இலங்கை தோட்டத் தொழிற்சங்கத் தலைவர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஜனவரியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிலாள வர்க்க விரோத அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். இ.தொ.கா, மிகப் பெரிய தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கமாகவும், அதேவேளையில்,  ஒரு அரசியல் கட்சியாகவும் செயல்படுகிறது.

ஜீவன் தொண்டமான் (இடது) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டார். [Photo: Sri Lankan president’s media division]

ஜனவரி 19 அன்று, விக்கிரமசிங்க தனது அமைச்சரவையை 21 அமைச்சர்களாக விரிவுபடுத்தி, தொண்டமானை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாராச்சியை வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்தார். SLPP, ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ளது.

அதே நாளில், இ.தொ.கா, நுவரேலியா மாவட்டத்தில் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP)  ஒரு தேர்தல் ஆசனப் பகிர்வு ஒப்பந்தத்தை செய்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில், UNP முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதுடன், கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். ஒரு அரசியல் ஊன்றுகோலாக இ.தொ.காவின் மீது தங்கியவாறு பெருந்தோட்ட மாவட்டங்களில் வாக்குகளைப் பெற ஐ.தே.க நம்புகிறது.

கடந்த நவம்பரில், விக்கிரமசிங்க ஆட்சியில் இணைவதற்கு  தொண்டமானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையை வழங்கியது. அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்திடமிருந்தும், கிராமப்புற மக்களிடமிருந்தும் எழும் எதிர்ப்பை அடக்குவதில் இ.தொ.கா (CWC) அரசுக்கு, தனது நேரடி ஒத்துழைப்பை வழங்குகின்றது என்று சோ.ச.க விளக்கியது. 

அரசாங்க செலவினங்களில் ஆழமான வெட்டுக்கள், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் வருமான வரி அதிகரிப்பு, அதிக பெறுமதிசேர் வரி (VAT), அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மானியங்களைக் குறைத்தல் அத்தோடு, அரசதுறைகளை தனியார்மயமாக்கல் மற்றும் பெருமளவு வேலை நீக்கங்கள் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை விக்கிரமசிங்க ஆட்சி இப்போது விரைவாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

இலங்கையின் ஆளும்தட்டு, வெகுஜனங்களை ஈவிரக்கமின்றி பிழிந்தெடுப்தன் மூலம், திருப்பிச் செலுத்தாத வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் பெருவணிகர்களுக்கான இலாபங்களை அதிகரிக்கும் நிலைமைகளை மேம்படுத்தவும் மற்றும் சர்வதேச நாணயத்திடமிடருந்து $2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனைப் பெறவும் திட்டமிடுகின்றது.

இ.தொ.கா. வையும் மற்றும் வெறுக்கப்படும் யூ.என்.பி. மற்றும் விக்கிரமசிங்கவின் அடக்குமுறை ஆட்சியுடனான அதன் ஒத்துழைப்பையும் நிராகரிக்குமாறும், விடயங்களை தங்கள் சொந்தக் கரங்களில் எடுக்குமாறும், தோட்டத் தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இ.தொ.கா வின் கூட்டு, இந்த தொழிற்சங்கம், அதேபோல், அதன் சகாக்களும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக செயல்படவில்லை. மாறாக, அவை முதலாளித்துவ இலாப அமைப்பைப் பாதுகாக்கும் ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவ எந்திரம் என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் சிக்கனத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், வேலைகளைப் பாதுகாப்பதற்கும், பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில், தரமான சம்பளத்தை வென்றெடுப்பதற்கும் மற்றும் வேலைச் சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கும் போராடுவதற்கு, தொழிலாளர்கள் இ.தொ.கா மற்றும் பிற தோட்டத் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகி தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். தங்களுடைய சொந்த சுயாதீனமான போராட்ட அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மட்டுமே, தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப்பதற்கு ஏனைய தொழிலாளர்களுடன் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்பட முடியும்.

கடந்த நவம்பரில், தொண்டமான், விக்கிரமசிங்கவின் 2023 வரவு செலவுத் திட்டம் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இரக்கமற்ற சமூகத் தாக்குதல்களுக்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் அவர் ஹட்டனுக்கு அருகிலுள்ள கொட்டகலையில் உள்ள இ.தொ.கா ஆதரவாளர்களிடம், வரவு செலவுத் திட்டம் 'இன்றைய பொருளாதாரத்திற்கு ஏற்றது' என்று கூறியதோடு, தொழிலாளர்கள் தங்கள் நிலைமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்தார்.

டெய்லி நியூஸ் பத்திரிகைச் செய்தியின்படி, “நாட்டில் சிலர் போராட்டங்களை நடத்துகிறார்கள், மற்றவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்… இந்த எழுச்சிகளால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது” என்று தொண்டமான் அறிவித்தார்.

அமைச்சரவைப் பதவியை ஏற்றுக்கொள்வது 'மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண' உதவும் என்று தொண்டமான் இப்போது வலியுறுத்துகிறார். இது போலியானது. தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்டிருக்கும் வறுமைக்குக் கீழான சம்பளம் மற்றும் மோசமான சமூக நிலைமைகள் என்பவற்றுக்கு, தோட்டக் கம்பனிகளுடனும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுடனும் தொழிற்சங்கங்கள் இணைந்து பணியாற்றுவதன் நேரடி விளைவுகளாகும். 

மேலும், ஜீவன் தொண்டமானின் இந்த நடவடிக்கைகள், முந்தைய இ.தொ.கா தலைவர்களின் பல தசாப்தகால கீழ்த்தரமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். 1978 இல், ஜீவனின் பேரனும்,  இ.தொ.கா. வின் ஸ்தாபகருமான எஸ். தொண்டமான், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சராக இணைந்து கொண்டார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக்களரியான தமிழ் எதிர்ப்பு இனவாதப் போரை ஆதரித்த அதே வேளையில், அந்த ஆட்சியின் IMF கட்டளையிட்ட கொள்கைகளைச் செயல்படுத்தவும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கவும் தொண்டமான் உதவினார். 1990-1993ல் அவர் தோட்டங்களை தனியார்மயமாக்குவதையும் ஆதரித்தார்.

எஸ்.தொண்டமானின் மரணத்தைத் தொடர்ந்து,  ஜீவனின் தந்தையான  ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார். பின்னர் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சரவை அமைச்சராகவும், 2019 டிசம்பரில் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராகவும் ஆனார்.

ஜீவன் தொண்டமான், 2020 மே மாதம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, கோட்டபாய வினால் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம்,  அரசாங்கத்தில் இருந்து கோட்டபாய ராஜினாமா செய்தார். இந்த நடவடிக்கைகளில், ஏப்ரல் 28 அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருந்தது. தொண்டமானும் இ.தொ.காவும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவில்லை.

இ.தொ.காவைப் போலவே, ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களான -தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்  ஆகியவையும்,  முந்தைய இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, தோட்டக் கம்னிகளின் தொழிற்துறை பொலிஸ்காரர்களாக செயற்பட்டன. 

ஒரு சமீபத்திய மோசமான உதாரணத்தைப் பார்த்தோமானால், ஜீவன் தொண்டமானின் தலைமையிலான இ.தொ.கா, சம்பள உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் ஈட்பட்ட  தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு ஓல்டன் தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிஸாருடன் நேரடியாக இணைந்து வேலை செய்தது.

பெப்ரவரி  2021 இல், தேசிய ரீதியிலான வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, 1,000 ரூபா நாளாந்த சம்பளக் கோரிக்கையை முன்வைத்து,  தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றியபோது,  38 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  இருபத்தி இரண்டு தொழிலாளர்கள் போலிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும், பொலிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல்  உள்ளது, 

இ.தொ.கா மற்றும் ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களும்  உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருமானப் பகிர்வு மாதிரியை அறிமுகப்படுத்துவதற்கு கம்பனிகளின் சார்பாக பிரச்சாரம் செய்து வருகின்றன, இது, தொழிலாளர்களால் கடினமாகப் போராடி வெற்றிகொள்ளப்பட்ட நிலைமைகளை இல்லாமல் செய்வதுடன், தோட்டத் தொழிலாளர்களின் மீதான சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துகிறது.    

நவம்பர் 2022 இல் Glenugie மற்றும் அதன் D-பிரிவு எஸ்டேட் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.

கடந்த அக்டோபரில், நுவரேலியா மாவட்டத்தில் உள்ள சாமிமலை கிளனுகி தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தால் உருவாக்கப்பட்ட சகிக்க முடியாத வேலை நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.  இ.தொ.கா மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகியவை தொழில்துறை நடவடிக்கையை நிறுத்துவதற்கும் வேலைநிறுத்தம் செய்பவர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தீவிரமாக உழைத்தனர்.

இ.தொ.கா. மற்றும் ஏனைய தோட்ட தொழிற்சங்கங்கள் மட்டும் இல்லை. இலங்கையில் உள்ள ஒவ்வொரு தொழிற்சங்கமும், சம்பளம், வேலைகள்,  மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்துவரும் தாக்குதலுக்கு எதிராக, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை தடம்புரள வைக்கவும், நசுக்கவும் முயல்கின்றன. அரசாங்த்தைப்போலவே அதனுடன் இணைந்துள்ள அனைத்து பாராளுமன்ற எதிர்கட்சிகளும், முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடும் புரட்சிகர போராட்டங்கள் வெடிக்கும் என்று அஞ்சுகின்றன.

அதனால்தான், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகி நடவடிக்கைக் குழுக்களை நிறுவுமாறு, சோசலிச சமத்துவக் கட்சி.  தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. தோட்டங்களில், கிளனுகி மற்றும் ஓல்டன் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதற்கு நாங்கள் உதவியுள்ளோம், மற்ற தோட்டங்களிலும் இதேபோன்ற குழுக்களை உருவாக்க போராடுகிறோம். ஒவ்வொரு வேலைத்தளத்திலும், தோட்டங்களிலும் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. 

அதே நேரத்தில், முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு இல்லை என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. சோசலிசக் கொள்கைகள் அவசியம். அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிக்கவும், தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெரிய நிறுவனங்கள், பெருந் தோட்டங்கள் மற்றும் அனைத்து முக்கிய பொருளாதார மையங்களை தேசியமயமாக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தினைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இது, தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய மூலோபாய மையத்தை கட்டியெழுப்புவது, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்ற வழிவகுக்கும்.

இந்த வேலைத்திட்டத்துக்காகப் போராடுவதன் ஒரு பாகமாகவே, சோசலிச சமத்துவக் கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,  கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ நகர சபைக்கும், மத்திய பெருந்தோட்டங்களின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் அதில் பங்கேற்குமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading