முன்னோக்கு

உலகப் போருக்கான பைடெனின் 1 ட்ரில்லியன் டாலர் வரவு செலவு திட்டக்கணக்கு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மார்ச் 9, 2023, வியாழன், பிலடெல்பியாவின் ஃபினிஷிங் டிரேட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஜனாதிபதி ஜோ பைடென் அவரது 2024 வரவு செலவு திட்டக்கணக்கைக் குறித்து உரையாற்றுகிறார். [AP Photo/Evan Vucci]

இராணுவச் செலவுகளுக்கு இதுவரை முன்மொழியப்பட்டதிலேயே மிகப் பெரிய ஒதுக்கீடுகளுடன், 2024 நிதியாண்டுக்கான அதன் வரவு செலவு திட்டக்கணக்கை வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. இது உலகப் போருக்கான 1 ட்ரில்லியன் டொலர் வரவு செலவு திட்டக்கணக்காக உள்ளது. உக்ரேனில் ரஷ்யாவுடன் சண்டையிடுவதற்கும், தூரக் கிழக்கில் சீனாவுடனான போரை நோக்கி அதன் கட்டமைப்பைத் தீவிரப்படுத்தவும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பைத் தக்கவைக்கவும் பைடென் நிர்வாகம் ஆதார வளங்களை வேண்டி நிற்கின்றது.

பென்டகனுக்கான 842 பில்லியன் டொலரை இன்னும் கூடுதலாக அதிகரிக்க சந்தேகத்திற்கிடமின்றி நாடாளுமன்றத்தில் அழுத்தமளிக்கப்படும் என்பதோடு, இதைத் தவிர, அமெரிக்க அணுஆயுத தளவாடங்களைப் பேணும் எரிசக்தித் துறைக்கு 24 பில்லியன் டாலரும், வெளியுறவுத் துறை, சிஐஏ மற்றும் பிற அமைப்புகளின் இராணுவம் சம்பந்தமான திட்டங்களுக்கு 20 பில்லியன் டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை மொத்த இராணுவச் செலவுகளை 886 பில்லியன் டாலருக்குக் கொண்டு வருகின்றன.

இவற்றுடன் உக்ரேன் போரின் உண்மையான செலவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அக்டோபர் 1 இல் தொடங்கும் 2024 நிதியாண்டுக்கு மட்டுமே 6 பில்லியன் டொலராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில், பைடென் நிர்வாகம் 6.9 பில்லியன் டொலர் கோரியது என்றாலும், 114 பில்லியன் டொலர் இப்போருக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை வைத்து பார்த்தால், மாறாக அது வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், கியேவில் உள்ள திவாலான ஆட்சிக்கான அமெரிக்க ஆதரவின் செலவு ஏதோவொரு விதத்தில் தற்போதைய அளவை விடவும் அதிகமாகலாம். இது மொத்த இராணுவ செலவினங்களை 1 ட்ரில்லியன் டொலர் மட்டத்திற்கு அதிகரிக்கலாம்.

பைடென் பதவியேற்றதில் இருந்து, அவருடைய நிர்வாகத்தின் கீழ் முழுமையான முதல் நிதியாண்டான 2022 நிதியாண்டில் 718 பில்லியன் டொலராக இருந்த பென்டகனுக்கான வரவு செலவு திட்டக்கணக்கு மட்டுமே கடந்தாண்டு 816 பில்லியன் டொலருக்கு அதிகரித்தது. நாடாளுமன்றமும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் தரகர்களும் அவர்களுடைய கருத்தைக் கூறியதும், இந்தாண்டுக்காக கோரப்பட்ட 842 பில்லியன் டொலரும் கடந்த கால 900 பில்லியன் டொலர் அளவைத் தாண்டி உயரக்கூடும். நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சியினர் ஏற்கனவே இராணுவத்திற்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாக வரவு செலவுத் திட்டத்தைக் கண்டித்துள்ளனர்.

ஒரு அங்குலம் அமெரிக்க மண்ணைக் கூட ஓர் அன்னிய எதிரிக்கு எதிராக பாதுகாக்க வேண்டிய நிலைமை இல்லாதபோது, 'பாதுகாப்புத் துறை' என்ற பெயரே முற்றிலும் தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது. மாறாக உலகம் தான் பென்டகனின் அச்சுறுத்தலில் உள்ளது. அதன் முக்கிய இலக்குகளான ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதற்காக அதன் சொந்த எல்லைகளுக்கு வெளியே உள்ள ஒவ்வொன்றுடன் ஒப்பிட்டால், உலகெங்கிலும் 700 அமெரிக்க இராணுவத் தளங்களுடன், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க அரசு உலகளவில் இராணுவ பிரசன்னமாக உள்ளது.

இந்தத் துறையின் பெயரை, உலகளாவிய அமெரிக்கப் பேரரசைப் பேணும் துறை என்றோ, அல்லது இன்னும் எளிமையாக, உலகை அழிக்கும் துறை என்றோ மாற்றிவிட வேண்டும். சுமார் 38 பில்லியன் டொலர் பென்டகன் வரவு செலவு திட்டக்கணக்கு அணுஆயுதங்களை நவீனமயமாக்குவதற்குச் செல்லும். இது உலக நாகரீகத்தை, அனேகமாக இப்புவியின் ஒட்டுமொத்த உயிர்களையுமே கூட நிர்மூலமாக்கும் அமெரிக்க அணுஆயுத தளவாடங்களுக்கான இந்தாண்டு மொத்த செலவுகளை 60 பில்லியன் டொலருக்கும் அதிகமாகக் கொண்டு செல்லும்.

வரவுசெலவுத் திட்டத்தில் 'இராணுவத்திற்கு அல்லாத' பெரும்பாலான ஒதுக்கீடுகளும் கூட உலகம் முழுவதும் போரை நடத்துவதற்கான அமெரிக்க செயல்திறனுக்கே பங்களிக்கிறது. இந்த வரவு செலவு திட்டக்கணக்கு 'நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம், வெடிமருந்துகள் உற்பத்தி, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உயிரிசார் உற்பத்தி போன்ற அமெரிக்க தொழில்துறை அடித்தளத்தின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் துறைகளில் முதலீடு ' செய்துள்ளதாக ஒரு வெள்ளை மாளிகை அறிக்கை அறிவிக்கிறது. 'நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் எதிர்கால பராமரிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய நான்கு பொது கப்பற்படை தளங்களை மேம்படுத்துவதும், மூலதனங்களை அவற்றுக்கு அதிகரிப்பதும்' கூட இதில் உள்ளடங்கும்.

கடந்த ஆண்டின் 250 பில்லியன் டொலர் CHIPS சட்டத்தின் பெரும்பகுதி, உயர் தொழில்நுட்ப ஆயுதங்களுக்கு இன்றியமையாத முக்கிய குறைகடத்தி  சில்லுகளின் (semiconductor chips) உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்காக வர்த்தகத் துறை வழியாகச் செலவிடப்பட்டன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான சீன-விரோத AUKUS உடன்படிக்கைக்கான 'வலுவான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் அடித்தளத்தை' எரிசக்தி துறை வரவு செலவு திட்டக்கணக்கு ஆதரிக்கும். திங்கட்கிழமை சான் டியாகோவில் நடைபெறும் AUKUS உச்சிமாநாட்டில், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை பைடென் வரவேற்பார்.

சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (CBP), புலம்பெயர்வு மற்றும் சுங்க அமுலாக்க அமைப்பு (ICE) ஆகியவற்றுக்கான 25 பில்லியன் டொலர், புலம்பெயர்வு சார்ந்த நீதிமன்றங்கள் மற்றும் தடுப்புக்காவல் அமைப்புகளின் பரந்த வலையமைப்பு உட்பட உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் மற்ற புலம்பெயர்வு-தடுப்பு நடவடிக்கைகளுக்கு 14.5 பில்லியன் டொலர் உள்ளடங்கலாக, பொலிஸ் ஒடுக்குமுறைக்கும் இந்த வரவு செலவு திட்டக்கணக்கில் கூடுதலாக பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்து பில்லியன் கணக்கான தொகை FBI மற்றும் பிற நீதித்துறை அமைப்புகளுக்குச் செல்வதுடன், மானியங்கள் என்ற முறையில் அவை நேரடியாக மாநில மற்றும் உள்ளாட்சி பொலிஸ் துறைகளுக்குச் செல்கின்றன.

விருப்புடை மானிய செலவுகளில் மொத்தமாக 1.7 ட்ரில்லியன் டொலர் இராணுவ வன்முறை மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறையில் உள்ளடங்குகிறது. இந்த தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி அங்கீகரிக்க வேண்டும். அதேவேளையில் சமூகப் பாதுகாப்பு திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Medicare) மற்றும் மருத்துவ உதவித் திட்டம் (Medicaid) போன்ற உரிமை திட்டங்களுக்கும் வட்டி செலுத்துவதற்கும் நிதித்துறையில் இருந்து தன்னியல்பாக தொகைகள் வெளியேறுவதை அது எதிர்க்கிறது.

பைடென் நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட இந்த வரவு செலவுத் திட்டக் கோரிக்கை, வெறுமனே ஒரு செலவினத் திட்டம் இல்லை. இது ஓர் அரசியல் முன்னோக்காகும். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு இடையே எங்கே எவ்வளவு செலவிட வேண்டும் என்பதில் என்ன தான் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவ்விரு முதலாளித்துவக் கட்சிகளும் இந்தத் திட்டக் கோரிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்க முயற்சிக்கிறது. அது இப்போது அதன் முக்கிய எதிரிகளான ரஷ்யா மற்றும் அனைத்திற்கும் மேலாக சீனாவைத் தோற்கடிப்பதில் ஒருமுகப்பட்டுள்ளது.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் பினாமிப் போர், சீனாவுடனான இன்னும் பெரிய மோதலுக்கு முன்னேற்பாடாக மட்டுமே உள்ளது. இது, 2025 க்குள் வெளிப்படையான போராக இருக்கும் என்று ஒரு உயர்மட்ட ஜெனரல் குறிப்பிட்டதைப் போல அதை நோக்கி வேகமாக இப்போது இராணுவக் கட்டமைப்பு வடிவம் எடுத்து வருகிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு பற்றிய சரமாரியான பிரச்சாரத்துடனும், சீன 'உளவு பலூன்கள்' என்று குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தின் மீது விஷமத்தனமான பிரச்சாரத்தை முடுக்கி விட்டும், சமூக ஊடக செயலியான TikTok ஐ சாமானிய அமெரிக்கர்களை உளவுபார்க்க பெய்ஜிங்கின் தீய திட்டம் என்று சித்தரித்தும், பொதுமக்களின் கருத்தை மாற்றும் முயற்சியில் பெருநிறுவன ஊடகங்கள் இந்த போர்களுக்கு மக்களின் எதிர்ப்பை ஒடுக்க அவற்றின் பாகத்தில் அனைத்தும் செய்து வருகின்றன.

அவரது வரவு செலவு திட்டக்கணக்கைப் பொதுமக்களிடம் 'விற்பதற்காக' பிரச்சார பாணியில் முதன்முறையாக களமிறங்கி உள்ள பைடென், இந்த நிகழ்வில் இராணுவச் செலவுகளைக் குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை, மாறாக சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களின் அளவை மிகப் பெரியளவில் மிகைப்படுத்தி கூறினார். இவை குடியரசுக் கட்சியினர் உடனான வரவு செலவு திட்டக்கணக்கு பேச்சுவார்த்தைகளின் போக்கில் அதிகரிக்கப்படாது மாறாக தவிர்க்கவியலாமல் குறைக்கப்படும்.

பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீதான வரிகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் மீதான ஜனரஞ்சக வாயடிப்புகளும் இவற்றுடன் சேர்ந்திருந்தன. இதெல்லாம் நாடாளுமன்றத்தில் செல்லுபடியாகாது என்பது அவருக்குத் தெரியும். 2021-2022 இல் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்றம் மூலமாக, வெள்ளை மாளிகையால் ஒரு சில நூறு பில்லியன்களைக் கூட செல்வந்தர்களுக்கான வரி உயர்வுகளில் கொண்டு வர முடியவில்லை. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை இந்த நிதியப் பிரபுத்துவத்தின் மீது 5 ட்ரில்லியன் டொலர்களுக்கு இத்தகைய வரிகளை விதிக்கும் என்று கூறுவது ஓர் அப்பட்டமான பொய்யாகும்.

உக்ரேனில் ரஷ்யாவுடனான போரை விரிவாக்குவது மற்றும் சீனாவுடனான வரவிருக்கும் போருக்குத் தயாரிப்புகளைத் தொடர்வது என்ற பைடென் வேலைத்திட்டத்தின் நிஜமான சாராம்சத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, உழைக்கும் மக்கள் விரும்பும் சமூகச் செலவினங்களை அதிகரிப்பதாகவும் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாகவும் அலங்கார ஆசைகளைக் காட்டி, பைடென் ஓர் ஏமாற்றும் சந்தை வியாபாரியைப் போல செயல்படுகிறார்.

இது தான், வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியினது கொள்கைகளின் மைய அச்சாகும். இந்தக் கட்சி உழைக்கும் மக்களுக்கான சமூக விட்டுக்கொடுப்பு கொள்கைகளுடன் எந்தவொரு உண்மையான தொடர்பையும் நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிட்டு விட்டது. முதலில் ரஷ்யாவையா அல்லது சீனாவையா எதை இலக்கில் வைப்பது என்பதே குடியரசுக் கட்சியினருடன் பைடெனுக்கு உள்ள ஒரே சச்சரவாக உள்ளது. ஆனால் இந்த பிரச்சினை இரண்டாந்தரமானது. இரண்டு கட்சிகளுமே அமெரிக்கத் தன்னலக்குழுவின் உலகளாவிய நலன்களையே பாதுகாக்கின்றன.

Loading