முன்னோக்கு

ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தின் இரண்டாம் கட்ட தேர்தல்கள் அதிகாரத்துவத்திற்கு தோல்வியாக முடிகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) இரண்டாம் சுற்று தேர்தல்களின் ஆரம்ப வாக்கு எண்ணிக்கை வாரயிறுதி வாக்கில் முடிவடைந்தது. தற்போதைய UAW தலைவர் ரே கேரியை விட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷான் ஃபெயின் சிறிய வித்தியாசத்தில் 645 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இந்தக் கட்டத்தில் ஃபெயின் ஜெயிக்கக் கூடும் என்று தெரிகிறது என்றாலும், 1,608 வாக்குச்சீட்டுக்கள் மீது முறையீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாரயிறுதி அல்லது அடுத்த வார ஆரம்பம் வரையில் முடிவுகள் வெளிவராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரே கரி மற்றும் ஷான் ஃபெயின் [Photo: UAW/UAWD]

இந்தத் தேர்தலைக் குறித்து முக்கியமான பல உண்மைகள் உள்ளன.

முதலாவதாக, நீதிமன்றம் நியமித்த UAW கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடந்த இந்த இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு டிசம்பர் 2022 இல் முடிவடைந்த முதல் சுற்று வாக்கெடுப்பை அங்கீகரித்திருந்தது. இது ஏனென்றால் முதல் சுற்று வாக்கெடுப்பில் வாக்காளர்களை ஒடுக்கிய ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தால் 10 சதவீதத்திற்கும் குறைவான உறுப்பினர்களே வாக்களித்திருந்த நிலையில், UAW தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வில் லெஹ்மன்  அதை ஆவணப்படுத்தி கண்காணிப்பாளரிடம் விரிவான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.   

உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட விபரங்களைத் தெரிவிக்குமாறும், “முடிந்தவரை பல உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்வதை உறுதிப்படுத்த' தேர்தல் குறித்து பரவலாக விளம்பரப்படுத்துமாறும் கோரிய கண்காணிப்பாளரின் சொந்த உத்தரவை UAW வேண்டுமென்றே மீறிய போதும் கூட, அந்தக் கண்காணிப்பாளர் இந்த எதிர்ப்புக்குப் பதிலளிக்கவும் கூட அக்கறைக் காட்டவில்லை. அதற்கு பதிலாக, இந்த ஜனநாயக விரோத ஏமாற்று தொடர அனுமதிக்கப்பட்டது.

இரண்டாவதாக, UAW எந்திரத்தின் இரண்டு விருப்பத்திற்குரிய வேட்பாளர்கள் தான் இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றதும் அது இந்தத் தேர்தலை மிகவும் பரந்தளவில் அதிகமாக தெரியப்படுத்துமாறு செய்ய முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் வாக்குப்பதிவு மிகவும் பரிதாபகரமாக இருந்தது. அது தகவல் அறிவிப்புகளை வெளியிடுவது மற்றும் வாக்களிக்குமாறு தொழிலாளர்களுக்கு நினைவூட்டும் மின்னஞ்சல்கள் அனுப்புவது போன்ற அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் முதல் சுற்றில் அது இவற்றைச் செய்யவில்லை. ஆனாலும் முடிவில் செல்லுபடியாகும் வெறும் 138,628 வாக்குகளே பதிவாயின. இது UAW இல் உறுப்பினர்களாக உள்ள பணியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய தொழிலாளர்கள் என வாக்களிக்கத் தகுதியானவர்களின் 1.1 மில்லியன் வாக்குகளில் 13 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இது எதை எடுத்துக்காட்டுகிறது? UAW எந்திரத்திற்கும் அதன் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் உண்மையான எந்த ஆதரவும் இல்லை. தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், வேலையிட நிலைமைகளைத் திட்டமிட்ட முறையில் அழிப்பதில் பெருநிறுவனங்கள் மற்றும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுடன் பல தசாப்தங்களாக ஒத்துழைத்து வந்ததால், இந்தத் தொழிற்சங்கத்தின் பொருத்தமற்ற பெயரான 'ஐக்கிய பணிமனை'  (“Solidarity House”) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆக்கிரமித்துள்ள வசதி படைத்த உயர்மட்ட நடுத்தர வர்க்க நிர்வாகிகளைச் சாமானிய தொழிலாளர்கள் இழிவாகப் பார்க்கிறார்கள்.

தேர்தலில் யார் ஜெயித்தாலும், அவர் UAW உறுப்பினர்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இது உண்மையான வாக்கு எண்ணிக்கையை மிகைப்படுத்துகிறது. 41,000 க்கும் அதிகமான தற்போதைய மற்றும் முன்னாள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களது நெருங்கிய தொண்டர்களை ஒருவர் கழித்துவிட்டால், அடுத்த UAW தலைவர் சாமானியத் தொழிலாளர்களின் வாக்குகளில் வெறும் 3 சதவீதத்திற்கு நெருக்கமாகவே பெற்றிருப்பார்.

இந்தத் தேர்தல், UAW தொழிற்சங்க எந்திரத்திற்குள் நிலவும் ஓர் இழிவான போட்டியைத் தவிர வேறொன்றுமில்லை. பெரும் சம்பள பதவிகளை வினியோகிப்பதும், 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொழிற்சங்க சொத்துக்களை அணுகுவதும் பணயத்தில் இருந்தது. நீண்டகாலமாக இருந்து வந்த நிர்வாகக் குழுவிற்கும் ஃபெயினின் ஒன்றுபட்ட UAW உறுப்பினர்கள் பிரிவுக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், அது UAW அதிகாரத்துவம் மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிராக சாமானியத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கிளர்ச்சியை எவ்வாறு சிறப்பாகக் கட்டுப்படுத்துவது என்பதற்கான தந்திரோபாயத்தில் மட்டுமே உள்ளன.

UAW இன் அதிகாரத்துவ எந்திரத்தில் நீண்டகால செயல்பாட்டாளராக உள்ள ஃபெயின், நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 இல் இண்டியானா கோகோமோவில் உள்ள கிறைஸ்லர் வார்ப்பு ஆலையின் தொழிற்சங்க பதவியில் இருந்து கடந்த 11 ஆண்டுகளாக 'ஐக்கிய பணிமனையின்' உயர்மட்ட பணியாளர் பதவி வரையில் அவர் பணியாற்றி உள்ளார். 2015 இல் UAW-பியட் கிறைஸ்லர் துறையின் உதவி இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், UAW-கிறைஸ்லர் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினராக இருந்த ஃபெயின், 2009 மற்றும் 2011 இல் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகள் மீதான கடுமையான தாக்குதல்களை ஆதரித்தார். 2019 இல் நிறுவன-சார்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அமுலாக்குவதற்குப் பிரதிபலனாக நிறுவனத்திடம் இலஞ்சம் வாங்கியதற்காக ஃபெயினின் உயரதிகாரி நோர்வுட் ஜெவெல் மீது மத்திய வழக்குத் தொடுநர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது, UAW இன் 'ஊழல் கலாச்சாரத்தின்' மையம் என்று பின்னர் அந்தத் துறை அழைக்கப்பட இருந்தது.

நவம்பர் 2017 இல் இருந்து, டெட்ராய்டில் உள்ள UAW-கிறைஸ்லர் தேசிய பயிற்சி மையத்தின் இணை இயக்குநராக உள்ள ஃபெயின்,  UAW ஊழலில் ஒரு 'சில மோசமானவர்கள் மட்டுமே' ஈடுபட்டுள்ளனர் என்று வாதிடுவதற்கான தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முயற்சிகளில் முன்னணி குரலாக மாறியுள்ளார்.  உலக சோசலிச வலைத்தளம் சுட்டிக்காட்டி உள்ளவாறு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் குறிப்பிடும் வகையில் மாறக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், ஒரு 'நிர்வாக உதவியாளராக' ஃபெயினின் தற்போதைய சம்பளமான 156,364 டாலர் ஒரு UAW சங்கத் தலைவர் பெறும் சுமார் 300,000 டாலராக உயரும்.

மூன்று தசாப்தங்களில் முதல்முறையாக 2015 இல் UAW ஆதரவிலான தேசிய ஒப்பந்தத்தைக் கிறைஸ்லர் தொழிலாளர்கள் பெருவாரியாக நிராகரித்து, கிளர்ச்சியில் ஈடுபட்டதால் மட்டுமே, UAW இல் தசாப்தங்களாக நடந்து வந்த ஊழல் குறித்து ஒபாமா நிர்வாகம் தொடங்கிய அமெரிக்க அரசு விசாரணை, ஒருபோதும் சாமானியத் தொழிலாளர்களைப் பலப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டதில்லை. மாறாக, தொழிலாளர்கள் மீது அதிகாரத்துவம் பிடியைத் தக்க வைத்திருக்கவும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆணைகளைத் தொடர்ந்து திணிக்கவும், அதிகாரத்துவத்தின் மீதான ஒரு 'ஜனநாயக' போலித்திரையுடன் அந்த விசாரணை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஃபெயினையும் அவரது தரப்பு உறுப்பினர்களையும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளும் Labor Notes உம் ஆதரிக்கின்றனர். வசதி படைத்த நடுத்தர வர்க்க அடுக்குகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரப் பதவிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இத்தகைய போலி-இடது அமைப்புகள் ஜனநாயகக் கட்சிக்குள் செயல்படுவதுடன், தொழிற்சங்க எந்திரங்களின் உடைந்துபோன நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கான அதன் முயற்சியில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

ஆனால், அதிகாரத்துவத்தின் எந்தப் பிரிவையும் தொழிலாளர்கள் ஆதரிக்கவில்லை என்பதையும், ஒட்டுமொத்த அமைப்பும் எந்தவித சட்டப்பூர்வத்தன்மையையும் இழந்து நிற்பதையும் இந்த வாக்கெடுப்பின் முடிவு அம்பலப்படுத்துகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சகிக்க முடியாத வேலையிட நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பெருகி வரும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த UAW எந்திரத்தை நம்பியுள்ள பைடென் நிர்வாகத்திற்கு இதுவொரு தோல்வியாகும். தொழிலாளர்களின் இந்த மேலெழுச்சி, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவைச் செழிப்பாக்க முக்கியமானதாக இருந்துள்ள, சம்பளங்கள் மீதான தசாப்தகால ஒடுக்குமுறையைத் தலைகீழாக மாற்ற அச்சுறுத்துகிறது.

மிக முக்கியமாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் ரஷ்யா மற்றும் சீனாவுடன் முற்றுமுதலான போருக்குத் தயாராகி வருவதால், “தொழிலாளர் ஒழுக்கநெறியை' நிலைநிறுத்த அதற்குத் தொழிற்சங்கங்கள் தேவைப்படுகின்றன. கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில் வந்த ஒரு விருந்தினர் கட்டுரையில், வாஷிங்டன் டி.சி. இல் உள்ள மூலோபாய மற்றும் வரவுசெலவுத்திட்ட   மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஒரு மூத்த உறுப்பினரான ஆஸ்திரேலிய போர் திட்ட வல்லுனர் ரோஸ் பாபேஜ், சீனாவுடனான ஒரு மிகப் பெரிய போர் வெடிப்பானது 'இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேறெந்த காலத்தையும் விட இப்போது அதிக சாத்தியக்கூறைக் கொண்டிருக்கின்ற' நிலையில், அதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க தொழிலாளர்களின் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறினார்.

“குறிப்பாக சில வாகனத்துறை உற்பத்தி நிறுவனங்கள் விமானக் கட்டமைப்புக்கு மாறுவது அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் முன்னுரிமையான மருந்து உற்பத்திக்கு மாறுவது உட்பட, போர் முயற்சிக்கு ஏற்ப பொருளாதார நோக்கங்கள் மாற்றியமைக்கப்படும் காலக்கட்டத்தில்', அவசரகால உணவு பங்கீட்டு வினியோகம், பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை உள்ளடங்கி இருக்கும் என்று பாபேஜ் எழுதுகிறார். போருக்குத் தயாராவதற்கு, முக்கிய வினியோகச் சங்கிலிகள் அமெரிக்காவுக்கும் கூட்டணி நாடுகளுக்கும் மாற்றப்பட வேண்டும், அமெரிக்க “உலகளாவிய உற்பத்தியில் அதன் மேலாதிக்கத்தை மீட்டமைத்திருக்க' வேண்டும் என்று பாபேஜ் வலியுறுத்துகிறார்.

கடந்தாண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள் மற்றும் இரயில்வே நிறுவனங்களில் வேலைநிறுத்தங்களைத் தடுக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் பயன்படுத்திய பின்னர், வெள்ளை மாளிகை ஒரு போர்க்காலப் பொருளாதாரத்திற்கு மாற தயாராகி வரும் நிலையில், அது தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அரசு கட்டமைப்புக்குள் கூடுதலாக ஒருங்கிணைத்து வருகிறது. ஜனாதிபதியின் ஏற்றுமதி குழுவின் முக்கிய பதவியில் கடந்த வாரம் ரே கரி பைடெனால் நியமிக்கப்பட்டதும் உள்ளடங்கும். சீனாவுடன் அமெரிக்கா அதன் வர்த்தக மற்றும் இராணுவ மோதலை விரிவாக்கி வருகின்ற நிலையில், உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் உட்பட நடைமுறையளவில் ஒவ்வொரு அரசு அமைப்பின் அதிகாரிகளையும் மற்றும் முக்கிய அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைவர்களையும் உள்ளடக்கி உள்ள இந்த அமைப்புக்கு “ஏற்றுமதி விரிவாக்கத்திற்கான' பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னரைவிட அதிக தியாகத்திற்கான கோரிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கேட்டர்பில்லர் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட ஆறு ஆண்டுகால ஒப்பந்தம் இருக்கும் காலம் நெடுகிலும் 7,000 தொழிலாளர்களின் நிஜமான சம்பளங்களில் 20 சதவீத குறைப்பு அல்லது கூடுதல் குறைப்பை அது அர்த்தப்படுத்தும் என்கின்ற நிலையில், UAW அந்த ஒப்பந்தத்தை முன்நகர்த்த முயன்று வருகின்ற வேளையில் இந்தத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி ஆலையான டானா நிறுவனத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்கள் பாரியளவில் வேலைநீக்கம் செய்யப்பட்டதன் மீது ஒரு வெடிப்பார்ந்த கோபத்தையும் UAW முகங்கொடுத்து வருகிறது.

UAW தொழிலாளர்களிடையேயும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளிடையேயும் இந்தாண்டு மிகப் பெரும் வர்க்கப் போராட்டங்களைக் காணும்.  அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள 170,000 க்கும் அதிகமான ஜிஎம் ஆலை, ஃபோர்டு ஆலை மற்றும் ஸ்டெல்லென்டிஸ் ஆலை தொழிலாளர்களும் இதில் உள்ளடங்குவார்கள்.

ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் ஒரு வலையமைப்பை கட்டியெழுப்புவதன் மூலம் ஆலைத் தளத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை UAW எந்திரத்திடம் இருந்து தொழிலாளர்களுக்குக் கைமாற்ற வேண்டும் என்பதே மேக் ட்ரக்ஸ் தொழிலாளர் வில் லெஹ்மனின் பிரச்சாரம் முன்னிறுத்திய முக்கிய பிரச்சனையாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான ஒரு சோசலிச போராளியாக போட்டியிட்ட லெஹ்மன் அமெரிக்கா எங்கிலுமான தொழிலாளர்களிடம் இருந்து அண்மித்து 5,000 வாக்குகள் பெற்றார். சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் (IWA-RFC) கட்டியெழுப்பி விரிவாக்குவதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

Loading