிட்-19 தேசிய அவசரநிலை அறிவிப்புகளும் பொது சுகாதார அவசரநிலை அறிவிப்புகளும் மே 11 இல் காலாவதியாக அனுமதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இது பரந்த விளைவுகளைக் கொண்டிருக்கும்.

கெய்சர் குடும்ப அறக்கட்டளை அமைப்பின் மதிப்பீடுபடி, அவசரகால அறிவிப்புகள் காலாவதியாகும் போது 5 மில்லியனில் இருந்து 14 மில்லியன் அமெரிக்கர்கள் மருத்துவ உதவித் திட்டம் மூலம் கிடைக்கும் மருத்துவக் காப்பீட்டை இழப்பார்கள். அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவமனை அமைப்புகள், அதிகரித்து வரும் நிதி அழுத்தங்களை எதிர்கொள்ளும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 200 கிராமப்புற அமெரிக்க மருத்துவமனைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மருத்துவ நலனின் தரம் மற்றும் கட்டண சீர்திருத்தத்திற்கான மையம் (Center for Healthcare Quality and Payment Reform) கணிக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசிகளின் வினியோகம், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தனியார்மயமாக்கப்படும். காப்பீடு இல்லாத சுமார் 30 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த உயிர்காக்கும் சேவைகளுக்கு மொத்த தொகையும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளாவார்கள். பைஸர் (Pzifer) நிறுவனம் அதன் தடுப்பூசியை 130 டாலர் வரை விற்க உத்தேசித்துள்ளது. காப்பீடு இல்லாத பெரும்பாலானவர்களால் இதை விலை கொடுத்து வாங்க முடியாது

வெள்ளை மாளிகை அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், அதன் கொரோனா வைரஸ் தகவல் தரவுகள் வகைதுறை மையம் மார்ச் 10 இல் மூடப்படும் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியது. அமெரிக்கா முழுவதும் உள்ள உள்ளாட்சி, மாவட்ட மற்றும் மாநில அதிகார வரம்புகள் இனி கோவிட்-19 புள்ளிவிபரங்களை அதிகளவில் வெளியிடாது என்பதைச் சுட்டிக்காட்டி அந்தப் பல்கலைக்கழகம் அதன் கடுமையான நகர்வை நியாயப்படுத்தியது. இந்த முடிவு, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டும் திட்டமிட்டு எடுத்த கொள்கை முடிவுகளின் விளைவாகும்.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பை நிறுத்தும் முடிவானது, அமெரிக்காவில் துல்லியமான கோவிட்-19 புள்ளிவிபர அறிவிப்பில் மிஞ்சி இருந்தவற்றுக்கும் மூடுவிழா நடத்துவதாக உள்ளது. வோல்டோமீட்டர் மற்றும் Our World In Data அமைப்பு உட்பட பரவலாக பயன்படுத்தப்பட்ட பிற கண்காணிப்பு அமைப்புகள் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கண்காணிப்பையே சார்ந்துள்ளன.

சுகாதாரத்துறை புள்ளிவிபர ஆய்வாளர் கிரிகோரி டிராவிஸ் WSWS க்கு கூறுகையில், ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கண்காணிப்பு புள்ளிவிபரங்கள் 'ஏறக்குறைய உங்களுக்குக் கிடைக்கும் 'உடனுக்கு உடனான' நெருக்கமாக புள்ளிவிபரங்கள்' என்றார். அவர் தொடர்ந்து கூறினார், “CDC க்கு அனுப்பப்படும் இறப்புச் சான்றிதழின் வடிவில் உள்ள இந்தப் புள்ளிவிபரங்கள், குறைந்தபட்சம் ஆறு மாதகால இடைவெளி கொண்டிருக்கும். குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் பெரும்பாலும் இன்னும் அதிக காலம் கூட இருக்கும். இப்போது என்ன நடக்கிறது என்று நாம் தெரிந்து கொண்டிருப்பதைக் குறித்து இப்போதைக்கு நம்மால் ஓரளவுக்கு நம்பிக்கையோடு கூட முடியும். எதிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்று மட்டுமே நம்மால் நம்பிக்கையோடு கூற கூடியதாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

ட்ராவிஸ் அமைப்பு பராமரிக்கும் ஒரு கண்காணிப்பு முறையின்படி, 36 அமெரிக்க மாநிலங்கள் அல்லது 72 சதவீத மாநிலங்கள், அத்துடன் வாஷிங்டன், டி.சி., ஏற்கனவே 'இருண்டு விட்டது,' அதாவது அவை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இறப்புகளைக் குறித்து அறிவிக்கின்றன. இது தான் நவம்பர் 2021 இல் ஓமிக்ரோன் வகை உருவானதற்குக் காட்டப்பட்ட உத்தியோகப்பூர்வ விடையிறுப்பின் இறுதி விளைவாக உள்ளது. இதன் வேகமான பரவல், கோவிட்-19 பரிசோதனை மற்றும் புள்ளிவிபர அறிவிப்புகளுக்கு முறையாகக் குழிபறிக்க சாதகமாக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்முறையை உலக சோசலிச வலைத்தளம் மட்டுமே தொடர்ந்து அம்பலப்படுத்தி உள்ளது.

முன்னோக்கி செல்லும் போது, கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் கண்காணிப்பதற்கான நம்பகமான கருவிகள், முறையே கழிவுநீர் பரிசோதனை முறை மற்றும் அதிகப்படியான மரணங்களில் இருந்து தோராயமாக மதிப்பிடப்படும். இவ்விரு முறைகளின் அளவீடுகளும் துல்லியமானவை இல்லை என்றாலும், உலகளவில் கோவிட்-19 பெரும் எண்ணிக்கையில் தொடர்கிறது என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன.

ஓமிக்ரோன் துணைவகைகளுக்குக் காட்டப்பட்ட விடையிறுப்பில் அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்கியதால், பாரிய நோய்தொற்றுக்களின் புதிய அதிகபட்ச வரம்பு ஆல்ஃபா மற்றும் டெல்டா மாறுபாடுகள் அதிகரித்த போது ஏற்பட்ட உச்சபட்ச விகிதங்களுக்கு நெருக்கமாக உயர்ந்தது. இதன் ஒரு விளைவாக, மில்லியன் கணக்கானவர்கள் தொடர்ந்து நோய்வாய்பட்டு வருகிறார்கள் என்பதோடு, அதிகரித்து வரும் நீண்டகால விளைவுகளுடன், உலகெங்கிலும் கோவிட்-19 ஆல் மறுதொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, மருத்துவமனை அனுமதிப்பு, நெடுங்கோவிட், ஏறக்குறைய ஒவ்வொரு அங்கத்தையும் சேதப்படுத்தும் ஆபத்து ஆகியவற்றை ஒவ்வொரு மறுதொற்றும் உள்ளடக்கி உள்ளது என்பதை மறுதொற்றுக்களின் தாக்கம் பற்றிய உலகின் மிக விரிவான ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.  

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சுகாதார கவனிப்பு அமைப்புமுறையில் இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்திய உடல்நல பாதிப்புகளுடன் சேர்ந்து, இத்தகைய சுகாதார பாதிப்புகள், பெருந்தொற்றுக்கு முந்தைய வரம்புகளுக்கும் கூடுதலாக அதிகப்படியான இறப்புகளை பாரியளவில் அதிகரித்துள்ளன. உலகம் முழுவதும் மருத்துவமனைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவசரகால அறையில் நோயாளிகள் மணிக்கணக்காக சிகிச்சையின்றி விடப்பட்டுள்ள நிலையில், அங்கே 'அனுமதிக்கப்படுபவர்கள்' பொதுவாக அதிகரித்து வருகின்றனர். முக்கியமாக இது, இந்தப் பெருந்தொற்றால் ஏற்பட்ட கடுமையான பணியாளர் பற்றாக்குறையின் விளைவாக இருந்தது.

தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் கருத்துப்படி, இந்தப் பெருந்தொற்றால் இப்போது 20.5 மில்லியன் அதிகப்படியான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, உலகளவில் ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் கோவிட்-19 உயிரிழப்புகளுக்கு உலகின் மூன்றாவது முக்கிய மரண காரணியாக ஆகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், டிசம்பரில் ஏற்பட்ட அதிகப்படியான இறப்புகள் இந்தப் பெருந்தொற்றுக்கு முன்னர் இருந்ததை விட 19 சதவீதம் அதிகமாக இருந்தன. ஜேர்மனி 37 சதவீதத்துடன் அதிகபட்ச அதிகரிப்பைக் கண்டது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்தக் கொடூரமான யதார்த்தத்தை மறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகள், ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கமும் கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து அடிப்படை படிப்பினைகளைப் பெற்றுள்ளதைக் காட்டுகின்றன.

முதலும் முக்கியமுமாக, பொது சுகாதாரமானது இலாபக் குவிப்புக்கு ஒரு தடையாக உள்ளது. தொடக்கத்தில் இருந்தே, சமூக அடைப்புகளைப் பயன்படுத்துவதையும், வெகுஜனங்களுக்கான பரிசோதனைகளும், நோயாளியின் தொடர்பு கண்டறிதலும் மற்றும் வைரஸ் பரவலைத் தடுக்க தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதும் உற்பத்தி நிகழ்வுபோக்கிற்கும் தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலுக்கும் ஒரு தடையாக இருப்பதாக உடனடியாக ஆமோதிக்கப்பட்டன.

ட்ரம்ப் மீண்டும் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்தை முன்னெடுத்த போது, நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் பிரெட்மெனிடம் இருந்து அவர் உத்வேகம் பெற்றிருந்தார். “நோயை விட சிகிச்சை மோசமாக இருந்து விடக்கூடாது,” என்று சமூக அடைப்புக்கு எதிரான மந்திரத்தை பிரெட்மென் முன்வைத்தார். கட்டாய முகக்கவசம் அணிதல் மற்றும் பிற அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்கியதுடன் சேர்ந்து, வணிகங்களும் பள்ளிகளும் முழுமையாக மீண்டும் திறந்து விடப்பட்டமை, இப்போது இந்தப் பெருந்தொற்றுக்கு எந்தவொரு உத்தியோகப்பூர்வ விடையிறுப்பும் முழுமையாக நிறுத்தப்பட்டமை ஆகியவை பின்னர் பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரால் மேற்பார்வை செய்யப்பட்டது.

இரண்டாவதாக, ஆளும் உயரடுக்கினரைப் பொறுத்த வரையில், ஓய்வூதிய கடமைப்பாடுகளையும் பிற சமூக செலவினங்களையும் அடிமட்டத்திற்கு வெட்டுவதற்காக, ஆயுட்காலத்தைக் குறைப்பதற்கான அவர்களின் ஆர்வத்தை இந்தப் பெருந்தொற்று மீள உறுதிப்படுத்தி உள்ளது. 'மரணத்தை ஏமாற்றி, முடிந்தவரை ஆயுளை நீட்டிப்பதற்கான' அமெரிக்கர்களின் முயற்சிகளை 2014 இல் கண்டித்த எசேக்கியேல் இமானுவேலின் ஆயுட்கால அதிகரிப்பு பற்றிய பிற்போக்குத்தனமான பிதற்றல்கள், உலகளவில் முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டி சித்தாந்தமாக மாறியுள்ளன.

கோவிட்-19 இல் இருந்து நேரடியாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய விளைவுகளின் காரணமாகவோ, இந்தப் பெருந்தொற்றுக்கு முந்தைய மட்டங்களுக்கும் மேலாக உள்ள அனைத்து அதிகப்படியான இறப்புகளும் ஆளும் வர்க்கத்தின் நிகர இலாபமாக உள்ளன. ஏனென்றால் 90 சதவீதத்திற்கும் அதிகமான கோவிட்-19 இறப்புகள் எந்த இலாபங்களுக்கும் உபயோகப்படாத 65 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதித்து வருகிறது. இந்தப் பெருந்தொற்றின் தொடர்ந்து கொண்டிருக்கும் பாதிப்புகளை மூடிமறைக்கும் முயற்சிகளுக்கு அடியிலிருப்பது, வயதானவர்களைத் தொடர்ந்து கொல்லும் விதமான ஆயுள்காலத்தைக் குறைக்கும் ஒரு மூலோபாயமாகும்.

இந்த இரண்டில் இருந்தும், ஆளும் வர்க்கம் பெற்ற மூன்றாவது அடிப்படைப் பாடம் என்னவென்றால், எதிர்கால பெருந்தொற்றுகளைத் தடுக்கவோ அல்லது அதற்குத் தயாராகவோ எதுவும் செய்யக்கூடாது என்பது தான். கோவிட்-19 பெருந்தொற்றின் தொடக்கத்தில் செய்ததைப் போலவே, பணத்தால் பெறக்கூடிய சிறந்த மருத்துவ வசதிகளுடனும் அடுத்த பேரிடருக்காக காத்திருக்கும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பான வசிப்பிடங்களைக் கொண்டுள்ள பில்லியனர்கள், கூடுதலாக 'உபரி மக்களைக் குறைப்பதற்கான' ஒரு வழிவகையாக அடுத்த உயிராபத்தான நோய்கிருமியை வரவேற்கக் கூடும்.

காலநிலை மாற்றம் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல், எதிர்கால பெருந்தொற்று பற்றிய அச்சுறுத்தல் ஆகியவை மாறாமல் நிலையானவை இல்லை மாறாக ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டில், குரங்கம்மை வைரஸ் 100 க்கும் அதிகமான நாடுகளுக்கு வேகமாக பரவியது, அங்கே அந்த வைரஸ் ஒருபோதும் கண்டறியப்படவே இல்லை என்பதால் 85,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர் மற்றும் இதுவரை 266 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், 140 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் மிக பயங்கர நோய்க்கிருமியான H5N1 இன்ஃப்ளூயன்ஸா A 'பறவைக் காய்ச்சலால்' இறந்து போயின அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

இந்த வாரத்தில் தான், கம்போடியாவில் ஒரு 11 வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தார், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நிலைமையை 'கவலைக்குரியதாக' அறிவித்ததுடன், உலகளவில் 'மிகவும் கவனத்துடன் இருக்க' அழைப்பு விடுத்தது. மனிதரிடம் இருந்து மனிதருக்கு வேகமாக பரவக் கூடிய விதத்தில் H5N1 உருமாறி வளர்ந்தால், அதன் விளைவுகள் பேரழிவுகரமாக இருக்கும். காற்றில் பரவும் இந்த வைரஸ் கோவிட்-19 ஐ விட அதிகமாக குறைந்தபட்சம் 30 சதவிகித இறப்பு விகிதம் கொண்டுள்ளது. ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் சுகாதார கவனிப்பு அமைப்புமுறைகள் ஒரே இரவில் சிதைந்து விடும்.

முதலாளித்துவவாதிகள் இந்தப் பெருந்தொற்றில் இருந்து அவர்களின் பிற்போக்குத்தனமான படிப்பினைகளைப் பெற்றிருக்கும் அதேவேளையில், சர்வதேச தொழிலாள வர்க்கமும் நனவுப்பூர்வமாக தங்களின் சொந்த படிப்பினைகளை உள்வாங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலத்தின் முற்போக்கான எதிர்கால வளர்ச்சி சாத்தியமில்லை. அதே நேரத்தில் இந்தப் பெருந்தொற்று முடிந்துவிட்டது என்று அவர்கள் பொய்யாக அறிவிக்கும் அதேவேளையில், ஏகாதிபத்திய சக்திகள் தவிர்க்கவியலாமல் அணுஆயுதங்களைப் பயன்படுத்தப்படும் மூன்றாம் உலகப் போரை நோக்கி தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவத்தின் கைவசம் உள்ள நீடிக்கும் பெரும் பேரழிவுகளைத் தடுக்க, தொழிலாளகள் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் ஒன்றுபட வேண்டும். சமூகத்தின் வளங்களைப் போர் மற்றும் தனியார் இலாபங்களில் இருந்து உலகளாவிய பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் பொது சுகாதாரத்தை நோக்கி மறுஒதுக்கீடு செய்வதன் மூலமாகவே, ஒரு எதிர்கால சோசலிச சமூகத்தால் போர் அச்சுறுத்தலை நிறுத்த முடியும், கோவிட்-19 பெருந்தொற்றை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும், காலநிலை மாற்றத்தைத் தடுத்து மாற்றியமைக்க முடியும், எதிர்கால பெருந்தொற்றுக்களின் அபிவிருத்தியைத் தடுக்க முடியும், அனைவருக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கை தரங்களை வழங்க முடியும். இந்தக் கொள்கைகளே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு உந்துதலளிக்க வேண்டும்.

Loading