அமெரிக்காவில் வர்க்க மோதலை தீவிரப்படுத்துவதில் கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் முன்னணியில் உள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில், ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தால் (UAW) மீண்டும் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் திட்டத்திற்கு எதிராக 7,000 கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் எதிர்ப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது, அவர்களின் உண்மையான ஊதியத்தை ஆறு வருட தொழிலாளர் ஒப்பந்தத்தின் காலத்தில் 20 சதவீதம்  அல்லது கூடுதலாகக் குறைக்கும்.

இந்த வாரம் இல்லினாய்ஸின் டிகாட்டூரில் நடந்த ‘தகவல் வழங்கம் கூட்டங்களின்’ போது, ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத்தின் விபரங்கள் குறித்து UAW அதிகாரிகளிடம் சவால் விடுத்தனர். ஒப்பந்தத்தின் ‘முக்கிய அம்சங்களின்’ சில பக்கங்களை மட்டும் வெளியிட்ட பிறகு, தொழிற்சங்க அதிகாரிகள் முழு ஒப்பந்த விபரத்தையும் பரவலாக விநியோகிக்க மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக, தொழிற்சங்க அரங்கில் வைத்து மட்டுமே அந்த 100 க்கும் அதிகமான பக்கங்களை தொழிலாளர்கள் வாசித்துக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளனர். 

மாபெரும் கட்டுமான மற்றும் சுரங்கத்தொழில் உபகரணங்கள் உற்பத்தியாளர்களுடனான மோதல் தான், இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள தொழில்துறை தொழிலாளர்கள் மத்தியில் உருவெடுத்த பல பெரிய போராட்டங்களில் முதன்மையானதாகும். இவை வாழ்க்கைச் செலவில் நிகழும் வலிமிகுந்த அதிகரிப்பு மற்றும் பணியிடங்களில் அதிகரித்தளவில் காணப்படும் மலிவு உழைப்பு நிலைமைகள் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன.

செவ்வாயன்று வெளியான அமெரிக்க தொழிலாளர் துறை அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களில் பல தசாப்தங்களாக உயர்ந்து வந்த பணவீக்க விகிதத்தில் பெயரளவில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, நுகர்வோர் விலைகள் ஜனவரியில் மீண்டும் உயர்ந்தன.  நுகர்வோர் விலைக் குறியீடு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஆண்டு விகிதத்தை 6.4 சதவீதமாக ஆக்கியுள்ளது. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, உண்மையான சராசரி மணிநேர வருவாய் ஜனவரியில் 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக தொழிலாளர் புள்ளியியல் அலுவலகத்தின் தனி அறிக்கை தெரிவிக்கிறது.

கேட்டர்பில்லர் போன்ற பெருநிறுவனங்கள் ஆண்டுதோறும் பில்லியன்களை இலாபமாக ஈட்டுகின்ற போதிலும், ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உண்மையான மணிநேர ஊதியங்கள் மொத்தத்தில் 1.8 சதவீதம் சரிந்துள்ளன. 

2017 கேட்டர்பில்லர்-UAW ஒப்பந்தத்திற்கு வாக்களிக்க இல்லினாய்ஸின் பியோரியாவிற்கு வரும் தொழிலாளர்கள்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளானது கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் போராடும் குணத்திற்கு எரியூட்டுகின்றன. ஒப்பந்தத்தை சிறந்ததாகக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ‘முக்கியம்சங்கள்’ UAW ஆல் விநியோகிக்கப்பட்ட போதிலும், புதிய ஒப்பந்தம் பேரழிவுகரமான ஊதிய வெட்டுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது. ஆறு ஆண்டுகளில் மொத்தம் 19 சதவீத அளவிற்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் போது, ஆண்டுக்கு 3 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வைக் குறிக்கும்.

அதே நேரத்தில், UAW ஆனது, ஆண்டுதோறும் சுகாதாரப் பாதுகாப்பு காப்பீட்டுக் கட்டணங்களை 2 சதவீதம் வரை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. 1990 களின் சமீபத்தில் நிறுவனத்தால் சுகாதாரக் காப்பீடு முழுமையாக செலுத்தப்பட்ட போதிலும், ‘தொழில்வழங்குனரால் வழங்கிய’ சுகாதாரப் பாதுகாப்பு கட்டணம் தற்போது ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 490 டாலருக்கு கூடுதல் இல்லாமல் இருந்தது உட்பட, தொழிற்சங்க அதிகாரிகளால் அது குறித்து தொடர்ச்சியாக பேரம் பேசப்பட்டது.  

கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் போராட்டம், UAW அதிகாரத்துவத்திற்கு எதிராக வளர்ந்து வரும் கிளர்ச்சியின் ஒரு பகுதியாகும். இது கடந்த இரண்டு ஆண்டுகளில், வொல்வோ டிரக்ஸ், Deere & Co., CNH மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். ஒஹியோவின் டொலிடோ நகரில் உள்ள Dana Driveline Plant இல் UAW இன் உடந்தையுடன் நிறுவனத்தால் அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் மற்றும் மலிவு உழைப்பு நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரி சாமானியத் தொழிலாளர் பாதுகாப்புக் குழுவை தொழிலாளர்கள் அங்கு உருவாக்கியுள்ள நிலையில் கூட இது நடக்கிறது. இத்தொழிற்சாலை, அருகிலுள்ள ஸ்டெல்லாண்டிஸ் ஜீப் ஆலைக்கு தேவையான அச்சுகளை உற்பத்தி செய்கிறது.

புதன்கிழமை இரவு, கேட்டர்பில்லர் தொழிலாளர்கள், அத்துடன் டானா, ஜெனரல் மோட்டார்ஸ், மாக் டிரக்ஸ் மற்றும் பிற வாகனத் தொழிலாளர்கள், CAT இல் UAW ஆல் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்கும் மற்றும் மீண்டும் போராட சாமானியத் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தை கட்டமைப்பதற்கும் கேட்டர்பில்லர் சாமானியத் தொழிலாளர் பாதுகாப்புக் குழுவும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) இணைந்து நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘இது நமக்கான காலம்’ என்று டிகாட்டூரில் உள்ள கேட்டர்பில்லர் குழுவின் உறுப்பினர் ஜோன் நிகழ்வின் முடிவில் கூறினார். மேலும், “இந்த இயக்கத்தில் சேருங்கள். இந்த 1 சதவீதம் மற்றும் 5 சதவீதம் ஊதிய உயர்வு தொடர்பாக பெருநிறுவனங்களுடன் போராடிப் போராடி நாம் சோர்வடைந்துள்ளோம் என்பதை அவர்களிடம் அழுத்தமாகக்கூறி புரிய வைப்பதற்கு இது நமக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகும். இந்த கோடீஸ்வர பெருநிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை பிழிந்தெடுப்பதற்கு மட்டும் நம் கழுத்தை தங்கள் காலடியிலிட்டு தொடர்ந்து அழுத்துகின்றன. அதே நேரத்தில் நம்மை மனிதர்களாகவும் தொழிலாளர்களாகவும் அங்கீகரிக்க மறுக்கின்றன” என்றும் கூறினார். 

கேட்டர்பில்லர் தொழிலாளர்களும் கூட சமீபத்திய நாட்களில் UAW ஒப்பந்தத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். “நான் 19 வயதிலிருந்து இங்கு வேலை செய்கிறேன், மக்கள் என்ன போராட்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்” என்று இல்லினாய்ஸின் கிழக்கு பியோரியாவில் உள்ள கேட்டர்பில்லர் தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த ஒப்பந்தத்தால், 10 ஆண்டுகளுக்கு குறைவான காலம் இங்கு பணிபுரிந்திருந்தால்  எங்களுக்கு எதுவும் கிடைக்காது. நீங்கள் 20 வருடத்தை அடைந்தாலும் கூட உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதை ஆலையில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் எங்களின் ஊக்க ஊதியத்தை எடுத்துக் கொண்டு, எங்களுக்கு அதிக நேரத்தை [கூடுதலான காலம் பணிபுரிந்தவர்களுக்கு கிடைக்கும் விடுமுறை-Paid Absence Allownce] வழங்க விரும்புகிறார்கள். ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் எங்களுக்கு 7 டாலர் கூட்டு உயர்வு மட்டுமே வழங்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “அனைத்து ஆலைகளிலும் மீள நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் கேலிக்குரியதாக இருக்கும்போது, அவர்கள் 20 வருடங்கள் பணி முதிர்வடைந்த தொழிலாளர்களுக்கு அதிக விடுமுறை அளிக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படாமல் கடந்த நான்கு ஆண்டுகளை இப்படிக் கடந்த அதிர்ஷ்டசாலிகளாக உள்ளனர். எப்படியும் அடுத்த ஒப்பந்தத்தில் அவர்கள் எங்களிடமிருந்து எதைப் பறிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஆனால் அவர்கள் தங்களின் பங்குதாரர்களுக்கு பில்லியன்களை வாரி வழங்க முடிகின்ற அதேவேளை தொழிலாளர்களிடம் அவர்கள் கடுமையாக சுரண்டித்தான் பில்லியன்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், UAW ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இந்தத் தொழிலாளர்களுக்கு தகுதியானதை பெற்றுத் தர வேண்டிய நேரம் இதுவே!” என்று கூறியுள்ளார்.

இல்லினாய்ஸின் டிகாட்டூரில் உள்ள ஒரு கேட்டர்பில்லர் தொழிலாளி, சமாளிக்க சாத்தியமில்லாத உயர் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “ஆஹா, இது மிக அதிகம். முட்டை விலை 8 டாலராகவுள்ளது. எரிவாயு ஒரே நேரத்தில் 3 முதல் 4 டாலர் வரை உயர்கிறது. குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் வாடகை மாதத்திற்கு 200-300 டாலர்களாக இருந்தது, இப்போது மாதத்திற்கு 800-900 டாலர்களாக அதிகரித்துள்ளது. கோடைக்கால மற்றும் கிறிஸ்துமஸ் கால மூடல் என்று அவர்கள் குறிப்பிடுவதற்காக நாங்கள் எங்கள் இரண்டு வார கால விடுமுறையை ஆண்டின் முதல் வாரத்தில் எடுக்கிறோம். ஆனால் CAT இல் என்னை விட நீண்ட காலம் இருந்தவர்கள் ஒவ்வொரு ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்த நேரத்தில் நாம் வேலையை இழப்பதாகவோ அல்லது வேலைத் தொடர்ச்சியிலிருந்து துண்டிக்கப்படுவதாகவோ தெரிகிறது என்று கூறுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் அதைச் கூறி முடித்த பின்னர், ஒருமுறை அவர்கள் இந்த திட்டத்திற்கு உள்ளானால் அது மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நிகழ்வது போல் தெரிகிறது. ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் பின்னரும் நாம் மிக மிகக் குறைவாகத்தான் பெறுகிறோம்.”

கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு, ஊதியம் பெறும் மற்றும் தொழிற்சங்கத்தில் உறுப்பினரல்லாத தொழிலாளர்கள் உட்பட பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியானாவின் லாபாயெட்டில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சங்கத்தில் இணையாத ஒரு அலுவலக ஊழியர், “நானும் பல அலுவலக ஊழியர்களும்  இங்கு எங்கள் ஆலையில் உள்ள UAW தொழிலாளர்களை ஆதரிக்கிறோம். மேலும் UAW மற்றும் கேட்டர்பில்லர் நிறுவனத்துடனான அவர்களின் போராட்டத்தையும் நாங்கள் ஊக்குக்கிறோம். அலுவலக ஊழியர்கள் உட்பட எங்கள் அனைவரிடமிருந்தும் பறிக்கப்பட்ட சிறந்த ஊதியம் மற்றும் பிற நலன்கள் திரும்பக் கிடைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் அனைவருக்கும் உதவுகிறார்கள் என்பதையும் நாங்கள் உணர்கிறோம். நீங்கள் செய்கின்ற அனைத்திற்கும் நன்றி. இந்த முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு ஓய்வு பெற்ற தொழிலாளி, “1980 களின் முற்பகுதியில் இருந்தே CAT ஒரு நல்ல ஒப்பந்தத்தை பெற்றதில்லை. அவர்கள் மிகப்பெரிய பெருநிறுவன கொள்ளையர்கள் ஆவர். அவர்களின் UAW தொழிலாளர்கள் ஜன்னலுக்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குப்பைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். ஓய்வு பெற்றவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஓய்வூதியத்தை திடீர் ஆய்வு செய்துள்ளார்கள். 33.7 வருட CAT சேவைக்குப் பிறகு நான் கையில் பெறும் ஓய்வூதியம் 832 டாலர் மட்டுமே ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

UAW அதிகாரத்துவமானது அதன் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட முறைகளை அப்படியே பயன்படுத்தி மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயல்கிறது: அதாவது, தொழிலாளர்களிடமிருந்து தகவல்களை மறைத்தல், ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினரை நிறுத்துதல், ஊக்க ஊதியத்திற்கு ஒப்புதல் அளிப்பதை நிராகரித்தல், தொழிலாளர்கள் முழு ஒப்பந்தத்தையும் ஆய்வு செய்து விவாதிக்கும் முன் அவசர ஒப்புதல் வாக்கெடுப்புகளை நடத்துதல் போன்ற வழமையான முறைகளை பின்பற்றி ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது. இந்த ஒப்பந்தம் தொழிலாளர்கள் பெறக்கூடிய சிறந்த ஒப்பந்தம் என்று தொழிற்சங்க அதிகாரிகள் வலியுறுத்தியதோடு, நிறுவனத்தை அச்சுறுத்துவதற்கு பதிலாக, இழுத்தடிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தத்திற்கான வாய்ப்புடன் தொழிலாளர்களை அச்சுறுத்தவும் முயன்றனர்.

UAW எந்திரம் தொழிலாளர்களை மற்றொரு தோல்விக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க மறுத்து, டிகாட்டூர், கிழக்கு பியோரியா மற்றும் பிற ஆலைகளில் உள்ள வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் குழுவானது, கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் சாமானியத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழுவை (CWRFC) தொழிலாளர்களின் அதிகாரத்தின் புதிய மையமாகவும் ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கும் அமைப்பாகவும் உருவாக்கியுள்ளனர். 

முழு ஒப்பந்த விபரமும் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும், அதைப் பற்றி விவாதிக்க பெரும் தொழிலாளர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், மேலும் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு முன் ஒப்பந்தத்தை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரும் ஒரு அறிக்கையை புதன்கிழமை அன்று குழு வெளியிட்டது. “இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், CAT தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை கொள்கை அடிப்படையில் நிராகரிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எங்கள் நலன்களை மட்டும் சார்ந்ததல்ல. மாறாக இது எங்கள் குடும்பங்கள், ஓய்வு பெற்றவர்கள், அடுத்த தலைமுறையினர் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களையும் பாதிக்கும்.”

“இலாபங்கள் மற்றும் ‘பங்குதாரர்கள் மதிப்பு,’ என்ற பெயரில் நீண்ட காலமாக நசுக்கப்பட்டு வந்துள்ள நமது உரிமைகள் மற்றும் நலன்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதை வலியுறுத்தும்,” CAT-RFC இன் கோரிக்கைகளை அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது. அதாவது, பல ஆண்டுகளாக முடக்கப்பட்ட அல்லது வீழ்ச்சியடைந்த ஊதியங்களை ஈடுசெய்யும் வகையில் 50 சதவீத ஊதிய உயர்வு வழங்குதல்; வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளை (COLA) மீட்டெடுத்தல்; எட்டு மணிநேரத்திற்கும் கூடுதலாக அல்லது வார இறுதி நாட்களில் செய்யும் வேலைக்கு ஒருமணிநேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குதல், இரண்டு அடுக்கு ஊதியம் மற்றும் நன்மைகள் முறையை உடனடியாக இரத்து செய்தல் ஆகிய கோரிக்கைகளை அறிக்கை முன்வைக்கிறது.  மேலும், குழுவானது குறைந்தபட்சம்,  ஊதியத்துடன் கூடிய இரண்டு வார கால தனிப்பட்ட விடுப்பை வழங்கவும், சொந்தமாக செலவழிக்கப்படும் மருத்துவ செலவினங்களை பாரியளவில் குறைக்கவும், முழுமையாக செலுத்தப்பட்ட ஓய்வூதியங்களை மீட்டெடுக்கவும், மற்றும் ஆறு ஆண்டு காலத்திற்கு அல்லாமல் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளது.

கேட்டர்பில்லர் தொழிலாளர்களைத் தாண்டி, பிற தொழிலாளர்களுக்கு மத்தியிலும் எதிர்க்கும் உணர்வு விரைவாக வளர்ந்து வருகிறது. 750 டெம்பிள் பல்கலைக்கழக கல்வித் தொழிலாளர்கள், உள்ளூர் அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் 92 சதவீத ஆதரவுடன் ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். எதிர்வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், நியூயோர்க் நகர போக்குவரத்து அமைப்பு, அமெரிக்க தபால் சேவை, UPS, GE Aerospace, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மூன்று பெரிய வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மேக் டிரக்ஸ் ஆகியவற்றில் உள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த காலாவதியை எதிர்கொள்கின்றனர்.

இந்த எழுச்சியானது, கடந்த பல நாட்களாக மில்லியன் கணக்கான கிரேக்க, பிரெஞ்சு மற்றும் இலங்கை தொழிலாளர்கள் நடத்தும் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை கொடுப்புக்கு தங்களை விலை செலுத்த கோருவதற்கு எதிராக இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தும் வேலைநிறுத்தங்கள் உட்பட ஒரு சர்வதேச நிகழ்போக்கின் ஒரு பகுதியாகும். 

உலகெங்கிலும் உள்ள தங்களது சகாக்களைப் போலவே, கேட்டர்பில்லர் தொழிலாளர்களும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். வேலையின்மையை அதிகரிக்கவும் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளை முறியடிக்கவும் வட்டி விகிதங்களை உயர்த்தும் பெடரல் ரிசர்வ் கொள்கையை பைடென் நிர்வாகம் ஆதரிக்கிறது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான நேரடி இராணுவ மோதலுக்கு தயாராகி வரும் நிலையில், வெள்ளை மாளிகை, தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்க UAW வையும் மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் நம்பியுள்ளது. 

பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சி மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் புதிய, தொழிலாளர் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளால் இந்தத் திட்டங்கள் கூடுதலாக நிராகரிக்கப்படுகின்றன. 

Loading