முன்னோக்கு

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW), கேட்டர்பில்லர் தொழிலாளர்களுக்குப் பாரிய சம்பள வெட்டுக்கள் பற்றி பேரம்பேசுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் ஊழல் எந்திரம், கேட்டர்பில்லர் பெருநிறுவனத்துடனான ஓர் உடன்பாட்டில், அடுத்த ஆறு ஆண்டுகால ஒப்பந்தத்தின் போது தொழிலாளர்களின் நிஜமான சம்பளங்களில் ஒரு மிகப் பெரிய குறைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியின் கேட்டர்பில்லர் ஆலை தொழிலாளர்கள் பிரிவு, இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு அழைப்பு விடுத்திருப்பதை உலக சோசலிச வலைத்தளம் திட்டவட்டமாக ஆதரிக்கிறது.

[AP Photo/Elise Amendola]

கேட்டர்பில்லர் தொழிலாளர்கள், அந்நிறுவனம் மற்றும் அதன் பின்னால் நிற்கும் சக்தி வாய்ந்த பெருநிறுவன மற்றும் அரசியல் நலன்களுக்கு எதிராக மட்டும் போராடவில்லை. வொல்வோ ட்ரக்ஸ் ஆலை, ஜோன் டீர் ஆலை, CNH, கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பிற இடங்களின் தொழிலாளர்கள் இவர்களுக்கு முன்னரே படிப்பினைகளைப் பெற்றுள்ளதைப் போல, இவர்களும் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுத்து மற்றொரு நிறுவன-சார்பு உடன்படிக்கையைத் திணிக்க விடாப்பிடியாக செயலாற்றி வரும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க (UAW) அதிகாரத்திற்கு எதிராக போராடுகிறார்கள்.

கேட்டர்பில்லர் ஆலைத் தொழிலாளர்கள் 99 சதவீத வாக்குகளுடன் ஜனவரியில் ஒரு வேலைநிறுத்தத்தை அங்கீகரித்தனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒப்பந்தம் காலாவதியாக இருந்த போது, தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும் என்ற UAW அதிகாரிகளின் அவநம்பிக்கையான முறையீடுகள் இருந்தபோதும், வெளிநடப்புகளுக்கான அழைப்புகள் வேகமாக பரவின. காலக்கெடு முடிந்து சிறிது நேரத்திலேயே, UAW திடீரென எந்த விபரங்களும் கூறாமல் ஒரு “கடைசி நிமிட” ஒப்பந்தத்தை அறிவித்தது. ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையில் தொழிற்சங்கத் தலைமையகங்கள் எந்த பொது அறிக்கைகளும் வெளியிடாது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தொழிலாளர்கள் WSWS க்கு வழங்கிய தகவல்களின்படி, UAW இன் சுய-சேவைக்குரிய அந்த ஒப்பந்தத்தின் 'சிறப்பம்சங்கள்', இது தொழிலாளர்களின் தேவைகள் மீதான ஒரு குற்றகரமான காட்டிக்கொடுப்பு என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆறு ஆண்டுகளில் சம்பளம் மொத்தத்தில் வெறும் 19 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இதை வருடாந்தர அடிப்படையில் கணக்கிட்டால், ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதத்திற்கும் சற்று குறைவாகும். அதே நேரத்தில் மருத்துவக் காப்பீட்டு கொடுப்பனவை ஆண்டுக்கு 2 சதவீதம் அதிகரிக்க UAW உடன்பட்டிருந்தது. தற்போது உத்தியோகப்பூர்வ பணவீக்க விகிதம் 6.4 சதவீதமாக இருந்தாலும், தொழிலாளர்கள் உணவுக்காகவும், எரிவாயு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் செலவிடும் போது அவர்கள் அனுபவிக்கும் நிஜமான விகிதத்தை விட இது மிகவும் குறைவு என்கின்ற நிலையில், இந்த உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் வரை இது அதிர்ச்சியூட்டும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் மீதான இந்த சுரண்டல் மட்டம் மிகப் பெரியளவில் உள்ளது. 2022 இல், கேட்டர்பில்லர் மொத்த இலாபமாக 18 பில்லியன் டாலர்களை ஈட்டியது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் அது 23 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அல்லது ஒவ்வொரு நாளும் சுமார் 12.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கி உள்ளது.

இது குறிப்பாக வெறுமனே ஒரு பேராசை கொண்ட நிறுவனம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, மாறாக ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் கொள்கையாகும். முன்னாள் அமெரிக்க செனட்டர்கள் ஜனாதிபதி மந்திரிசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, பிளாக்ஸ்டோன், போயிங், கார்கில் நிறுவனங்களில் இருந்து செவ்ரோன், ஜெனரல் மோட்டார்ஸ், லாக்ஹீட் மார்டீன் வரை ஃபார்ச்சூன் இல் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களின் தற்போதைய நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களும் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் வெற்றியானது, பணவீக்கத்தைச் சமாளிக்க சம்பள உயர்வுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு பாதுகாப்புகளைக் கோருவதற்குப் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்குப் பாதையைத் திறந்துவிடும் என்பதும், பல தசாப்தங்களாக சம்பளங்களை ஒடுக்கி வைத்ததன் அடிப்படையிலும் அமெரிக்காவின் பெருநிறுவன மற்றும் நிதியத் தன்னலக்குழுவுக்கு ஏறக்குறைய எல்லா செல்வவள ஆதாயங்களையும் வாரிவழங்கியதன் மூலமும் மேலோங்கி உள்ள அப்பளுக்கற்ற 'பொருளாதார சூழலை' தலைகீழாக மாற்றிவிடும் என்பதும் ஆளும் வர்க்கத்தின் இந்தப் பிரதிநிதிகளுக்கு நன்கு தெரியும்.

ஐக்கிய வானத்துறை தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தின் ஊழல் அதிகாரிகள், ஒருபுறம் விட்டுக்கொடுப்புகளுக்குக் கையெழுத்திடச் செய்வதன் மூலம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும் மறுபுறம் மிரட்டல் மற்றும் வேலையிழப்பு அச்சுறுத்தல்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகின்ற அதேவேளையில், விபரங்களை மறைத்து மற்றொரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முன்நகர்த்தும் அவர்களின் பழகிப் போன நாடகத்தை நடத்தலாம் என்று நம்பினர்.

ஒரு விட்டுக்கொடுப்புகள் ஒப்பந்தத்தைக் கட்டாயப்படுத்துவதற்கான UAW இன் முயற்சி, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு முதல்முறையாக நேரடியாக நடந்த தேர்தலின் இரண்டாம் சுற்று முடிவுகளுடன் பொருந்தி உள்ளது. முதல் சுற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு, முதல் சுற்றில் பாரியளவில் வாக்காளர்களை ஒடுக்கிய பாரியளவிலான நடவடிக்கையை அம்பலப்படுத்தி, UAW தலைவர் பதவிக்கான வேட்பாளரும் சாமானிய தொழிலாளருமான வில் லெஹ்மனின் எதிர்ப்புக்கு நீதிபதியால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் இன்னும் பதிலளிக்கவில்லை என்ற உண்மைக்கு மத்தியில் நடத்தப்பட்ட 'இரண்டாம் சுற்று' தேர்தலில் வாக்களிப்பு எண்ணிக்கை ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

தற்போதைய UAW தலைவர் ரே கரி ஜெயித்தாலும் சரி அல்லது சர்வதேச ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் நீண்டகால அதிகாரத்துவ ஷான் ஃபைன் ஜெயித்தாலும் சரி, தொழிற்சங்க எந்திரம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் அதன் நயவஞ்சகக் கூட்டைத் தொடரும்.

ஆனால் இது, கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அவர்கள் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளனர். UAW அதிகாரத்துவவாதிகள் கூறும் எதையும் நம்ப முடியாது என்பதை அறிந்துள்ள போர்க்குணமிக்க தொழிலாளர்களின் ஒரு குழு, இந்த உடன்படிக்கையைத் தோற்கடிப்பதற்காக தகவல் மற்றும் பிரச்சாரத்தைப் பகிர்ந்து வினியோகிக்க கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்கி உள்ளது. கேட்டர்பில்லரும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமும் எதை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக கூறுகிறதோ அதை அல்ல, மாறாக தொழிலாளர்களின் தேவைகளைக் கொண்ட கோரிக்கைகளை வென்றெடுக்க அவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்குத் தயாரிப்பு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்தக் குழு புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், பல ஆண்டுகளாக உயர்வின்றி உள்ள சம்பளங்களை அல்லது வீழ்ச்சி அடைந்து வரும் சம்பளங்களை ஈடுகட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் 50 சதவீத சம்பள உயர்வு; பணவீக்கத்திற்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்க வாழ்க்கை செலவு அதிகரிப்புகள்; எல்லா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் இரண்டு வாரமாவது சம்பளத்துடன் கூடிய ஓய்வு நேரம்; வேலையில் உள்ள தொழிலாளர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் கையிலிருந்து செலவு செய்யும் மருத்துவச் செலவுகளைப் பெருமளவுக்குக் குறைப்பது; ஒரு கண்ணியமான வேலை ஓய்வை வழங்க போதுமான தொகையோடு எல்லா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியங்களை மீட்டமைப்பது ஆகியவற்றைக் கோருகிறது.

இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராட, ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கம் இல்லாத ஆலைகளில் உள்ள கேட்டர்பில்லர் தொழிலாளர்கள்; நிர்வாகப் பிரிவில் உள்ள சாமானிய தொழிலாளர்கள்; கேட்டர்பில்லர் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள்; மற்ற நாடுகளில் உள்ள கேட்டர்பில்லர் ஆலை தொழிலாளர்கள் உட்பட கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் அனைத்து பிரிவினரையும் ஐக்கியப்படுத்த இந்தக் குழு அழைப்புவிடுகின்றது.

கேட்டர்பில்லர் ஓர் 'ஈவிரக்கமற்ற எதிர்ப்பாளர்' என்கின்ற அதேவேளையில், அந்தக் குழு அறிக்கை பின்வருமாறு அறிவிக்கிறது:

கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் ஒரு பரந்த, உலகளவில் ஒன்றோடொன்று பிணைந்த உற்பத்தி வலையமைப்பின் பாகமாக உள்ளனர். எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களும் பணவீக்கம் மற்றும் வேலை நிலைமைகளுக்கு எதிராகத் திருப்பிப் போராடுவதற்கான வழியைத் தேடி வருகிறார்கள். வடக்கு அயர்லாந்து மற்றும் பிரான்சில் உள்ள கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் கடந்தாண்டு வேலைநிறுத்தங்களை நடத்தினர்.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லன்டிஸ் (கிறைஸ்லர்) ஆலைகளில் உள்ள 150,000 க்கும் அதிகமான வாகனத்துறை தொழிலாளர்களும், அத்துடன் நூறாயிரக் கணக்கான UPS தொழிலாளர்களும் ஒப்பந்தம் சம்பந்தமாக இந்தாண்டு மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் அனைவரும், அவர்கள் வெறுக்கும் பல அடுக்கு தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் மேலும் மேலும் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அவசியத்தைக் காண்கிறார்கள்.

கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் இந்த எதிர்ப்பானது, முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்கும் ரஷ்யாவுக்கு எதிராக முன்பினும் அதிகமாக அதிகரித்து வரும் போர் செலவுகளுக்கும் தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இலங்கை தொழிலாளர்களின் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை உள்ளடக்கிய ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க மேலெழுச்சியின் பாகமாக உள்ளது.

அமெரிக்காவில், கடந்த இரண்டாண்டுகளாக எண்ணெய் சுத்திகரிப்புத்துறை தொழிலாளர்கள், மேற்கு கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற முக்கிய பிரிவுகளின் வேலைநிறுத்தங்களை தடுக்கவும், தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் சம்பளங்களை விட குறைவான சம்பள உயர்வுகளைத் திணிக்கவும் பைடென் நிர்வாகம் AFL-CIO அதிகாரத்துவத்தைச் சார்ந்திருந்துள்ளது.

இது தொழிற்சங்க எந்திரம் இன்னும் அதிகமாக மதிப்பிழப்பதற்கும், வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள், சகிக்க முடியாத வேலை நிலைமைகள் மற்றும் சமூக சமத்துவமின்மையின் வெடிப்பு ஆகியவற்றின் மீது அதிக கோபத்தை எரியூட்டுவதற்கும் மட்டுமே உதவியுள்ளது. அதிகரித்தளவில், இரயில்வே துறை தொழிலாளர்கள், பொதுத்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொழிலாளர்கள், மருத்துவத்துறை, வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறைகளின் தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களைத் தொழிற்சங்க அதிகாரத்துவம் நாசப்படுத்துவதை எதிர்க்கவும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக போராட அவர்களின் படைகளை ஒன்றுபடுத்தவும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்பி வருகின்றனர்.

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு மேக் ட்ரக் ஆலை தொழிலாளர் வில் லெஹ்மன் நடத்திய பிரச்சாரம், இந்த கிளர்ச்சியின் மிகவும் நனவான வெளிப்பாடாக இருந்தது. லெஹ்மன் தனது பிரச்சாரத்தை, பெருநிறுவன சார்பு UAW அதிகாரத்துவத்தைக் கலைப்பதற்கான கோரிக்கை மற்றும் ஆலை தளத்தில் முடிவுக்கும் அதிகாரத்தைத் தொழிலாளர்களுக்கே மாற்றும் கோரிக்கை மீது மையமிட்டிருந்தார். இதை அடைவதற்கு, அவர் சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியின் (IWA-RFC) பாகமாக ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை விரிவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு சோசலிசவாதியாகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கான போராளியாகவும் போட்டியிட்ட லெஹ்மன், கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தல்களில் UAW அதிகாரத்துவம் வாக்குகளை ஒடுக்க பலமாக முயன்றால் வாக்களிக்கத் தகுதியுள்ள 1.1 மில்லியன் UAW உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்த போதினும், அதன் முதல் சுற்றில் கிட்டத்தட்ட 5,000 வாக்குகள் வென்றார்.

லெஹ்மன் பிரச்சாரத்தில் செய்யப்பட்ட முன்னேற்றம், இந்தாண்டு வெடிப்பார்ந்த வர்க்கப் போராட்ட வெடிப்பில் முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும். இதில் கேட்டர்பில்லர் ஆலை போராட்டம் முதல் கட்டம் மட்டுமே ஆகும். ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க எந்திரத்தின் உதவியோடும் ஒத்துழைப்போடும், கூடுதல் விட்டுக்கொடுப்புகளைக் கோரும் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளை எதிர்க்க, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்தி வாய்ந்த எதிர் தாக்குதலை ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பு தேவைப்படுகிறது.

டெட்ராய்டின் மூன்று வாகனத்துறை ஆலை தொழிலாளர்களும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும், கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் இந்தத் தீர்க்கமான போராட்டத்தை வெற்றிகொள்ள அவர்களுக்குப் பரந்தளவில் ஆதரவை வழங்க வேண்டும்.

Loading