ஐரோப்பிய ஒன்றியம் வெடிமருந்துகளின் உற்பத்தியை அதிகரித்து, போர் பொருளாதாரத்தை ஒழுங்கமைக்கிறது 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

புதன்கிழமையன்று ஸ்டொக்ஹோமில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மந்திரிகளின் கூட்டம் ரஷ்யாவுடனான நேட்டோ போரை தீவிரப்படுத்துவதில் ஆதிக்கம் செலுத்தியது. கிழக்கு உக்ரேனில் முன்னரங்கில் இருந்த ரஷ்ய இராணுவத்தை விரட்டுவதற்கும் எதிர் தாக்குதலுக்கு செல்வதற்கும் உக்ரேனிய இராணுவத்திற்கு பாரிய அளவிலான வெடிமருந்துகளை விரைவாக வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது.

ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், பெப்ரவரி 1, 2023 புதன்கிழமை, ஜேர்மனியின் ஒகஸ்டடோர்ஃபில் உள்ள ஃபீல்ட் மார்ஷல் ரோம்மல் முகாமில் உள்ள இராணுவ டாங்கி  படைப்பிரிவு 203 க்கு விஜயம் செய்தபோது படையினருடன் பேசுகிறார் [AP Photo/Martin Meissner]

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிக்கோவ் இக்கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 4 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள 1 மில்லியன் வெடிமருந்துகளை உக்ரேனுக்கு வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனால் கியேவ் 'தன்னைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள' முடியும் என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களும் கியேவ்க்கு வெடிமருந்துகளை வழங்க ஸ்டாக்ஹோமில் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இது 'ஒரு நடைமுறை பற்றிய அடிப்படை ஒப்பந்தம்' என்று கூறினார். உக்ரேனுக்கு அதன் சொந்த கையிருப்பில் இருந்து ஆயுதங்களை வழங்குவதற்காக ஐரோப்பிய சமாதான அமைப்பு (European Peace Facility) என்று அழைக்கப்படுவதிலிருந்து சுமார் 1 பில்லியன் யூரோக்களை விடுவிக்க அவர் முதலில் முன்மொழிந்தார்.

அதே நேரத்தில், திரைக்குப் பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தயாராகி வருகின்றன. 'உக்ரேனுக்கு உதவ, ஐரோப்பிய ஒன்றியம் புதிய பணத்தை விரைவாக கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்குர் கூறினார். கூட்டத்திற்குப் பிறகு, ஸ்வீடன் பாதுகாப்பு அமைச்சர் பௌல் ஜோன்சன், 'உக்ரேனின் வெடிமருந்துக்கான கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் விரைவாக செயல்படுவோம்' என்று உறுதியளித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், வெடிமருந்துகளின் உற்பத்தியை பாரியளவில் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 'நேட்டோ நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தங்களை எட்டியுள்ளன,' மேலும் பல நேட்டோ நாடுகள் ஏற்கனவே 'பல்வேறு வகையான ஆயுதங்களை வாங்குவதற்கான மற்றும் ஆயுதங்களை சேமிப்பதற்காகவும் கூட்டு திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளன' என்று அவர் ஸ்டாக்ஹோமில் அறிவித்தார். 'ஆயுத தேவை மிகப்பெரியது மற்றும் வெடிமருந்துகளின் தற்போதைய நுகர்வு மற்றும் உற்பத்தி விகிதம் போதாதுள்ளது” எனவும் அவர் கூறினார்.

அறிக்கைகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் 155 மிமீ பீரங்கி குண்டுகள் சுமார் 300,000 தயாரிக்கப்படுகின்றன. அதாவது இது மூன்று மாதங்களுக்குள் உக்ரேனிய இராணுவம் பயன்படுத்தும் அளவாகும். அதன் தேவையை பூர்த்தி செய்யவும், தங்கள் சொந்த இருப்புகளை நிரப்பவும், ரஷ்யாவிற்கு எதிரான நீண்ட மற்றும் விரிவான போருக்கு தயாராகவும், ஐரோப்பிய அரசுகள் உண்மையான போர் பொருளாதாரத்தை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த இலக்கு ஸ்டாக்ஹோமில் வெளிப்படையாக வகுக்கப்பட்டது. உற்பத்தித்திறனை அதிகரிக்க, ஆயுதத் தொழில் 'போர் பொருளாதார முறைக்கு' மாற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி பிரெட்டன் கோரினார். ஜோசப் பொரெல், தான் அவ்வாறு கூறுவதற்கு வருந்துவதாகவும், ஆனால் 'போர் மனப்பான்மை' தேவை என்றும் அவர் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 'போர் காலங்களில்' இருக்கிறோம் என்றார்.

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் (சமூக ஜனநாயககட்சி) 'போர் பொருளாதாரம் என்ற கருத்தை அவர் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவில்லை' என்று தொடங்கினார். ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும் 'போரில் இல்லை' மற்றும் 'போர் பொருளாதாரம்' என்பது 'ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்திக்கு எல்லாவற்றையும் நாங்கள் கீழ்ப்படுத்துகிறோம்' என்று பொருள்படும் என்றார்.

உண்மையில், அதுதான் நடக்கிறது. பிஸ்டோரியஸ் ஸ்டாக்ஹோமில் தனது மேலதிக கருத்துக்களில் இதைப் பற்றி எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. மற்றவற்றுடன், வெடிமருந்துகளின் உற்பத்தியின் வேகத்தில் பாதுகாப்புத் தொழிலுக்கு மானியம் வழங்குவது 'மதிப்புக்குரியது' என்று அவர் அழைத்தார். 'உண்மையில், ஆயுதத் தொழிற்துறை உண்மையான பணம் சம்பாதிக்கிறது, அது கொடூரமானது, ஆனால் போர் காலங்களில் அது போலவே, தேவை உயர்கிறது, பின்னர் விற்பனையும் உயரும்,' என்று அவர் இழிந்த முறையில் விளக்கினார். அதனால்தான் 'இப்போது நாம் நெகிழ்வாக செயல்படுவது மிகவும் முக்கியமானது' என்று கூறினார்.

குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவில் பாரிய மறுஆயுதமாக்கல் மற்றும் ஒரு போர் பொருளாதார மாற்றத்துக்கு உந்துகிறது. ஜேர்மன் வெளியுறவுக் கொள்கைக்கான 'புதிய சகாப்தம்' என்று அறிவித்ததன் முதல் ஆண்டு நிறைவையொட்டி, அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கடந்த வியாழன் அன்று ஜேர்மன் நாடாளுமன்றத்தில், தானும் பிஸ்டோரியஸும் தற்போது பாதுகாப்புத் துறையுடன் 'ஒரு உண்மையான பாதை மாற்றம் பற்றி பேசுகிறோம்' என்று தனது அரசாங்க அறிக்கையில் தெரிவித்தார். ஜேர்மன் இராணுவம் மற்றும் பிற ஐரோப்பியப் படைகளுக்கான ஆயுதங்களை வேகமான, யூகிக்கக்கூடிய மற்றும் திறமையான கொள்முதல் தேவை. இதற்கு 'முக்கியமான ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளின் தொடர்ச்சியான உற்பத்தி' மற்றும் 'உற்பத்தி திறனைக் கட்டியெழுப்ப நீண்ட கால ஒப்பந்தங்கள் மற்றும் முன்பணம் செலுத்துதல்' மற்றும் 'ஜேர்மனியில் ஒரு தொழில்துறை தளம்' தேவை என்று கூறினார்.

மக்களின் முதுகுக்குப் பின்னால், இந்தத் திட்டங்கள் ஆக்ரோஷமாக முன்னோக்கித் தள்ளப்படுகின்றன. கடந்த நவம்பரில், ஆயுதத் தொழில்துறையின் பிரதிநிதிகள், உற்பத்தியை அதிகரிப்பதற்கான 'ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து உச்சிமாநாட்டிற்கு' ஜேர்மன் மத்திய அரசின் தொடர்புடைய உயர் அதிகாரிகளுடன் அதிபர் மாளிகையில் சந்தித்தனர். தகவல்களின்படி, ஜேர்மனி அடுத்த சில ஆண்டுகளில் வெடிமருந்துகளுக்காக மட்டும் 20 பில்லியன் யூரோக்களை செலவிட திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு செய்வதன் மூலம், நாஜிக்களின் போர்ப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்த அதே நிறுவனங்கள், சில ஆண்டுகளுக்குள் இரண்டாம் உலகப் போருக்கு கிட்லரின் இராணுவத்தை (Wehrmacht) ஆயுதபாணியாக்கியது. அதிபர் மாளிகையில் இழிவான உச்சிமாநாட்டிற்கு சற்று முன்பு, ஜேர்மன் ஆயுத உற்பத்தியாளரான Rheinmetall அதன் ஸ்பானிய போட்டியாளரான Expal Systems ஐ 1.2 பில்லியன் யூரோக்களுக்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது. 400 மில்லியன் யூரோக்கள் ஆண்டு வருமானத்துடன், எக்ஸ்பால் சிஸ்டம்ஸ் ஐரோப்பாவின் மிகப்பெரிய வெடிமருந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

அதன்பிறகு, ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது. Rheinmetall தற்போது மத்தியதர பீரங்கி சுற்றுகள் (20 முதல் 35 மில்லிமீட்டர்கள்) என்று அழைக்கப்படும் புதிய வெடிமருந்து தயாரிப்பு நிலையத்தை வடக்கு ஜேர்மனியில் உள்ள ஒரு கிராமப்புறப் பகுதியான லூனபேர்க் ஹைட இல் உள்ள Unterlüß  தளத்தில் அமைக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, திட்டமிடப்பட்ட வருடாந்திர உற்பத்தித்திறனை இரகசியமாக வைத்திருக்கின்றனர். ஆனால் 'வெளிநாட்டு உற்பத்தி வசதிகளிலிருந்து சுயாதீனமாக ஜேர்மனியில் வெடிமருந்து விநியோகத்தை மீண்டும் அமைப்பதே குறிக்கோள்' என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஆயிரக்கணக்கான கட்டாயத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட Unterlüss தளம், ஏற்கனவே 55 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய Rheinmetall வெடிமருந்து தளமாகும். தற்போது, பெரிய அளவிலான வெடிமருந்துகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஜேர்மன் இராணுவம் உக்ரேனுக்கு வழங்கும் லியோபார்ட் டாங்கியும் தயாரிக்கப்படுகிறது. முந்தைய உற்பத்தி மட்டங்கள் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றன.

பெப்ரவரி மாத இறுதியில் பிஸ்டோரியஸ் ஆலைக்கு வருகை தந்தபோது, Rheinmetall உயர் நிர்வாகி ஆர்மின் பாப்பேர்கர், ஆயுத உற்பத்தியை இரட்டிப்பாகவும் சில சமயங்களில் குறிப்பாக Unterlüssஇல் மூன்று மடங்காகவும் அதிகரித்திருப்பதாக பெருமையாகக் கூறினார். அவர்கள் 'முழு திறனுடன்' செயல்படுகிறார்கள், மேலும் மற்றொரு வேலை அட்டவணை மாற்றத்துடன் உற்பத்தியை இன்னும் அதிகரிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார். பிஸ்டோரியஸ் ஆயுதத் தொழிலைப் பாராட்டியதுடன், அது இல்லாமல் 'புதிய சகாப்தம்' (ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கான சொற்பொழிவில்) 'சாத்தியமற்றது' என்று அறிவித்தார்.

இரண்டு உலகப் போர்களின் கொடூரமான குற்றங்களுக்குப் பிறகு அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவை தோற்கடிப்பதற்காக மூன்றாவது முயற்சியாக, ஜேர்மன் ஏகாதிபத்தியம் நேரடியாக உக்ரேனில் போர் டாங்கிகளை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. 'உக்ரேனில் பாந்தர் டாங்கிகளின்  உற்பத்திக்காக ஒரு ஆலையை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,' என்று பாப்பேர்கர் சமீபத்தில் Handelsblatt இல் அறிவித்தார். இதுவரை, யுத்த டாங்கிகள் வழங்குவதற்கான உறுதிமொழிகள் உக்ரேனின் 'தாக்கும் திறனை' அதிகரித்துள்ளன. ஆனால் அவை 'போதுமானதாக இல்லை.' 'ரஷ்யா மிகப் பெரிய இருப்புக்களைக் கொண்டுள்ளது எனவே மேலும் 'உதவி' அவசியம் என்றார்.

ஏற்கனவே ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ரஷ்ய மற்றும் உக்ரேனிய சிப்பாய்களின் உயிர்களை பலிவாங்கும் மற்றும் அணுவாயுத  விரிவாக்கம் ஏற்பட்டால் அனைத்து மனிதகுலத்தின் உயிர்வாழ்வையும் அச்சுறுத்தும் போரின் பைத்தியக்காரத்தனத்தின் விலையும் தொழிலாள வர்க்கத்தின் மீது நிதி ரீதியாக சுமத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு, ஜேர்மன் இராணுவ சிறப்பு நிதியாக 100 பில்லியன் யூரோக்கள் தீர்மானிக்கப்பட்டபோது, சுகாதாரம் மற்றும் சமூக விவகாரங்களில் பாரிய வெட்டுக்கள் இருந்தன. இப்போது பிஸ்டோரியஸ் போர் வரவுசெலவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 10 பில்லியன் யூரோக்கள் கூடுதலாகக் கோருகிறார்.

ஆனால் ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதிலும், இந்த தீவிர இராணுவவாத மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கைக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பொது சேவை ஊழியர்கள் தற்போது ஜேர்மனியில் ஒவ்வொரு நாளும் எச்சரிக்கை வேலைநிறுத்தங்களில் பங்கேற்கின்றனர். வியாழன் அன்று, 120,000 தபால் ஊழியர்கள் முழு வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்தனர். பிரான்சில், திட்டமிடப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக புதன்கிழமை பல மில்லியன் மக்கள் தெருக்களில் இறங்கினர். மேலும் கிரேக்கத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் கொடிய ரயில் விபத்துக்குப் பிறகு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில், பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளும் உருவாகி வருகின்றன.

கண்டம் முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை போராட்டத்திற்குள் தள்ளும் உணர்வுகள் பெருகிய முறையில் முதலாளித்துவ எதிர்ப்பு, இராணுவ எதிர்ப்பு மற்றும் சோசலிச எதிர்ப்பு ஆக இருக்கின்றன. இந்த இயக்கத்தை சோசலிசத்திற்கான நனவான இயக்கமாக மாற்றுவதே தீர்க்கமான பணியாகும். இதன் பொருள், போருக்கு எதிரான போராட்டத்தை அதன் மூல வேரான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பிய பிரிவுகளை தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரக் கட்சிகளாகக் கட்டியெழுப்புவது அவசியமாகும். 

Loading