புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் 19 சிறுவர்கள் உட்பட இத்தாலிய கடல்பகுதியில் குறைந்தது 59 புலம்பெயர்ந்த மக்கள் நீரில் மூழ்கியுள்ளனர். 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இத்தாலியின் கலாப்ரியன் (Calabrian) கடல்பகுதியில் உள்ள பாறைகளில் மரத்திலான படகு ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியதில், குறைந்தபட்சம் 59 புலம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் 19 சிறுவர்களும் அடங்குவர். பல உடல்கள் கடற்கரை உல்லாச விடுதிகளுக்கு அருகில் கரை ஒதுங்கியுள்ளன.

மேலும் 81 பேர்கள் உயிர் பிழைத்துள்ளதாக அறியப்படுகிறது. அவர்களில் 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைத்தவர்களின் கூற்றுப்படி, சுமார் 150 பேர் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்துள்ளனர். இவர்கள், மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் துருக்கியை விட்டு வெளியேறி இருந்தனர்.

இந்தக் கொடூரமான குற்றத்திற்கான பொறுப்பு, அவநம்பிக்கைக்கு உள்ளான மக்களுக்கு எதிராக, கண்டத்தை ஒரு 'கோட்டையாக' மாற்ற சதி செய்த ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களும், ஏகாதிபத்திய வன்முறையால் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் உள்ள சமூகங்களை சிதைத்துள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளும் ஆவர். இப்பகுதிகளிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில், எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 26, 2023, ஞாயிற்றுக்கிழமை, தெற்கு இத்தாலியின் குட்ரோவுக்கு அருகிலுள்ள கடற்கரையில், புலம்பெயர்ந்த மக்களின் உடைந்த படகிலிருந்து ஒரு உடலை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். அவர்களின் படகு உடைந்ததால், எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த மக்கள் இறந்ததாகவும், டசின் கணக்கானவர்கள் மீட்கப்பட்டதாகவும் மீட்பு அதிகாரிகள் கூறுகின்றனர். [AP Photo/Giuseppe Pipita]

அருவருப்பான பாசாங்குத்தனத்துடன் இத்தாலியின் பாசிச பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது ''ஆழ்ந்த வருத்தத்தை'' தெரிவித்தார். ஐரோப்பாவின் எல்லைகளில் இரத்தக்களரிக்கு காரணமான கொள்கைகளுக்கு உறுதியளித்து, அகதிகள் 'புறப்படுவதுக்கு முன் தடுப்பதன் மூலம்' ஐரோப்பாவிற்கு செல்லும் வழிகளில் மேலும் ஒடுக்குமுறையை அவர் மேற்கொள்கின்றார். லிபியா மற்றும் துனிசியாவுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே 21,000 பேரின் 'வருகையைத் தடுத்துவிட்டது' என்று அவரது உள்துறை மந்திரி கடந்த வாரம் பெருமிதம் கொண்டார். மக்களை நரக நிலைமைகளில் சிக்க வைத்துள்ள இந்த நாடுகள், இதர எண்ணற்ற மக்களை மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதற்கு தள்ளுகிறது.

பாசிச மெலோனியின் இதே செய்தியை ஐரோப்பாவின் எந்த ஆட்சியாளர்களிடமிருந்தும் கேட்க முடியும்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டேர் லேயன், இந்த மரணத்தால், தானும் 'ஆழ்ந்த வருத்தம்' அடைந்ததாகக் கூறினார். 'இடம்பெயர்வு மற்றும் புகலிடத்திற்கான (EU) உடன்படிக்கை மற்றும் மத்திய மத்தியதரைக் கடல் செயல் திட்டத்தில் நாங்கள் எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்' என்று கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, 'ரோந்து மற்றும் நிலையான உள்கட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு, வாகனங்கள் முதல் கேமராக்கள் வரை, கண்காணிப்பு கோபுரங்கள் முதல் மின்னணு கண்காணிப்பு வரை' பற்றிய விவரங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் அகதிகளை பாரியளவில் எளிதாக நாடுகடத்தவும், வட ஆபிரிக்கக் கடற்கரையில் காவல் செய்யும் மிருகத்தனமான ஆட்சிகளுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பால் மத்தியதரைக் கடலில் இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் என பட்டியலிடப்பட்ட 2,406 பேரை 'ஐரோப்பா கோட்டை' ஏற்கனவே கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2014ல் இருந்து கிட்டத்தட்ட 26,000 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர். ஆயினும், துருக்கிய அல்லது வட ஆபிரிக்கக் கரையோரப் பாதையில் ஏற்பட்ட பயங்கரங்கள் அல்லது பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிறையில் அடைக்கப்பட்டு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட தடுப்பு முகாம்களின் வலையமைப்பு பற்றிய எதனையும் இது குறிப்பிடவில்லை. 

2015 ஆம் ஆண்டு துருக்கியின் கடற்கரையில் ஒரு இளம் சிரிய நாட்டை சேர்ந்த சிறுவன் இறந்து கிடப்பது போன்ற புகைப்படம் அதிர்ச்சியையும் மக்களின் கோபத்தையும் தூண்டியதிலிருந்து, அரசாங்கங்களின் கொள்கை, இறந்த குழந்தைகளை கடற்கரையில் அலைகளால் கழுவுவதை வழக்கமான நிகழ்வாக ஆக்கியுள்ளது. நவம்பர் 2020 இல், கிரேக்க தீவான சமோஸ் கடற்கரையில் ஐந்து வயது சிறுவன் இறந்து கிடந்தான். அவர்களின் படகு பாறைகளில் மோதி கவிழ்ந்ததில் அவரது தந்தை அச் சிறுவனை இழந்தார். இப்போது அவர் தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். அச்சிறுவனின் உடலை அடையாளம் காட்டுவதற்காக கைவிலங்கு போடப்பட்டு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து அடுத்த மாதம், லிபியாவின் தலைநகர் திரிப்போலிக்கு மேற்கேயுள்ள கடற்கரையில் 5 முதல் 10 வயதுடைய நான்கு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஆறு மாத குழந்தை மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட மேலும் மூன்று குழந்தைகள் அதே கடற்கரையில் இறந்து கிடந்தனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு கடக்க முயன்ற குடும்பத்தினருடன் நீரில் மூழ்கி இறந்த ஒரு வயதுக் குழந்தையின் உடல் நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மே 2021 இல், கார்டியன் பத்திரிகை வெளியிட்ட ஆய்வில், 2,000ம் இறப்புக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகளை பின்தள்ளும் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தியது. ஐரோப்பாவில் குடியேறுபவர்களை, எல்லைகளில் இருந்து வன்முறை மற்றும் அவமானம் ஆகியவற்றுக்கு உள்ளாக்கி, கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகும். மிக மோசமான துஷ்பிரயோகங்களை மேற்கொண்டுவரும் லிபியா மற்றும் துனிசியாவில் உள்ள படைகள், புலம்பெயர்ந்த மக்களின் கப்பல்களை இடைமறித்து, அவர்களை சித்திரவதை, கற்பழிப்பு, கொலை மற்றும் அடிமைத்தனம் நிறைந்த முகாம்களுக்கு அனுப்புகின்றன.

அகதிகளை கடலில் தத்தளிக்க விடுவது மற்றொரு மூலோபாயம் ஆகும். ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் 2021 அறிக்கையின்படி, ஐரோப்பிய அரசாங்கங்கள், புலம்பெயர்ந்த மக்கள் துன்பத்தில் இருக்கும் இடங்களிலிருந்து கப்பல்களை மீண்டும் திருப்பி அனுப்பியதாகக் கண்டறிந்துள்ளது.

பல சிறிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடலில் உயிர்களை காப்பாற்றுவதற்கான சர்வதேச கடமையை நிலைநிறுத்த முன்வந்துள்ளன. இருந்தபோதிலும், இத்தாலியிலுள்ள மெலோனியின் அரசாங்கம் இதுபோன்ற அவசரகால நடவடிக்கைகளை தடை செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆபத்தில் உள்ள இதர படகுகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, மீட்புக் கப்பல்கள் மீட்புப் பணியை மேற்கொண்ட பிறகு உடனடியாக துறைமுகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது.

பிப்ரவரி 26, 2023 ஞாயிற்றுக்கிழமை, தெற்கு இத்தாலியில் உள்ள குட்ரோவுக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு உடல் மற்றும் படகின் இடிபாடுகள் காணப்படுகின்றன. தெற்கு இத்தாலியில் படகு உடைந்ததால், அறியப்படாத எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த மக்கள் இறந்ததாகவும், டசின் கணக்கானவர்கள் மீட்கப்பட்டதாகவும் மீட்பு அதிகாரிகள் கூறுகின்றனர். [AP Photo/Giuseppe Pipita]

ஆனால், இத்தாலிய அரசாங்கம் சட்டத்தில் அதிக தூரம் சென்றாலும், அது அனைத்து ஐரோப்பிய சக்திகளின் பொதுவான புலம் பெயர்ந்தோர் தொடர்பான கொள்கையை மட்டுமே குறியீடாக்குகிறது. வெள்ளியன்று, 15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 'உடல் ரீதியான தடைகள் உட்பட அனைத்து வகையான எல்லைப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்கும்' நிதி உதவி கோரும் அறிக்கையை வெளியிட்டன.   'எல்லைப் பாதுகாப்பு படையான புரென்டெக்ஸ்சின் (Frontex) ஆதரவும் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட உறுப்பு நாடுகளில் முழுமையாக அது பயன்படுத்தப்பட வேண்டும்' என்று அவை தெரிவித்தன. மேலும் 'அடிப்படையற்ற புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து துரிதப்படுத்தப்பட்ட [நாடுகடத்துதல்] நடைமுறைகளுக்கு அதிக சாத்தியக்கூறுகள் தேவை' என்றும் அவை கோரின.

ஒவ்வொரு நாடும் அதன் துறைமுகங்களை அணுக மறுப்பதால், நூற்றுக்கணக்கான அகதிகளை நிரப்பியுள்ள மீட்புக் கப்பல்கள் வாரக்கணக்கில் கடலில் தொடர்ந்து சிக்கித் தவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில், சர்வதேச மன்னிப்புச்சபை, 'அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் எவ்வாறு ஆதாரமற்ற குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை கண்டித்து 'கோட்டை ஐரோப்பாவில் விசாரணைக்கான ஒற்றுமை' என்ற அறிக்கையை வெளியிட்டது. பல ஐரோப்பிய நாடுகளில் அவர்களின் செயல்பாடுகளில், நியாயமற்ற கட்டுப்பாடுகள், மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கோள் காட்டப்பட்ட வழக்குகளில் ஒன்று, லெஸ்போஸ் கடற்கரையில் குடியேறியவர்களை மனித கடத்தல், பணமோசடி மற்றும் இதர மோசடி செய்ததாகக் கூறப்படும் 24 தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்ட குழுவின் மீதான கிரேக்க அரசாங்கத்தின் விசாரணை ஆகும். இந்த விசாரணை மற்றும் உளவு பார்த்ததற்கான ஆரம்ப குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும். இந்தக் குழுவில் சாரா மார்டினியும் அடங்குவர். துருக்கியில் இருந்து கிரீஸுக்கு கடலைக் கடக்க முயன்று, ஆபத்தில் சிக்கிய சக அகதிகளுக்கு உதவிய மார்டினியின் உண்மைக்கதை தி ஸ்விம்மர்ஸ் (The Swimmers) திரைப்படத்திற்கு உத்வேகம் அளித்தது.

நேட்டோவின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பினாமி படைகளுக்கும் பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கும் இடையே சிரியாவில் நடந்த பேரழிவுகரமான போரில் இருந்து மார்டினி தப்பி வெளியேறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கிய அகதிகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  அமெரிக்க ஆக்கிரமிப்புகள், இராணுவத் தலையீடுகள், கண்மூடித்தனமான ட்ரோன் தாக்குதல்கள், முடக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், உலகளாவிய சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய காரணிகளால் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலவந்தமாக இடம்பெயர்ந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ள இவர்கள், உலகிலுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களால் மனித குப்பைகளாக கருதப்படுகின்றனர்.  

கிட்டத்தட்ட நான்கு மில்லியன் இடம்பெயர்ந்த மக்கள் துருக்கியில் வாழ்கின்றனர், சமீப காலம் வரை கலாப்ரியாவில் (Calabria) கப்பல் விபத்துக்குள்ளான மக்கள் உட்பட. மேலும் 6.6 மில்லியனர்கள் சிரியாவிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் குறைந்தது 50,000 பேரைக் கொன்ற மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வீடற்றவர்களாக ஆக்கிய நிலநடுக்கத்தால் பலர் தங்கள் வாழ்க்கையை இரண்டாவது முறையாக அழித்துள்ளனர்.

இதற்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் பதிலானது, ஆளும் வர்க்கத்தின் முன்னுரிமைகள் பற்றியதையே நிறைய கூறுகிறது. இதுவரை, ஐரோப்பிய ஆணையம் பூகம்ப நிவாரணமாக வெறும் €6.5 மில்லியன் மட்டுமே வழங்க உறுதியளித்துள்ளது, கடந்த ஆண்டு 754 மில்லியன் ஈரோக்களை அதன் புரென்டெக்ஸ் எல்லைப் படைக்கு வழங்கியது. இந்த எல்லைப்படை கிரேக்க அரசாங்கத்துடன் சேர்ந்து, பேரழிவில் இருந்து தப்பிக்க முற்படும் அதிகமான மக்களை எதிர்பார்த்து ஏஜியன் கடலைச் சுற்றி ரோந்துகளை முடுக்கிவிட்டுள்ளது. 'மில்லியன் கணக்கான மக்களின் பாரிய இடப்பெயர்வு தீர்வு அல்ல' என்று கிரேக்க குடிவரவு அமைச்சர் நோடிஸ் மிடராச்சி மிரட்டினார்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுப்பு என்பன உலக அளவில் நடைபெறுகிறது. கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறும் வகையில், அமெரிக்க தெற்கு எல்லையில் ஏறக்குறைய அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் நுழைவு மற்றும் புகலிடத் தடை செய்யும் குடியேற்றக் கொள்கையை அறிவித்தார்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக 'ஜனநாயகம்' மற்றும் 'சுதந்திரம்' ஆகியவற்றிற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஒரு போரை நடத்துகின்றன என்ற கற்பனையை இது போன்ற நிகழ்வுகள் கிழித்து எறிகிறது. உண்மையில், நேட்டோவின் போரும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் ஜனநாயக உரிமைகளுடன் ஒத்துப்போகாததோடு, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது பாரிய தாக்குதலைக் கோருகிறது. இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவுகளின் மீது வேகமாகவும், அதிக கனமாகவும் தாக்கத்தை செலுத்தும். ஏற்கனவே இவர்கள் தமது வீடுகள் மற்றும் சமூகங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Loading