முன்னோக்கு

பைடெனும் ஷோல்ஸும் போருக்கான தங்களின் உயர்மட்ட இரகசிய சந்திப்பில் என்ன முடிவெடுத்தார்கள்?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளிக்கிழமை ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், வெள்ளை மாளிகையில் போர் சம்பந்தமாக நடந்த ஒரு மணி நேர உச்சிமாநாட்டிற்காக வாஷிங்டனுக்குச் சென்றார். பத்திரிகையாளர்கள் இல்லாமல் தனியாகச் சென்றிருந்த ஷோல்ஸ், அவருடைய பணியாளர் யாரும் இல்லாமல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

இந்த அசாதாரண பயணத்திற்கான காரணத்தைக் குறித்து பைடென் நிர்வாகமோ அல்லது ஜேர்மன் அரசாங்கமோ விளக்கம் அளிக்கவில்லை. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அந்தக் கட்டிடத்தில், அவருடைய உதவியாளர்கள் யாரும் இல்லாமல், அதிபர் அங்கே செல்வதற்கு என்ன திட்டநிரல் இருந்தது? அந்தச் சந்திப்பின் உள்ளடக்கம் தொடர்பாக எந்தத் தகவலும் கசிவதற்கான சாத்தியக்கூறை அமெரிக்க அரசாங்கம் தவிர்க்க விரும்பியது என்பது தெளிவாக உள்ளது.

மார்ச் 3, 2023, வெள்ளிக்கிழமை, வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் உரையாற்றுவதை ஜனாதிபதி ஜோ பைடென் கவனிக்கிறார் [AP Photo/Susan Walsh]

1944 இல் கிழக்கு புரூஷ்யாவில் ஹிட்லர் அவரது தளபதிகளைச் சந்திக்கச் சென்றதற்குப் பின்னர் இருந்து, எந்தவொரு ஜேர்மனிய அதிபரும் இது மாதிரியான தன்மையில் ஒரு சந்திப்பை நடத்தியது கிடையாது. உண்மையில் சொல்லப் போனால், இந்தக் கூட்டங்கள் இரகசியமாக நடத்தப்பட்டிருப்பது, ஜனநாயக அரசுகள் என்று கூறப்படும் நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகளுக்கான பொதுவானத் தன்மையைக் கொண்டிருப்பதை விட பாசிச தலைவர்களான ஹிட்லருக்கும் முசோலினிக்கும் இடையே நடந்த போர்க்கால சந்திப்புகளுடன் அதிக பொதுவான தன்மையைக் கொண்டுள்ளன என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைப் பாரியளவில் விரிவாக்குவதற்கு ஷோல்ஸின் வெளிப்படையான கையெழுத்திட்ட ஒப்புதலை பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும் என்ற முடிவுக்கு வருவதை எந்த வழியிலும் தவிர்க்க முடியாது.

மூலோபாய நகரமான பாக்முட்டில் உக்ரேனியப் படைகள் ஒரு பெரிய தோல்வியை எதிர்கொண்டுள்ள நிலைமைகளின் கீழ், நேட்டோ துருப்புகளை அனுப்புவது வரையில் மற்றும் அதையும் உள்ளடக்கி, நேட்டோ நாடுகளின் அவசர இராணுவ நடவடிக்கையை விவாதிக்க பைடெனும் ஷோல்ஸூம் சந்தித்தார்கள்.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பிற முக்கிய ஊடகங்களின் போர் பற்றிய செய்திகள், மாபெரும் உக்ரேனிய எதிர்ப்பு பற்றிய கட்டுக்கதைகளை நிலைநிறுத்துவதில் மையமிட்டு, முழுவதுமாக பிரச்சாரத்தை உள்ளடக்கி உள்ளன. ஆனால் பயங்கரமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னேறி வரும் ரஷ்யப் படைகளைச் சுற்றிவளைத்து அழிப்பதற்காக ஒரு முக்கிய மூலோபாய நகரமான பாக்முட் நகரை உக்ரேன் மீளப்பலப்படுத்தி உள்ள நிலையில், உக்ரேனியர்கள் இப்போது அந்நகரில் ஒரு மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டுள்ளனர்.

மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக இருந்தால் அதுபற்றி அமெரிக்க ஊடகங்களில் மிகக் குறைவாகக் கூறப்படும் என்பது ஒரு பொதுவான விதியாக உள்ளது. பைடென் உடனான ஷோல்ஸின் இந்த சந்திப்பு விவகாரம் மீதுள்ள எந்த ஆழ்ந்த கேள்விக்கும் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது ஒருபுறம், எந்தத் தீவிரமான கேள்விகளும் கூட கேட்கப்படுவதில்லை.

உக்ரேனுக்கு ஆப்ராம்ஸ் மற்றும் லியோபார்ட் டாங்கிகள் அனுப்பியது தொடர்பாக எழுந்த குழப்பம் மற்றும் பகிரங்கமான பிளவுகளைத் தவிர்க்க அவ்விரு நாடுகளுக்கும் இடையே கூட்டு இராணுவ தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்காக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டதா?

நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கோ அல்லது பெலாரஸுக்கோ அனுப்புவதற்கு ஷோல்ஸ் ஒப்புக் கொண்டாரா? ஜேர்மன் படைகள் போருக்கு அனுப்பப்படும் என்று அவர் பைடெனுக்கு உத்தரவாதம் அளித்தாரா? இவற்றில் எதையும் நிராகரிக்க முடியாது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்திடம் பறிகொடுக்கும் வரை ஜேர்மனிய நகரமான கோனிக்ஸ்பேர்க்காக இருந்த கலினின்கிராட்டைவிட்டு ரஷ்யா வெளியேற வேண்டும் என்ற ஒரு புதிய கோரிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என்ற உறுதிமொழியை ஷோல்ஸ் பைடெனிடம் இருந்து பெற்றாரா?

மூன்று விஷயங்கள் தெளிவாக உள்ளன. முதலாவதாக, ஒட்டுமொத்தமாக நேட்டோவும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அவற்றின் முழு நம்பகத்தன்மையை உக்ரேன் போருக்கு அர்ப்பணித்துள்ளன. இந்த மோதலுக்காக நூறு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்தளவிலான அர்ப்பணிப்பை வைத்துப் பார்த்தால், உக்ரேனில் தோல்வி என்பது அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் ஓர் அரசியல் மற்றும் மூலோபாய பேரழிவு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

உக்ரேனிய பகுதிகள் அனைத்தையும் 'விடுவிக்க' ஜனவரியில் அமெரிக்கா சூளுரைத்தது. கடந்த மாதம் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கிரிமியன் தீபகற்பத்தை 'இராணுவமயமற்றதாக்க' உறுதியளித்தார்.

இந்தப் போர் அமெரிக்காவினதும் நேட்டோவினதும் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தும் தன்மையைப் பெற்றுள்ளதால், இது விரிவாக்கத்தின் தர்க்கத்தை உந்தி வருகிறது. இப்போது தெளிவாக ரஷ்யாவுடனான ஒரு நேட்டோ போராக இருக்கக்கூடிய வகையில் தரைப்படைகளை அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஓர் இராணுவத் தோல்வியை எதிர்கொள்ளும் போது, பொறுப்பற்ற விரிவாக்கத்தின் மூலம் அதை ஒரு பேரழிவாக மாற்றும் நீண்ட அமெரிக்க பாரம்பரியம் இத்தகைய நடவடிக்கையைப் பின்தொடர்ந்து வரும்.

இரண்டாவதாக போர் சம்பந்தமான இந்தச் சந்திப்புக்காக ஷோல்ஸ் வாஷிங்டனுக்குச் செல்லும் முடிவானது, நேட்டோ இந்த மோதலை விரிவாக்கத் தயங்காது என்று புட்டினுக்கு ஓர் எச்சரிக்கை வழங்குவதாக இருந்தது. மேலும் இது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இந்த மோதலில் ரஷ்யாவின் கூட்டாளிகளாக இருக்கக்கூடிய நாடுகளுக்கும் ஓர் தகவலை அனுப்பவும் சேவையாற்றுகிறது.

மூன்றாவதாக, என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்பதைக் குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்குப் பொய்யுரைத்து இருட்டில் வைக்கும் பொறுப்பு, என்ன நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டாலும் அதை நியாயப்படுத்தும் ஊழல்பீடித்த அரசு கட்டுப்பாட்டிலான ஊடகங்களிடம் விடப்பட்டுள்ளது. போருக்கான பரந்த எதிர்ப்பு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களால் சர்வசாதாரணமாக உதறி விடப்படுகின்றன.

இச்சந்திப்பு குழப்பமான மற்றும் படுமோசமான வரலாற்று நினைவுகளைத் தூண்டுகிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான கடைசி நிமிட அமெரிக்க-ஜேர்மன் கூட்டணிக்கு அமெரிக்க இராணுவத்தின் சில பிரிவுகளில் ஆதரவு இருந்தது. இப்போது நமக்குத் தெரியும், கூட்டணி படைகளுடன் சேர்ந்து ரஷ்யர்களை எதிர்த்துப் போரிட 50,000 ஜேர்மன் சிப்பாய்களை ஆயுதமேந்த செய்ய  சேர்ச்சில் விரும்பினார்.

வாஷிங்டனில் போருக்கான இந்த சந்திப்பு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடந்த இரகசிய இராஜாங்க நடவடிக்கைகளையும் நினைவூட்டுகிறது. அந்த நேரத்தில், ஏகாதிபத்திய சக்திகள் 1914 இல் முதலாம் உலகப் போரை விரிவாக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கிய பல இரகசிய உடன்படிக்கைகளைச் செய்தன. 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் லெனினும் ட்ரொட்ஸ்கியும் இரகசிய உடன்படிக்கைகளை பகிரங்கப்படுத்திய போது தான், இதைப் பற்றிய உண்மை பொதுமக்களுக்குத் தெரிய வந்தது.

இந்தப் போரிட்டு வரும் அரசாங்கங்களுக்கு அமைதிவாத முறையில் முறையீடுவதன் மூலம் உக்ரேனில் நேட்டோ போரையும் ஓர் அணுஆயுத பேரழிவு அபாயத்தையும் தடுத்து விட முடியாது என்பதையே பைடென் மற்றும் ஷோல்ஸின் போருக்கான இந்தச் சந்திப்பும், அதைச் சுற்றியுள்ள இரகசியமும், எடுத்துக் காட்டுகின்றன.

அவர்கள் முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத முரண்பாடுகளால், அதாவது வர்க்க விரோதங்களின் தீவிரப்பாடு மற்றும் மூலப்பொருட்கள், சந்தைகள், உலக மேலாதிக்கத்திற்கான மோதலாலும், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அவர்கள் செய்தது போலவே, உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவாலும் உந்தப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து வருவதுடன் சேர்ந்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான புறநிலை நிலைமைகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால் அகநிலை ரீதியாக, இன்னமும் முதலாளித்துவவாதிகளே ஆதாயமடையக்கூடிய தரப்பில் உள்ளனர்: அவர்களின் நலன்களை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அரசு அதிகாரத்தின் நெம்புகோல்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள், வலதுசாரி மற்றும் இடதுசாரி என்று கூறப்படும் கட்சிகளில் இருந்து தொழிற்சங்கங்கள் மற்றும் போர்வெறி கொண்ட ஊடகங்கள் வரையில் பெரும் எண்ணிக்கையிலான துணை சக்திகள் அவர்கள் வசம் உள்ளன.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு பாரிய சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே போர் விரிவாக்கத்திற்கான திட்டங்களை முறியடிக்க முடியும்.

Loading