முன்னோக்கு

உக்ரேனில் போர், அதை நிறுத்துவது எப்படி: இணையவழி கூட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு மூலோபாயத்தை முன்வைக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

'உக்ரேனில் போர், அதை நிறுத்துவது எப்படி: சோசலிச போர்-எதிர்ப்பு மூலோபாயம் பற்றிய இணையவழி விவாதம்' என்ற தலைப்பில் சனிக்கிழமை நடந்த இணையவழி கூட்டம், தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

உலக சோசலிச வலைத் தளமும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த கலந்துரையாடல், வேறெங்கும் காண முடியாத ஒரு முன்னோக்கை வழங்கியது. இந்த நிகழ்வு முழுவதும் வெளிப்பட்டது என்னவென்றால், இந்தப் போருக்கான காரணங்களைப் பற்றிய வரலாற்று ஆய்வுக்கும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பாகும்.

உக்ரேன் போரும் அதை நிறுத்துவது எவ்வாறு

அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் இரண்டிலும், இந்த விவாதம் சர்வதேச தன்மையைக் கொண்டிருந்தது. மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை, இந்தியா, ரஷ்யா, உக்ரேன், ருமேனியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, துருக்கி மற்றும் டஜன் கணக்கான பிற நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாற்றினர்.

உலக சோசலிச வலைத்தளத்தின் எழுத்தாளர் ஆண்ட்ரியா பீட்டர்ஸுடன் இணைந்து நிகழ்வைத் தொகுத்தளித்த அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், போர் அதன் இரண்டாம் ஆண்டில் நுழையும் நிலையில், இந்த மோதல் விரைவாக விரிவாக்கப்பட்டு வருவதை வலியுறுத்தினார். மோதலின் தற்போதைய நிலையைச் சுருக்கமாக தொகுத்தளித்த உலக சோசலிச வலைத்தளத்தின எழுத்தாளர் ஆண்ட்ரே டேமன், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது ஐரோப்பாவில் நடக்கும் மிகப்பெரிய போர் என்பதை வலியுறுத்தினார்

அமெரிக்காவும் அவர்களது ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும், 'ரஷ்யாவின் இராணுவத் தோல்வியின் மீதான அவர்களது நம்பகத்தன்மையை முழுவதுமாகப் பணயம் வைத்துள்ளனர்' என்று கூறிய டேமன், இதில் 200,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஓர் அணுஆயுத மோதலாக இப்போர் அபிவிருத்தி அடைய அச்சுறுத்துகிறது என்றார். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) தலைவர் கிறிஸ்தோப் வாண்ட்ரயர் பேசுகையில், ஜேர்மனி அதன் இராணுவ வரவு செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதுடன், உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சவால் விடும் ஓர் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையைப் புதுப்பித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இப்போதைய இந்தப் போரின் வரலாற்று தோற்றுவாய்கள்

இந்த விவாதம் விரைவிலேயே போரின் அடித்தளத்திலுள்ள வரலாற்று அரசியல் வேர்கள் மீது கவனத்தை செலுத்தியது.

இந்தப் பிரச்சினை மீது பேசிய உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு கூறினார்:

ஊடகங்களின் செய்திகளில் முற்றிலும் எந்தவொரு வரலாற்று முன்னோக்கும் இல்லை. போரின் முதல் நாளில் இருந்தே, செய்தி ஊடகங்களில் இந்த கட்டுக்கதை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஈராக் போருக்கு 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' என்று இருந்ததைப் போல, 'தூண்டுதலற்ற' புட்டினின் போர் என்ற முழக்கமே இந்தப் போரை பொதுவாக விவரிப்பதில் இருந்தது.

எல்லா போர்களுமே சிக்கலான வரலாற்று, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளில் இருந்தே எழுகின்றன என்பதை நோர்த் விளக்கினார். யார் முதலில் சுட்டது என்ற கேள்வியுடன் ஒன்றிப்போயுள்ள ஊடகங்களை மறுத்த அவர், எந்தப் போரும் இதுவரையில் இந்த அடிப்படையில் விவரிக்கப்படவில்லை என்றதுடன், 108 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய முதலாம் உலகப் போரை உருவாக்கிய உண்மையான காரணிகள் மீதான விவாதங்கள் இன்று வரை தொடர்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

புட்டினின் நோக்கத்தை விட முக்கியமானது, ஏகாதிபத்திய சக்திகளை வழிநடத்தும் நலன்கள் பற்றிய கேள்வியாகும் என்று கூறிய நோர்த், “இந்தப் போரைப் பற்றிய எந்த விவாதத்திலும், குறைந்தபட்சம் ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட விதத்திலோ, கோழைத்தனமான கல்வித்துறையால் சகோதரத்துவத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறை மறந்து விட்ட வரலாற்றாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள விதத்திலோ கூட, கடந்த 30 ஆண்டுகளில் சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர் அமெரிக்கா தொடுத்துள்ள எந்தவொரு போர்களைப் பற்றியும் யாரும் பேச விரும்பவில்லை,” என்பதைக் குறிப்பிட்டார்.

யூரேசிய பெருநிலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விரிவாக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளுக்கும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல கையாளப்படுகிறது. இதற்கு முரண்பட்ட விதத்தில் நோர்த் கூறினார், “ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு வரலாற்று இயக்கமாகும். இது ஒரு வரலாற்று நினைவகத்தைக் கொண்டுள்ளது, இது அதன் அரசியலின் அடித்தளத்தில், இந்த சகாப்தத்தின் முரண்பாடுகளைப் பற்றிய புரிதலைக் கொண்டுள்ளது.”

ஆஸ்திரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்டகாலத் தலைவரும் மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தில் நிபுணருமான நிக் பீம்ஸ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உந்தும் பொருளாதாரக் காரணிகள் மீது அவர் கருத்துக்களை ஒருங்குவித்தார். 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களும், 'யார் உலக மேலாதிக்கத்தைப் பெறுவது' என்பதை தீர்மானிக்கவே மோதிக்கொண்டன என்றவர் கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தங்கத்தின் மதிப்பை டாலருடன் பிணைத்த வாஷிங்டனின் பிரெட்டன் வூட்ஸ் முறை உள்ளடங்கலாக, இவற்றின் மூலமாக உலகளாவிய உறவுகளை நெறிப்படுத்த முனைந்தது. ஆனால் பிரெட்டென் வூட்ஸ் உடன்படிக்கை தொடங்கி வெறும் 27 ஆண்டுகளில் அதிலிருந்து முறித்துக் கொள்ள ஜனாதிபதி நிக்சன் நிர்பந்திக்கப்படும் அளவுக்கு, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிகவும் பலத்துடன் மீண்டெழுந்தன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

தொழிலாள வர்க்கத்தின் மீது 1970களில் தொடங்கப்பட்ட பாரிய தாக்குதலும், 1980 களில் இருந்து நிதிய ஊகவணிகத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் இந்த நெருக்கடியை ஆழமாக்கியது என்று பீம்ஸ் வலியுறுத்தினார். முடிவாக அவர், 'அமெரிக்காவை இன்னும் அதிக ஆக்கிரோஷமான இராணுவ நிலைப்பாட்டுக்கு உந்தும் காரணிகளில் ஒன்று… அதன் மோசமடைந்து வரும் மற்றும் பலவீனமடைந்து வரும் பொருளாதார நிலையாகும்,” என்றவர் கூறினார்.

'அமெரிக்க ஏகாதிபத்தியம், புதிய மூலவளங்களை பெற்றுக்கொள்வதற்காக, புதிய பகுதிகளைக் கைப்பற்றியும், சுரண்டலுக்கான புதிய வழிவகைகள் மூலமாகவும், குறிப்பாக அதன் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அது காணும் சீனாவுக்கு எதிராகவும் மற்றும் ஐரோப்பிய பெருநிலத்தைக் கைப்பற்றியும், அது கடந்த காலத்தில் செய்ய முயன்றதைப் போலவே, அதன் நெருக்கடியைத் தீர்க்க முயன்று வருகிறது. … இது ஒரு புதிய உலகளாவிய மோதலின் ஆரம்பக் கட்டம் தான், இதில் அமெரிக்கா … சாத்தியமான அனைத்து விதத்திலும் சாத்தியமான எல்லா எதிரிகளையும் நசுக்க முயன்றாக வேண்டியிருக்கும்.”

ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவுகள்

இந்த மோதலின் வரலாற்றுப் பின்னணி பற்றிய விவாதம் முக்கியமாக, 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் முக்கியத்துவம் மீது ஒருமுனைப்பட்டிருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் முடிவு குறித்த WSWS காலவரிசையைச் சுட்டிக்காட்டி, WSWS எழுத்தாளர் கிளாரா வையிஸ் பேசுகையில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு 'ஏகாதிபத்தியத்தின் மற்றும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தை' குறிக்கிறது என்பதை அந்நேரத்திலேயே ட்ரொட்ஸ்கிச இயக்கம் அங்கீகரித்ததை வலியுறுத்தினார்.

1991 க்கு பின்னர் ஏற்பட்ட இரண்டு அடிப்படை அபிவிருத்திகளைத் தற்போதைய இந்த போருக்குப் பொருத்தமாக வையிஸ் குறிப்பிட்டார்: “முதலாவதாக, இந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் மீட்டமைப்பு, ரஷ்யாவிலும் உக்ரேனிலும் இப்போது அதிகாரத்தில் உள்ள குற்றகரமான இந்தத் தன்னலக்குழு ஆட்சிகள் ஆள்வதற்கு வழிவகுத்தது. … இரண்டாவது, உண்மையிலேயே அது உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவவாதத்தின் கண்கூடான வெடிப்புக்கான கதவுகளைத் திறந்து விட்டது.” 1991 இன் ஆரம்பத்தில் ஈராக் மீதான அமெரிக்க குண்டுவீச்சுக்கு ஸ்ராலினிசவாதிகள் ஒப்புதல் அளித்தார்கள் என்பது சோவியத் ஒன்றிய கலைப்பதற்கு முன்னர் ஸ்ராலினிஸ்டுகளின் கடைசி காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். அந்த அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதல் 30 ஆண்டுகால இடைவிடாத போரின் தொடக்கமாக இருந்தது.

முதலாளித்துவ மீட்டமைப்பு உக்ரேனிய முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச மரபுகளைப் புத்துயிரூட்டுவதற்கு நிலைமைகளை உருவாக்கியது. இந்த நிகழ்முறைக்கு ஏகாதிபத்திய சக்திகள் உதவி உறுதுணையாக இருந்தன. இரண்டாம் உலகப் போரின் போது உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (Organization of Ukrainian Nationalists) நாஜிக்களுடன் ஒத்துழைத்து நூறாயிரக் கணக்கான யூதர்கள் மற்றும் போலந்து மக்களைப் படுகொலை செய்வதில் பங்கெடுத்திருந்த நிலையில், அதற்குத் தலைமை தாங்கிய உக்ரேனிய பாசிசவாதியான ஸ்டீபன் பண்டேராவின் முன்வரலாறை வையிஸ் மதிப்பாய்வு செய்தார். தற்போதைய உக்ரேனிய இராணுவத்தின் தலைமை தளபதி பண்டேராவின் நன்கறிந்த ஓர் அபிமானி என்பதை வையிஸ் சுட்டிக்காட்டினார்.

சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்டமைப்பின் விளைவுகளைப் பற்றிய அவருடைய விவாதத்தில், நோர்த் குறிப்பிடுகையில், ரஷ்யாவைச் சமாதானமான முறையில் உலகப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்று கருதிய புத்திஜீவிகளுக்குள் உள்ள அதிகாரத்துவத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரத்துவத்தின் பெரும் பிழையான கணக்கீட்டை நோர்த் சுட்டிக்காட்டினார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சற்று முன்னர் அங்கே மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்து நோர்த் கூறுகையில், “முழுமையாக நோக்குநிலை பிறழ்ந்த, முதிர்ச்சியற்ற, கவனக்குறைவான புத்திஜீவிகளிடையே ஒருவர் எதை எதிர்கொண்டார் என்றால் … முதலாளித்துவ மீட்சி ஜனநாயகத்தையும், அனைவருக்கும் செல்வ செழிப்பையும் கொண்டு வரும், முன்னாள் சோவியத் ஒன்றியம் எங்கிலும் மரங்களில் பணம் காய்த்துத் தொங்கும், அனைவருடனும் சமாதானமும் சகோதரத்துவமும் ஏற்படும் என்ற ஏறக்குறைய முற்றிலும் தெளிவற்ற ஒரு கருத்துருவைக் கண்டார்.”

புட்டின் ஆட்சியின் கொள்கைக்குத் திரும்பிய நோர்த் கூறினார், “ஒரு சோசலிச நிலைப்பாட்டில் இருந்து ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், புட்டின் ரஷ்ய மக்களையோ, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தையோ பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கவில்லை. 1991 க்கு பின்னர் சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களைக் கொள்ளையடித்ததன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ரஷ்ய தன்னலக்குழுவின் கணிசமான பிரிவை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். … அந்த அடுக்கின் சார்பாக, ஏகாதிபத்தியத்தின் இடையூறு இல்லாமல் ரஷ்யாவின் பாரியளவிலான வளங்களைச் சுரண்டி சூறையாட அனுமதிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.”

'இந்தப் போர் இரண்டு திசைகளில் தான் செல்ல முடியும். இது முழுமையான பேரழிவுக்குச் செல்லும் அல்லது சோசலிச புரட்சிக்கு இட்டுச் செல்லும்'

இந்தப் போருக்கான வரலாற்றுப் பின்னணி பற்றிய மீளாய்வு, எதன் அடிப்படையில் அது எதிர்க்கப்பட வேண்டும் என்ற அரசியல் வேலைத்திட்டம் மீதான ஒரு விவாதத்திற்கு நேரடியாக இட்டுச் சென்றது. குறிப்பாக, மிக அதிவலது மற்றும் பாசிச அமைப்புகளுடனும் கூட ஒரு கூட்டணி ஏற்படுத்துவதன் அடிப்படையில் இந்தப் போரை எதிர்க்கலாம் என்று வாதிடும் நோக்குநிலை பிறழ்ந்த நடுத்தர வர்க்க கூறுபாடுகளின் ஒரு சர்வதேச போக்கைக் குறித்து பேச்சாளர்கள் உரையாற்றினர்.

எமது கூட்டம் நடந்த அதே நாள், இடது கட்சி அரசியல்வாதியான சாரா வாகன்கினெக்ட் (Sahra Wagenknecht) பேர்லினில் நடத்திய 'சமாதானத்திற்கான' ஓர் ஆர்ப்பாட்டம் மீது வாண்ட்ரயர் கவனத்தைக் கொண்டு வந்தார். “தீவிர வலதுசாரி முன்னாள் ஜெனரல் எரிச் வாட் இன்றைய பேச்சாளர்களில் மற்றும் முக்கிய ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்,” என்று சுட்டிக்காட்டிய வாண்ட்ரயர், “அவர் நாஜி வழக்கறிஞர் கார்ல் ஷ்மிட்டின் நன்கறிந்த  ரசிகர் ஆவார். … அவர் மீள்இராணுவமயமாக்கலை ஆதரிப்பவர். இந்த மீள்இராணுவமயமாக்கலை இன்னும் பகிரங்கமாக அமெரிக்காவுக்கு எதிராக திருப்ப வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். … பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) அரசியல்வாதிகளும் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை வாகன்கினெக்ட் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே மிகவும் தெளிவுபடுத்தி இருந்தார்,” என்று கூறினார்.

'இவர்களுடன் சேர்ந்து, அவர்கள் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கவில்லை. நீங்கள் ஒரு போர் இயக்கத்தைக் கட்டமைக்கிறீர்கள்,' என்று வாண்ட்ரயர் தெரிவித்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

'போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்' என்ற பேரணியுடன் அமெரிக்காவிலும் இதே போன்ற ஒரு கூட்டணி அபிவிருத்தி அடைந்து வருவதைக் குறித்து நோர்த் உரையாற்றினார்.

“அந்தப் பேரணியை அவர்கள் சிந்திப்பதற்கு எதிரான கோபம் என்றோ, சோசலிச அரசியலுக்கு எதிரான கோபம் என்றோ அழைத்திருக்கலாம்' என்று கருத்துரைத்த நோர்த், 'போருக்கு எதிராக இடது-வலது கூட்டணி என்ற கருத்து, போரின் தோற்றுவாய்கள் பற்றிய ஒரு புரிதலின் அடிப்படையில் போருக்கு எதிரான போராட்டத்தை நிலைநிறுத்தும் எந்தவொரு சாத்தியக்கூறையும் நிராகரிக்கிறது. போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்கான சாத்தியக்கூறையும் அது ஒதுக்கி விடுகிறது,” என்றார். அவர் பின்வருமாறு தொடர்ந்து கூறினார்:

போருக்கு எதிரான போராட்டத்திற்கு முதலில் ஒருவர் அதன் காரணங்களை அடையாளம் காண வேண்டும். அதன் தோற்றுவாய்களைப் புரிந்து கொள்ளாமல் ஓர் அரசியல் நோயைக் குணப்படுத்த முடியாது. அதன் காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் ஒரு போரை உங்களால் எதிர்க்க முடியாது.

இதை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறதோ அல்லது இல்லையோ, எந்த சமூக சக்தி, புறநிலை ரீதியாக, ஒவ்வொரு நாட்டிலும், அதற்கான நலனை, புறநிலை ரீதியான நலனை, கொண்டுள்ளது? அது தொழிலாள வர்க்கம், சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பலி கொண்ட இந்தப் பெருந்தொற்று தாக்கத்தாலும் பேரழிவான பணவீக்கத்தாலும் உந்தப்படும் இந்த சமூக சக்தி தான் அணிதிரட்டப்பட வேண்டும்.

இந்த விவாதக் கூட்டத்தை நிறைவு செய்கையில், நோர்த் மீண்டும் வரலாற்றின் படிப்பினைகளைக் குறிப்பிட்டார். 'முதலாம் உலகப் போர் தொடங்கிய போது ஒட்டுமொத்த இரண்டாம் அகிலமும் அவற்றின் சொந்த நாட்டின் அரசாங்கங்களுக்குச் சரணடைந்த நிலைமைகளின் கீழ் … 1914 இல் லெனினின் தலைச்சிறந்த ஆய்வு' என்னவென்றால், அவர் 'கூறினார், இதுவொரு ஏகாதிபத்தியப் போர். இந்தப் போரை உருவாக்கிய முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் தொழிலாள வர்க்க கொள்கையைக் கட்டமைப்பது அவசியம். … 1914 இன் இந்த வெடிப்புக்கு இட்டுச் சென்ற அதே முரண்பாடுகள் … உலகெங்கிலும் புரட்சியை உருவாக்கும் என்றார். அது தான் நடந்தது. அது முதலில் ரஷ்யாவில் வெடித்தது. அது விரைவிலேயே உலகெங்கிலும் விரிவடைந்தது.”

'விரிவடைந்து வரும் சமூக நெருக்கடியின் பெரும் புயல் காற்று' காரணமாக இன்றும் அதே நிலைமைகள் இருப்பதாக நோர்த் வாதிட்டார். இந்த வளர்ந்து வரும் இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதே தீர்க்கமான பணி, ஏனென்றால் 'அரசியல் தெளிவில் இருந்து தான் மாபெரும் நடவடிக்கை எழுகின்றது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்தப் புரிதலில் இருந்து வரும் அடிப்படைப் பணிகளுடன் நோர்த், தனது கலந்துரையாடலை நிறைவு செய்தார்:

நாங்கள் தொழிலாளர்களுக்கு கல்வியூட்டுகிறோம். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களில் போராடுவதற்கு ஒரு வழியை எதிர்நோக்குபவர்கள், எவை வரலாற்றில் பணயம் வைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டவர்கள், மாபெரும் வரலாற்று பிரச்சினைகளுக்கு, இங்கே எந்த எளிமையான பதில்களோ, எளிமையான தீர்வுகளோ இல்லை என்ற உண்மையை ஏற்க விரும்புபவர்கள், அனைத்துலகக் குழுவின் பிரிவுகளோடு இணைந்து செயல்படுங்கள்.

இந்தப் போர் இரண்டு திசைகளில் தான் செய்ய முடியும். ஒன்று முழுமையான பேரழிவுக்குச் செல்லும் அல்லது சோசலிச புரட்சிக்கு இட்டுச் செல்லும். … இதன் விளைவிற்கு உத்தரவாதம் எதுவுமுள்ளதா? அது போராட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

இந்த விவாதக் கூட்டம் ஒட்டுமொத்தமாக எந்த 'மாபெரும் நடவடிக்கை' அடிப்படையில் அரசியல் தெளிவு இருக்க வேண்டுமோ அதை வழங்கியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பில் இணைந்து, ஏகாதிபத்திய போர் மற்றும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சர்வதேசிய, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுக்குமாறு இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து இந்தக் கூட்டம் நிறைவு செய்தது.

Loading