பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஹுவாரா தாக்குதல் இஸ்ரேலில் நெதன்யாகு எதிர்ப்பு போராட்டங்களை தூண்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள், பிப்ரவரி 26 அன்று ஹுவாரா நகரத்தில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியக் குடியேற்றக்காரர்கள் நடத்திய படுகொலை போன்ற வெறியாட்டம் என்பன இஸ்ரேலிய துருப்புக்கள் ஒரு பரந்த இனச் சுத்திகரிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்துகின்றன.

இது சியோனிச குடியேற்றக்காரர்களால் முதலில் நடத்தப்பட்டு, பின்னர் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் (IDF) பாதுகாப்பின் கீழ் தொடர்கிறது. மேலும், பாசிச, இனவெறிமிக்க மற்றும் தீவிர மதவாதக் கட்சிகளை உள்ளடக்கிய புதிதாக நிறுவப்பட்டதான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தால் அரசியல் ரீதியாக வழிநடத்தப்படுகிறது. யூத மேலாதிக்கத்தை அரசின் சட்ட அடித்தளமாக உள்ளடக்கிய ‘தேசிய-அரசு சட்டத்தில்’ பொதிந்துள்ள பாலஸ்தீனியப் பகுதிகளை இணைத்து, நிறவெறி ஆட்சியைச் செயல்படுத்துவதே அவர்களின் அறிவிக்கப்பட்ட நோக்கமாகும்.  

ஹுவாராவைத் தாக்கிய குண்டர் படையொன்று, குடியிருப்பாளர்களை உலோகக் கம்பிகள் மற்றும் பாறைகளால் அடித்து, ஒருவரைக் கொலை செய்து மற்றும் 400 பேரைக் காயப்படுத்தியது. மேலும் டசின் கணக்கான வீடுகள், கடைகள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்களை நான்கு நாள் வன்முறை வெறியாட்டத்தில் இந்தக் கும்பல் எரித்தது. அவர்கள் வடக்கு மேற்குக் கரையில் உள்ள புரின் மற்றும் ஐன்பஸ் மீதும் தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும் மேற்குக் கரையின் ஒரு பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் இராணுவப் படை தலைமையகத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் பயணிக்க வேண்டிய தொலைவில் உள்ள பகுதிகளாகும். ஆனால் வன்முறைத் தாக்குதல் நடந்தபோது இஸ்ரேலியப் படையினர் அங்கு நின்று கொண்டிருந்தனர். ஒரு அரசாங்க அமைச்சர் கூட இந்த அக்கிரமத்தைக் கண்டிக்கவில்லை. 10 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.   

பெப்ரவரி 27, 2023, திங்கட்கிழமை அன்று, மேற்குக் கரை நகரமான நாப்லஸூக்கு அருகிலுள்ள ஹவாரா நகரில், ஒரு பாலஸ்தீனியர் குவிக்கப்பட்ட பழுதடைந்த எரிந்த கார்களுக்கு இடையே நடந்து செல்கிறார் [AP Photo/Ohad Zwigenberg]

தேசிய பாதுகாப்பு அமைச்சரும் யூத சக்தியின் பாசிச தலைவருமான இதாமர் பென்-க்விர், “இஸ்ரேல் அரசாங்கம், இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) ஆகியோர் தான் நமது எதிரிகளை நசுக்க வேண்டுமே தவிர,” குடியேறியவர்கள் அல்ல என்று அறிவித்தார். மேற்குக் கரையில் குடியேற்றங்களுக்குப் பொறுப்பாளியாகவுள்ள நிதி அமைச்சரும், மத சியோனிசத்தின் தலைவருமான பெசலெல் ஸ்மோட்ரிச், புதன்கிழமை அன்று, 1948-49 இல் சியோனிச ஆயுதக் குழுக்களால் 700,000 க்கும் அதிகமானோர் விரட்டியடிக்கப்பட்ட போது பாலஸ்தீனியர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரத்திற்கு சமமான ஒரு கோரிக்கையாக, ஹுவாராவை இஸ்ரேல் ‘அழிக்க வேண்டும்’ என்று கூறினார்.

நகரின் கடைகள் இப்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற கடைக்காரர்களை கடைகளை மூடி வைத்திருக்க இஸ்ரேல் படைகள்  உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது. சியோனிச குடியேற்றவாசிகள் தங்கள் வெறித்தனத்தை மீண்டும் நடத்த நகருக்கு திரும்புவோம் என்று சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுத்துள்ளனர். இராணுவம் அதன் எதிரிகளை ‘நசுக்க வேண்டும்’ என்று கோரி அவர்கள் அப்பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் ஒன்று, “இன்டிபாடா இங்கே உள்ளது. நாங்கள் நசுக்க கோருகிறோம்! நாங்கள் போர் மூலம் பதிலளிக்க கோருகிறோம்!” என்று தெரிவித்தது. 

நேற்று, இஸ்ரேலியப் படைகள் பெய்ட் லாமின் தென்கிழக்கே உம் சைட் பகுதியைத் தாக்கி, பாலஸ்தீனிய மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இது கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்றும், இஸ்ரேலிய அதிகாரிகள் அதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஜனவரி 23 அன்று, படையினர் பாலஸ்தீனிய நகரமான இசாவியே மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள கான் அல்-அஹ்மர் சமூகத்தை தாக்கினர், அங்கு அவர்கள் ஒரு பசுமை இல்லத்தை இடித்தார்கள். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (OHCHR), பாலஸ்தீனிய கட்டிடங்களை இஸ்ரேல் முறையாகவும் தன்னிச்சையாகவும் இடிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முக்கிய நாடுகளுக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 38 மேற்குக் கரை சமூகங்களில் உள்ள 34 குடியிருப்புகள் மற்றும் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்ட 15 கட்டமைப்புகள் உட்பட 132 பாலஸ்தீனிய கட்டிடங்களை இஸ்ரேல் இடித்துள்ளது. இது 2022 இல் 135 சதவீதம் அதிகரித்துள்ளது.   

பென்-க்விர், மார்ச் 23 அன்று தொடங்கவிருக்கும் ரமழானின் போது பாலஸ்தீனிய வீடுகளை இடிப்பதைத் தொடர வேண்டும் என்று கோரினார், கடந்த கால நடைமுறையை விஞ்சும் வகையில், மேலும் பதட்டங்களைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கிறது. 2021 இல் ரமலான் சமயத்தில் கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஜர்ரா சுற்றுப்புறத்தில் உள்ள குடும்பங்களை வெளியேற்ற முயற்சி செய்யப்பட்டதானது, காசாவைக் கட்டுப்படுத்தும் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்துடன் இணைந்த குழுவான ஹமாஸ் ராக்கெட்டுகளை ஏவியதற்கும், காசா மீது இஸ்ரேல் குண்டு வீசியதற்கும், மற்றும் அந்த ஆண்டு மே மாதம் இஸ்ரேலின் பாலஸ்தீனிய-யூதக் கலப்பு நகரங்களில் நடந்த கலவரங்களுக்கும் இது ஒரு காரணியாக இருந்தது. 

இஸ்ரேலின் அதிகரித்து வரும் வன்முறையும் குற்றச் செயல்களும் 2023 இல் இதுவரை குறைந்தது 67 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. அதாவது நாளொன்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள். கடந்த ஆண்டில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் குறைந்தது 171 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை விட இது மிகவும் அதிகமாகும். இது 2005 க்குப் பிந்தைய அதிக இறப்பு எண்ணிக்கையாகும். ரமலான் மற்றும் பஸ்கா பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளை மட்டுமல்லாது, இஸ்ரேலையும் அதன் அண்டை நாடுகளையும் சூழ்ந்து கொள்ளும் அச்சுறுத்தலை உருவாக்கும் வன்முறையான கொந்தளிப்புக்கு அது களம் அமைக்கிறது. 

அதிகரித்து வரும் இந்த அச்சுறுத்தலானது, வீதிகளில் இறங்கிப் போராடும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. இஸ்ரேலின் வணிகத் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமான டெல் அவிவில் சுமார் 160,000 பேர் பேரணி ஒன்றை நடத்தினர். ஜெருசலேம், ஹெர்ஸ்லியா, நெதன்யா, பீர்ஷெபா, ஹைபா, அஷ்டோத் மற்றும் பல நகரங்களில் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களில் இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றனர். ஒழுங்கமைப்பாளர்கள் அங்கு 400,000 எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஒன்று கூடியதாகக் கூறியுள்ளனர்.

நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைக்கும் நெதன்யாகுவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் எதிர்ப்பின் கவனத்தை மட்டுப்படுத்த ஏற்பாட்டாளர்கள் முற்பட்டதால் இது மிகவும் முக்கியமானது. இந்த பேரணிகளில், முன்னாள் தளபதிகள், உளவுத்துறை தலைவர்கள் மற்றும் அரசாங்க அமைச்சர்கள் தான் முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர், அதாவது நஃப்தலி பென்னட், யாயிர் லாபிட் மற்றும் பென்னி காண்ட்ஸ் தலைமையிலான தவறாக பெயரிடப்பட்ட ‘மாற்ற அரசாங்கத்தின்’ உறுப்பினர்கள், கடந்த காலத்தில் நெதன்யாகுவின் கீழ் பணியாற்றியவர்களாவர். மேலும் அவருடன் சில குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடுகளை அவர்கள் கொண்டுள்ளனர். 

பெருகி வரும் சமூக சமத்துவமின்மை, வறுமை, மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான மோசமான ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர் அல்லது குறைத்து மதிப்பிட்டுள்ளனர். அவர்களின் ஒரே கவலை இஸ்ரேலிய அரசை செல்வந்ததட்டினரின்  நலன்களுக்காக பாதுகாப்பதாகும். 

ஹுவாராவில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் நடத்திய சோதனையின் போது இராணுவமும் எல்லைப் பொலிசாரும் கையாண்ட அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாக, காவல் ஆணையர் கோபி ஷப்தாய் 1,000 பொலிஸ் அதிகாரிகளை, குறிப்பாக டெல் அவிவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்படுத்தினார். சமீபத்திய ஆண்டுகளில் ஆர்ப்பாட்டங்களில் எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ள நகரின் பிரதான நெடுஞ்சாலையான அயலோன் நெடுஞ்சாலை முற்றுகையிடப்படுவதைத் தடுக்க அவர் உறுதியாக இருந்தார். 

கடந்த புதன் கிழமை 'தேசிய இடையூறு தினம்' வரை காவல்துறை பேரணிகளில் தலையிடுவதை பெருமளவில் தவிர்த்து வந்தது. அவர்களின் தலையீடு பென்-க்விரின் ஆத்திரமூட்டும் கோரிக்கையைத் தொடர்ந்து, பொலிஸ் தலைமை அதிகாரி எதிர்ப்பாளர்களை 'அராஜகவாதிகள்' என்று முத்திரை குத்தி 'ஒழுங்குக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்து' நிறுத்தினார். 

அயலோன் நெடுஞ்சாலை வழிகளில் இருந்த தடைகளை உடைத்து போக்குவரத்தை நிறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக டெல் அவிவ் அதிகாரிகள், பொலிஸ், சிறப்புப் படைகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை நிலைநிறுத்தியதன் பின்னர் சனிக்கிழமை இரண்டாவது வன்முறை வெடித்தது. அவர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளிடம், ‘அவமானம்!’ என்றும், ‘ஹவாராவில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ என்றும் கோஷமிட்டனர். பேரணிகளைத் தொடர்ந்து, பென்-க்விர், எவரிடமும் மன்னிப்பு கேட்கும் எண்ணம் தனக்கில்லை, அதிலும் ‘டெல் அவிவ் நகரத்தை தீயில் மூழ்கடிக்க முயலும் அராஜகவாதிகளிடம் நிச்சயமாக இல்லை’ என்று கூறினார்.

மார்ச் 9, வியாழனன்று, நாடு முழுவதும் மற்றொரு ‘இடையூறு நாள்’ நடத்தப் போவதாக ஆர்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்தனர். 

ஆனால், இஸ்ரேலியத் தொழிலாளர்கள், தேசியவாதத்தை நிராகரித்து, பாலஸ்தீனியர்களுடன் நேரடியாகத் தங்களை இணைத்துக் கொள்ளாமல், சர்வாதிகாரத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்களை நிறுத்துவது அல்லது பாலஸ்தீனியர்களுடனான முழுமையான போரைத் தடுப்பது என்பது சாத்தியமற்றதாகும். அதாவது இது, இஸ்ரேலியத் தொழிலாளர்கள், பாலஸ்தீனிய மக்களின் இனச் சுத்திகரிப்பு அடிப்படையிலான யூத அரசின் சியோனிச திட்டத்தை நிராகரிப்பதையும் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையையும் மற்றும் அது அடிப்படையாகக் கொண்டுள்ள தேசிய-அரசு கட்டமைப்பையும் தூக்கியெறிவதற்கு அவர்களது அரபு வர்க்க சகோதர சகோதரிகளுடன் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதையும் குறிக்கிறது. மேலும், முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பொருளாதாரத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்கு அதன் பரந்த வளங்களை அதன் ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த முடியும்.

அத்தகைய முன்னோக்கானது, தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அரேபிய ஆட்சிகளின் ஏதேனும் ஒரு கூட்டணிக்கு அணிபணிய வைக்க உழைக்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகப் போராடுவதாக இருக்க வேண்டும். இதன் பொருள், இந்தப் போராட்டத்தை வழிநடத்தவும் ஒழுங்கமைக்கவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளை இஸ்ரேல்/பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் கட்டியெழுப்புவது அவசியமாகும். 

Loading