ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆத்திரமூட்டல்களுக்கான முக்கிய களமாக நோர்வே உருவாகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உக்ரேனில் அதன் இரண்டாம் ஆண்டில் நுழையும் போது, வாஷிங்டன் பொறுப்பற்ற முறையில் மோதலை மேலும் தீவிரப்படுத்துகிறது. அது உக்ரேனுக்கு போர் டாங்கிகளை அனுப்பிய பிறகு, போர் விமானங்கள் மற்றும் நேட்டோ தரைப்படைகளை அனுப்புவது பற்றிய பகிரங்க விவாதத்தை மேற்கொண்டுள்ளது. இது அணு ஆயுத சக்திகளுக்கு இடையே உலகளாவிய இராணுவ மோதலை விரைவில் தூண்டும். உக்ரேனுக்கு அப்பால், வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ஆர்க்டிக் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகப்படுத்தி வருகின்றன.

மார்ச் 16, 2022 அன்று நோர்வேயின் Cold Response 22 பயிற்சியின் போது, நோர்வே விமானப்படைத் தளமான போடோவில் பறக்கும் முன், அமெரிக்க கடற்படையினர் MV-22B Osprey இனை பரிசோதனை செய்தனர் [AP Photo/Lance Cpl. Elias E. Pimentel III/U.S. Marine Corps via AP]

ஆர்க்டிக் சுற்று வட்டத்திற்கு வடக்கே உள்ள நோர்வேயின் ஈவ்னெஸ் விமான நிலையம் ரஷ்யாவைக் கண்காணிப்பதற்கான பிராந்திய மையமாக மாற உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நோர்வே இடையேயான கூட்டுத் திட்டம் குறித்த விவரங்களை, இந்த மாத தொடக்கத்தில் நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் பிஜோர்ன் அரில்ட் கிராம் வழங்கினார். அவர் இத்தளமானது USP-8A Poseidon கண்காணிப்பு விமானத்திற்கான வசதிகளை வழங்கும் என்றார்.

இரண்டு ஆர்க்டிக் தளங்களான ஈவ்னெஸ் மற்றும் ராம்சுண்ட் கடற்படை தளம், வாஷிங்டன் மற்றும் ஒஸ்லோ இடையே மேம்படுத்தப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உள்ளடங்குகின்றன. அவை 'ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது அமெரிக்கப் படைகளுக்கு தடையின்றி தளங்களை அணுகவும், அவற்றின் சில பகுதிகளுக்கு பிரத்தியேக உரிமைகளையும் வழங்குகிறது. இந்த ஒப்பந்தம், நாட்டிலுள்ள அனைத்து அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் மீதும், அவர்கள் கடமையில் இல்லாதபோது செய்யும் குற்றங்கள் மற்றும் 'ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளுடன்' தொடர்பிலுள்ள நோர்வே குடிமக்கள் மீதும் கூட செய்யும் குற்றங்களையும் அமெரிக்க அதிகார வரம்பிற்குள் வழங்குகிறது.

வாஷிங்டன் இருதரப்பு உடன்படிக்கை பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. மேலும் பைடென் நிர்வாகம் இந்த ஒப்பந்தம் நோர்வே தளங்களில் அமெரிக்க முதலீட்டிற்கு 'மாறாத தேவை' என்று கூறியது. ஒப்பந்தம் தொடங்கப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஆர்க்டிக் மற்றும் ஸ்காண்டிநேவியா முழுவதும் ஒரு பாரிய இராணுவ நிலையிருப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில், வாஷிங்டன் டென்மார்க், பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன் இதேபோன்ற ஏற்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஸ்வீடனில் 'ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதி' அந்தஸ்துக்கான வாய்ப்புள்ள இடம் கோட்லேண்ட் தீவு ஆகும். இது ரஷ்யாவின் தொலைதூர கட்டுப்பாட்டுப் பகுதியான கலினின்கிராட்டிலிருந்து வடமேற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு முக்கிய பனிப்போர் கால ஸ்வீடன் இராணுவத்தின் தளமாகும்.

சார்லி சலோனியஸ்-பாஸ்டர்னக் என்னும்  சர்வதேச   விடயங்களுக்கான    பின்லாந்து  அமைப்பின் ஆராய்ச்சியாளர், வடக்கில் உள்ள ரோவானிமி விமான நிலையம் உட்பட பின்லாந்திலுள்ள 'ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளை' வாஷிங்டன் கோரலாம் என்று எழுதுகிறார்:

நோர்வே-அமெரிக்க ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள தளபாடங்கள் மற்றும் பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைப்பதற்கான வாய்ப்பு, அமெரிக்க ஈடுபாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, 500 டாங்கி  எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 500 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் பின்லாந்தில் சேமித்து வைக்க முடியும் என்று அமெரிக்காவும் பின்லாந்தும் ஒப்புக்கொண்டால், பின்லாந்தின் படைகள் அமெரிக்காவின் ஆதரவு வருமுன்னரே  முக்கி தருணங்களில் இவற்றைப் பயன்படுத்தும் வகையில் ஒரு பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் 'ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகள்' பற்றி பாதுகாப்பு அமைச்சர் கிராம் கூறினார்: 'ஈவ்னஸில், நோர்வே ஆயுதப்படைகளில் நீண்ட கால திட்டத்திற்கேற்ப செய்யப்படும் முதலீடுகளுக்கு ஏற்ப நோர்வே, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க P-8 கடல்சார் கண்காணிப்பு விமானங்களுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நோர்வே வாங்கிய ஐந்து P-8A Poseidon கண்காணிப்பு விமானங்களும் இதில் அடங்கும். இது பிரிட்டிஷ் Poseidons உடன் இணைந்து நீருக்கடியில் உள்ள இலக்குகளை, அதாவது நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடி அழிக்கும். நோர்வேயில் அமெரிக்கா தயாரித்த F-35 போர் விமானங்களும் ஈவ்னிஸ் இல் தரித்து நிற்கலாம்.

அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ சக்திகளால் பிராந்தியத்தில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளுக்கு ராம்சுண்ட் ஒரு 'கடல் தளவாட மையமாக' செயல்படும். கிராம் பின்வருமாறு கூறினார்:

பாதுகாப்புத் துறைக்கான தற்போதைய நீண்டகாலத் திட்டத்தில், ராம்சுண்ட் கடற்படைத் தளம் வடக்கில் கடற்படைத் தளமாக விரிவாக்கப்பட்ட பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வசதிகள், வெடிமருந்துகளின் சேமிப்பு, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு உட்பட விரிவுபடுத்தப்பட்ட துறைமுகம் உட்பட தனது கடற்படைக்கும் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஆதரவாகவும் மேலும் இத்தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் நேட்டோ கூட்டாளிகள் நோர்வேயில் தொடர்ந்து பயிற்சி செய்கிறார்கள். இது தளவாட ஆதரவு தொடர்பாக அவ்வப்போதான நிலைகொள்ளலையும் உள்ளடக்கியது. ஈவ்னெஸ் மற்றும் ராம்சுண்டில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அதிகரித்த ஒத்துழைப்பு விரும்பப்படுவதுடன் மற்றும் அளவில் பெரிதாக  இருப்பதும் மற்றும் அதிகரித்த செயல்பாட்டு தாக்கங்களையும் வழங்குகிறது.

ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் வடமேற்கில் உள்ள நோர்வேயின் இருப்பிடம் மற்றும் ரஷ்யாவுடன் 196-கிலோமீட்டர் எல்லையுடன் இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யாவுடனான அதன் போரில் வடக்கு முன்னணியை திறப்பதற்கு முக்கிய கூட்டாளியாக உள்ளது. ஜனவரி மாதம் ஒஸ்லோவில் ஆர்க்டிக்கில் நடந்த புதிய இராணுவ உச்சிமாநாட்டில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப்படைகளின் தளபதி மார்க் மில்லி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில்,, அமெரிக்க மற்றும் நோர்வே அதிகாரிகளும் மற்றும் நோர்வே ஆயுதப்படைகள் அடையாளம் காட்ட மறுத்த 11 'நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள்' ஆகியோர்களும் இருந்தனர்.

ஆண்டுக்கு பலமுறை இக்கூட்டம் கூடும் என்பதை வலியுறுத்தி, நோர்வே ஆயுதப் படைகள் அறிவித்தன: “நேச நாடுகள் மற்றும் கூட்டுழைப்பார்களுடனான இந்த சந்திப்பு, வளர்ந்து வரும் மூலோபாய சூழலைப் பற்றிய கூட்டு புரிதலை உருவாக்குகிறது மற்றும் முக்கிய பிரச்சினைகளில் இராணுவ ஆலோசனையை தெரிவிக்கிறது. மூத்த இராணுவத் தலைவர்கள், ஆர்க்டிக் மற்றும் உயர் வடக்கு, பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் தென் சீனக் கடலின் மாறும் இயக்கவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகிரப்பட்ட மூலோபாய சவால்கள் பற்றிய முன்னோக்குகளைப் பரிமாறிக்கொண்டனர்.

ஆர்க்டிக் மற்றும் வடக்கு ஐரோப்பாவில் போருக்குத் தயாராகும் பூகோள மூலோபாயம் குறித்த பல இராணுவ-பாதுகாப்புக் கூட்டங்களில் ஜனவரியின் சந்திப்பு சமீபத்தியதாகும். கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்கா, டென்மார்க், பின்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஆர்க்டிக் பாதுகாப்புத் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றை கனடா நடத்தியது. அக்டோபர் மாதம், போலந்தில் வடக்கு ஐரோப்பாவின் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாடும் நடைபெற்றது. நோர்டிக் நாடுகள், எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் பங்கேற்றன.

நோர்வே வழக்கமான இராணுவப் பயிற்சிகளையும் நடத்துகிறது. மார்ச் 4-16 தேதிகளில் வடக்கு நோர்வேயின் ட்ரோம்ஸ் மாவட்டத்தில் நடைபெறும் Joint Viking 2023 இல் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தின் படைகள் உட்பட 10,000 நோர்வே மற்றும் நட்பு நாடுகளின் துருப்புக்கள் பங்கேற்கும். நோர்வே நேட்டோ பயிற்சியான 'Cold Response' யையும் நடத்துகிறது, இது 2024 ஆம் ஆண்டில் பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன் இணைந்து 'Nordic Response' என்று அழைக்கப்படும் ஒரு கூட்டுப் பயிற்சியாக விரிவுபடுத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சிகள் ரஷ்யா மீதான போருக்கான விரிவான பிராந்திய திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த நவம்பரில் நோர்டிக் பாதுகாப்பு ஒத்துழைப்பு (Nordefco) கூட்டத்திற்கு நோர்டிக் நாடுகளின் தலைமை அதிகாரிகள் தங்கள் அரசாங்கங்களுக்கு தயாரித்த ஆலோசனையில் இது வெளிப்படுகிறது. Nordefco, 2009 இல் நிறுவப்பட்டதுடன் மற்றும் பின்லாந்து மற்றும் ஸ்வீடிஷ் இராணுவத்தினர் இன்னும் நேட்டோ உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் நேட்டோ தளபாடங்கள் மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

அவர்களின் முன்மொழிவுகளில் மேற்கு ஸ்காண்டிநேவியாவில் உள்ள நான்கு துறைமுகங்களை அடையாளம் காண்பது அடங்கும். அவை 'நெருக்கடி' நிலை ஏற்பட்டால் இராணுவத்தினர்கள் மற்றும் உபகரணங்களுக்கான போக்குவரத்து மையங்களாக பயன்படுத்தப்படலாம். துறைமுகங்களில் நோர்வேயில் நார்விக் மற்றும் ட்ரொன்ட்ஹெய்ம், ஸ்வீடனில் உள்ள கோதன்பேர்க் மற்றும் டென்மார்க்கில் எஸ்ப்ஜெர்க் ஆகியவை அடங்கும்.

கடந்த செப்டம்பரில் பால்டிக் பகுதியில் உள்ள நோர்ட் ஸ்ட்ரீம் வாயுக்குழாய்களில் குண்டு வீசியதில் அமெரிக்காவின் பங்கை மூத்த பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ் அம்பலப்படுத்தினார். இது, அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு நோர்வே ஏற்கனவே எவ்வளவு முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜூன் 2022 இல் நேட்டோவின் 'BALTOPS 22' பயிற்சிக்கு முந்தைய மாதங்களில் அமெரிக்கா மற்றும் நோர்வே இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையேயான இரகசிய சந்திப்புகளை ஹெர்ஷ் ஆவணப்படுத்தினார். இது அமெரிக்க இராணுவ சுழியோடிகள்    குழாய்களில் வெடிபொருட்களை வைப்பதற்கு மறைப்பாக செயல்பட்டன.

அத்தகைய ஒரு சந்திப்பு மார்ச் 2022 இல் நோர்வே இரகசிய சேவை மற்றும் கடற்படை மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே நடந்தது. டென்மார்க்கின் கிழக்கு கடற்கரையில் உள்ள போர்ன்ஹோம் தீவில் உள்ள ஆழமற்ற நீர்ப்ப்பகுதியை பயன்படுத்தி குழாய்களை வெடிகுண்டு வைக்க நோர்வேயின் முன்மொழிவுக்கு இது வழிவகுத்தது. ஜூன் 2022 இல் நேட்டோவின் “BALTOPS 22” பயிற்சியை நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் வெடிமருந்துகளை பொருத்துவதற்கு நோர்வே அதிகாரிகள் முன்மொழிந்தனர்.

பைடென் நிர்வாகம் தனது பொறுப்பிற்கான நம்பத்தகுந்த மறுப்பினை உருவாக்க தாமதமாக வெடிக்கவைக்க முடிவு செய்த பிறகு, ஹெர்ஷின் கூற்றுப்படி, செப்டம்பர் 26 அன்று பால்டிக் கடலுக்கு மேல் பறந்த ஒரு நோர்வே விமானம் குண்டுவெடிப்பைத் தூண்டுவதற்காக ஒரு மிதவையை வீசியது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு நோர்வேயின் முக்கியதன்மையை விளக்கி, ஹெர்ஷ் பின்வருமாறு எழுதினார்:

கிழக்கு-மேற்கு நெருக்கடியின்போது, கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க இராணுவம் நோர்வேயின் உள்ளே தனது இருப்பை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது, அதன் மேற்கு எல்லை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 1,400 மைல்கள் ஊடாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே ரஷ்யாவுடன் இணைகிறது. நோர்வேயில் அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை வசதிகளை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதன் மூலம் சில உள்ளூர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பென்டகன் அதிக ஊதியம் தரும் வேலைகளையும் ஒப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேலைகளில், மிக முக்கியமாக, வடக்கே ஒரு மேம்பட்ட செயற்கையான உணர்கருவிகள் இணைக்கப்பட்ட ரேடார் அடங்கும். அது ரஷ்யாவிற்குள் ஆழமாக ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதுடன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை சீனாவிற்குள் நீண்ட தூரம் கேட்கும் தளங்களுக்கான அணுகலை இழந்த பின்னர் அண்மையில் பாவனைக்கு வந்தது.

நோர்வேயின் சக்திவாய்ந்த எரிசக்தி துறையானது, அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களின் அழிவு ஆகியவற்றால் ஒரு பெரிய பயனாளியாக இருந்து வருகிறது. ஐரோப்பாவிற்கான நோர்வே இயற்கை எரிவாயு ஏற்றுமதி 2022 இல் 3.3 சதவீதம் உயர்ந்தது. ஜேர்மனிக்கான விநியோகங்கள் ஆண்டுக்கு ஆண்டு 11 சதவீதத்தால் அதிகரித்தன.

ஜேர்மனி தனது திரவ இயற்கை எரிவாயு முனையங்களின் வலையமைப்பை வில்ஹெல்ம்ஷேவன், புரூன்ஸ்புட்டெல் மற்றும் லுப்மின் ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளது. 2023 டிசம்பரில், அவற்றின் மொத்த ஆண்டுத் திறன் 30 பில்லியன் கன மீட்டர்களாகும். இது 2021 இல் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மூலம் வழங்கப்பட்ட எரிவாயுவில் பாதியளவாகும். ஜேர்மனிய பொருளாதார மந்திரி ரோபேர்ட் ஹேபெக்கின் விஜயத்திற்குப் பிறகு, உடனடியாக கடந்த கோடையில் எண்ணெய்த்துறையில் வேலைநிறுத்தத்தை குற்றமாக்கும் நோர்வேயின் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் முன்னெப்போதும் இல்லாத வகையிலான முடிவின் அடித்தளத்திலுள்ள நலன்களை இது வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

Loading