முன்னோக்கு

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தின் உலகளாவிய முக்கியத்துவம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் வழங்கிய ஒரு காணொளி அறிக்கையின் எழுத்துமூலமான வடிவம் கீழே கொடுக்கப்படுகின்றன. காணொளியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், பெப்வரி 6 இல், ரிக்டர் அளவில் 7.6 மற்றும் 7.7 ஆக அளவிடப்பட்ட இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்கள், சிரிய எல்லைக்கு அருகில் தெற்கு துருக்கியின் மராஷ் நகரைத் தாக்கின. ஒன்பது மணி நேரத்திற்குள், இந்த நிலநடுக்கங்கள் 100,000 இல் இருந்து 150,000 பேரின் உயிர்களைப் பறித்தன. உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

துருக்கியினதும் சிரியாவினதும் நிலநடுக்கத்தின் உலகளாவிய முக்கியத்துவம்

இந்தத் துயரத்தை ஓர் இயற்கை பேரழிவு என்று மட்டும் விவரிப்பது போதுமானதாக இருக்காது. நிச்சயமாக, பூமியின் கீழடுக்கு பாறைத்தகடுகள் நகர்வுகள் புவியியல்ரீதியாக ஒரு சக்தி வாய்ந்த இயல்நிகழ்வாக உள்ளன. ஆனால் இத்தகைய சம்பவங்களுக்கு காட்டப்பட்ட விடையிறுப்பும் இவற்றின் பாதிப்பும் சமூகரீதியிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு காரணிகளின் விளைபொருளாக உள்ள போதிய தயாரிப்பின்மையே உயிரிழப்புக்கு நிஜமாக பொறுப்பாகிறது. ஒன்று, முற்றிலும் தேசியரீதியான அக்கறைகள் மேலோங்கிய அரசியல். இரண்டாவது, இலாபத்தையும், செல்வவளத் திரட்சியையும்  அடிப்படையாகக்கொண்ட கொள்கை முடிவுகளாகும்.

விஞ்ஞானிகளின் எல்லா எச்சரிக்கைகளும் இருந்த போதும், மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

நான் இப்போது இஸ்தான்புல்லில் இருக்கிறேன். நிலநடுக்க ஆய்வுத்துறை நிபுணர்கள் பரவலாக கணித்துள்ளவாறு, இந்நகரில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டால், எனக்குப் பின்னால் உள்ள இந்த வரலாற்று புகழ்மிக்க துறைமுகத்தின் இந்தப் பகுதியிலும் மொத்த நகரிலும் மிகப் பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும். அனேகமாக இதன் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கலாம்.

இது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையாகும். நாளாந்தம்  இல்லையென்றாலும், ஏறக்குறைய வாராவாரம் ஏதோவொரு வடிவில் பேரிடர்களைப் பற்றி கேள்விப்படும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர், கிரீஸில் இரயில் தடம் புரண்டது. ஓஹியோவின் கிழக்கு பாலஸ்டைனில் பேரழிவு நடந்தது. இலாபத்திற்காக உயிர்களை அடிபணியச் செய்வதே எப்போதும் இத்தகைய நிகழ்வுகளின் பொதுவான அம்சமாக உள்ளது. இத்தகைய சம்பவங்கள், உலககெங்கிலும் மில்லியன் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்த ஒரு பெருந்தொற்றின் பின்னணியில் நடந்து வருகின்றன.

இதையும் தாண்டி, நான் இப்போது இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத கருங்கடல் நெடுகிலும், உக்ரேன் போர் ஓர் அணுஆயுத பேரழிவுக்குள் விரிவடைய அச்சுறுத்துகிறது.

இதிலிருந்து என்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்? நாம் ஒரு காலாவதியான ஒரு சமூக அமைப்பில், ஒரு பொருளாதார அமைப்புமுறையில் வாழ்கிறோம். இந்த முதலாளித்துவ அமைப்புமுறை, இந்த தேசிய-அரசு அமைப்புமுறை, இந்த முதலாளித்துவ வர்க்க ஆட்சி என இவை நவீன மக்கள் சமூகத்தின் தேவைகளுக்கு முற்றிலும் பொருத்தமின்றி உள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் இத்தகைய ஒரு பேரழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலநடுக்கம் ஓர் உலகளாவிய வரலாற்று சம்பவமாகும். இதற்கு அரசியல் விளைவுகள் உள்ளன. இது இதேபோன்ற தன்மையைக் கொண்ட மற்றொரு வரலாற்று அத்தியாயத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது, அதாவது 1755 இல் போர்த்துக்கலின் லிஸ்பன் நகரைத் தாக்கிய மிகப் பெரும் நிலநடுக்கத்தை நினைவூட்டுகிறது.

அப்போது, அந்நேரத்தில் நிலப்பிரபுத்துவ கட்டமைப்புக்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள், பத்தாயிரக் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்த அந்த பேரிடர் நடப்பிலுள்ள அமைப்புமுறை மீதான நம்பிக்கையைக் கெடுக்கக் கூடாது என்றும், என்ன நடந்ததோ அது தெய்வச் செயலின் பாகமாக நடந்தது என்றும் வாதிட்டார்கள். எவ்வளவு உயிரிழப்பு இருந்தாலும் பரவாயில்லை, அதன் மீது கேள்வி எழுப்பக் கூடாது. அது எல்லாம் நன்மைக்கே. உண்மையில், “சாத்தியமான வேறெந்த உலகங்களை விடவும் தலைச்சிறந்த ஒன்றில்' மனிதர்கள் வாழ்ந்ததாக அவர்கள் வாதிட்டார்கள்.

இந்த கருத்துருவை வொல்டெயர் (Voltaire) கடுமையாக தாக்கினார். இந்த பிற்போக்கு நம்பிக்கைவாத வெற்று தத்துவத்திற்கு விடையிறுத்து Candide என்ற அவருடைய பிரபல புத்தகத்தை எழுதினார். இல்லை, நாம் சாத்தியமான வேறெந்த உலகங்களை விடவும் தலைச்சிறந்த ஒன்றில் வாழவில்லை. நாம் மாற்றப்பட வேண்டிய ஓர் உலகில் வாழ்கிறோம், இதில் வாழ்வும், சமூகமும் மனித நடவடிக்கைகளால் வடிவமைக்கப்படக்கூடிய ஒன்று என அவர் எழுதினார்.

அது பகுத்தறிவு நிகழ்வுபோக்கையும் விஞ்ஞாரீதியான சிந்தனையையும்   இயக்கத்திற்குக் கொண்டு வந்து விரைவுபடுத்தியதால், அது 1776 அமெரிக்கப் புரட்சி, 1789 இல் இருந்து 1794 வரையிலான மாபெரும் பிரெஞ்சு புரட்சி, உலகை மாற்றுவதற்காக 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் சமூகப் போராட்டங்களுக்கு உத்வேகமளித்தது. மேலும் உலகத்தை மாற்றுவதற்கும்,ஒரு சமூகத்தை மனித நடவடிக்கைகள் மூலமாக மாற்றுவதற்கும் வழிவகுத்து அது மனிதகுல நலன்களுக்கேற்ப நிலைமைகளை நெறிமுறைப்படுத்தியது.

இங்கே என்ன நடந்துள்ளது என்பதையும், மனித வாழ்க்கை நிலைமைகள் மீதான இத்தகைய பேரழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற எல்லா சம்பவங்களையும் கூட, புரிந்து கொள்வதற்கான ஒருவரின் போராட்டம், ஒரு புதிய புரட்சிகர சிந்தனையைச் சக்தி வாய்ந்த விதத்தில் புத்துயிரூட்ட வழிவகுக்கும்.

இது தான் ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்காகும். இந்தப் போராட்டத்தின் பாகமாக இருங்கள். சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுங்கள். ஒட்டுமொத்த மனிதகுல நலன்களைப் புதுப்பித்து சமூகத்தை மாற்றக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புங்கள்.

Loading