முன்னோக்கு

பெருந்திரளான மக்களைப் பட்டினிக்கு உள்ளாக்கும் பைடெனின் திட்டம்: 42 மில்லியன் மக்களுக்கு உணவு பங்கீடுகள் வெட்டப்படுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

புதன்கிழமையில் இருந்து உணவு பங்கீட்டு மானியங்கள் அனைவருக்கும் குறைக்கப்படுகின்றன. 42 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு குடும்பத்திற்கு மாதம் $95 முதல் $235 வரையிலான வெட்டுக்களைக் காண்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஏழைகள் என்பதோடு இவர்களில் பலர் குழந்தைகளாவர். சராசரி தனிநபர் மானியம் ஒரு நாளைக்கு $6.10 அல்லது ஒரு நேர உணவுக்கு $2 ஆக குறையும்.

அமெரிக்க சமூகத்தில் மிகவும் நலிந்தவர்கள் மீதான இந்தத் தாக்குதல் இருகட்சிகளது ஒருமனதான நல்லிணக்கத்துடன் நடத்தப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது கொண்டு வரப்பட்ட அவசரகால உணவு பங்கீட்டு மானிய அதிகரிப்பு, கடந்த டிசம்பரில் ஜனாதிபதி பைடென் கையெழுத்திட்டு சட்டமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய வரவுசெலவு திட்டக்கணக்கு மசோதா மூலமாக நிறுத்தப்பட்டு விட்டது. இது மார்ச் 1, 2023 இல் இருந்து நடைமுறைக்கு வரும்.

அந்த வரவுசெலவு திட்டக்கணக்கு சட்டத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது கோவிட்-19 பெருந்தொற்று முடிந்துவிட்டதாக அறிவித்து மே 11, 2023 இல் இருந்து பொது சுகாதார அவசரநிலையை (PHE) முடிவுக்கு கொண்டு வருவதென பைடென் முடிவெடுத்ததன் காரணமாகவோ, மிகவும் வறிய அமெரிக்கர்களுக்கான கூடுதல் வெட்டுக்கள் ஏற்கனவே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் கோவிட்-19 ஆல் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கானவர்களும், உலகெங்கிலும் ஆயிரக் கணக்கானவர்களும் தொடர்ந்து இறந்து வருகிறார்கள் என்ற பயங்கரமான யதார்த்தத்தின் முன்னால், பெருந்தொற்று முடிந்து விட்டது என்ற அறிவிப்பு கலைந்து விடுகிறது.

உணவுப் பங்கீடுகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் மற்றும் பிற சமூக சலுகைகளைப் பெறத் தகுதி உடையவர்களைத் தீர்மானிக்கும் நடைமுறையை மீண்டும் தொடங்குவதும் இந்த வெட்டுக்களில் உள்ளடங்குகிறது. இந்தச் சலுகைகள், மார்ச் 2020 இல் இந்தப் பெருந்தொற்று வெடித்த போது ட்ரம்ப் நிர்வாகம் தேசிய அவசரநிலையை அறிவிக்க நிர்பந்திக்கப்பட்ட போது நிறுத்தப்பட்டது. நூறாயிரக் கணக்கான குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் மாதாமாதம் படிப்படியாக இவை வெட்டப்படும் என்பதோடு, இந்தாண்டு இறுதி வாக்கில் மில்லியன் கணக்கானவர்களுக்கு வெட்டப்பட்டும் இருக்கும்.

உத்தியோகப்பூர்வமாக துணை ஊட்டச்சத்து உதவி திட்டம் (SNAP) எனப்படும் இந்த உணவு பங்கீட்டைக் குறைக்கும் நடைமுறை, குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 18 மாநிலங்களுக்கும் சட்டப்பூர்வமாக இது சாத்தியம் என்றானதும், பெப்ரவரி 1 இல் வெட்டுக்களை ஆரம்பித்தன. இதர 32 மாநிலங்களும் அவற்றுடன் கொலம்பியா மாவட்டம், குவாம் மற்றும் அமெரிக்க வெர்ஜின் தீவுகளும் இதை நடைமுறைப்படுத்துகின்றன. மார்ச் 1 இல், இந்த வெட்டுக்களுக்கான ஒரு மாத ஆயத்த காலம் முடிவடைகிறது.

மாநில வாரியாக மார்ச் 1 இல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. முதல் 16 மாநிலங்கள்: கலிபோர்னியா, 2.93 மில்லியன் பேர்; நியூ யோர்க், 1.61 மில்லியன்; டெக்சாஸ், 1.34 மில்லியன்; இலினொய், 1.06 மில்லியன் பேர்; பென்சில்வேனியா, 1.04 மில்லியன்; வட கரோலினா, 813,000; மிச்சிகன், 705,000; ஓஹியோ, 673,000; மாசசூசெட்ஸ், 629,000; வாஷிங்டன், 518,000; வேர்ஜீனியா, 470,000; ஒரேகான், 416,000; அலபாமா, 393,000; நியூ ஜெர்சி, 388,000; மேரிலாந்து, 360,000; மற்றும் விஸ்கான்சின், 347,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

உணவுப் பொருட்களின் விலைகளில் பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலைமைகளின் கீழ் இது நடப்பதால், உணவுப் பங்கீட்டை வெட்டுவது குறிப்பாக விபரீதமானதும், பிற்போக்குத்தனமானதும் ஆகும். அமெரிக்க வேளாண் துறை தகவல்படி, உணவுப் பொருட்களின் விலைகள் 2022 இல் ஒட்டுமொத்தமாக 11.4 சதவீதம் உயர்ந்தன. இது 2021 உயர்வை விட கடந்த ஆண்டு வேகமாக இருந்தது. பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் காரணமாக முட்டைகள் விலை 32.2 சதவீதம் உயர்ந்துள்ளன. கொழுப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் 18.5 சதவீதமும், கோழி இறைச்சி 14.6 சதவீதமும், மற்ற இறைச்சி வகைகள் 14.2 சதவீதமும் அதிகரித்துள்ளன. தானியங்கள் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட மில்லியன் கணக்கானவர்களில் பலர் 'உழைக்கும் ஏழைகள்' என்கின்ற நிலையில், கணிசமாக உணவுப் பங்கீட்டு மானிய ஒதுக்கீடு இப்போது குறைக்கப்படுவதால் இவர்கள் அதிக விலை கொடுத்தாக வேண்டும் மற்றும் அங்கே அதே நிலையில் முடங்கி கிடப்பார்கள். அவசரகால மானியங்கள் வெட்டப்படுவதாலும் மற்றும் அடுத்த தசாப்தத்தில் அது உயர்வின்றி இருக்கும் என்பதாலும், ஒட்டுமொத்த உணவு முத்திரை செலவுகள் இந்தாண்டு குறையும் என்று நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட அலுவலகம் கணிக்கிறது.

வாஷிங்டனில் உள்ள ஓர் ஆராய்ச்சி மற்றும் தரகு குழுவான, உணவு ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைக் குழுவின் தகவல்படி, இதன் விளைவாக மில்லியன் கணக்கானவர்கள் 'பசியின் உச்சிக்கு' (hunger cliff) செல்வார்கள். “குறைந்தபட்ச மானிய வரம்பில் உள்ள வயதுவந்த மூத்த வயதினர் தான் இந்த முகட்டின் உச்சியில் இருப்பார்கள். இவர்களின் மாதாந்திர SNAP மானியங்களில் 281 டாலரில் இருந்து 23 டாலர் வரை குறையும்,' என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

வெகுஜன மக்களிடையே பட்டினி அதிகரிக்கும். உணவு வங்கிகள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களின் பரிதாபகரமான, போதியளவில் இல்லாத வளங்களின் தேவை அதிகரிக்கும். ஏற்கனவே இந்த வெட்டுக்கள் நடைமுறையில் உள்ள ஜோர்ஜியாவில், வருபவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்திருப்பதாக அட்லாண்டா சமூக உணவு வங்கி தெரிவித்தது.

உக்ரேன் போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு' ரஷ்யா தான் குற்றவாளி என்று பைடென் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்' என்று மட்டுமே கூறக்கூடிய ஒரு செயலை அமெரிக்க அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் இந்த உணவு முத்திரை வெட்டுக்கள் பற்றி ஜனாதிபதியின் உரைகள் எதுவும் இல்லை. மிச்சிகன், மிசிசிபி அல்லது மேற்கு வேர்ஜீனியாவில் உயிர்பிழைக்க போராடி வருபவர்களுக்கு தனது அனுதாபத்தையும் ஆதரவையும் காட்ட ஜனாதிபதியின் எந்த 'தைரியமான' பயணமும் இல்லை. இது ஏனென்றால், தனது 'குடியரசுக் கட்சி நண்பர்கள்' என்று அவர் அழைக்க விரும்புபவர்களுடன் சேர்ந்து, இந்த குற்றத்திற்கு பைடெனே காரணமாக உள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான பைடெனின் போரும், உள்நாட்டில் ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது போரும் நேரடியாக ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. ரஷ்ய எல்லைகளை ஒட்டி வேண்டுமென்றே கிழக்கு ஐரோப்பா நெடுகிலும் நேட்டோவை விரிவாக்கியதன் மூலம் தூண்டிவிடப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான இந்த உக்ரேன் போருக்கு அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே 110 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இது ஏறக்குறைய ஒட்டுமொத்த SNAP திட்டத்திற்குமான வருடாந்தர செலவான 113 பில்லியன் டாலருக்கு சமமாகும். மேலும் மார்ச் 1 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வெட்டுக்கள் மூலமாக 'சேமிக்கப்படும்' தொகையை விட இந்த இராணுவச் செலவுகள் மூன்று மடங்கு அதிகமாகும்.

உணவு பங்கீடுகளை வெட்டுவதால் மொத்தம் 42 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவார்கள். இது உக்ரேனின் 39 மில்லியன் மக்களை விட அதிகமாகும். அமெரிக்க ஆளும் உயரடுக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் கவலை இல்லை. யூரேசிய பெருநிலத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அதன் முனைவின் பாகமாக வாஷிங்டன் தூண்டிவிட்டுள்ள ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கு உக்ரேன் மக்கள் பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். அந்தப் போருக்குச் செலவு செய்வதற்காகவும், சீனாவுடன் வரவிருக்கும் போர் உட்பட அமெரிக்க இராணுவ இயந்திரத்தின் உலகளாவிய நடவடிக்கைகளுக்குத் தேவையான இன்னும் அதிக தொகைகளை வழங்குவதற்கும், உணவு பங்கீட்டைப் பெறுபவர்கள் இன்னும் கூடுதலாக வறுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

42 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வரவிருக்கும் பேரழிவைப் பற்றி தகவல் செய்தி ஊடகங்களில் எந்த முக்கிய செய்தி தலைப்போ அல்லது அவசர செய்திகளோ காட்டப்படவில்லை. இந்த மக்களை ஒட்டுமொத்தமாக ஒரே எண்ணிக்கையில் எடுத்துப் பார்த்தால் நாட்டின் ஒரு மிகப்பெரிய மாநில மக்களுக்குச் சமமாக இருப்பார்கள். ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி ஆகட்டும், ஒரேயொரு நாடாளுமன்ற தலைவர் கூட இதை எதிர்த்து ஓர் அறிக்கை வெளியிடவில்லை. இது, நிச்சயமாக, ஏனென்றால் கடந்த டிசம்பரில் அவர்கள் வழங்கிய வாக்குகள் மூலமாக அவர்கள் அனைவரும் இந்தக் கொள்கைக்கு உடன்படுகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகள் எனப்படுபவர்கள் மவுனமாக இருப்பதைக் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் எதுவும் கூறவில்லை. அவருடைய செனட் வலைத்தளத்தில், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி நிர்வாகம் உணவு பங்கீட்டை  வெட்டியதை 'மனசாட்சிக்கு விரோதமானது' என்று அவர் அறிவிப்பதை ஒருவர் காணலாம். ஆனால் இப்போது ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ் வெட்டுக்கள் வரும் போது, தன்னை 'ஜனநாயகக் கட்சியின் சோசலிசவாதி' என்று சுயமாக அறிவித்துக் கொண்டவர் அவர் குரலை இழந்து விடுகிறார்.

இதே போல, பிரதிநிதி அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் 'படை', இதில் போலி இடது கட்சியான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அதனால் ஆதரிக்கப்படுபவர்கள், இந்த உணவு பங்கீட்டு வெட்டுக்களைக் குறித்து எதுவும் கூறவில்லை. உணவு பங்கீட்டு வெட்டுக்களை ட்ரம்ப் செய்த போது ஒகாசியோ கோர்டெஸூம் கண்டித்தார். அந்தத் திட்டம் உழைக்கும் மக்களுக்கு அத்தியாவசியமானது என்று அறிவித்த அவர், அது இல்லாமல் அவருடைய சொந்த குடும்பமே 'பட்டினி கிட்ட வேண்டியிருக்கும்' என்றார். ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனின் கீழ், ஆறு இலக்க நாடாளுமன்ற சம்பளத்துடன் உள்ள அவருக்கு, பட்டினியில் உள்ள வெகுஜன மக்களைக் குறித்து இப்போது எந்தக் கவலையும் இல்லை.

பத்து மில்லியன் கணக்கானவர்களை இன்னும் கூடுதலாக வறுமை மற்றும் அவலநிலைக்குள் தள்ளும் இந்த வெட்டுக்களுக்கு எதிராக போராட, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசியலுக்கு அதன் சொந்த சுயாதீனமான மாற்றீட்டை முன்னெடுக்க வேண்டும். உழைக்கும் மக்கள் இப்போதிருக்கும் இந்த இருகட்சிகளின் அரசியல் கட்டமைப்பிலிருந்து முறித்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கட்சிகளுமே மாற்றுக் கருத்துக்கு இடமின்றி இந்த இலாப அமைப்புமுறை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன. தொழிலாள வர்க்கம் ஒரு புதிய பாதையைக் காண வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த இரு கட்சி அமைப்பில் இருந்து சுயாதீனமாக, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுக்கிறது. பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் செல்வசெழிப்புக்காக அல்ல, உழைக்கும் மக்களின் தேவைகளை முதலில் வைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

வறுமை, பசி, நோய் மற்றும் அகால மரணங்களைத் தடுக்க அமெரிக்க சமூகத்தில் ஏராளமான மூலவளங்கள் உள்ளன. ஆனால் இந்த வளங்கள், மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியான ஆளும் உயரடுக்கால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரில்லியன் கணக்கான டாலர்கள், நூறு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் உழைப்பின் விளைபொருளாகும். அவற்றை வோல் ஸ்ட்ரீட் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது அல்லது பென்டகன் போர் இயந்திரத்திற்குள் பாய்ச்சக் கூடாது, அவை தொழிலாள வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து சமூக நல வெட்டுக்களையும் திரும்பப் பெறவும், ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கை தரத்தை வழங்க போதுமான குறைந்தபட்ச வருவாயை ஏற்படுத்தவும், பட்டினி மற்றும் வறுமையை இல்லாதொழிக்கவும், சிதைந்து வருகிற குடியிருப்புகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மீளக்கட்டுவதற்கான பாரியளவிலான ஒரு பொதுப்பணி திட்டத்தைத் தொடங்கவும் தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இந்தப் பெருந்தொற்றில் இருந்து இலாபமீட்டியவர்கள் மற்றும் பிற பில்லியனர்களின் செல்வத்தைப் பறிமுதல் செய்து, அனைத்து தொழில்துறைகள், நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் நிதி அமைப்புகளை பொதுச் சொத்துடைமைக்கு மாற்றி, உழைக்கும் மக்களின் நலன்களுக்காக ஜனநாயகரீதியில் செயல்படுமாறு செய்வதன் மூலம் இந்த முயற்சிக்குப் பணம் ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தையே இது அர்த்தப்படுத்துகிறது. இதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சியே அந்த அமைப்பாகும். உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எங்கள் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கைப் படித்து, சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) இணைய முடிவெடுத்து, எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உழைக்கும் மக்களை வலியுறுத்துகிறோம்.

Loading