சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் பெருகிவரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவின் வருடாந்திர தேசிய மக்கள் காங்கிரஸ் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளை முறையாக நியமித்து, கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் திறக்கப்பட்ட சட்டத்தை இயற்றியது. இது ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நடைமுறையில் இருக்கும்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆக்கிரமிப்பு மோதல்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்கள், பொருளாதாரத்தில் நிகழும் தீவிர மந்தநிலை மற்றும் அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான அரசாங்கத்தின் குற்றவியல் முடிவால் தீவிரமடைந்துள்ள பெருகிவரும் சமூக பதட்டங்கள் என அனைத்து முனைகளிலும் அரசாங்கம் எதிர்கொள்ளும் மோசமான நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகவும் நிர்வகிக்கப்பட்ட விவகாரம் நடைபெறுகிறது.

மார்ச் 7, 2023, செவ்வாய்க்கிழமை, பெய்ஜிங்கில் உள்ள மக்களின் பெரும் அரங்கில் நடக்கும் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) ஒரு அமர்வில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார். [AP Photo/Ng Han Guan]

இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்றாவது முறை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும், அவர் தனது நெருங்கிய ஆதரவாளர்களை உயர் பதவிகளிலும் தலைமை அமைப்புகளிலும் நியமிப்பதன் மூலம் தனது அதிகாரத்தின் பிடியை இன்னும் உறுதிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லீ கெகியாங் இரண்டு முறை பிரதமர் பதவி வகித்து பின்னர் ஓய்வு பெறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஜி இன் முன்னாள் தலைமைத் தளபதி லி கியாங் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் முடக்கத்தின் போது ஷாங்காயில் கட்சியின் செயலாளராக இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) பொதுச் செயலாளராக ஜி மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டமை, 1980 களில் இருந்து நடைமுறையில் இருந்த இரண்டு-முறை அதிகாரத்தில் இருக்கும் முறையை உடைத்தது. அவர் இப்போது கட்சியின் தவிர்க்க முடியாத ‘உள்ளகமாக’ குறிப்பிடப்படுகிறார். மேலும் அவரது தெளிவற்ற பொதுவான ‘சிந்தனை’ ஆனது சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்திற்கு வழிகாட்டியாக அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் முடிவில் ஜி மீண்டும் அரசுத் தலைவராக நியமிக்கப்படுவது உறுதியானது.

எவ்வாறாயினும், ஜி கட்சியின் பலமானவராக வெளிப்படுவது, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் பலத்தின் அடையாளம் அல்ல, மாறாக சீன முதலாளித்துவத்தின் பரந்த நெருக்கடியால் உருவாக்கப்பட்ட தீவிரமான உட்பிளவுகளுக்கு மத்தியில் கட்சியை ஒன்றுபடுத்தி வைப்பதன் அவசியத்தின் அறிகுறியாகும். காங்கிரஸின் முதல் நாளில் லீ கெகியாங் நாட்டின் பிரதமராக முன்வைத்த பணி அறிக்கையும், திங்களன்று தனியார் வணிக பிரதிநிதிகளுடனான மூடிய அறை கூட்டத்தில் ஜி ஆற்றிய உரையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பெரும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டின.

அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்தபடி, ஜி வழமையான சலித்துப்போன குறிப்புகளை ஒதுக்கி, குறிப்பாக சீனப் பொருளாதாரத்தை அமெரிக்கா வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். “கடந்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் நம்மை அனைத்து வழிகளிலும் அடக்கி ஒடுக்கியுள்ளன. இது நமது வளர்ச்சிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சவால்களை நம் முன் கொண்டு வந்துள்ளது,” என்று அவர் அறிவித்தார்.

ட்ரம்பின் கீழ் சீனா மீது விதிக்கப்பட்ட பாரிய வர்த்தகத் தடைகளை பைடென் நிர்வாகம் பராமரிப்பதோடல்லாமல், அதிநவீன கணினி சில்லுகளையும் (chips) மற்றும் அவற்றின் உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்களையும் சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் தொடர்ச்சியான தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சீனாவை தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாகக் கருதும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது, உயர் தொழில்நுட்பத் துறைகளில் போட்டியிடும் சீனாவின் திறனை முடக்குவதில் உறுதியாக உள்ளது.

“கடுமையான சர்வதேச போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், புதிய வளர்ச்சி இயக்கிகளையும் புதிய பலங்களையும் வளர்ப்பதற்கு, சீனா இறுதியில் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகளையும் தான் நம்பியிருக்க வேண்டும்” என்று ஜி கூறினார். ‘அசல் மற்றும் முன்னோடி ஆராய்ச்சிக்கு’ ஆதரவளிக்க தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

லி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுத்தார். அதிலும் குறிப்பாக, சீனா மேம்பட்ட குறைக்கடத்திகளை (semiconductors) உற்பத்தி செய்ய முடிவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அரசின் செலவு இரட்டிப்பாக்கப்படும் என்றார். நாட்டின் மிகப்பெரிய நினைவக சில்லு தயாரிப்பாளரான Yangtze Memory Technologies நிறுவனத்தில் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக முதலீடு செய்ய அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி,அபிவிருத்தி செலவினங்களை வரி விதிக்கக்கூடிய வருமானங்களிலிருந்து குறைக்க முடியும் என்றும் கூறினார்.

2023 ஆம் ஆண்டிற்கான சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இலக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ‘சுமார் 5.5 சதவிகிதத்தில்’ இருந்து ‘சுமார் 5 சதவிகிதமாக’ குறைந்திருக்கும் என்று லி கூறினார்.  நிர்ணயிக்கப்பட்ட ‘இலக்குகள்’ நம்பமுடியாத துல்லியத்துடன் எட்டப்பட்ட முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், 2022 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக இருந்தது. கோவிட் தொற்றுநோய் முதன்முதலாக தாக்கத்தை ஏற்படுத்திய 2020 இல் பொருளாதார வளர்ச்சி வெறும் 2.2 சதவீதமாக குறைந்தது தவிர்த்து, 1976 க்குப் பிறகு இப்போதைய இந்த வளர்ச்சி விகிதம் மிக குறைவானதாகும். 

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியானது, வேலைவாய்ப்பையும் சமூக ஸ்திரத்தன்மையையும் பராமரிக்க 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை இன்றியமையாததாகக் கருதுகிறது. லியின் கூற்றுப்படி, நகர்ப்புற வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக நிலைப்பெற்றுள்ளது மற்றும் அரசாங்கம் 12 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்க முயன்று வருகிறது. எவ்வாறாயினும், 16-24 வயதுடைய இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதம் 2022 இல் 20 சதவிகிதத்தை எட்டியது. மேலும் இது டிசம்பரில் 16.7 சதவிகிதமாக ஓரளவு குறைந்துள்ளது. அதேவேளை, கிராமப்புறங்களில் நிலவும் வேலையின்மை மற்றும் குறைவான வேலைகள் குறித்து புள்ளிவிபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 

அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் குறித்து தெளிவாக அக்கறை கொண்ட லி, கடந்த ஆண்டு 4.7 சதவீதமாக இருந்த பொதுப் பாதுகாப்பு செலவானது 2023 இல் 6.4 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார். அதே நேரத்தில், உள் பாதுகாப்பு எந்திரத்தின் மீதான அதிக மத்திய கட்டுப்பாட்டை மாற்றியமைக்கவும் செயல்படுத்தவும் ஜி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் பெரும் அழுத்தத்தின் கீழ் டிசம்பரில் அரசாங்கம் முற்றிலும் நீக்கிய சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை பற்றி லியின் பணி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக, சீனா தொற்றுநோய் விடயத்தில் வெற்றி பெற்றதாக புகழ்ந்துரைத்தாரே ஒழிய, அரசாங்கம் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததால் நிகழ்ந்த பெரும் மனித விலை கொடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 

உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, சீன அரசாங்கமும், சீனாவில் பொது சுகாதார நடவடிக்கைகள் திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடந்த மூன்று மாதங்களில் சீனாவை கடுமையாகத் தாக்கிய தொற்றுநோய்களின் பாரிய அலைகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது.  அங்கு உத்தியோபூர்வ கோவிட் இறப்பு எண்ணிக்கை 87,000 ஆகும். ஆனால் தொற்றுநோயியல் நிபுணர்களின் பல்வேறு மதிப்பீடுகள் உண்மையான இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியன் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் என்கின்றன.  தொற்றுநோய் தடையின்றி பரவட்டும் கொலைவெறிக் கொள்கையானது மருத்துவமனை அமைப்பில் கடும் நெருக்கடியை உருவாக்கியதோடு, நெடுங்கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அறிய முடியாதளவிற்கு அது வழிவகுத்தது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் இணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில் பெருநிறுவன இலாபங்களுக்காக மனித உயிர்களை தியாகம் செய்துள்ளது. இது பெரும் கடன் சுமையில் உள்ளது, குறிப்பாக உள்ளூர் அரசாங்கங்களால் 9 பில்லியன் டாலர்கள் வரை சேர்க்கப்பட்ட கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக வணிகத்தால் மொத்தமாக உயர்த்தப்பட்ட பலவீனமான நில,கட்டிட தொடர்புடைய அபாயங்களாலும் இது பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரம்பற்ற பகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வெளிநாட்டு முதலீட்டு சட்டத்தில் மாற்றங்களை லி முன்னறிவித்தார். எவ்வாறாயினும், சீனாவுடனான அமெரிக்க மோதல் வேகமாக உக்கிரமடைந்து வருவதானது, முதலீட்டை ஊக்குவிக்க பெய்ஜிங் வழங்கக்கூடிய எந்தவொரு ஊக்கத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அமெரிக்கா சீனா மீது பெரும் பொருளாதார அபராதங்களை சுமத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் அதன் இராணுவக் கட்டமைப்பையும் போர் தயாரிப்புகளையும் வேகமாக அதிகரித்து வருகிறது. பைடெனின் கீழ், அமெரிக்காவானது, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடன் ஒரு அரை-இராணுவ கூட்டணியான நாற்கர பாதுகாப்பு உரையாடலை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. மேலும், அது ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுடன் AUKUS உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பென்டகனின் மிகப்பெரிய அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைக்கு கூடுதல் நிதியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அப்பிராந்தியம் முழுவதுமாக தளங்களை அமைக்கும் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறது.

ட்ரம்பைப் பின்பற்றி, பைடென் பொறுப்பற்ற முறையில் ஆசியாவின் விவாதத்திற்குரிய மிகுந்த போர் வெடிப்புப் புள்ளியாகவுள்ள தைவானில், 1979 முதல் அமெரிக்க-சீனா உறவுகளை ஆளும் ஒரே சீனா கொள்கையை கிட்டத்தட்ட கிழித்தெறிந்துள்ளார்.  அதாவது, இக்கொள்கையின்படி, தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவின் சட்டப்பூர்வமான ஒரே அரசாங்கமாக பெய்ஜிங்கை வாஷிங்டன் நடைமுறையில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இப்போது, வாஷிங்டன் தைபேயுடன் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபட்டு, தைவானுக்கு ஆயுதங்களின் விற்பனையை அதிகரிப்பதோடு, அங்கு அமெரிக்க இராணுவப் படையினரின் இருப்பையும் அதிகரித்துள்ளது.

பெய்ஜிங் ஒருபுறம் இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டும், மறுபுறம் அதன் சொந்த இராணுவ தயாரிப்புகளை அதிகரிப்பதன் மூலமும் பதிலடி கொடுத்துள்ளது. ஒரு சீன ஆராய்ச்சி பலூனை வெடிக்கக்கூடும் என்று கருதி அதை சுட்டு வீழ்த்திய வாஷிங்டனின் சமீபத்திய ஆத்திரமூட்டல் நடவடிக்கையானது, பதட்டங்களை தணிக்க விரும்பாமல், மீண்டும் மோதலை அதிகரிக்கும் போக்கைத்தான் அது தொடர்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும், சீனாவின் அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவதை ஊதிப் பெரிதாக்க சீன இராணுவச் செலவினங்களின் சமீபத்திய புள்ளிவிபரங்களை சாக்காக பிடித்துக் கொண்டுள்ளன. லி, கிட்டத்தட்ட கடந்த ஆண்டைப் போலவே, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் 7.2 சதவிகிதம் அதிகரிப்பதாக அறிவித்தார். ஆயினும்கூட, பல்வேறு ஆய்வாளர்கள், இது அரசாங்க செலவினங்களின் ஒட்டுமொத்த அதிகரிப்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதையும், சீனா வாங்கக்கூடிய புதிய இராணுவ உபகரணங்களின் மதிப்பை ஊகிப்பதையும் விரைவாகச் சுட்டிக்காட்டினர். உண்மையில், சீனாவின் இராணுவ வரவு செலவுத் திட்டமானது, அமெரிக்க இராணுவச் செலவினம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டு வகைகளிலும் பார்த்தால் குறைவாக உள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையின் தோற்றத்தை முன்னிறுத்துவதற்காக தேசிய மக்கள் காங்கிரஸ் கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டிலும், உள்நாட்டிடலும் அது எதிர்கொள்ளும், முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆபத்துக்களைப் பற்றி தெளிவாக அஞ்சுகிறது.

Loading