சீனாவில் ஊதியம் வழங்கப்படாதது குறித்து ஒரு தொழிலாளி வன்முறையான மோதலில் ஈடுபட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ரவரி 13 அன்று, சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் டோங்குவானில் உள்ள Dongguan Best Travel Electronics தொழிற்சாலையின் முன் நடந்த மோதலில் யின் என்ற தொழிலாளி தனது ஊதியம் நிறுத்தப்பட்டதால் மூன்று பேர்களைக் கொன்றுள்ளார். 

அங்கு நடந்தது பற்றிய அனைத்தும் தெளிவற்றதாக இருப்பதுடன், அதனைப்பற்றிய தகவல்களும்  சற்று முரண்பாடானதாக உள்ளன. 

டோங்குவான் நகர காவல்துறையின் கூற்றுப்படி, யின் இன் நீண்டகால ஊதியக் கோரிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில், அவர் தொழிலாளர் முகவர் ஜெங், தொழிற்சாலை ஊழியர்கள் ஜாங் மற்றும் வெய் ஆகியோருடன் சண்டையிட்டு, கத்தியால் தாக்கி அவர்களைக் கொன்றார். யின் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் தொழிற்சாலையில் பணிபுரிந்து ஜூன் மாதம் வேலையை விட்டு வெளியேறியுள்ளார்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், டோங்குவான் நகரில் உள்ள ஹூஜி டவுனில் உள்ள அல்கோ எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மின்னணு சாதனங்களை ஒருங்கிணைக்கிறார். [AP Photo/Ng Han Guan]

இந்தத் தொழிலாளி தனக்கு ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலமுறை ஆலைக்கு சென்றுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் அவருக்கு ஊதியம் கிடைக்கவில்லை. ஊதியத்தை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலமுறை அவர் முகவரிடம் கெஞ்சியும் அவரது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.

யின் மீண்டும் பெப்ரவரி 13 அன்று தொழிற்சாலைக்கு ஊதியம் கேட்கச் சென்றபோது, தொழிற்சாலையின் மேலாளர்கள் அவரை வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் அவர்களை கத்தியால் தாக்கியுள்ளார். 

யின்னுக்கு 4,000 RMB கொடுக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அது வெறும் 400 RMB ஆக குறைக்கப்பட்டது. அதாவது, அவரது மணிநேர ஊதியமான 19 RMB, 9 RMB ஆக குறைக்கப்பட்டது. ஒரு அறிக்கையின்படி, பெப்ரவரி 8 அன்று, யின் தொழிற்சாலையின் அலுவலகத்திற்கு தனக்கு ஒரு தீர்வு கேட்டுச் சென்றார், ஆனால் முகவர் ஜெங்கால் அவர் சரீர ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். 

NetEase News இன் செய்திகளின் விபரங்களானது பொலிஸின் சுருக்க விளக்கத்தில் இருந்து வேறுபடுகின்றன. NetEase News இன் செய்திகளின்படி, பெப்ரவரி 13 அன்று, யின் விளக்கம் கேட்க மீண்டும் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார், அப்போது ஜெங் அவரை வார்த்தைகளால் திட்டி, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். 

சூழ்நிலைகள் தெளிவாக இல்லை என்றாலும், கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை யின் கொண்டு வரவில்லை என்ற நிலையில், பொலிசாரின் கூற்றுப்படி, இது தற்காப்புக்காக நிகழ்ந்திருக்கலாம்.  

யின் கைது செய்யப்பட்டு, கொலைக்காக அவர் மீது வழக்கு தொடரப்படவுள்ளது. தொழிலாளர்களைச் சுரண்டுவது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, டோங்குவான் காவல்துறை தொழிலாளர்களை மிரட்டுவதற்கே ஆலைக்குச் சென்றுள்ளது. 

தொழிலாளர்கள் தொழிற்சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபடாமல் அரசின் உதவியை நாட வேண்டும் என்றும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் உண்மையில், அரசு நிறுவனங்கள் எப்போதும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளின் பக்கம் தான் நிற்கின்றன. 

தனிப்பட்ட தொழிலாளர்களின் வன்முறைச் செயல்களால் தொழிலாள வர்க்கத்திற்கு தீர்வு கிடைக்காது என்றாலும், கடுமையான விரக்திகள் புரிந்துகொள்ளக்கூடியவை மற்றும் இந்தச் சம்பவம் சீனாவில் கட்டமைக்கப்பட்டுள்ள தீவிர சமூக அழுத்தங்களைச் சுட்டிக்காட்டுகிறது. 

டோங்குவான் நகரம் கிராமப்புறங்களில் இருந்து வரும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஒரு முக்கிய அடைக்கல இடமாகும். இங்கு அவர்கள் பெரும்பாலும் முதலாளிகளால் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். 

யின் இன் வழக்கு சீனாவில் பொதுவாக காணக்கூடியதாகும். அதாவது, பல தொழிலாளர்கள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்ற நிலையில், தங்கள் ஊதியங்களை நிறுத்திவைத்த தொழிலாளர் முகவர்களைக் கொன்ற பல வழக்குகள் அங்கு உள்ளன. ஷாங்காய், சியான் மற்றும் ஷென்சென் ஆகிய நகரங்களில் நன்கு அறியப்பட்ட வழக்குகள் நடந்துள்ளன.

பல ஆண்டுகளாக அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு தொழிலாளி பேட்டியளிக்கையில், முகவர்களால் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டபோது தனக்கு நேர்ந்த சொந்த அனுபவம் பற்றி அவர் விவரித்தார். 

‘நான் அடிக்கடி அத்தகைய சூழ்நிலையைச் சந்திக்கிறேன்,” என்று அவர் கூறினார். “உதாரணமாக, ஒரு முகவர் ஒரு மணிநேரத்திற்கு 24 RMB ஊதியம் அளிப்பதாக உறுதியளித்தார், ஆனால் வேலை செய்யத் தொடங்கியதன் பின்னர், ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு 16 யுவான் அல்லது அதற்கும் குறைவாக இருந்தது. கூடுதலாக, முகவர்கள் சில நேரங்களில் ஊதியத்தை குறைப்பதற்கு புதிய காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர். நாங்கள் பெறும் ஊதியம் எப்போதாவது ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அதே அளவில் இருப்பது வெகு குறைவாகும்.”

“நான் பொலிஸை அழைத்தாலும், இதுபோன்ற விடயங்களை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். நான் தொழிலாளர் பணியகத்தில் புகாரளிக்கச் சென்றால், அவர்கள் என்னை காத்திருக்கச் சொல்கிறார்கள். ஒருவேளை தொழிலாளர் பணியகம் எனக்கு சம்பளம் கிடைக்க உதவியிருந்தாலும், தொழிற்சாலைக்கும் முகமைக்கும் எந்த நஷ்டமும் ஏற்பட்டிருக்காது” என்று அவர் கூறினார்.

முகமை மூலம் ஏன் வேலைக்கு விண்ணப்பித்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, அவர் இவ்வாறு விவரித்தார்: “தொழிற்சாலைகள் தங்கள் சொந்த ஊழியர்களை பணியமர்த்த தயங்குகின்றன. ஏனென்றால், அவர்கள் தொழிலாளர்களின் காப்பீட்டை செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் அவர்களே பொறுப்பாளியாவார்கள். அதேவேளை, ஒரு முகமை மூலம் ஒரு தொழிலாளி பணியமர்த்தப்பட்டால், அந்தத் தொழிலாளிக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு தொழிற்சாலை பொறுப்பாகாது. மேலும், அந்தத் தொழிலாளி வேலை நேரத்தில் ஊனமடைந்தால் அல்லது இறந்துபோனால் அவருக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதும் கடினம்.”  

“பல தொழிற்சாலைகளின் பணியாளர் துறைகள் முகவர்களிடமிருந்து கையூட்டு வாங்குகின்றன. முகவர்கள் மூலம் தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு, பணியாளர் துறைகள் முகவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, அதாவது ஒரு தொழிலாளிக்கு சில நூறு அல்லது ஆயிரம் RMB வரை கையூட்டாக பெற முடியும்.”  

“வயிற்றுப் பிழைப்புக்காக நான் உடனடியாக ஒரு வேலையைத் தேட வேண்டியிருந்தால், தொழிற்சாலையில் வேலை செய்ய நான் ஒரு முகமை மூலம் செல்ல நேரிடுகிறது.”

முகவர்களைப் பற்றி கருத்து கேட்டபோது அந்த தொழிலாளி இவ்வாறு கூறினார்: “அவர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்கள் போன்றவர்கள். காவல்துறை அவர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்பதோடு, தொழிற்சாலையும் அவர்களுடன் ஒத்துழைக்கிறது. அவர்கள் உண்மையிலேயே வெறுக்கத்தக்கவர்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொழிலாளர் செலவுகளைக் குறைக்க தொழிற்சாலைகளுக்கு முகமைகள் ஒரு கருவியாக மாறிவிட்டன என்று அவர் விளக்கினார். முதலாளிகள் தொழிலாளர்களிடமிருந்து கொடூரமாக வேலையை பிழிந்து எடுக்க முகமைகளை நம்பியுள்ளனர். மேலும் சீன அரசாங்கமும் இந்த நீண்டகால நிலைமையைப் பற்றி அக்கறைகாட்டவில்லை. 

சீனாவில், யின் ஐ போன்ற பல தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஏராளமான தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் ஊதியம் பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மிகப்பெரிய பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.  

முதலாளித்துவ மீட்டெடுப்பு என்று அழைக்கப்படும் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதாரம் திறக்கப்பட்டதில் இருந்து, சீன அரசாங்கம் அடைந்த பொருளாதார வெற்றிகள் பற்றி அது பறைசாற்றினாலும், அவை தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான ஒடுக்குமுறையின் மீது தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.   

சீனாவில் உள்ள லெய்யாங், ஹெங்யாங், ஜியாக்சிங் மற்றும் வைபாங் போன்ற நகரங்களின் பல உள்ளூர் அரசாங்கங்களானது, தாம் எப்போதும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் நிற்பதை இவ்வாறு பகிரங்கமாக அறிவித்துள்ளன: “தொழில் முனைவோரின் வணிகம் அரசாங்கத்தின் வணிகமாகும். எனவே தொழில் முனைவோருக்கு எதிராக யார் நின்றாலும், அது எங்களுக்கு எதிரானதே.” 

இது, சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னை சோசலிசக் கட்சி என்று கூறிக்கொள்வதன் முழுமையான பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. அதாவது, ஒரு வலுவான தேசிய முதலாளித்துவமானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்பது பொய்யாகும். நாம் இதனை  நிராகரித்தாக வேண்டும். மேலும், ஒரு உண்மையான சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சீனா முழுவதிலும் உள்ள மற்றும் உலகளவிலும் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களையும், ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையை நாம் தீர்க்க முடியும். 

Loading