முன்னோக்கு

மூன்றாண்டுகளும், கோவிட்-19 பெருந்தொற்றால் 21 மில்லியன் இறப்புகளும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 11, 2020 இல், உலக சுகாதார அமைப்பு (WHO) உத்தியோகப்பூர்வமாக கோவிட்-19 ஐ ஒரு பெருந்தொற்றாக அறிவித்தது. அப்போது உலகம் முழுவதும் சுமார் 120,000 நோயாளிகள் இருந்தனர். 5,000 க்கும் குறைவான இறப்புகள் ஏற்பட்டிருந்தன.

இந்தப் பெருந்தொற்றின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இப்போது 6.9 மில்லியனாக உள்ளது. ஆனால் உயிரிழந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கையைப் பற்றிய சிறந்த மதிப்பீடு குறைந்தது 21 மில்லியனாகும். இது உத்தியோகப்பூர்வ எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். அதாவது, 2020 இன் தொடக்கத்தில் இந்தப் பெருந்தொற்று முதன்முதலில் தோன்றிய போதே இதைக் கட்டுப்படுத்தி இருந்தால் இன்று 21 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிருடன் இருந்திருப்பார்கள்.

இந்தப் பின்னணியில், மூன்றாண்டுகளில், இந்தக் கொரோனா வைரஸ் பெருந்தொற்று முதலாம் உலகப் போரின் மொத்த உயிரிழப்புகளை விடவும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும், 1.1 மில்லியன் உத்தியோகபூர்வ இறப்புகளும் கூடுதலாக 300,000 அதிகப்படியான இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதில் குறைந்தபட்சம் 1,705 குழந்தைகளும் உள்ளடங்குவர். ஒட்டுமொத்தமாக தனிநபர் இறப்பு விகிதம், ஒரே சீராக 1918 சளிக்காய்ச்சல் பெருந்தொற்றின் விகிதத்தை நெருங்கி வருகிறது.

இறந்தவர்களைத் தவிர, பத்து மில்லியன் கணக்கானவர்கள் நெடுங்கோவிட் (Long COVID) என்ற பெயரில் தொகுக்கப்பட்ட பரந்தளவிலான அறிகுறிகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தான், அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழ் நடத்திய ஓர் ஆய்வில், நெடுங்கோவிட் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு 'இருதயநோய் சம்பவங்களும் அனைத்து காரணங்களாலும் ஏற்படும் அதிகப்படியான மரணமும்' ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

விஞ்ஞானரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பகுத்தறிவார்ந்த சமூகத்தில், மனிதகுலம் இந்நேரம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்நோய் முடிந்து விட்டதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும். உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பானது, இந்த வைரஸைப் பரிசோதிக்கவும் மற்றும் நோயின் தடம் அறியவும், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்கவும், ஏதேனும் எதிர்பாராத நீண்டகால அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கான சிகிச்சைகளை அபிவிருத்தி செய்யவும் உலகளவில் அணிதிரள்வதின் பாகமாக இருந்திருக்கும்.

கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத விஞ்ஞான முன்னேற்றங்கள் முழுவீச்சில் கொண்டு வரப்பட்டு, புதிய உயிராபத்தான இந்த நோய்கிருமி அகற்றப்பட்டு இறுதியில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் முதலாளித்துவத்தின் கீழ், ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின் புள்ளிவிபர அறிவிப்புகள் நிறுத்தப்பட்டதில், இந்த நினைவாண்டு குறிக்கப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில், இந்தக் கண்காணிப்பு நிறுவனம் நோயாளிகள், மரணங்கள், மற்றும் கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான பிற புள்ளிவிபரங்களைக் கண்காணிப்பதில் ஒரு ஆதாரக்கல்லாக சேவையாற்றி உள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் அதன் வெளியீடுகளை நிறுத்துவதற்கான காரணத்தில், புள்ளிவிபரங்கள் வழங்குவதை அமெரிக்க மாநிலங்கள் நிறுத்தி விட்டதாக கூறியுள்ளது. இன்னும் முன்னோக்கி பார்த்தால், ஜோன்ஸ் ஹாப்கின்ஸை நம்பி இருந்தவர்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்று பரவல் குறித்து இப்போது இன்றியமையாத விதத்தில் கண்கட்டப்பட்டவர்களாக உள்ளனர்.

மிக முக்கியமாக, முதலாளித்துவ அரசாங்கங்களின் முன்னோக்கில் இருந்து, அதுவும் குறிப்பாக பைடென் நிர்வாகத்தின் முன்னோக்கில் இருந்து, ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் புள்ளிவிபர கண்காணிப்பு நிறுத்தப்பட்டமை இந்தப் பெருந்தொற்று முடிந்துவிட்டதாகக் கூறும் ஒரு கொள்கையின் பாகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 பேரும், சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கானவர்களும் இறந்து கொண்டிருந்தாலும் கூட, ஊடகங்களிலோ இந்த நோய் குறித்து எந்தச் செய்தியும் இல்லை.

அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக மக்களை நம்ப வைக்கும் முயற்சியால், பைடெனின் பதவிக்காலம் குணாம்சப்படுகிறது. அவர் பதவி காலத்தில், முகக்கவசம் அணிதல் உட்பட எஞ்சியிருந்த எல்லா தணிப்பு நடவடிக்கைகளையும் அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் எல்லா நடவடிக்கைகளும் உலகெங்கிலும் கைவிடப்படுவதற்கு அமெரிக்கா வழி வகுத்தது.

நவம்பர் 2021 இல் ஓமிக்ரான் அலை ஆரம்பித்த போது இந்த செயல்முறை அதன் புதிய உச்சங்களை எட்டியது. அப்போது அந்த வகை 'மிதமானது' என்று அறிவிக்கப்பட்டு, அந்நோய் பரவலைத் தடுப்பதற்கான கொள்கைகள் பற்றிய எல்லா பாசாங்குத்தனங்களும் கூட கைவிடப்பட்டன. பெருந்தொற்று தொடர்ந்து பரவுவதற்கான காரணத்தை, பைடென் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது சுமத்தினார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவரும் 'கடுமையான நோய் பாதிப்பு மற்றும் மரணத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு' இருப்பதாக அவர் வாதிட்டார்.

Politico பத்திரிகையின் வார்த்தைகளில் கூறினால், புள்ளிவிபரங்களை மறைப்பதன் மூலம் நிரந்தரமாக பரந்த நோய்தொற்றை ஏற்குமாறு 'அமெரிக்கர்களை நிர்பந்திப்பதை' நோக்கமாக கொண்ட ஒரு பிரச்சாரத்தை வெள்ளை மாளிகை தொடங்கி இருந்தது. பரிசோதனையின் அளவைக் குறைக்குமாறு வெள்ளை மாளிகை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. மருத்துவமனைகள் இனி தினசரி நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் மரணங்களை அறிவிக்க வேண்டாமென சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை ஜனவரியில் அறிவித்தது. அந்தாண்டின் இறுதியில் CDC தினசரி அறிவிப்புகளை நிறுத்தியது.

ஒவ்வொரு தருணத்திலும், பைடெனின் நடவடிக்கைகள் உயிர்களை விட இலாபங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு முன்பிருந்த டொனால்ட் ட்ரம்ப் பின்பற்றிய அதே நலன்களால் வழிநடத்தப்பட்டுள்ளன. இந்தப் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, அமெரிக்க ஆளும் உயரடுக்கு இந்தப் பெருந்தொற்றைப் பயன்படுத்தி மிகப் பெருமளவிலான பணத்தை நிதிய தன்னலக்குழுவுக்கு கைமாற்றுவதிலேயே ஒருமுனைப்பட்டிருந்தது.

இத்தகைய சமூக நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், மக்களின் உயிர்கள், குறிப்பாக வயதான அமெரிக்கர்கள் மற்றும் விகிதாச்சார பொருத்தமின்றி பாதிக்கப்பட்டுள்ள நலிந்தவர்களின் உயிர்கள் மதிப்பற்றவையாக இருந்தன. இறந்தவர்களில் பெரும் விகிதத்தினர் தீராத நாட்பட்ட நோய்களைக் கொண்ட நோயாளிகள் என்பது 'ஊக்கமளிக்கிறது' என்று CDC இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி கடந்த ஆண்டு ஜனவரியில் அறிவித்த போது, அவர் இதைத் தான் அர்த்தப்படுத்தினார்.

2020 ஜனவரியில் சீனாவின் வூஹானில் வெளிப்பட்ட இந்த வைரஸின் மிகப் பெரிய ஆபத்தைப் பற்றி குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளும் முக்கிய ஊடகப் பிரமுகர்களும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்களின் கவனம் எல்லாம் உயிர்களைக் காப்பாற்றுவதில் அல்ல, மாறாக ஆளும் வர்க்கத்தின் செல்வத்தைக் காப்பாற்றுவதில் இருந்தது.

இவ்வாறு தான் முதலாளித்துவவாதிகள் விருந்துண்டனர். இந்தப் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து உலகின் பில்லியனர்களின் செல்வம் ஒரு நாளைக்கு 2.7 பில்லியன் டொலர்கள் அதிகரித்து, 2020 இல் இருந்து அவர்களின் செல்வவளம் மொத்தத்தில் 26 ட்ரில்லியன் டொலர்கள் அதிகரித்ததாகவும் ஜனவரியில் வெளியான ஓர் அறிக்கை எடுத்துக்காட்டியது.

இலாபங்கள் அதிகரித்துள்ள அதேவேளையில், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதற்குப் பக்கவாட்டில் Economist  பத்திரிகையிடமிருந்து கோவிட்-19 ஆல் ஏற்பட்ட அதிகப்படியான இறப்புகளைப் பற்றிய புதிய புள்ளிவிபரங்களும் இந்தப் பெருந்தொற்றின் மூன்றாம் நினைவாண்டில் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவில் வெகுஜன மரணத்திற்கான இந்தக் கொள்கை சர்வதேச அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வெகுஜன நோய்தொற்றுக் கொள்கையைத் தவிர்த்திருந்த சீனா, சர்வதேச நிதி மூலதனத்தின் அழுத்தத்தின் கீழ் கடந்தாண்டின் பிற்பகுதியில் அதன் பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளைக் கைவிட்டது. இறப்பு எண்ணிக்கை மிகப் பெரியளவில் உள்ளது. சில மதிப்பீடுகளின்படி 1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

கோவிட்-19 சீனாவின் ஓர் ஆய்வகத்தில், அனேகமாக அமெரிக்க நிதியுதவியுடன், உருவாக்கப்பட்டு உலகெங்கிலும் கட்டவிழ்த்து விடப்பட்டது என்ற சதிக் கோட்பாடான வூஹான் ஆய்வகப் பொய்யை உருவாக்கி பரப்புவதற்கும், இந்தப் பெருந்தொற்று, பாசிச சித்தாந்தவாதியான ஸ்டீவ் பானனுக்கும் வெளிநாடுகளில் தங்கியுள்ள அவருடைய சீன சக-சிந்தனையாளர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. இந்தப் பெருந்தொற்று நெடுகிலும், விஞ்ஞான உண்மையின் அடிப்படையில் இல்லாத இந்தப் பொய் சீனாவைக் கொடூரமாக காட்டவும் போருக்கு ஆதரவான மக்கள் கருத்தை வடிவமைக்கவும் அமெரிக்க அரசியல் வட்டாரத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வூஹான் ஆய்வகப் பொய்யானது மிகவும் பொதுவாக விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானத்தின் மீது தாக்குதல்களைத் தொடுக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்றின் அபாயங்கள், குறிப்பாக நெடுங்கோவிட், உதறிவிடப்பட்டன. பல தசாப்தங்களாக தொற்றுநோயியல் துறையில் சிறந்த நிபுணர்களாக இருந்துள்ள விஞ்ஞானிகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்புக்கு முரண்பட்டரீதியில், தொழிலாள வர்க்கம் உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முயன்றது. மார்ச் 2020 இல் இந்தப் பெருந்தொற்று பரவிய போது, தொழிலாளர்கள் ஆலைமூடல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இறுதியில் அவை 2020 இலும் மற்றும் 2021 இன் சில மாதங்களிலும் சமூக அடைப்பைக் கொண்டு வர நிர்பந்தித்தது.

சமூக அடைப்புகளை உரிய காலத்திற்கு முன்னரே முடித்துக் கொள்ளவும் மற்றும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்யவும் மற்றும் பிணையெடுப்புகளுக்கு வாரி வழங்கவும், பிரேசிலில் ஜயர் போல்சொனாரோ மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் போன்ற பிற நாடுகளின் ட்ரம்ப் வகையாறாக்களும் மற்றும் ட்ரம்பும் முன்னெடுத்த அதிவலது பாசிசவாத ஆத்திரமூட்டல்களின் நேரடியாக விளைவாக, இந்தப் பெருந்தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே சமூக அடைப்புகள் முடித்துக் கொள்ளப்பட்டன.

அனைத்திற்கும் மேலாக சமூக அடைப்புகள் செய்யாமல் இருப்பதை அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் ஆதரித்தன என்பதோடு, அது சரியான கொள்கையாக பெருநிறுவன ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த நேரத்தில் தான் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் பிரெட்மன், “நோயை விட சிகிச்சை மோசமாக இருந்து விடக்கூடாது,” என்ற வரிகளைப் பயன்படுத்தினார்.

இந்த நோயின் அபாயங்களைக் குறைத்துக் காட்ட கடந்த மூன்றாண்டுகளாக செய்யப்பட்டுள்ள இடைவிடாத பிரச்சார நடவடிக்கைக்கு மத்தியிலும், இன்னமும் பலருக்கு இந்த வைரஸ் குறித்து கவலை இருப்பதால், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்கர்களில் 15 சதவீதத்தினர் இப்போதும் முழுமையாகவோ அல்லது பெரும்பாலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், 35 சதவீதத்தினர் குறைந்தபட்சம் பகுதியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் வியாழக்கிழமை வெளியான Gallup கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டியது.

இதை விட இன்னும் முக்கியமாக, கோவிட்-19 ஐ அகற்றி இல்லாதொழிப்பதற்கான முக்கிய சமூக அடுக்கான சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் வேகமெடுத்து வருகிறது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், சம்பளங்கள், சலுகைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான வெட்டுக்களுக்கு எதிராக சமீபத்திய வாரங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரீஸில் நடந்த இரயில் விபத்து மரணங்களுக்கு எதிராக இலட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி உள்ளனர். சமூக அமைதியின்மையை மவுனமாக்க தென் கொரியாவில் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்குப் புத்துயிரூட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் அமெரிக்க போர் எந்திரத்துடன் ஆழ்ந்தத் தொடர்புகள் வைத்துள்ள ஒரு நிறுவனமான கேட்டர்பில்லருக்கு எதிராக அணிதிரண்டு வருகிறார்கள்.

இந்த இயக்கமும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டமும் ஒன்றையொன்று சந்தித்தாக வேண்டும். ஒரு பெருந்தொற்றுக்கு இயல்பாகவே ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த விடையிறுப்பு தேவைப்படுகிறது. இந்த மகத்தான பணியைச் செய்யும் ஆற்றல் கொண்ட ஒரே சர்வதேச சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும். இன்று தொழிலாளர்களும் இளைஞர்களும் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கிய பணிகளில் ஒன்றாக, காலநிலை மாற்றம் மற்றும் அணுஆயுதப் போர் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டமும் சேர்ந்து நிற்கிறது.

இதற்கு சர்வதேச சோசலிசத்தின் அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது. இந்தப் பெருந்தொற்றை மருத்துவ அல்லது அறிவியல் அடிப்படையில் மட்டும் தீர்க்க முடியாது. முதலாவதாக இந்த வைரஸ் பரவுவதை அனுமதித்ததுடன், புதிய வகை வைரஸ்களும் ஒட்டுமொத்தமாக புதிய பெருந்தொற்றுக்களிலிருந்து நனவுப்பூர்வமாக பாதுகாக்க மறுத்த இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு எதிராக ஓர் அரசியல் போராட்டம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் அவர்களின் சக தொழிலாளர்களுடன் அணிசேர்ந்து, அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் தேசியவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். சமூகத்தை உயர்ந்த பகுத்தறிவார்ந்த விஞ்ஞானப்பூர்வ சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்குபடுத்த போராட வேண்டும்.

Loading