போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது ஐந்தாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த வாரம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தனது அரசியல் ஒற்றுமையை பிரகடனம் செய்த ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற நாடுகளிலுமுள்ள ஒரு இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பு அதனுடைய ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. YGBL ஆனது பெப்ரவரி 23, 2018 ஆண்டு அன்று ஸ்தாபிக்கப்பட்டது, இது லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட செம்படையின் நூற்றாண்டையும் குறிக்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் கூட்டத்திற்கு தெரிவிக்கப்பட்ட வாழ்த்துகளில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நீண்டகால போராட்டத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை பாதுகாப்பதற்காக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை நோக்கி YGBL அமைப்பு திரும்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ட்ரொட்ஸ்கிச வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகளில் மீண்டும் மீண்டும் எழுந்திருந்த 'ரஷ்யப் பிரச்சினை' என்று அழைக்கப்படுவதில் அடங்கியுள்ள வரலாற்று மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகளை நோர்த் மீளாய்வு செய்தார். ஸ்ராலினிசத்தினால் புரட்சிக்கு எதிராக தேசியவாத பிற்போக்குத்தனத்தால் திணிக்கப்பட்ட அழுத்தங்களுக்கும் மற்றும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்தின் பல்வேறு வடிவங்களின் வெளிப்பாட்டிற்கும் முகங்கொடுத்த புரட்சிகர இயக்கமானது மார்க்சிசத்தையும் அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டக் கொள்கைகளையும் பாதுகாத்தது. 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் வரலாற்று மற்றும் அரசியல் கடமைகள் குறித்து அதன் பங்கேற்பாளர்களிடையே ஒரு உயர்ந்த மட்டத்திலான நனவால் இந்தக் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது.

போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது அதனுடைய ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வடிவமைத்த ஒரு வரைகலைப் படம்.

கூட்டத்தின் தொடக்கத்தில் YGBL இன் தலைவரும் இணை நிறுவனருமான ஓஸ்டாப் ரெரிக், 'போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது அதன் தொடக்கத்திலிருந்தே லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கி குறித்து உண்மைக்காகப் போராடும் அமைப்பாகவும், சோசலிசத்திற்கான ஒரு புதிய தலைமுறை போராளிகள் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய பாதையைத் தெளிவுபடுத்தும் அமைப்பாகவும் உருவாக்கப்பட்டது' என்று கூறினார்.

ஸ்ராலினிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் மார்க்சிச-விரோத அரசியலின் பல்வேறு வடிவங்களுக்கு எதிரான நனவான போராட்டத்திற்கு YGBL அமைப்பானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று ரெரிக் வலியுறுத்தினார். 'ஸ்ராலினிசம் மற்றும் இந்த 'மார்க்சிசவாதிகள்' என்று அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கும் எதிராக அவர்களைத் தோற்கடிக்க நாம் சமமாக நமது தாக்குதலை ஒழுங்கமைக்க வேண்டும். உண்மையில் அவர்கள் போலி-மார்க்சியவாதிகள், அவர்கள் வர்க்கப் போராட்டத்தை அடையாள அரசியலாக பதிலீடு செய்கின்றனர், இது பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு முன்னுரிமை அளிக்காது, மாறாக வெவ்வேறு அடையாளங்களுக்கு இடையிலான போராட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.'

YGBL அமைப்பானது 2022 பெப்ரவரி 24 அன்று உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் வெடிப்பதற்கு சற்று முன்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் உறவுகளை ஸ்தாபித்தது. இதன் விளைவு குறித்து ரெரிக் மேலும் விளக்கினார்,

பிப்ரவரி 24, 2022 அன்று முதல் சுப்பாக்கிச் சூடு சுடப்பட்டு, வானத்திலிருந்து குண்டு மழை பொழியத் தொடங்கியபோது, நாங்கள் தனியாக இல்லை; நாங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்தோம். அவர்களின் கட்டுரைகளும் அறிக்கைகளும் எங்கள் கட்டுரைகளாகவும் அறிக்கைகளாகவும் இருந்தன, ஏனென்றால் எங்களால் வேறுவிதமாக நிற்க முடியவில்லை, ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதில் எங்களுக்கு வேறு எந்த நிலைப்பாடும் இல்லை, ஏனெனில் அவர்களின் நிலைப்பாடும் மதிப்பீடும் எங்கள் நிலைப்பாடு மற்றும் மதிப்பீடாக இருந்தது.

நிச்சயமாக, நாம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியப்படுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நாம் உண்மையில் அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டபோது, நாம் கற்றுக்கொண்டது மிகச் சிறிதளவு என்பதை பின்னர் நாம் தெரிந்துகொண்டோம். இன்று, YGBL அமைப்பிலுள்ள எங்கள் தோழர்கள் தத்துவத்திலும் நடைமுறையிலும் பப்லோவாதம் என்றால் என்ன என்பதை நன்கு அறிவார்கள். ரஷ்யாவில் பப்லோவாதத்தின் பல்வேறுபட்ட பிரதிநிதித்துவம் செய்வது யார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள், அவர்கள் 'உண்மையாக பின்பற்றுபவர்கள்' என்ற பெயரிற்காக மிகவும் கடுமையாகப் போராடுகிறார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெறுமனே நான்காம் அகிலத்திற்குள் இருக்கும் பல போக்குகளில் ஒன்றை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அது நான்காம் அகிலத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு பல முக்கியமான கட்டுரைகளை பங்களித்துள்ள அமைப்பின் ஒரு தலைவரான ஆண்ட்ரே றிற்ஸ்கி, YGBL அமைப்பின் அரசியல் நோக்குநிலைக்கு வரலாற்றின் மையத்தன்மையையும் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் நிலைமையைப் பகுப்பாய்வு செய்வதற்கான தொடக்கப் புள்ளியானது, ஸ்ராலினிசம் நமக்கு விட்டுச்சென்ற பாரம்பரியத்தை குறித்த தெளிவான புரிதலும் மற்றும் அதனுடன் ஒரு முழுமையான உடைவும் தேவையாக இருக்கிறது. இது இல்லாமல் மேற்கொண்டு பகுப்பாய்வு செய்ய முடியாது. இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்: 1) முக்கிய காரியார்களுக்கான கல்வி; 2) முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் நமது காரியாளர்களின் ஐக்கியத்தை வலுப்படுத்துதல்.

ட்ரொட்ஸ்கியைக் குறித்தும், அவரை உண்மையாக பின்பற்றுபவர்களைக் குறித்தும் உண்மைக்காக நாம் போராடும்போது, ட்ரொட்ஸ்கிசத்திற்காக மட்டும் அவ்வாறு செய்யவில்லை. ஒரு காரணத்திற்காகத்தான் அனைத்துலகக் குழுவை எமது வழிகாட்டிகளாகவும் தோழர்களாகவும் தெரிவு செய்தோம். ஒரு காரணத்துக்காகத்தான் எல்லாவிதமான சந்தர்ப்பவாதத்தின் மீதும் போர் பிரகடனம் செய்தோம். ஒரு காரணத்திற்காகவே, ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய காரியாளர்களுக்கு கல்வி கற்பிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தோம். இவையனைத்தும் முந்தைய வரலாறு முழுவதிலும் நாம் எதிர்கொள்ளும் ஒரு நிலைமைக்கு நனவான பிரதிபலிப்பைப் பிரதிபலிக்கின்றன.

முன்னேறிய தத்துவத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பை வென்று, உலகெங்கிலும் சோசலிசப் புரட்சியை நடத்துவதற்காகவே நாங்கள் இதைச் செய்கிறோம்! ட்ரொட்ஸ்கிசவாதியாக இல்லாமல் ஒரு மார்க்சிசவாதியாக இருக்க முடியாது. அதனால்தான் YGBL அமைப்பின் பலப்படுத்தல் மற்றும் அபிவிருத்திக்கான அடுத்த ஆண்டுகள் இந்த அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும் – அதாவது ட்ரொட்ஸ்கிசத்தைப் குறித்த ஒரு புரிதலாக அது இருக்கிறது.

செம்படையின் ஸ்தாபகர்களான விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோரை கௌரவிப்பதற்காக YGBL ஆல் வடிவமைக்கப்பட்ட சுவரொட்டி. பிப்ரவரி 23, 2018 அன்று YGBL அமைப்பு நிறுவப்பட்டது, இது செம்படையின் நூற்றாண்டு விழாவுடன் சேர்ந்து வருகிறது. 'தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை ஸ்தாபகர்களின் புகழ் ஓங்குக' என்று சுவரொட்டி கூறுகிறது.

அனைத்துலகக் குழுவின் (ICFI) இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) சார்பாக கிளாரா வெய்ஸ் கூட்டத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார், இதில் YGBL அமைப்பு ஒரு அங்கம் வகிக்கிறது. 1930 களில் பெரும் பயங்கரத்தில் (Great Terror) சோசலிஸ்டுகள் மீதான 'அரசியல் இனப்படுகொலை' மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் மட்டுமே, போரையும் தற்போதைய நிலைமையையும் இன்னும் பரந்த அளவில் புரிந்து கொள்ள முடியும் என்று வலியுறுத்திய அவர்,

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மை மற்றும் சோவியத் ஒன்றியத்தின் அழிவின் பேரழிவுகரமான விளைவுகள் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகள் துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் விளைவுகள் யுத்தம் மற்றும் இப்போது நாம் காணும் கட்டவிழ்ந்து வரும் பிற நெருக்கடிகள் மட்டுமல்ல, இன்று தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் நிலைமைகள் எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஒரு மாபெரும் வரலாற்று அனுகூலமும் உள்ளது.  பிரமாண்டமான அரசியல் அனுபவங்களையும் வரலாறு மற்றும் அறிவுசார் மூலதனத்தையும் குவித்துள்ள அனைத்துலகக் குழுவிலுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைமுறைகளின் போராட்டத்தை நாம் கட்டியெழுப்ப முடியும். 1950 களின் முற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தில் இளைஞர்கள் குழுக்களை உருவாக்கி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை இடதில் இருந்து எதிர்க்கவும், ட்ரொட்ஸ்கி மற்றும் லெனினின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கவும் துணிச்சலுடன் முயன்றபோது, அவர்கள் துரதிர்ஷ்டவசமாக நான்காம் அகிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டனர். ஸ்ராலினிச அதிகாரத்துவம் அவர்களுடைய தலைவர்களை ஈவிரக்கமின்றி கொலை செய்ததுடன், வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களது உறுப்பினர்களை சிறையில் அடைத்தது. இதற்கு நேர்மாறாக, YGBL ஆனது, அதன் வரலாற்றின் ஒப்பீட்டளவில் ஆரம்பத்தில், அனைத்துலகக் குழுவைத் தொடர்பு கொள்ளவும், அதனுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்க்கவும் முடிந்தது.

ஆண்டுவிழாவின் முக்கியத்துவம் குறித்த ஒரு உயிரோட்டமான விவாதத்தில், YGBL இன் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறினார்:

நாங்கள் அக்டோபர் புரட்சியின் வாரிசுகள், எங்கள் அணிகளிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு சிறப்பு பணியைச் சுமக்கிறார்கள்: கம்யூனிசத்தைக் கட்டமைக்கும் பணி. இதை அடைவதற்கு, நாம் ஒன்றைச் செய்ய வேண்டும்: நாம் படிக்க வேண்டும்; அறிவே வெற்றிக்கான திறவுகோல். நாம் ஒரு பெரிய பாரம்பரியத்தை எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம். அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கம் இப்போது இளைஞர்களுக்கு போதிக்க தீவிரமாக முயற்சிக்கிறது மற்றும் அதை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது, சர்வதேசியவாதத்திற்கு பதிலாக தீய பேரினவாதம் மற்றும் தேசியவாதத்தை பயன்படுத்துகிறது. அவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் முதலாளித்துவ தேசியவாதத்தால் நிரம்பியுள்ளன, அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். இளைஞர்களுக்காக நாம் போராட வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், அவர்கள் நமக்கு எதிரான போராட்டத்தில் முதலாளி வர்க்கத்தின் பீரங்கித் தீவனமாக மாறுவார்கள். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போதனைகளின்படி இளைஞர்கள் வாழ வேண்டும்.

விவாதத்திற்கு விடையிறுக்கும் வகையில், டேவிட் நோர்த் பெருந்தொற்று நோய், போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய இயக்கத்தின் வெளிப்பாடு குறித்த அதன் பரந்த அரசியல் பின்னணியை கூட்டத்திற்கு முன்வைத்தார்:

கடந்த நூற்றாண்டில் உண்மையில் தூக்கியெறியப்பட்டிருக்க வேண்டிய இந்த காலாவதியான சமூக அமைப்புமுறையின் முழுமையான திவால்நிலையை உலகின் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் என்ன நடந்தது என்று பாருங்கள். ஒரு பெருந்தொற்று நோய் உலகெங்கிலும் 20-25 மில்லியன் மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது, மேலும் ஆளும் வர்க்கமானது இந்த நோய்க்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு இறப்பு (Black Death) இன் சகாப்தத்திலிருந்த பிரபுக்களை விட அதிகமான அலட்சியத்துடன் பதிலளித்துள்ளது.

உண்மை என்னவென்றால், இது தடுக்கக்கூடிய பெருந்தொற்று நோயாகும். உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த மற்றும் விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தப்பட்ட ஒத்துழைப்பு இருந்திருந்தால், இந்த நோயை குறைந்த உயிர் இழப்புடன் ஒழித்திருக்க முடியும். ஆனால் இப்போது உலகின் ஒவ்வொரு நாட்டிலும், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, உக்ரேன், ரஷ்யா, சீனா - எல்லா இடங்களிலும் - இறப்பானது இயல்பாக்கப்பட்ட ஒரு நிலைமை தான் உள்ளது. ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பது அரசாங்கங்களின் அலட்சியமாகிவிட்டது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 500 முதல் 1,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. துல்லியமான அறிக்கை இல்லாததால் யாருக்கும் இது தெரியாது.

கடந்த இரண்டு வாரங்களில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தது 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். மீண்டும், சரியான எண்ணிக்கை என்ன என்பது யாருக்கும் தெரியாது. வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை இழந்து தவிக்கும் இரு நாட்டு மக்களையும் இப்போது அவசரநிலை எதிர்கொள்கிறது. ஆனால் துருக்கி மற்றும் சிரியாவில் மற்றொரு பேரழிவை எதிர்கொள்ளும் மக்களின் தேவைகள் - அதைத் தடுத்திருக்க முடியும் - ஏறக்குறைய புறக்கணிக்கப்படுகின்றன. அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் போரை நடத்த பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகின்றன மற்றும் துருக்கி மற்றும் சிரியாவிலுள்ள மக்களின் உயிர்களைக் காப்பாற்ற கிட்டத்தட்ட எதையும் கொடுக்கவில்லை. இன்னும் எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். இதுதான் தற்கால, திவாலான, பிற்போக்கு முதலாளித்துவத்தின் யதார்த்தம். மேலும் இது தெளிவாகவும் உலகெங்கிலுமுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் தெளிவாகவும் மாறிவருகிறது.

எனவே, உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் இன்று முகங்கொடுக்கும் நிலைமைகள் வரலாற்று அர்த்தத்தில் மிகவும் சாதகமானவையாகும். அனைத்துலகக் குழுவின் செல்வாக்கு சீராக விரிவடைந்து வருகிறது. ஏனெனில் எமது வேலைத்திட்டம் வரலாற்றுத் தேவைக்கு ஏற்ப அமைந்திருக்கின்றது. அதுதான் நமது முன்னோக்கிலும், நமது வெற்றியின் தவிர்க்க முடியாத தன்மையிலும் நமக்கு மாபெரும் நம்பிக்கையைத் தருகிறது.

எனவே, தோழர்களே, இந்த முக்கியமான ஆண்டு விழா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது இருக்கிறது, நீங்கள் சாதித்தது குறித்து நீங்கள் பெருமைப்படலாம், ஆனால் மிகப்பெரிய பணிகள் உங்கள் முன்னே காத்திருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள், நீங்கள் படிக்க வேண்டும். ட்ரொட்ஸ்கியைப் பற்றியும், லெனினைப் பற்றியும், எல்லா மாபெரும் செவ்வியல் மார்க்சிஸ்டுகளைப் பற்றியும் நீங்கள் முடிந்தவரை படிக்க வேண்டும், நிச்சயமாக, நீங்கள் நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியால் அது இழுக்கப்படும் மாபெரும் புரட்சிகரப் போராட்டங்களுக்காக, ரஷ்யாவிற்குள்ளும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தையும், உங்கள் முயற்சிகளின் மூலம் உங்களையும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

Loading