ஜேர்மன் வெளியுறவு மந்திரி பெயர்பொக் "பெண்ணியவாத" போர் கொள்கையை முன்வைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பெயர்பொக் (பசுமைக்கட்சி) மற்றும் அபிவிருத்தி மந்திரி ஸ்வென்ஜா ஷூல்ஸ் (சமூக ஜனநாயகக்கட்சி) ஆகியோர் புதன்கிழமை ஊடகங்களுக்கு 'பெண்ணியவாத வெளியுறவுக் கொள்கைக்கான வழிகாட்டுதல்களை' வழங்கினர். இத்திட்டமானது பிற்போக்குத்தனமானதும் அபத்தமானதும் மட்டுமல்லாது, பின்வரும் இரண்டு இலக்குகளைக் கொண்டுள்ளது: இது ஜேர்மனியின் போர்க் கொள்கையின் உண்மையான தன்மையை இருட்டடிப்பு செய்வதையும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்காக அடையாள அரசியல் பற்றிய கேள்விகளில் உறுதியாக இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் வசதிபடைத்த பிரிவினரை அணிதிரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்கள் மற்றும் பெண்ணியவாதக் கொள்கைகள் வெளியுறவுக் கொள்கையில் அதிகப் பங்கு வகிக்கும் போது, உலகம் 'சமாதானமானதாகவும்  ஸ்திரமானதாகவும் இருக்கிறது' என்ற கூற்று இந்த வழிகாட்டுதலின் மையத்தில் உள்ளது. மத்திய வெளியுறவு அலுவலகத்தில் பெண்களின் விகிதத்தை அதிகரிக்கவும், 'பெண்ணியவாத வெளியுறவுக் கொள்கைக்கான தூதரை' நியமிக்கவும் இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. அதற்கு முழு 'பெண்ணியவாத வெளியுறவுக் கொள்கை' ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். 'அனைத்து வெளியுறவுக் கொள்கை மூலோபாயங்களிலும் பெண்ணியவாத வெளியுறவுக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம்' என இந்த வழிகாட்டி ஆவணம் அறிவிக்கின்றது.

உறுதியான சொற்களில் இதன் அர்த்தம் என்ன என்பதை ஆவணம் ஒருபோதும் விளக்கவில்லை. ஆனால் திட்டத்தின் பிற்போக்கு தன்மைக்கு சிறந்த ஆதாரம் பெயர்பொக் தான். அவர் வெளியுறவு அலுவலகத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆனதிலிருந்து, ஜேர்மன் வெளியுறவுக் கொள்கை மிகவும் சமாதானமானதாக மாறவில்லை, ஆனால் இன்னும் போர்க்குணமிக்கதாகவும், இராணுவவாதமாகவும் மாறியது. கடந்த ஆண்டு, ஜேர்மன் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட €100 பில்லியன் சிறப்பு நிதியானது, ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய ஜேர்மன் மறுஆயுதமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான கிட்லரின் இராணுவம் மேற்கொண்ட அழிப்புப் போருக்கு 82 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மன் டாங்கிகள் ரஷ்யாவிற்கு எதிராக நகர்கின்றன.

மத்திய அரசாங்கத்தில் உள்ள நபர்களில் ஒருவரான பெயர்பொக், போரை உக்கிரமாக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக வாதிடுகிறார். உக்ரேனுக்கு மேலும் மேலும் கொடிய ஆயுத ஏற்றுமதிக்காக இடைவிடாமல் பிரச்சாரம் செய்து, ஜேர்மனியும் நேட்டோவும் அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதாக வெளிப்படையாகக் அவர் கூறுகிறார். 'நாங்கள் ரஷ்யாவிற்கு எதிராகப் போரிடுகிறோம், ஒருவருக்கொருவர் எதிராக அல்ல' என்று அவர் ஜனவரி இறுதியில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பாராளுமன்றத்தில் கூறினார்.

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா மற்றும் நேட்டோ போர்களின் காரணமாக பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூறாயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்தப் போர்களுக்கு பசுமைக்கட்சியினர் கடுமையாக ஆதரவளித்தனர். ஜேர்மன்-ஐரோப்பிய அகதிகள் கொள்கைக்கும் இது பொருந்தும். போர், வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் 'ஐரோப்பிய கோட்டையின்' வெளிப்புற எல்லைகளில் இறக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த கொலைகாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று வழிகாட்டி ஆவணங்கள் பெருமையாக கூறுகின்றன. 'கடந்த ஆண்டு நேட்டோவில் மூலோபாயக் கருத்தைப் பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அது மீண்டும் மீண்டும் உறுதியான பெண் வெளியுறவு அமைச்சர்களைக் கொண்ட ஒரு சிறந்த பிராந்தியக் குழுவாக இருந்தது, அவர்கள் கருத்துகளை ஒருங்கிணைத்து பரிமாறிக் கொண்டனர். குறிப்பாக மனித பாதுகாப்பில் கவனம் செலுத்துவது வலுவாக இருந்தது”என்று அந்த ஆவணம் கூறுகிறது. 

துல்லியமாக எந்த 'மனித பாதுகாப்பு' அதில் சம்பந்தப்பட்டது என்பது பெயர்பொகிற்கு இரகசியமாகவே உள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக, அணுவாயுத மூன்றாம் உலகப் போருக்கான அதன் தயாரிப்புகளை நேட்டோ அறிவித்ததே அந்த புதிய மூலோபாயக் கருத்தாகும். 'நாங்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் முழு அளவிலான படைகளை வழங்குவோம் ... அணு ஆயுதங்களை வைத்திருக்கும் சமமான போட்டியாளர்களுக்கு எதிரான உயர்-தீவிர இடைநிலைப் போர் உட்பட, தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்குத் இது தேவை' என்று ஆவணம் கூறுகிறது.

இந்த வழிகாட்டுதல்களில் உள்ள அனைத்து 'பெண்ணியவாத' சொற்றொடர்களும் கருத்துக்களும் மற்றும் 'பாலியல், துஷ்பிரயோகம், அவமானம், தாக்குதல், கைவிடுதல் மற்றும் கையாளுதல் போன்ற கவலைகளைச் சமாளிக்கக்கூடிய செயல்முறை', 'பாலினத்திற்கு முக்கியமளித்தல்', மற்றும் 'சமத்துவம், பன்முகத்தன்மை, உள்ளீர்த்தல்' போன்றவை  இராணுவ வழிமுறைகளால் செயல்படுத்தப்படும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு துணைபோவதாகவே உள்ளன. பெயர்பொக்கும் ஷூல்ஸவும் இதை தங்கள் ஆவணத்தில் தாமே ஒப்புக்கொள்கிறார்கள்.

'ஒரு பெண்ணியவாத வெளியுறவுக் கொள்கையில் உடனடி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எந்த மந்திர சூத்திரமும் இல்லை' என்று அவர்கள் எழுதுகிறார்கள். 'உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர்', 'மிருகத்தனமான வன்முறையை எதிர்கொள்வதில், மனித உயிர்களும் இராணுவ வழிமுறைகளால் பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதைக் காட்டுகிறது. 'ஒரு பெண்ணியவாத வெளியுறவுக் கொள்கை அமைதிவாதத்திற்கு ஒத்ததாக இல்லை.' மாறாக, அது 'வெளிநாட்டு கொள்கை யதார்த்தங்களை' அங்கீகரிக்கிறது மற்றும் 'அவற்றிலிருந்து எழும் சங்கடங்களை எதிர்கொள்கிறது. இது ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் மதிப்புகள் மற்றும் நலன்கள் இரண்டையும் கருத்தில் கொண்டுள்ளது” என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது இறுதியில் பூகோள மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். மேலும், 'வெளிநாட்டுக் கொள்கை யதார்த்தங்கள்' அதைக் கோரினால், 'இக்கட்டான நிலைமைகளுக்கு' உலகின் மிகவும் பிற்போக்குத்தனமான ஆட்சிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பும் அதற்கு தேவைப்படுகிறது. இது பற்றிய ஒரு உதாரணம் பின்வருமாறு:

கடந்த ஜூலையில், பேர்லினில், எகிப்திய இராணுவ சர்வாதிகாரி அப்துல் ஃபத்தா அல்-சிசிக்கு ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (SPD) உடன் சேர்ந்து பெயர்போக் சிவப்புக் கம்பளம் விரித்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக பசுமைவாதிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் 'வெகுஜன கொலைகாரன்' என்ற வார்த்தை அரசாங்கத் தலைவருக்குப் பொருந்தும் என்றால், அது கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருக்குத்தான் பொருந்தும்.

இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமட் மோர்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்குப் பிறகு, ஏறக்குறைய சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தைக் கைப்பற்றிய அல்-சிசி, மேற்கத்திய ஆதரவு பயங்கரவாத ஆட்சிக்கு தலைமை தாங்குகிறார். பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகள் நாட்டின் சித்திரவதைச் சிறைகளில் வாடுகின்றனர், போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன, மேலும் ஆட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் ஒடுக்கப்படுகின்றன.

அல்-சிசியின் இரத்தம் தோய்ந்த சர்வாதிகாரமானது, மனித உரிமைகள் கண்காணிப்பகம் 'எகிப்தின் நவீன வரலாற்றில் சட்டவிரோதமான படுகொலைகளின் மிக மோசமான நிகழ்வு' என்று வர்ணித்த படுகொலையுடன் தொடங்கியது. ஆகஸ்ட் 2013 இல், அல்-சிசியின் தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்ப்பவர்களின் இரண்டு எதிர்ப்பு முகாம்களைத் தாக்கி, ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர். அப்போதிருந்து, போராட்டக்காரர்கள் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஜேர்மன் கூட்டாட்சி அரசாங்கத்தின் மற்ற முக்கிய கூட்டாளிகள் தீவிர பிற்போக்குத்தனமான வளைகுடா முடியாட்சிகள் ஆகும், இதில் பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் கூட காகிதத்தில் இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன்பு, சவுதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் அல்-சௌத்தை மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பெயர்பொக் சந்தித்தார்.

சவுதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் அல்-சௌத்தை 2023மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பெயர்பொக் சந்திக்கின்றார் [AP Photo/Sven Hopee/Pool Photo]

சவுதி ஆட்சி பல ஆண்டுகளாக யேமனில் ஒரு கொலைகாரப் போரை நடத்தி வருகிறது. இது ஏற்கனவே நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றுள்ளது. சவுதி அரேபியாவில் வாள் கொண்டு பகிரங்கமாக மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. மேலும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இல்லாதொழிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, சவுதி பத்திரிகையாளரும் ஆட்சி எதிர்ப்பாளருமான ஜமால் கஷோகியின் கொடூரமான கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேரடியாக ஈடுபட்டார்.

இந்த வழிகாட்டி ஆவணம், சவுதி அரேபியா மற்றும் எகிப்து பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னும், ஈரான் பற்றி ஒரு விரிவான பகுதி உள்ளது. எப்பொழுதும் போல, மனித உரிமை மீறல்கள் பற்றி ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு குறுக்காக இருக்கும் நாடுகள் தொடர்பாக மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. மறுபுறம், 'கூட்டணி பங்காளிகள்' வானளாவிய மரியாதையுடன் பாராட்டப்படுகிறார்கள்.

பெயர்பொக் இன் ஆவணத்தில், இது அபத்தமான வடிவங்களை எடுக்கிறது. இவ்வாறு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொலைகாரத்தனமாகச் சுரண்டுவதற்குப் பெயர்போன கட்டாரின் முடியாட்சியில் 2022 உலகக் கோப்பைக்கான கால்பந்து மைதானங்களை நிர்மாணிப்பதில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இது அனைத்து தீவிரத்துடன் பெண்களின் உரிமைகளுக்காக போராடுதாக சித்தரிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களின்படி,“ மார்ச் 2022 இல் ஜேர்மனி, பிரிட்டன், கட்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான நன்கொடையாளர் மாநாடு இளம்பெண்களினதும் மகளினரதும் மனிதாபிமான நிலைமை மீது கவனம் செலுத்தியது”.

ஆவணம் 'பெண்ணியவாத' கோரிக்கைகளை முன்வைக்கும் போது அல்லது 'குறைந்தது 100 சதவிகிதம் நமது மனிதாபிமான உதவியை பாலின உணர்திறனான முறையில் செயல்படுத்த வேண்டும்…' என்கின்றது. இது பற்றி பேசும்போது, இதற்கும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஏகாதிபத்திய இலக்குகளை முன்னெடுக்க வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு, மத்திய அரசாங்களால் குறிவைக்கப்பட்ட நாடுகளில் பெண்களையும் சிறுபான்மையினரையும் தவறாகப் பயன்படுத்துவதாகும்.

'நெருக்கடி தடுப்பு, உறுதிப்படுத்தல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்', சர்வதேச சட்டத்திற்கு மாறாக ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவதற்கான நன்கு அறியப்பட்ட சொற்பொழிவுகள், அடுத்தடுத்த மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் பிணாமி ஆட்சிகளை நிறுவுதல், 'பாலினம் சார்ந்த ஆபத்துகள் மற்றும் பாதிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு பெண்களையும் ஒதுக்கப்பட்ட மக்களையும் நாங்கள் முறையாக ஈடுபடுத்துகிறோம்' என்று இந்த வழிகாட்டி ஆவணம் கூறுகின்றது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் குற்றவியல் வெளியுறவுக் கொள்கையை மதிப்புமிக்க சொற்றொடர்களில் மூடிமறைக்கும் நீண்ட மற்றும் இருண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. முதலாம் உலகப் போரில், ஏகாதிபத்திய அரசாங்கமும் அதை ஆதரித்த போர்க்குணமிக்க நடுத்தர வர்க்கங்களும் ஜேர்மன் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஜேர்மன் போர் இயந்திரத்தை நியாயப்படுத்தினர். இன்று, 'பெண்ணியம்' என்ற பெயரில் மற்றவற்றுடன் அதை நியாயப்படுத்துகிறார்கள். இதன் பின்னணியில் கொள்ளையடிக்கும் நலன்களே என்பது எப்போதும் உள்ளது.

Loading